பின் தொடர்வோர்

Friday 19 October 2018

343.ஊனுந் தசையுடல்

343
பொது

தானந் தனதன தானந் தனதன
  தானந் தனதன               தனதான


 ஊனுந் தசையுடல் தானொன் பதுவழி
     யூருங் கருவழி                              யொருகோடி
 ஓதும் பலகலை கீதஞ் சகலமு
     மோரும் படியுன                               தருள்பாடி
 நானுன் திருவடி பேணும் படியிரு
     போதுங் கருணையில்                     மறவாதுன்
 நாமம் புகழ்பவர் பாதந் தொழஇனி
      நாடும் படியருள்                              புரிவாயே
 கானுந் திகழ்கதி ரோனுஞ் சசியொடு
      காலங் களுநடை                      யுடையோனுங்
  காருங் கடல்வரை நீருந் தருகயி
      லாயன் கழல்தொழு                    மிமையோரும்
  வானிந் திரனெடு மாலும் பிரமனும்
      வாழும் படிவிடும்                           வடிவேலா
   மாயம் பலபுரி சூரன் பொடிபட
      வாள்கொண் டமர்செய்த              பெருமாளே

பதம் பிரித்து உரை
ஊனும் தசை உடல் தான் ஒன்பது வழி
ஊரும் கரு வழி ஒரு கோடி
ஊனும் - மாமிசமும். தசை உடல் தான் - சதையும் கூடிய இந்த உடல் தான் ஒன்பது வழி - ஒன்பது துவாரங்களுடன் ஊரும் கரு வழி - கூடிச் சேர்ந்து வரும் கருவின் வழி ஒரு கோடி - ஒரு கோடிக் கணக்கானது (ஆதலால் என் பிறப்பு இறப்பு ஒழியுமாறு)
ஓதும் பல கலை கீதம் சகலமும்
ஓரும் படி உனது அருள் பாடி
ஓதும் பல கலை - (நான்) படிக்கின்ற பல சாத்திர நூல்களையும் கீதம் - இசை ஞானத்தையும் சகலமும் - ஆக எல்லாவற்றையும்  ஓரும்படி - உணரும்படியாக உனது அருள் பாடி - உனது திருவருளைத் துதித்துப் பாடி
நான் உன் திருவடி பேணும்படி இரு
போதும் கருணையில் மறவாது உன்
நான் உன் திருவடி பேணும்படி - அடியேனும் உனது திருவடிகளை விரும்பிப் போற்றும்படியான இரு போதும் - காலை, மலை இரண்டு பொழுதிலும் கருணையில் மறவாது - உனது கருணைத் திறத்தினில் ஞாபகம் வைத்து. உன் - உனது.
நாமம் புகழ்பவர் பாதம் தொழ இனி
நாடும்படி அருள் புரிவாயே
நாமம் புகழ்பவர் - திருநாமங்களைப் புகழ்பவர்களுடைய பாதம் தொழ - திருவடியைத் தொழ இனி நாடும்படி - இனியேனும் விரும்பும் வண்ணம். அருள் புரிவாயே - திருவருள் புரிவாயாக.

கானும் திகழ் கதிரோனும் சசியொடு
காலங்களும் நடை உடையோனும்
கானும் - காட்டிலும் திகழ் - தமது கிரணங்களை வீசும் கதிரோனும் - சூரியனும். சசியொடு - சந்திரனும் காலங்களும் – முக்காலங்களும் ( நேற்று, இன்று, நாளை) நடை உடையோனும் - காற்றும்.
காரும் கடல வரை நீரும் தரு கயிலாயன்
கழல் தொழும் இமையோரும்
காரும் - மேகமும். கடலும் - கடலும் வரை - மலையும் நீரும் - நீரும். தரு - இவைகளை எல்லாம் படைத்தருளிய  கயிலாயன் -  சிவபெருமானுடைய கழல் தொழும் இமையோரும் - திருவடியைத் தொழுது நின்ற தேவர்களும்
வான் இந்திரன் நெடு மாலும் பிரமனும்
வாழும்படி விடும் வடிவேலா
வான் - விண்ணிலுள்ள இந்திரன் - இந்திரனும் நெடு மாலும் - நெடிய திருமாலும் பிரமனும் - பிரமனும் வாழும்படி விடும் வடிவேலா - வாழும்படியாகச் செலுத்திய கூரிய வேலாயுதனே.
மாயம் பல புரி சூரன் பொடிபட
வாள் கொண்டு அமர் செய்த பெருமாளே.
மாயம் பல புரி - மாயைகள் பலவற்றைப் புரிந்த சூரன் - சூரன் பொடிபட - தூள் பட்டழியும்படி வாள் கொண்டு அமர் செய்த பெருமாளே - வாளைக் கொண்டு போர் செய்த பெருமாளே.

சுருக்க உரை
காட்டிலும் கிரணங்களை வீசும் சூரியனும், சந்திரனும், காலங்களும், காற்றும், மேகமும், கடலும் எல்லாவற்றையும் படைத்த சிவபெருமானுடைய திருவடியைத் தொழுது நின்ற தேவர்களும், திருமாலும், பிரமனும் வாழும்படி செலுத்தின கூரிய வேலாயுதனே, சூரன் தூள்பட்டு அழிய வாள் கொண்டு போர் புரிந்த பெருமாளே,
ஊனும் சதையும் ஒன்பது துவாரங்களுடன் சேர்ந்து வரும் கருவின் வழி ஒரு கோடியாகும். ஆதலின் என் பிறப்பு ஒழியுமாறு நான் படிக்கும் கலை நூல்களை நன்கு உணரும்படி, உன் நாமம் புகழும் அடியவர்கள் திருவடியைத் துதித்துப் பாட அருள்வாய். 
விளக்கக் குறிப்புகள்
1. நாமம் புகழ்பவர்....
எம்மீசர் தொண்டர் தொண்டரைத் தொழுதடி பணிமின்கள் தூநெறி எளிதாமே
                                                                                       ---சம்பந்தர்  தேவாரம் 
2. காருங் கடல்வரை...
இரவு, எல், ஆழி, மண், விண் தரு....கயிலாயி                        ...கந்தர் அந்தாதி.