பின் தொடர்வோர்

Tuesday, 21 November 2017

329. ஆசைக்கூர்

329
பொது

மாத்ருகா புஷ்ப மாலை கோலம் ப்ரவாள பாதத்தில் அணிவேனோ?

  
தானனா தத்த தானனா தத்த
     தானனா தத்த      தனதான

ஆசைகூர் பத்த னேன்மனோ பத்ம
      மானபூ வைத்து                    நடுவேயன்
பானநூ லிட்டு நாவிலே சித்ர
      மாகவே கட்டி                    யொருஞான
வாசம்வீ சிப்ர காசியா நிற்ப
      மாசிலோர் புத்தி                     யளிபாட
மாத்ருகா புஷ்ப மாலைகோ லப்ர
      வாளபா தத்தி                   லணிவேனோ
மூசுகா னத்து மீதுவாழ் முத்த
      மூரல்வே டிச்சி                         தனபார
மூழ்குநீ பப்ர தாபமார் பத்த
      மூரிவே ழத்தின்               மயில்வாழ்வே
வீசுமீ னப்ப யோதிவாய் விட்டு
      வேகவே தித்து                      வருமாசூர்
வீழமோ திப்ப ராரைநா கத்து
      வீரவேல் தொட்ட                பெருமாளே.
 
பதம் பிரித்தல்
 
ஆசை கூர் பத்தனேன் மனோ பத்மமான
பூ வைத்து நடுவே

ஆசை கூர்- உன் மீது ஆசை மிக்க பத்தனேன் - பக்தியுள்ள நான் மனோ பத்மமான பூ - மனம் எனப்படும் தாமரை மலரை வைத்து - வைத்து நடுவே – இடையில்

அன்பான நூல் இட்டு நாவிலே சித்ரமாகவே
கட்டி ஒரு ஞான

அன்பான நூல் இட்டு - அன்பு என்கின்ற நாரைக் கொண்டு நாவிலே - நாக்கு என்ற இடத்தில் சித்ரமாகவே கட்டி - அழகாக (ஒரு மாலையைக்) கட்டி ஒரு - ஒப்பற்ற ஞான வாசம் - ஞானம் என்னும் நறு மணத்தை

வாசம் வீசி ப்ரகாசியா நிற்ப
மாசு இல் ஓர் புத்தி அளி பாட

வீசி - தடவி ப்ரகாசியா நிற்ப - ஒளியுடன் விளங்க
 மாசு இல் ஓர் -(அந்த மாலையில்) குற்றம் இல்லாத ஒரு புத்தி - அறிவு என்கின்ற அளி பாட - வண்டு மொய்த்துப் பாட

மாத்ருகா புஷ்ப மாலை கோலம்
ப்ரவாள பாதத்தில் அணிவேனோ

மாத்ருதா -  மாத்ருகா மந்திர மாலையான புஷ்ப மாலை - பூ மாலையை கோலம் - அழகிய ப்ரவாள பாதத்தில் - பவளம் போன்ற திருவடியில் அணிவேனோ - (நான்) அணியும் பாக்கியத்தைப் பெறுவேனோ?

மூசு கானகத்து மீது வாழ் முத்த
மூரல் வேடிச்சி தனபார
மூசு - (சிள் வண்டுகள்) மொய்க்கும் கானத்து மீது வாழ் - காட்டிலே வாழ்ந்திருந்த முத்த மூரல் - முத்துப் போன்ற பற்களை உடைய வேடிச்சி தன பார - வேடப் பெண்ணாகிய வள்ளியின் கொங்கைப் பாரத்தில்

மூழ்கு நீப ப்ரதாப மார்ப அத்த
மூரி வேழத்தின் மயில் வாழ்வே

மூழ்கு - முழுகி அழுந்திக் கிடக்கும் நீபப் ப்ரதாப - கடப்ப மாலையைச் சிறப்புடன் அணியும் மார்ப அத்த - மார்பை உடைய ஐயனே மூரி - வல்லமை உடைய வேழத்தின் - ஐராவதம் என்ற யானை வளர்த்த மயில்வாழ்வே - மயில் போன்ற தெய்வ யானையின் கணவனே

வீசு மீனம் பயோதி வாய் விட்டு
வேக வேதித்து வரு மா சூர்

விசு - அலை வீசுவதும் மீனம் - மீன்கள் வாழ்வதும் ஆகிய பயோதி - கடல் வாய் விட்டு வேக - ஒலி செய்து  வேவ வேதித்து வரு - தேவர்களை வருத்தி வந்த மா சூர் - மாமரமாகிய சூரன்


வீழ மோதி பராரை நாகத்து
வீர வேல் தொட்ட பெருமாளே.

வீழ - அழி பட்டு விழவும் பராரை - பருத்த அடிப்பாகம் உடைய நாகத்து - கிரௌஞ்ச மலை மீது வீர வேல் தொட்ட பெருமாளே - வீரம் பொருந்திய வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே


[ ப்ரகாசியா நிற்ப மாசு இல் ஓர் புத்தி அளி பாட - அந்த மாலை ஒளியுடன் விளங்கவும், குற்றமற்ற தவசிகளின்  உள்ளமாகிய வண்டுகள் அந்த மாலையை நுகர்ந்து களிப்புடன் பாடவும், ( பூமாலை சிறிது நேரத்திற்குப் பின் நறுமணம் இழந்து பொலிவும் நீங்கிவிடும். ஞானப்பாமாலைகளோ என்றும் வாடாது பிரகாசிக்கும். ஒரு மாலை நல்ல வாசனை பொருந்திய பூக்களால் கட்டப்பட்டிருந்தால் தான் வண்டுகள் கூடி மொய்க்கும். அருணகிரியாரின் அநுபூதி பாடல்களை தவராஜ யோகிகளான தாயுமானார், திருப்போரூர் சிதம்பரசுவாமிகள் போன்ற அநுபூதிமான்கள் அனுபவித்து பாடியிருக்கிறார்கள். நடராஜன்]


சுருக்க உரை
 
முருகா, உன் மீது ஆசை கொண்ட நான், ( பக்தி என்பது இங்கு ஆசையாக வெளிவருகிறது) என்னுடைய மனம் என்பதையே தாமரை மலராகக் கொண்டு, அதை அன்பு என்னும் நாரின் உதவியுடன், என்னுடைய நா என்ற இடத்தில் அழகாக வைத்து, அதற்கு ஞானம் என்ற நறுமணத்தை பூசி, நல்லறிவு என்னும் வண்டு அதை மொய்க்கும்படி வைத்து, மாத்ருகாமந்திர மாலையாக பூமாலைக் கட்டி, அதை உனது பவளம் போன்ற திருவடியில் சாத்தும் பாக்கியத்தைப் பெறுவேனோ.

வேடப்பெண்ணாகிய வள்ளியின் தன பாரத்தில் அழுந்திக் கிடக்கும் மார்பை உடையவனே. ஐராவத்தால் வளர்க்கப் பட்ட தெய்வ யானையின் கணவனே. கடல் வற்றும்படி மாமரமாக நின்ற சூரன் மீது வேலைச் செலுத்தி அவனை அழித்தவனே. உன் திருவடியில் ஞான மாலையை அணியும் பாக்கியத்தைப் பெறுவேனோ.


விளக்கக் குறிப்புகள்

மாக்ருதா புஷ்ப மாலை எனவும் பாடம்.
ஐம்பத்தோரு எழுத்துக்களை வைத்துப் பாடப்படும் மாலை மாத்ருகா மாலை  எனப்படும்.  அகரம் முதல் க்ஷகாரம் இறுதியாக ஐம்பத்தொரு எழுத்துக்களால் பிரிக்கப்பட்ட நாதம் என்று பெயருள்ள சப்த மந்திரங்கள் 1445 வகையாக உண்டாயின அவற்றுள் “மாத்ருகா மந்திரமே” எல்லா மந்திரங்களிலும் சிறந்தது. இதையே, மேளா மந்திரம்  எனவும், மாலா  மந்திரம் எனவும் வேத சிவாமகங்கள் கூறின.
இம்மந்திரமான 51அக்ஷரங்களையும் முருகக்கடவுள் தமக்கு வடிவமாகக் கொண்டு  விளங்குவார்.

அகர முதல் என உரை செய் ஐம்பந்தொரு அக்ஷரமும்
அகில கலைகளும் வெகு விதம் கொண்ட தத்துவமும்
அபரிமித சுருதியும் அடங்கும் தனி பொருளை 
எப்பொருளும் ஆய
-    திருப்புகழ்

சுப்ரமணிய பராக்கிரமம் என்கிற வடமொழி நூலில் சமஸ்கிருத மொழியின் 51 அட்சரங்களைக் கொண்ட மாத்ருகா மந்திர மாலை முருகப் பெருமானைப் பாடுகிறது. தமிழ் கடவுளான முருகனே வடமொழியின் 51 அட்சரங்களாலான மந்திர மாலையாக இருக்கிறான்

 அ –தலை, ஆ – நெற்றி, இ –வலக்கண், ஈ – இடக்கண், உ - வலச் செவி,  ஊ – இடச்செவி, இறு - வலக் கபோலம், இறு இடக் கபோலம், இலு, இலூ – இரு நாசிகள், ஏ -- மேல் உத, ஐ கீழ் உதடு, ஒ, ஒள -- மேலும் கீழும் உள்ள  பற்கள், அம், அஹு – முரசுகள், க,க்க,க (ஙஹா), க(ஙஙா) -- வலது கரங்கள்,  ச,ச்ச,,ஜ்ஜ, ஞ-- இடது கரம் ட,ட்ட,ட(டா),(டடா), வலப் பாதங்கள், த,த்த,த. டஹா), த(டடஹா), ந -- இடப் பாதங்கள், ப - வயிறு, ப்ப,--வலதுபக்கம்,  ப (றஹா)   இடபக்கம், ப(றறஹா) –கழுத்து, ம – இருதயம் ய, ,,,, சத்த தாதுக்கள். ஹ --- ஆன்மா. ள, க்ஷ -- உபசாரங்கள். ( சுப்பிரமண்ய பரக்ரமம்பக்கரை விசித்திரமணி என்ற பாடல் நாம் தினம் தினம் பாடும் பாடல்.
முத்ததை தரு என்ற பாடல் அடி எடுத்துக்கொடுத்த பிறகு அருணகிரியார் பாடிய முதல் பாடல் இதுதான். கைத்தல என்பது வழி வழியாக முதல் பாடலாக இருந்தாலும் அருணகிரியார் பாடிய முதல் பாடல் இதுதான் என்பர் ஆராய்சியாளர்கள்.
“எப்படிப் பாடுவது?” என்று கேட்ட அருணகிரியை வயலூருக்கு வரச்சொல்லிவிட்டார். அங்கு சென்ற அருணகிரி மீண்டும் முருகனிடம் கேட்டபோது,
அருள் கை வடி வேலும்
திக்கு அது மதிக்க வரு(ம் குக்குடமும் 
ரட்சை தரும் சிற்று அடியும் 
முற்றிய பன்னிரு தோளும்
செய்ப்பதியும் வைத்து 
உயர் திருப்புகழ் விருப்பமொடு
செப்பு என
கூறியதாக அருணகிரிநாதர் இந்த பாடலில் சொல்லிகிறார். தம்முடைய மயில், வேல், சேவல், மலர்மாலை, தம்முடைய திருவடி, பன்னிரு தோள்கள், தாம் அமர்ந்துள்ள பதி (ஊர்) ஆகியவற்றை வைத்துப் பாடுமாறு கூறினார். ஆகவே, முதல் பாடலை விநாயக வணக்கமான பாடலாக அமைத்து. அதிலேயே,

முருகனுடைய மயில்பக்கரை விசித்ர மணி பொற்கலனை இட்ட நடை பட்சி எனும் உக்ர துரகம்,
மலர்மாலை – நீபப் பக்குவ மலர்த் தொடை
வேல்அக் குவடு பட்டு ஒழிய பட்டு உருவ விட்டு அருள் கை வடிவேல்
சேவல்திக்கு அது மதிக்க வரும் குக்குடம்
முருகனுடைய திருவடிரக்க்ஷ தரு சிற்றடி

பன்னிரு தோள்முற்றிய பன்னிரு தோள்
முருகனுடைய திருப்பதிசெய்ப்பதி வைத்து உயர் திருப்புகழ்
விருப்பமொடு செப்பு ( கூறு)

முருகன் குறிப்பிட்ட அனைத்தையுமே அமைத்துப் பாடிவிட்டார். தாம் பாடுவது திருப்புகழ் என்று பெயரையும் குறிப்பிட்டுவிட்டார். அவர் இந்த அமைப்பில் பாடிய பதினாறாயிரம் பாடல்களும் திருப்புகழ் என்ற பெயரைப் பெற்றன.

பிறகு பாடின 10000 மேற்பட்ட பாடல்களில் முருகனின் ஸ்தலம் நிச்சயமாக இருக்கும்.  மயில், வேல், குக்குடம், சிவபரம்பொருள், திருமால், வள்ளி, தேவயானை இந்திராதி தேவர்கள் இவர்களில் யாராவது அதில் இடம் பெற்றிருப்பார்கள்.  

முருகனின் ஆசைக்காக பாடிவிட்டார், ஆனால் அவர் ஆசை என்ன? ஆராய்சியாளார்கள் கூறுகிறார்கள், தன் ஆசைக்காக பாடினது இந்த பாடல்தான் என்று.

முருகா, உன் மீது ஆசை கொண்ட நான், ( பக்தி என்பது இங்கு ஆசையாக வெளிவருகிறது) என்னுடைய மனம் என்பதையே தாமரை மலராகக் கொண்டு, அதை அன்பு என்னும் நாரின் உதவியுடன், என்னுடைய நா என்ற இடத்தில் அழகாக வைத்து, அதற்கு ஞானம் என்ற நறுமணத்தை பூசி, நல்லறிவு என்னும் வண்டு அதை மொய்க்கும்படி வைத்து, மாத்ருகாமந்திர மாலையாக பூமாலைக் கட்டி, அதை உனது பவளம் போன்ற திருவடியில் சாத்தும் பாக்கியத்தைப் பெறுவேனோ.

சிவ மானச ஸ்தோத்திரத்திலிருந்து
ஆத்மாத்வம், கிரிஜாமதி: ஸஹசரா: ப்ராணா: சரீரம் ஹம்
பூஜாதே விஷயோப போகரசனா நித்ரா ஸமாதி ஸ்திதி
ஸஞ்சார; பதயோ: ப்ரதக்ஷிணவிதி: ஸ்தோத்ராணி ஸர்வாகிர:
யத்யத்கர்ம கரோமி தத்தத் அகிலம் சம்போ வாராதநம்

எனத் தொடங்கும் நான்காம் ஸ்லோகத்து, (‘ஈசனே நீ எனது ஜீவாத்மா; தேவியே நீ எனது புக்தி! என்னுடைய உடல் உன்னுடைய இருப்பிடம். நான் ஈடுபடும் அனைத்து விஷயங்களும், அனுபவிக்கும், அனைத்து போகங்களும் உன்னுடைய பூஜை!’), சமமான கருத்து கொண்ட திருப்புகழ் பாடல் எது என கேட்ட சேஷாத்திரி ஸ்வாமிகள் வள்ளிமலை ஸ்வாமிகளை கேட்டு பிறகு திருப்புகழே “உனக்கு மஹா மந்திரம்” என அவருக்கு உபதேசம் தரவும் உதவிய பாடல் இது. (இன்னொன்று ‘அமல வாயு’  என்ற திருப்புகழ் பாடல்) Saturday, 11 November 2017

328.ஆசார ஈனன்

328
பொது
 
            தானான தான தனதன தானான தான தனதன
             தானான தான தனதன                தனதான
 
ஆசார வீன னறிவிலி கோபாப ராதி யவகுண
     னாகாத நிச னநுசிதன்                            விபரீதன்
ஆசாவி சார வெகுவித மோகாச ரீத பரவச
     னாகாச நிர்ம ணனல்வளி                         யுருமாறி
மாசான நாலெண் வகைதனை நீநானெ னாத அறிவுளம்
     வாயாத பாவி யிவனென                    நினையாமல்
மாதாபி தாவி னருணல மாறாம காரி லெனையினி
     மாஞான போத மருள்செய                   நினைவாயே
வீசால வேலை சுவறிட மாசூரர் மார்பு தொளைபட
     வேதாள ராசி பசிகெட                          அறைகூறி
 மேகார வார மெனஅதிர் போர்யாது தான ரெமபுர
     மீதேற வேல்கொ டமர்செயு               மிளையோனே
கூசாது வேட னுமிழ்தரு நீராடி யூனு ணெனுமுரை
     கூறாம னீய அவனுகர்                          தருசேடங்
கோதாமெ னாம லமுதுசெய் வேதாக மாதி முதல்தரு
     கோலாக நாத குறமகள்                        பெருமாளே
 
 பதம் பிரித்தல்

ஆசார ஈனன் அறிவிலி கோபா பராதி அவகுணன்
ஆகாத நீசன் அநுசிதன் விபரீதன்

ஆசார ஈனன் - ஒழுக்கம் குறைவாக உள்ளவன். அறிவிலி - மூடன் கோபா பராதி - கோபம் காரணமாக குற்றம் பல செய்பவன் அவகுணன் - கெட்ட குணம் படைத்தவன் ஆகாத நீசன் - யாவர்க்கும் ஆகாத இழிந்த தன்மை உடையவன் அனுசிதன் - தகாத காரியங்களைச் செய்யும் அசுத்தன் விபரீதன் - மாறுபாடான புத்தியை உடையவன்


ஆசா விசாரம் வெகு வித மோகா சரீத பரவசன்
ஆகாச நீர் மண் அனல் வளி உரு மாறி

ஆசா விசார - மண், பொன், பெண் என்னும் மூவாசைகளிலேயே எண்ணத்தைச் செலுத்துபவன் வெகு வித - பல விதமான மோகா சரித - ஆசைச் செயல்களைக் கைக்கொண்ட பரவசன் - தன்மயம் இழந்தவன் ஆகாசம், நீர், மணல், அனல், வளி - விண், நீர், மண், தீ, காற்று என்ற ஐந்து பூதங்களுக்கு அப்பால் உரு மாறி - வெவ்வேறு உருவம் எடுத்து.

மாசு ஆன நால் எண் வகை தனை நீ நான் எனாத அறிவு உளம்
வாயாத பாவி இவன் என நினையாமல்

மாசு ஆன - குற்றங்கள் நிறைந்த நால் எண் வகை தனை - குணப் பண்பு, தொழில் பண்பு ஆகிய முப்பத்திரண்டு குணங்களைக் கொண்ட (இந்த உருவங்களை). நீ நான் எனாத - நீ என்பதும், நான் என்பதுமான பிரிவைக் காணாத அறிவு உளம் வாயாத - ஞான உள்ளம் வாய்க்கப் பெறாத. பாவி இவன் என நினையாமல் - பாவி இவன் என்று நினைத்து என்னை ஒதுக்கி விடாமல்.

மாதா பிதாவின் அருள் நலம் மாறா மகாரில் எனை இனி
மா ஞான போதம் அருள் செய நினைவாயே


மாதா பிதாவின் அருளால் - தாய் தந்தையரின் அருள் நலம் மாறா - நிறைந்த உபகாரச் செயல்கள் மாறாத மகாரில் எனை - உன் குழந்தையாகிய என் மீது இனி – இனிமேல் ஆயினும் மா ஞான போதம் அருள்வாயே - சிறந்த ஞான உபதசத்தை அருள்செய்வதற்கு நினைவாயே - திருவுள்ளத்தில் நினைத்து அருள வேண்டும்.

வீசால வேலை சுவறிட மா சூரர் மார்பு தொளைபட
வேதாள ராசி பசி கெட அறை கூறி


வீசால - பரந்த வேலை - கடலை சுவறிட – வற்றும் படியும் மா சூரர் மார்பு தொளை பட - பெரிய சூரார்களின் மார்பு தொளை படவும் வேதாள ராசி பசி கெட - வேதாள கணங்களின் பசி கெடவும் அறை கூறி - போருக்கு வரும்படி அசுரர்களை அழித்து

மேக ஆரவாரம் என அதிர் போர் யாது தானர் எம புரம்
மீது ஏற வேல் கொடு அமர் செயும் இளையோனே

மேக ஆரவாரம் என - மேகங்களில் பேரொலியோ இது என்னும்படி அதிர் போர் - முழங்கும் சண்டையில் யாது தானர் - அசுரர்கள் அனைவரும் எம புரம் மீது ஏற - யமன் உலகத்துக்குப் போகும்படி வேல் கொடு அமர் செயும் - வேல் கொண்டு சண்டை செய்த இளையோனே - இளையவனே

கூசாது வேடன் உமிழ் தரு நீராடி ஊன் உண் எ(ன்)னும் உரை
கூறா மன் ஈய அவன் நுகர் தரு சேடம்

கூசாது - அஞ்சாமல் வேடன் உமிழ் தரு நீராடி - கண்ணப்பனாகிய வேடன் வாயினினின்றும் உமிழ்ந்த அபிஷேக நீரில் திளைத்து ஊன் உண் எனும் உரை - இந்த மாமிசம் சுவை உள்ளது, உண்ணவும் என்னும் சொல்லை கூறா - சொல்லி மன் - நிரம்ப ஈய - கொடுக்க அவன் நுகர் தரு சேடம் - அந்த வேடன் எச்சில் செய்து கொடுத்த பாக்கியை

கோது ஆம் எனாமல் அமுது செய் வேத ஆகம ஆதி முதல் தரு
கோலோக நாத குற மகள் பெருமாளே.

கோது ஆம் எனாமல் - குற்றமானது என்று பாவிக்காமல் அமுது செய் - உண்டவரும் வேத ஆகம ஆதி முதல் - வேதங்களுக்கும், ஆகமங்களுக்கும் முதல்வரான சிவ பெருமான் தரு - பெற்ற கோ - தலைவனே லோக நாத - உலகங்களுக்கு நாதனே குற மகள் பெருமாளே - குறப் பெண்ணாகிய வள்ளியின் பெருமாளே ( கோலோக நாதன் எனபதை கோ + லோகநாதன் என இப்படியும் பிரிக்கலாம் பாற்கடல் கடைந்த போது ஐந்து தருக்களும், ஐந்து பசுக்களும் தோன்றின. நந்தை, சுபத்திரை, சுரபி, சுசீலை, சுமனை. இவை சிவலோகத்தில் ஒருபுறத்தில் இருக்கும் கோலோகத்தில் வசித்து வந்து சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு பால், தயிர், நெய் கோமயம், கோஜலம், கோரோசனை முதலிய ஆறு திவ்ய பொருட்களைக் கொடுக்கும். பசு கூட்டத்திற்கு தலைவனே எனப் பொருள் கொள்ளலாம்- நடராஜன் )

சுருக்க உரை
ஒழுக்கம் குறைந்தவன், பெருங் கோபத்தால் பல குற்றம் செய்பவன், இழி குணத்தன், அசுத்தன், மூவாசைகளால் பீடிக்கப்பட்டவன், காம நூல்களைக் கற்றுத் தன் வசம் இழந்தவன், ஐந்து பூதங்களால் ஆன முப்பத்திரண்டு குணங்களைக் கொண்ட உடலோடு ஞானம் இல்லாத பாவி என்று நினைத்து என்னை ஒதுக்கி விடாமல், என்னை உன் குழந்தையாகப் பாவித்து, இனி மேலாவது எனக்கு ஞான உபதேசத்தை அருள உன் திருவுள்ளத்தில் நினைந்தருள வேண்டும்.
கடல் வற்றும்படியும், வேத கணங்களுக்குப் பசி தணியவும் அறை கூறிச் சூரனைப் போருக்கு அழைத்து அசுரர்களை அழித்தவனே. கண்ணப்பனாகிய வேடன் உமிழ் நீரால் எச்சில் படுத்திக் கொடுத்த மாமிசத்தைத் தகாது என்று ஒதுக்கி விடாமல் அதை உண்ட வேத முதல்வனான சிவபெருமான் பெற்ற குமரனே. உலக நாயகனே.வள்ளியின் கணவனே. எனக்கு ஞான உபதேசம் அருளுக.
விளக்கக் குறிப்புகள்

1மாசான நாலெண் வகைதனை ......
 உயிர்ப் பொருள்களின் குணங்கள் 32 . (குணப் பண்பு 27, தொழில்பண்பு 5).
குணப்பண்பு (27) - அறிவு, அருள், ஆசை, அச்சம், மானம், நிறை, பொறை, உவப்பு,  இரக்கம், நாண், வெகுளி, துணிவு, அழுக்காறு, அன்பு,எளிமை, வய்த்தல், துன்பம்,  இன்பம், இளமை, மூப்பு இகல், வென்றி, பொச்சாப்பு, ஊக்கம், மறம், மதம், மறவி.  தொழில் பண்பு (5) - துய்த்தல், துஞ்சல், தொழுதல், அணிதல், உய்த்தல்.
2கூசாது வேடன் உமிழ்தரு நீராடி....
இது கண்ணப்பர் வரலாற்றைக் குறிகும். இதன் விளக்கம்
திண்ணனார் என்னும் வேடன் வேட்டை ஆடக் காளத்தி மலைக்குச் சென்ற போது, அம்மலையில் சிவபிரானது திருவுருவச் சிலையைக் கண்டு மனம் நெகிழ்ந்தார்.
தம்முடன் வந்த நாணன் என்பவரைப் பச்சிலையையும், பூவையும் அச்சிலைக்கு இட்டது யார் என்று வினவினார். ஒரு அந்தணர் இங்ஙனம் பூசை செய்வதாக அறிந்து, அது முதல் தாமும் அங்ஙனமே தினமும் பூசை செய்யத் தொடங்கினார். இதை அறிந்த சிவகோசரியார் ஆகிய அந்தணர் சீற்றம் கொண்டு, இறைவனை அபசாரம் செய்தவனைத் தண்டிக்க வேண்டினார். இறைவன் மறு நாள் மறைந்திருந்து திண்ணப்பரின் அன்பைக் காணுமாறு பணித்தார். திண்ணப்பர் மறு நாள் வந்ததும் இறைவன் கண்ணிலிருந்து இரத்தம் வடிவதைக் கண்டு பதை பதைத்தார்.  பச்சிலையில் உதிரம் நிற்காமல் போகவே, தன் ஒரு கண்ணைக் எடுத்து இறைவன் கண்ணில் வைத்தார். இரத்தம் நின்றது. ஆனால் இரத்தம் மற்ற கண்ணிலிருந்து வடிய ஆரம்பித்தது. கண்ணப்பராகிய திண்ணனார் தமது அடுத்த கண்ணையும் பறிக்க முயன்ற போது, இறைவன் நில்லு கண்ணப்ப என்று அவரைத் தடுத்து ஆட்கொண்டார்.

 --------------------------புன வேடன்
  பச்சிலைக்கும் வாய்க்குள் எச்சிலுக்கும் வீக்கு
  பை சிலைக்கும் ஆட்கொள் அரன் வாழ்வே.......... திருப்புகழ், மச்ச மெச்சு
 
  கூசாது வேட னுமிழ்தரு நீராடி யூனு ணெனுமுரை
  கூறாம னீய அவனுகர் தரு சேடங்.....................திருப்புகழ்ம், ஆசாரவீன.

 இதவிய காணிவை ததை என வேடுவன்....திருப்புகழ், அதலசேதடனாராட

கொழுவிய தசைகள் எல்லாம் கோலினில் தெரிந்துகோத்து அங்கு
அழல்உறு பதத்தில் காய்ச்சிப் பல்லினால் அதுக்கி நாவில்
பழகிய இனிமை பாத்த்துப் படைத்த இவ் இறைச்சி சால
அழகிது நாயனீரே அமுது செய்தருளும் என்றார்---
       பெரிய புராணம் - கண்ணப்ப நாயனார்


3. யாது தானர் திதியின் மக்கள் யாதுக்களும், தனுவின் மக்கள் தானவருமாகிய அரக்கர்கள். இவர்களே அரக்கர்குல முன்னோடிகள் ஆவர்.