பின் தொடர்வோர்

Thursday 29 November 2018

355.கருப்பையிற்

355
பொது

 தனத்த தத்தத் தனத்த தத்தத் தனத்த     தனதானா


கருப்பை யிற்சுக் கிலத்து லைத்துற் பவித்து            மறுகாதே
     கபட்ட சட்டர்க் கிதத்த சித்ரத் தமிழ்க்க          ளுரையாதே
விருப்ப முற்றுத் துதித்தெ னைப்பற் றெனக்க          ருதுநீயே
     வெளிப்ப டப்பற் றிடப்ப டுத்தத் தருக்கி      மகிழ்வோனே
பருப்ப தத்தைத் தொளைத்த சத்திப் படைச்ச          மரவேளே
     பணிக்கு லத்தைக் கவர்ப்ப தத்துக் களித்த     மயிலோனே
செருப்பு றத்துச் சினத்தை முற்றப் பரப்பு         மிசையோனே
     தினைப்பு னத்துக் குறத்தி யைக்கைப் பிடித்தபெருமாளே
   
 பதம் பிரித்தல்


கருப்பையில் சுக்கிலத்து உலைத்து உற்பவித்து மறுகாதே
கபட்டு அசட்டர்க்கு இதத்த சித்ர தமிழ்க்கள் உரையாதே
கருப்பையில் - தாயின் கருப்பத்தில் சுக்கிலத்து - சுக்கிலத்தில் உலைத்து - அலைப்புண்டு உற்பவித்து - தோன்றி மறுகாதே -  கலங்காமலும் கபட்ட அசட்டர்க்கு - வஞ்சனை கொண்ட மூடர்களான விலை மாதர்களுக்கு இதத்த - இன்பம் தருவதான சித்ரத் தமிழக்களை - அழகிய தமிழ்ப் பாக்களை உரையாதே - சொல்லாமலும்

விருப்பம் உற்று துதித்து எனை பற்று என கருது நீயே
வெளிப்பட பற்றிட படுத்த தருக்கி மகிழ்வோனே
விருப்பம் உற்று - ஆசையுடன் துதித்து எனைப் பற்று என - துதித்து என்னைப் பற்றுவாயாக என்று கருது நீயே - என்னைக் குறித்து நீயே நினைக்க வேண்டுகிறேன் வெளிப் பட - அடியார்கள் முன்பு பற்றிட - அவர்களை ஏற்றுக் கொள்ளவும் படுத்த - அவர்களை ஆட்கொள்ளவும் தருக்கி - களித்து மகிழ்வோனே - மகிழ்ச்சி கொள்பவனே

பருப்பதத்தை தொளைத்த சத்தி படை சமர வேளே
பணி குலத்தை கவர் பதத்துக்கு அளித்த மயிலோனே
பருப்பதத்தை - கிரவுஞ்ச மலையை தொளைத்த - தொளைத்த சத்தி படை - சத்தி வேல் படையை ஏந்திய சமர வேளே - போர் வேளே
பணிக் குலத்தை - பாம்பின் கூட்டங்களை கவர் பதத்துக்கு - தனது பிரிவு கொண்ட பாதத்தில் கட்டி அகப்படுத்தியுள்ள மயிலோனே - மயில் வீரனே

செரு புறத்து சினத்தை முற்ற பரப்பும் இசையோனே
தினை புனத்து குறத்தியை கை பிடித்த பெருமாளே


செருப் புறத்து - போர்களத்தில் சினத்தை - கோபத்தை முற்றப் பரப்பும் - முற்றிலும் விரித்துக் காட்டிய இசையோனே – புகழோனே தினைப் புனத்து - தினைப் புனத்தில் குறத்தியைக் கைப் பிடித்த - குற மகளாகிய வள்ளியை மணம் கொண்ட பெருமாளே - பெருமாளே

சுருக்க உரை

கருப்பத்தில் நான் தோன்றி கலங்காமலும், வஞ்சக விலை மாதரிடம் தமிழ்ப் பாக்களைச் சொல்லி இன்பம் காணாமலும், ஆசையுடன் என்னைத் துதித்து பற்றுக என்று நீயே என்னை நினைக்க வேண்டுகிறேன்

அடியார்கள் முன்பு வெளிப்பட அவர்களை ஏற்றுக் கொள்ளவும், அவர்களை ஆட்கொள்ளவும் மகிழ்ச்சி கொள்பவனே, கிரவுஞ்ச மலையைத் தொளைத்த சத்தி வேல் படையை ஏந்திய போர் வேளே, பாம்புகளைப் பாதத்தில் கட்டி அகப்படுத்தி உள்ள மயிலோனே, போர்க் களத்தில் கோபத்தை முற்றிலும் விரித்துக் காட்டியவனே, தினைப் புனத்தில் வள்ளியை மணந்த பெருமாளே, என்னைப் பற்றுக என்று நீ கருதுவாயாக
  

354.கருப்பற்றுறி

354
பொது

                 தனத்தத் தானத்          தனதானா


கருப்பற் றுறிப் பிறவாதே
      கனக்கப் பாடுற்                     றுழலாதே
திருப்பொற் பாதத் தநுபூதி
      சிறக்கப் பாலித்                  தருள்வாயே
பரப்பற் றாருக் குரியோனே
      பரத்தப் பாலுக்                 கணியோனே
திருக்கைச் சேவற் கொடியோனே
      செகத்திற் சோதிப்               பெருமாளே

பதம் பிரித்து உரை

கருப்பத்து ஊறி பிறவாதே
கனக்க பாடு உற்று உழலாதே
கருப்பத்தில் - கருவில் ஊறிப் பிறவாதே - அலைப்புண்டு நான் பிறவாமலும் கனக்க - மிகவும் பாடு உற்று - வருத்தங்களை அடைந்து உழலாதே - திரியாமலும்

திரு பொன் பாதத்து அனுபூதி
சிறக்க பாலித்து அருள்வாயே
திரு - முத்திச் செல்வமாகிய (உனது) பொன் - அழகிய பாதத்து -  திருவடி அனுபூதி - அனுபவச் சிந்தனையை சிறக்க - சிறப்புற பாலித்து அருள்வாயே - எனக்கு வழங்கி அருள் புரிவாயாக

பரப்பு அற்றாருக்கு உரியோனே
பரத்த அப்பாலுக்கு அணியோனே
பரப்பு - ஆசைப் பெருக்கு அற்றாருக்கு - இல்லாதவர்களுக்கு உரியோனே - உரியவனே பரத்த - மேலானதாயுள்ள யாவற்றையும் அப்பாலுக்கு - கடந்து அப்பால் உள்ள இடத்துக்கு அணியோனே - அருகில் இருப்பவனே

திரு கை சேவல் கொடியோனே
செகத்தில் சோதி பெருமாளே

திருக்கை சேவல் கொடியோனே - திருக்கரத்தில் சேவல் கொடியை உடையவனே செகத்தில் சோதிப் பெருமாளே - உலகில் சோதிப் பொருளான பெருமாளே

சுருக்க உரை

நான் கருவில் பிறவாமலும், மிக்க வருத்தங்களை அடைந்துத்திரியாமலும்,  உன் அழகிய திருவடிகளின் அனுபவச் சிந்தனையை எனக்கு வழங்கி அருள்வாயாக. ஆசைப்பெருக்கு அற்ற பெரியோர்களுக்கு உரியவனே, மேலானதாய் யாவற்றையும் கடந்து அப்பால் உள்ள நிலைக்கு அருகில் இருப்பவனே,  திருக்கரத்தில் சேவல் கொடியை உடையவனே, உலகில் சோதிப் பொருளானபெருமாளே, எனக்கு அனுபூதி அருள்வாயே

விளக்கக் குறிப்புகள்

1.கருப்பத்து ஊறிப் பிறவாதே
ஒருமதித் தான்றியன் இருமையில் பிழைத்தும்
இருமதி விளைவின் இருமையில் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈர்இரு திங்களில் பேர்இருள் பிழைத்தும்
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களில் ஊறுஅலர் பிழைத்தும்
ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தச மதி தாயொடு தான்படும்
துக்க சாகரம் துயர் இடைப் பிழைத்தும்
ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை
ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்)
                                                  -- மாணிக்க வாசகர் திருவாசகம்
2 செகத்தில் சோதிப் பெருமாளே
   நிர்த்தஜெக ஜோதிப் பெருமாளே---- திருப்புகழ், இத்தாரணிமீதிற்




Wednesday 28 November 2018

353.கடலை பயறொடு

353
பொது

               தனன தனதன  தனதன  தனதன
               தனன  தனதன  தனதன  தனதன
               தனன  தனதன  தனதன  தனதன       தனதான

கடலை  பயறொடு  துவரையெ   ளவல்பொரி
      சுகியன்  வடைகனல்  கதலியி  னமுதொடு
      கனியு  முதுபல  கனிவகை  நலமிவை         யினிதாகக்
கடல்கொள்  புவிமுதல்  துளிர்வொடு  வளமுற
      அமுது துதிகையில்  மனமது  களிபெற
      கருணை  யுடனளி  திருவருள்  மகிழ்வுற       நெடிதான
குடகு  வயிறினி  லடைவிடு  மதகரி
      பிறகு  வருமொரு  முருகசண்  முகவென
      குவிய  இருகர  மலர்விழி  புனலொடு        பணியாமற்
கொடிய  நெடியன  அதிவினை  துயர்கொடு
      வறுமை  சிறுமையி  னலைவுட  னரிவையர்
      குழியில்  முழுகிய  மழுகியு  முழல்வகை  யொழியாதோ
நெடிய கடலினில்  முடுகியெ  வரமுறு
      மறலி  வெருவுற  ரவிமதி  பயமுற
      நிலமு  நெறுநெறு  நெறுவென வருமொரு    கொடிதான
நிசிரர்  கொடுமுடி  சடசட  சடவென
      பகர  கிரிமுடி  கிடுகிடு  கிடுவென
      நிகரி  லயில்வெயி  லெழுபசு  மையநிற        முளதான
நடன  மிடுபரி  துரகத  மயிலது
      முடுகி  கடுமையி  லுலகதை   வலம்வரு
      நளின  பதவர  நதிகுமு குமுவென          முனிவோரும்
நறிய  மலர்கொடு  ஹரஹர  ஹரவென
      அமரர்  சிறைகெட  நறைகமழ்  மலர்மிசை
      நணியெ  சரவண  மதில்வள  ரழகிய          பெருமாளே
 
பதம் பிரித்து உரை

கடலை  பயிறொடு  துவரை   எள்  அவல் பொரி
சுகியன்  வடை  க(ன்)னல்   கதலி  இ(ன்)னமுதொடு           
கனியும் முது பல கனி வகை  நலம்  இவை  இனிதாக
கடலை பயறொடு - கடலை பயறு இவைகளுடன்  துவரை, எள், பொரி - துவரை, எள், பொரி சுகியன் - சுகியன்( ஒரு இனிப்பு) வடை, கனல் - வடை,   கரும்பு  கதலி - வாழை  இன் அமுதொடு - இனிய அமுது போன்ற சுவையுடன் கனியும் - பழத்துள்ள  முது பல கனி வகை - முதிர்ந்த பலவிதமான பழ வகைகள் நலம் இவை இனிதாக - நல்ல படியாக இவைகளை இன்பத்துடன்

கடல் கொள் புவி  முதல் துளிர்வொடு வளம் உற
அமுது துதி கையில் மனம் அது களி பெற
கருணையுடன் அ(ள்)ளி  திருவருள்  மகிழ்வுற  நெடிதான
கடல் கொள் - கடலால் சூழப்பட்ட  புவி முதல் - பூமியில் உள்ளவர்கள்  முதல் யாவரும் துளிர்வொடு வளமுற - தழைத்து வளப்பம் பெற  அமுது  - அமுதாக  துதி கையில் - தனது துதிக்கையில் மனம் அது களி பெற - மனம் மகிழ்ச்சி பெற கருணையுடன் - கருணை மிகுந்து அளி - அள்ளி எடுத்து திருவருள் மகிழ்வுற - திருவருள் பாலிக்க நெடிதான - பெரிய

குடகு  வயிறினில் அடைவிடு மத கரி
பிறகு வரும் ஒரு முருகு சண்முக  என
குவிய இரு கரம் மலர் விழி புனலொடு பணியாமல்
குடகு வயிறினில் - குடம் போன்ற வயிற்றினில் அடைவிடு - அடைக்கின்ற மத கரி - மத யானை போன்ற (கணபதியின்) பிறகு வரும் - பின் தோன்றிய ஒரு முருக - ஒப்பற்ற முருகனே சண்முக - ஷண்முகனே என - என்று  குவிய இரு கரம் - இரண்டு கைகளும் குவிய  மலர் விழி புனலொடு - மலர்ந்த கண்களிலிருந்து நீர் பெருக பணியாமல் - உன்னைப் பணியாமல்

கொடிய நெடியன அதி வினை துயர் கொடு
வறுமை சிறுமையில் அலைவுடன்  அரிவையர்
குழியில் முழுகியும் அழுகியும்  உழல் வகை  ஒழியாதோ
கொடிய நெடியன - கொடியதும் பெரிதானதுமான அதி வினை துயர் கொடு - மிக்க வினையால் ஏற்படும் துயரத்துடன் வறுமை  சிறுமையில் - வறுமையால் வரும் தாழ்வினால் அலைவுடன் - மனம் அலைச்சல் அடைந்து அரிவையர் - விலை மாதர்கள் குழியில் முழுகியும் - படு குழியில் முழுகியும் அழுகியும் - பாழடைந்தும் உழல் வகை - திரிகின்ற தன்மை  ஒழியாதோ - நீங்காதோ?

நெடிய  கடலினில் முடுகியே வரம் உறு 
மறலி வெரு உற ரவி மதி பயம் உற
நிலமும் நெறு நெறு நெறு என வரும்  ஒரு கொடிதான
நெடிய கடலினில் - பெரிய கடல் போல முடுகியே - விரைந்து எழுந்து  வரம் உறு -  (உயிர்களைக் கவரும்) வரம் பெற்ற  மறலி - யமன் வெருவுற - பயப்படவும்  ரவி மதி  பயம் உற - சூரியனும் சந்திரனும் பயப்படவும் நிலமும் - பூமியும் நெறு நெறு நெறு என - நெறு நெறு என அதிரவும் வரும் ஒரு கொடிதான - வந்த கொடியர்களான

நிசிரர்  கொடுமுடி  சட  சட  சட என
பகர கிரி முடி கிடு கிடு கிடு  என
நிகர்  இல்  அயில் வெயில் எழு  பசுமைய நிறம்  உளதான
நிசிரர் - அசுரர்கள் கொடி முடி - கொடிய தலைகள் கிடு கிடு கிடு என - கிடு கிடு என்று  அதர்ச்சி உற  பகர - சொல்லப்படும கிரி முடி சட சட சட என - மலைச் சிகரங்கள் சட சட சட என்று அதிர நிகர் இல் - உவமை இல்லாத அயில்- வேலாயுதத்துடன் வெயில் எழு பசுமைய நிறமுளதான - ஒளி வீசும் பச்சை நிறமுள்ளதும்

நடனம்  இடும்  பரி  துரகதம் மயில்  அது
முடுகி  கடுமையில் உலகதை  வலம் வரும்
நளின பத வர நதி  குமு  குமு என முநிவோரும்
நடனமிடும் - நடனம் செய்யும்  பரி துரகத மயில் அது - வாகனமான குதிரை போன்ற மயில்  முடுகி வேகமாக  கடுமையில் - உக்கிரத்துடன் உலகதை - புவியை வலம் வரும் - வலம் வந்த நளின பத - தாமரை போன்ற திருவடிகளை உடையவனே வர நதி - கங்கை குமு குமு என - கொந்தளிக்க முனிவோரும் - முனிவர்களும்

நறிய  மலர்  கொடு  ஹர  ஹர  ஹர  என
அமரர்  சிறை  கெட  நறை  கமழ்  மலர்  மிசை
ந(ண்)ணியே  சரவணம்  அதில்  வளர்  அழகிய  பெருமாளே
 
நறிய மலர் கொடு - வாசனை மிகுந்த மலர்களோடு ஹர ஹர ஹர என - ஹர ஹர என்று போற்ற அமரர் சிறை கெட - தேவர்கள் சிறை நீங்க நறை கமழ் - நறு மணம் வீசும் மலர் மிசை - தாமரை மலர் மீது ந(ண்)ணியெ - தங்கி சரவணம் அதில் - சரவணப் பொய்கையில் வளர் அழகிய பெருமாளே - வளர்ந்த அழகிய பெருமாளே


சுருக்க உரை

கடலை, பயறு, பழம் ஆகியவைகளைக் வயிறு புடைக்க உண்ணும் யானை முகனான கணபதியின் பின்னர் தோன்றிய முருகனே, ஷண்முகனே என்று உன்னைப் பணியாமல், கொடிய வினையால் துக்கமுற்று, விலைமாதர்களின் ஆசையால் பாழாகும் என் தன்மை
என்னை விட்டு என்று நீங்கும்?  
யமனும், சூரிய சந்திரர்களும் பூமியும் பயப்படும்படி விரைந்து வரும்  அசுரர்களின் தலைகள் முறிய, மலைகள் சிதற, வேலாயுதத்துடன் மயில் மீது ஏறி உலகைச் சுற்றி வந்த திருவடியை உடையவனே, கங்கை கொந்தளிக்க, முனிவர்கள் போற்ற,  தேவர்கள் சிறை நீங்கும்படி சரவணப் பொய்கையில் வளர்ந்த பெருமாளே, நான் விலை
மாதர்கள் ஆசையிலிருந்து நீங்குவது ஒழியாதோ?

விளக்ககக் குறிப்புகள்  

கடல் கொள் புவி முதல்துதி கையில்
 மகர சலநிதி  வைத்த  துதிக்கரம் வளரு கரிமுக
                                                        -- திருப்புகழ்,  நினது திருவடி
 
கணபதி  ஆமையைஅடக்கிய போது அவர் தமது துதிக்கையால் கடல்   நீரெல்லாம் உறிஞ்சினர் என்பது வரலாறு




352.ஓதுமுத்தமிழ்

352
பொது

                 தான தத்தன தானன தானன
                 தான தத்தன தானன தானன
                 தான தத்தன தானன தானன        தந்ததான

ஓது முத்தமிழ் தேராவ்ரு தாவனை
   வேத னைப்படு காமாவி காரனை
   ஊன முற்றுழல் ஆபாச ஈனனை     அந்தர்யாமி
யோக முற்றுழல் ஆசாப சாசனை
   மோக முற்றிய மோடாதி மோடனை
   ஊதி யத்தவம் நாடாத கேடனை     அன்றிலாதி
பாத கக்கொலை யேசூழ்க பாடனை
   நீதி சற்றுமி லாகீத நாடனை
   பாவி யர்க்குளெ லாமாது ரோகனை மண்ணின்மீதில்
பாடு பட்டலை மாகோப லோபனை
   வீடு பட்டழி கோமாள வீணனை
   பாச சிக்கினில் வாழ்வேனை யாளுவ    தெந்தநாளோ
ஆதி சற்குண சீலாந மோநம
   ஆட கத்திரி சூலாந மோநம
   ஆதி ரித்தருள் பாலாந மோநம        உந்தியாமை
ஆன வர்க்கினி யானேந மோநம
   ஞான முத்தமிழ் தேனேந மோநம
   ஆர ணற்கரி யானேந மோநம        மன்றுளாடும்
தோதி தித்திமி தீதாந மோநம
   வேத சித்திர ரூபாந மோநம
   சோப மற்றவர் சாமீந மோநம              தன்மராச
தூத னைத்துகை பாதாந மோநம
   நாத சற்குரு நாதாந மோநம
   ஜோதி யிற்ஜக ஜோதீ மஹாதெவர்      தம்பிரானே


பதம் பிரித்தல்


ஓது முத்தமிழ் தேரா வ்ராதவனை
வேதனை படு காமா விகாரனை
ஊனம் உற்று உழல் ஆபாச ஈனனை அந்தர்யாமி
ஓது முத்தமிழ் தேரா -  ஓதத்தக்க முத்தமிழைத் தேர்ந்து அறியாத வ்ருதாவனை - வீணாகக் காலம் கழிப்பவனை வேதனைப்படு - துன்பப்படுகின்ற காம விகாரனை - விகாரமுடைய காமுகனை ஊனம் உற்று உழல் - பழி கொண்டு திரியும் ஆபாச ஈனனை - அசுத்தமான இழிவு உள்ளவனை அந்தர்யாமி - எங்கும் வியாபித்திருக்கும்

யோகம் அற்று உழல் ஆசா பசாசனை
மோகம் முற்றிய மோடாதி மோடனை
ஊதிய தவம் நாடாத கேடனை அன்றில் ஆதி
யோகம் அற்று உழல் - யோக நிலையைக் கடைப் பிடிக்காமல் திரியும் ஆசா பசானனை - ஆசையாகிய பேய் போன்றவனை மோகம் முற்றிய - காம மயக்கம் மிகுந்த மோடாதி மோடனை - மூடர்களுக்குள் தலைமையான மூடனை ஊதியத் தவம் - பயன் தரக் கூடிய தவத்தை நாடாத கேடனை - தேடாத கேடுடையவனை அன்றில் ஆதி - அன்றில் பறவை முதலான உயிர்களை

பாதக கொலையே சூழ் கபாடனை
நீதி சற்றும் இலா கீத நாடனை
பாவியார்க்கு எலாம் மா துரோகனை மண்ணின் மீதில்
பாதகக் கொலையே சூழ் - பாபத்துக்கு ஈடான கொலை செய்யவே கருதுகின்ற கபாடனை - வஞ்சகனை நீதி சற்றும் இலா - ஒழுக்க நெறி கொஞ்சமும் இல்லாத கீத நாடனை - இசைப் பாட்டுக்களில் களிப்புறுவானை பாவியர்க்குள் எ(ல்)லாம் - பாபம் செய்பவர்கள் எல்லேரையும் விட மா - பெரிய துரோகனை - துரோகம் செய்பவனை மண்ணின் மீதில் - இந்த உலகில்

பாடு பட்டு அலை மா கோப லோபனை
வீடு பட்டு அழி கோமாள வீணனை
பாச சிக்கினில் வாழ்வேனை ஆளுவது எந்த நாளோ
பாடுபட்டு அலை - பாடு பட்டு அலைகின்ற மா - பெரிய கோப லோபனை - கோபமும் உலோபத்தனமும் நிறைந்தவனை வீடு பட்டு அழி - கெடுதல் பட்டு அழிகின்ற கோமாள வீணனை - களித்து வீண் பொழுது போக்குபவனை பாச சிக்கினில் வாழ்வேனை - உலக மாயையில் சிக்குண்டு வாழ்பவனை ஆளுவது எந்த நாளோ - ஆட்கொள்ளுவது எந்நாளோ ?

ஆதி சற்குண சீலா நமோநம
ஆடகம் திரி சூலா நமோநம
ஆதரித்து அருள் பாலா நமோநம உந்தி ஆமை
ஆதி - முதல்வனே சற் குண சீலா - சீரிய குணங்களை உடைய பரிசுத்த மூர்த்தியே நமோ நம - உன்னை வணங்குகின்றேன் ஆடகம் - பொன்னாலாகிய திரி சூலா - மூன்று தலைகளை உடைய சூலாயுதனே நமோ நம -  ஆதரித்து அருள் பாலா - என்னை அன்புடன் பாதுகாக்கும் காவல் தெய்வமே நமோ நம - உந்தி - கடலில் ஆமை - ஆமை வடிவமாக

ஆனவர்க்கு இனியானே நமோநம
ஞான முத்தமிழ் தேனே நமோநம
ஆரணற்கு அரியோனே நமோநம மன்றுள் ஆடும்
ஆனவர்க்கு - சென்றவராகிய திருமாலுக்கு இனியோனே - விருப்பமானவரே நமோ நம -  ஞான முத்தமிழ் தேனே - ஞானப் பொருள் நிறைந்த முத்தமிழ் வல்ல தேனே நமோநம - ஆரணற்கு - வேதம் வல்ல பிரம்ம தேவனுக்கு அரியோனே - எட்டாத அருமையானவனே நமோ நம -  மன்றுள் ஆடும் - அம்பலத்தில் நடனம் செய்யும்

தோதி தித்தமி தீதா நமோநம
வேத சித்திர ரூபா நமோநம
சோபம் அற்றவர் சாமீ நமோநம தன்ம ராச
தோதி தித்திமி தீதா – தோதி என்று தாளங்களுடன் கூத்தாடுபவனே நமோ நம -  வேத சித்திர ரூபா - வேதங்களில் ஓதப்படும் அழகிய வடிவம் உள்ளவனே நமோ நம -  சோபம் அற்றவர் - துக்க நிலையில் இல்லாதவர் சாமீ - துதிக்கும் ஞானியே நமோநம -  தன்மராச - எம தர்மராசன்

தூதனை துகை பாதா நமேநம
நாத சற் குரு நாதா நமோநம
ஜோதியில் ஜக ஜோதி மஹா தேவர் தம்பிரானே
தூதனை - அனுப்பி வைத்த காலனை துகை பாதா - உதைத்த பாதங்களை உடையவனே நமோ நம -  நாத சற்குரு நாதா - சற்குரு நாதனே நமோ நம -  ஜோதியில் ஜக ஜோதீ - ஒளியிள் பேரொளியே மஹாதேவர் - மகா தேவனான சிவபெருமான் தம்பிரானே - போற்றும் தலைவனே

சுருக்க உரை

இந்தத் துதிப் பாடலில் அருணகிரி நாதர் தன் சிறுமைகளை எடுத்துரைத்து இறைவனைப் பலவாறு போற்றி வணங்கித் தன்னை ஆண்டு கொள்ள பிரார்த்திக்கின்றார். முத்தமிழைத் தேர்ந்து அறியாதவன், வேதனைக்கு இடமான காம விகாரன், பழிகள் மிகுந்த அசுத்தமானவன், யோக நிலையைக் கூடாத மூடன், தவத்தை நாடாதவன், உயிர்களைக் கொல்லும் பாதகன், நீதி இல்லாதவன், பாவி, மாயையில் சிக்கித் தவிப்பவன் ஆகிய என்னை ஆட் கொள்ளும் நாள் எந்த நாளோ என்று பாடுகின்றார் 

பாட்டின் பிற்பகுதியில் முருகனைப் பலவாறு பாடித் துதித்து வணங்குகின்றார்

விளக்கக் குறிப்புகள்

1.  உந்தி ஆமை ஆனவர்க்கு இனியோனே
திருமாலுக்கு இனியவர் திருமால்
தொனித்த நாத வேயூது சகஸ்ர நாம கோபால
சுதற்கு நேச நீப மாறாத   மருகோனே
                                                 --- திருப்புகழ்,அனித்தமான
2.  தன்மராச தூதனைத் துகை பாதா
கூற்றுவிழத் தாண்டி யென தாகமதில் வாழ்குமர தம்பிரானே
                                              —திருப்புகழ், வாட்டியெனை 
        ஏமனால் ஏவிவவிடு காலன்      --- திருப்புகழ்,  குருதிதோலி
3.  நமோ நமோ உன்னைத் திரும்பத் திரும்ப வணங்குகின்றேன் நாதவிந்துகலாதி, வேத வித்தகா, போத்கந்தரு, சீதளவாரிஜ, அரிமருகோனே, போத நிர்க்குண, சரவண ஜாதா, அவகுண எனத் தொடங்கும்  பாடல்களிலும் இவ்வாறு துதி செய்யப்பட்டுள்ன