பின் தொடர்வோர்

Monday 16 December 2019

397. பாணிக்குட் படாது


397
பொது

   தானத்தத் தனான தானன தானத்தத் தனான தானன
   தானத்தத் தனான தானன             தந்ததான

பாணிக்குட் படாது சாதகர் காணச்சற் றொணாது வாதிகள்

   பாஷிக்கப் தகாது பாதக                                              பஞ்சபூத

பாசத்திற் படாது வேறொரு பாயத்திற் புகாது பாவனை
   பவிக்கப் பெறாது வாதனை                                  நெஞ்சமான
ஏணிக்கெட் டொணாது மீதுயர் சேணுக்குச் சமான நூல்வழி
   யேறிப்பற் றொணாது நாடினர்                            தங்களாலும்
ஏதுச்செப் பொணாத தோர்பொருள் சேரத்துக் கமாம கோததி
   யேறச்செச் சைநாறு தாளைவ                         ணங்குவேனோ
ஆணிப்பொற் ப்ரதாப் மேருவை வேலிட்டுக் கடாவி வாசவன்
   ஆபத்தைக் கெடாநி சாசுரர்                                    தம்ப்ரகாசம்
ஆழிச்சத் ரசாயை நீழலி லாதித்தப் ப்ரகாச நேர்தர
   ஆழிச்சக் ரவாள மாள்தரும்                                    எம்பிரானே
மாணிக்க ப்ரவாள நீலம தாணிப்பொற் கிராதை நூபுர
   வாசப்பத் மபாத சேகர                                             சம்புவேதா
வாசிக்கப் படாத வாசகம் ஈசர்க்குச் சுவாமி யாய்முதல்
   வாசிப்பித் ததேசி காசுரர்                        தம்பிரானே

பதம் பிரித்து  உரை

பாணிக்கு உட்படாது சாதகர் காண சற்று ஒணாது வாதிகள் பாஷிக்க தகாது பாதக பஞ்ச பூத

பாணிக்கு உட்படாது - கையில் அகப்படாதது சாதகர் – யோக வழியில் நிற்பவர்களால் காணச் சற்று ஒணாது -  சற்றும் காண முடியாதது வாதிகள் - தருக்க வாதிகளால். பாஷிக்கத் தகாது - பேசி முடிவு காண முடியாதது பாதக -
பாவங்களுக்கு இடம் தரும்.  பஞ்ச பூத - ஐந்து பூதங்களால்.

[ பாணிக்கு  உட் படாது - கரங்களால் தொட்டுப் பிடிக்க முடியாததும் (அறிவும் அறியாமையும் கடந்த அறிவே ஒரு திரு மேனியாக கொண்ட பரம் பொருளை அருள் அறிவினாலேயே மட்டுமே அறிய முடியும் . ஐந்து புலன்களின் வழியாகக் காண முடியாது )
சாதகர் காணச் சற்றொணாது  - யோக சாதனை மூலமாகவும் சிறிதும் பார்க்க முடியாதது ( முகத்தில் கண் கொண்கின்ற மூடர்காள் அகத்தில் கண் கொண்டு காண்பதே ஆனந்தம் . எல்லாப் பற்றுக் களையும் அறவே நீக்கிய சிவயோகிகளே பரம் பொருளை அறிவார்கள். வானத்தில் மண்ணில் பெண்ணில்  மைந்தரில் பொருளில்
‘ஆசை தான் அற்று  தம்மில் நீத்து தத்துவம் உணர்ந்த யோகர் ஞானக் கண் கொண்டு அன்று நடந்த ஜோதி’ - திருவிளையாடல் புராணம்)

வாதிகள்  பாஷிக்கத் தகாது - சமய  தர்க்கங்களால் பேசி முடிவு காண எட்டாதது ( திறம் என்று தத்தம் மதத்தையே தாபித்து செய்கை கொடு  முறை அறிவார் ஆறு சமயங்கள் தோறும் வேறு வேறாகி விளையாடும் உமை யாவர் அறிவாரே ]

பாசத்தில் படாது வேறு ஒரு உபாயத்தில் புகாது பாவனை பாவிக்க பெறாது வாதனை நெஞ்சமான

பாசத்தில் படாது - பாசங்களிலும் தளைகளிலும் அகப்படாதது வேறு உபாயத்தில் புகாது - வேறு எந்தவிதமான உபாயத்திலும் மாட்டிக் கொள்ளாதது பாவனை – எவ்வித தியான வகையாலும் பாவிக்கப் பெறாது – தியானிக்க முடியாதது வாதனை - வருத்தங்களுக்கு இடமான நெஞ்சமான - மனம் என்கின்ற

[பாதக பஞ்ச பூத பாசத்தில் படாது - ஆன்மீக முன்னேற்றத்திற்கு தடையாய் நிற்கும் ஆசைகளுக்கு காரணமான ஐம்பூதங்களின் தளையில் அகப்படாதது ( இந்தடையைக் கடக்க அருணகிரியார் ஓர் உபாயம் தெரிவிக்கிறார். ஐந்து பூதங்களும் இறைவனின் பரிணாம வடிவங்களே என்று உபாசனை செய்ய வேண்டும். ஐந்து புதமும்  -  ஏக வடிவம் - விராலிமலைத் திருப்புகழ்)
வேறொரு உபாயத்தில் புகாது  - வேறு எந்தத் தந்திரத்திலும் சிக்கிக் கொள்ளாதது.
பாவனை பாவிக்கப் பெறாது - மனதால் தியானித்து பாவிக்க முடியாதது ( மனம் லயம் அடைந்த பிறகே மெய்யுணர்வு உதிக்கும், சமாதி  மனோலயம் இன்று தாராய்]

ஏணிக்கு எட்டொணாது மீது உயர் சேணுக்கு சமான நூல்வழி ஏறி பற்ற ஒணாது நாடினர் தங்களாலும்

ஏணிக்கு எட்ட ஒணாது - ஏணி கொண்டு எட்ட முடியாதது.  மீது - மேலே. உயர் - உயரத்தில் உள்ள சேணுக்கு - ஆகாயத்துக்கு சமான - ஒப்பான கருத்துள்ள நூல் வழி -  கலை நூல்களின் வழியே ஏறிப் பற்ற ஒணாது- ஆய்ந்து ஏறிக் கொண்டு பிடிக்க முடியதது நாடினர் தங்களாலும் - தேடி  முயல்பவர்களாலும்.

[வாதனை நெஞ்சமான ஏணிக்கு எட்டொணாது - உள்ளத்தில் சதா ஆசைகளும் அவைகள் நிறைப் வேறாததினால் ஏக்கமும் குடி கொண்ட நெஞ்சமான ஏணி கொண்டு இறைவனை அறிய முடியாது,
மீது உயர் சேணுக்குச் சமான நூல் வழி ஏறிப் பற்றொணாது - மிக உயர்ந்த ஆகாயத்திற்கு ஒப்பான உயர்ந்த கருத்துக்கள் அடங்கி உள்ள சாத்திரங்கள் மூலமாக ஆராய்ந்து ஏறி கண்டு பிடிக்க முடியாதது  ‘வேடக் காட்சிக்கும் உபநிடத்து உச்சியில் விரித்த போதக் காட்சிக்கும் காணலன்’ - கந்த புராணம், ‘நூல் அறிவிற்கு அப்பாற்பட்டவன் வாலறிவன்’ - திருக்குறள்] 

ஏது செப்ப ஒணாதது ஓர் பொருள் சேர துக்கமாம் மகா உததி ஏற செச்சை நாறு தாளை வணங்குவேனோ

ஏதுச் செப்ப ஒணாதது -  காரண மூலம் சொல்ல முடியாதது ஓர் பொருள் - இத்தகைய ஒரு பொருளை சேர - நான் அடைய. துக்கமாம் - துக்கம் என்னும் மகா உததி - பெரிய கடலினின்றும் ஏற - நான் கரை ஏற. செச்சை நாறு - நறுமணம் கமழும் தாளை - உனது திருவடிகளைவணங்குவேனோ - வணங்க மாட்டேனோ?

[நாடினர் தங்களாலும்  ஏதுச் செப்பொணாதது - அறிய வேண்டும் எனத் தேடுபவர்களாலும் காரணம் கற்பித்துக் கூற முடியாதது,  தேவரும் அறிகிலா இறைவனை புலவோர் இனிய பாடல்களால் ஏத்துவதைத் தவிர கண்டறியார் என்கிறார் மணிவாசகர். பூதங்கள்தோறும் நின்றாய் எனின் அல்லால் போக்கிலன் வரகிலன் நினைப் புலவோர் கீதங்கள் பாடுதல், ஆடுதல் அல்லால் கேட்டறியோம் உம்மைக் கண்டறிவாரை. பின் எப்படித்தான் அவனை அறிவது? அன்பினால் முடியும். பக்தி வலையில் படுவோன் காண்க. அப்படி பக்தி செலுத்தினேன், ப்ரத்யக்ஷமாக அவனைப் பார்த்தேன் என்கிறார். ‘கண்ணால் யானும் கண்டேன் காண்க’ -  திருவாசகம்)  
ஓர் பொருள் சேர - இப்பேர்ப்பட்ட ஒரு பொருளை நான் அடையவும்,
துக்க மா மகோ உததி  ஏற - பிறவித் துன்பம் எனும் மிகப் பெரிய கடலில் நின்று கரை ஏறவும்,
செச்சை நாறு தாளை வணங்குவேனோ - உன்னுடைய வெட்சி மலர் கமழும் திருவடிகளை வணங்க மாட்டேனா ?  ‘அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கல்லால் பிறவாழி நீந்தல் அரிது ‘– திருக்குறள்]

ஆணி பொன் ப்ரதாப மேருவை வேல் இட்டு கடாவி வாசவன் ஆபத்தை கெடா நிசாசரர் தம் ப்ரகாசம்

ஆணி பொன் - உயர் மாற்றுப் பொன் மயமானதும் ப்ரதாப - பேர் பெற்றதுமான மேருவை - மேரு மலையை வேலிட்டு - வேலாயுதத்தை கடாவி - எடுத்துச் செலுத்தி வாசவன் - இந்திரனுடைய ஆபத்தை - ஆபத்தையும் கெடா - கெடுத்து. நிசாசரர் தம் - அசுரர்களுடைய ப்ரகாசம் - மேம்பாட்டையும் (கெடுத்து).

ஆழி சத்ர சாயை நீழலில் ஆதித்த ப்ரகாச நேர் தர
ஆழி சக்ரவாளம் ஆள் தரும் எம்பிரானே

ஆழி சத்ரசாயை நிழலில் - வட்டமான குடை தரும் பெருத்த நிழலில் ஆதித்த - சூரியனுடைய ப்ரகாச நேர் தர – ஒளிக்கு நிகரான விளங்கும்  ஆழிச் சக்ரவாளம் - கடலாலும் சக்ரவாள கிரியாலும் சூழப்பட்ட உலகை. ஆள் தரும் - ஆண்டருளும். எம்பிரானே - எம்பெருமானே.

மாணிக்க ப்ரவாள நீலம் மதாணி பொன் கிராதை நூபுர
வாச பத்ம பாத சேகர சம்பு வேதா

மாணிக்க(ம்) - செம்மணி. ப்ரவாளம் – பவளம்
நீலம் - நீலமணி மதாணி - (இவைகளால் ஆகிய) பதக்கத்தை அணிந்த கிராதை - வேடப் பெண்ணின் நூபுர - சிலம்பு அணிந்த வாச - நறு மணம் வீசும். பத்ம - தாமரை போன்ற. பாதசேகர - திருவடியைத் (தலை மீது) சூடியுள்ளவனே சம்பு  - திருமால் வேதா - பிரமன்.

வாசிக்க படாத வாசகம் ஈசர்க்கு சுவாமியாய்
வாசிப்பித்த தேசிகா சுரர் தம்பிரானே

வாசிக்கப் படாத - ஓதி அறியாத வாசகம் - திரு
வார்த்தையை ஈசர்க்கு - சிவ பெருமானுக்கு சுவாமியாய் -  குருவாய் முதல் - முன்பு. வாசிப்பித்த - உபதேசித்த. தேசிகா - குரு நாதரே சுரர் தம்பிரனே - தேவர்கள் தம்பிரானே.

[சம்பு வேதா வாசிக்கப் படாத வாசகம் ஈசர்க்குச் சுவாமியாய் -  திருமாலும் பிரம்மாவாலும் ஓதி உணரப்படாத திரு வார்த்தைகளை சிவ குருவாய், முதல் வாசிப்பித்த  தேசிகா,  சுரர்  தம்பிரானே -  முன்பு
உபதேசித்த ஆச்சார்யனே, தேவர்கள் தம்பிரானே]

   [  ] அடைப்புக்குள் கொடுக்கபட்டவை திரு நடராஜன் அவர்கள் தந்த
        விளக்கம்

சுருக்க உரை
சொல்லுக்கு அப்பாற்பட்டதும், யோக முறைகளால் காண முடியாததும், தர்க்க வாதிகளால் பேசி முடிவு காண முடியாததும், ஐம்பூதங்களால் ஏற்படும் தளைகளில் அகப்படாததும், வேறு உபாயத்திலும் மாட்டிக் கொள்ளாததும், தியான வகைகளால் பாவிக்க முடியாததும், மனதால் ஏணி கொண்டு எட்ட முடியாததும், நூல்களால் ஆய்ந்து அறிய முடியாததும், நாடுபவர்களாலும் காரண மூலம் சொல்ல முடியாததும், ஆகிய ஒரு பொருளை நான் அடையவும், என் துக்கம் என்னும் கடலினின்றும் நான் கரை ஏறவும், உன் திருவடிகளை வணங்க மாட்டேனோ?

கிரவுஞ்ச கிரியை வேலாயுதத்தால் அழித்து, இந்திரனுடைய ஆபத்தையும், அசுரர்களின் பெருமையை ஒழித்தும், எல்லா உலகங்களையும் ஆண்டருளும் பெருமாளே. பல வகையான மணிகளையும், சிலம்பையும் அணிந்த வேடர் பெண்ணாகிய வள்ளியின் பாதங்களை வணங்குபவனே, திருமாலும், பிரமனும் அறியாத பிரணவத்தைச் சிவ பெருமானுக்கு உபதேசித்தவனே, தேவர்கள் தம்பிரானே, உன் திருவடிகளை நான் வணங்க மாட்டேனோ?

விளக்கக் குறிப்புகள்
இப்பாடலில் மெய்ப்பொருள் தத்துவம் விளக்கப்பட்டுள்ளது.
 இதே கருத்து கூறப்பட்ட மற்ற திருப்புகழ்ப் பாடல்கள்   -
·        தொடர் வுணர அரிதாய தூரிய பொருளை- (சுருதிவெகு)
·        கதறிய் கலைகொடு சுட்டாத் தீர்பொருள். (கதறியகலை)
·        அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை எப்பொருளுமாய்..    (அகரமுதலென)  
·        குருடர் தெரிவரிய தொரு பொருள் தெரிய நிகழ்மனது (குதறுமுனை)
·        சுருதியாய் சுருதிகளின் மேற்சுடராய். (பருதியாய்) சுருதியூடு கேளாது சரியையாளர் காணாது ... (சுருதியூடு)  
·        அறிவுமறி யாமையுங் கடந்த அறிவு திருமேனி யென்று.. (குகையில்).
ஓப்புக    பத்ம பாதக சேகர...  வேதா முதல் விண்ணவர் சூடு மலர்ப்    பாதா குறமின் பதசே கரனே....கந்தர் அனுபூதி

Tuesday 3 December 2019

396.பருதியாய்


396
பொது
           தனன தாத்தன தனன தாத்தன
           தானா தானா தானா தானா    தனதான

பருதி யாய்ப்பணி மதிய மாய்ப்படர்
   பாராய் வானாய் நீர்தீ காலா                 யுடுசாலம்
பலவு மாய்ப்பல கிழமை யாய்ப்பதி
   னாலா றேழா மேனா ளாவே                 ழுலகாகிச்
சுருதி யாய்ச்சுரு திகளின் மேற்சுட
   ராய்வே தாவாய் மாலாய் மேலே             சிவமான
தொலைவி லாப்பொரு ளிருள்பு காக்கழல்
   சூடா நாடா ஈடே றாதே                  சுழல்வேனோ
திருத ராட்டிர னுதவு நூற்றுவர்
   சேணா டாள்வா னாளோர் மூவா        றினில்வீழத்
திலக பார்த்தனு முலகு காத்தருள்
   சீரா மாறே தேரூர் கோமான்              மருகோனே
குருதி வேற்கர நிருத ராக்ஷத
   கோபா நீபா கூதா ளாமா                     மயில்வீரா
குலிச பார்த்திப னுலகு காத்தருள்  
   கோவே தேவே வேளே வானோர்       பெருமாளே.

பதம் பிரித்து உரை

பருதியாய் பனி மதியமாய் படர்
பாராய் வானாய் நீர் தீ காலாய் உடு சாலம்
பரிதியாய் - சூரியனாய் பனி - குளிர்ந்த மதியாய் - சந்திரனாய் படர் - பரந்துள்ள பார் ஆய் - பூமியாய் வானாய் - ஆகாயமாய் நீர் தீ காலாய் - நீர், நெருப்பு, காற்று இவைகளாய் உடு சாலம் - நட்சத்திரக் கூட்டமாய்.

பலவுமாய் பல கிழமையாய் பதி
நாலு ஆறு ஏழாம் மேல் நாளாய் ஏழு உலகமாகி

பலவுமாய் - (மற்றும்) பலவுமாய் பல கிழமையாய் - பல உரிமைப் பொருள்களாய் பதினாலு ஆறு ஏழாம் மேல் நாள் ஆய் - இருபத்து ஏழு நட்சந்திரங்களாய் ஏழு உலகாகி - ஏழு உலகங்களாய்.

சுருதியாய் சுருதிகளின் மேல் சுடராய்
வேதாவாய் மாலாய் மேலே சிவம் ஆன
சுருதியாய் - வேதமாய் சுருதிகளின் மேல் - வேதங்களுக்கு மேற்பட்ட சுடராய் - ஒளிப் பொருளாய் வேதாவாய் - பிரமனாய் மாலாய் - திருமாலாய். மேலே சிவமான - மங்கலப் பொருளான.

தொலைவு இலா பொருள் இருள் புகா கழல்
சூடா நாடா ஈடேறாதே சுழல்வேனோ
தொலைவு இலாப் பொருள் - அழிவு என்பதே இல்லாததான பரம் பொருளின் இருள் புகாக் கழல் - (அஞ்ஞான) இருள் என்பதே புக முடியாத அந்தத் திருவடியை சூடா - (தலை மேல்) கொண்டும் நாடா - தேடி விரும்பியும். ஈடேறாதே - ஈடேறாமல் சுழல்வேனோ - (வீணாகத்) திரிவேனோ?

திருதராட்டிரன் உதவு நூற்றுவர்
சேணாடு ஆள்வான் நாள் ஓர் மூவாறினில் வீழ
திருதராட்டிரன் உதவு - திருதராட்டிரன் பெற்ற துரியோதனன் முதலிய. நூற்றுவர் - நூறு பேரும் சேண் நாடு ஆள்வான் - வீர சொர்க்க நாட்டை ஆளும்படி நாளோர் மூவாறினில் - பதினெட்டு நாட்களில் வீழ - மாண்டு ஒழியவும்.

திலக பார்த்தனும் உலகு காத்து அருள்
சீரு ஆமாறே தேர் ஊர் கோமான் மருகோனே
திலக - சிறப்புற்ற பார்த்தனும் - அருச்சுனனும் உலகு காத்தருள் - உலகை ஆண்டு காத்தருளும் சீர் ஆமாறே - சீருடன் வாழும்படி தேர் ஊர் கோமான் - தேரில் சாரதியாக இருந்து தேரைச் செலுத்திய பெருமான் ஆகிய திருமாலின் மருகோனே மருகனே

குருதி வேல் கர நிருத ராக்ஷத
கோபா நீபா கூதாளா மா மயில் வீரா

குருதி - (அவுணர்களின்) இரத்தத்தில் (தோய்ந்த). வேல் கர - வேலாயுத சூரனே. ராக்ஷத - அரக்கர்களின் மீது கோபா - கோபம் கொண்டவனே நீபா - கடப்ப மாலை அணிந்தவனே கூதாளா - கூதாளப் பூ மாலை அண்ந்தவனே மா மயில் வீரா - சிறந்த மயில் வீரனே.

குலிச பார்த்திபன் உலகு காத்து அருள்
கோவே தேவே  வேளே வானோர் பெருமாளே.

குலிச பார்த்திபன் - குலிசாயுதம் ஏந்திய அரசன் இந்திரனின் உலகு - பொன்னுலகைக் காத்தருளிய கோவே - தலைவனே. தேவேதேவனே வேளே - வேளே வானோர் பெருமாளே - தேவர்கள் பெருமாளே.

சூரியன், சந்திரன், பரந்த பூமி, ஆகாயம், நீர், தீ, காற்று, நட்சத்திரங்கள் மற்றும் பலவாய், பல கிழமையாய், இருபத்தேழு சிறந்த நட்சத்திரங்களாய், வேதமாய், வேதங்களுக்கு மேற்பட்ட ஒளிப் பொருளாய், பிரமனாய், திருமாலாய், இவர்களுக்கு மேற்பட்ட சிவமாய், அழிவில்லாத பரம் பொருளாய், அஞ்ஞான இருள் புகாத அந்தத் திருவடியை என் தலையில் சூட்டி, தேடி விரும்பி, ஈடேறாமல் வீணே திரிவேனோ?

துரியோதனன் முதலியோர் பதினெட்டு நாட்களில் மாண்டு விழவும், அருச்சுனன் உலகை ஆளவும், சாரதியாக இருந்துத் தேரைச் செலுத்திய திருமாலின் மருகனே, அரக்கர்களைக் கொன்ற வேலயுதனே, கடப்பும், கூதாளப் பூவும் அணிபவனே, இந்திரன் பொன்னுலகை ஆளும்படி காத்தருளிய தலைவனே, வேளே, தேவர்கள் பெருமாளே நான் ஈடேறாமல் வீணே திரிவேனோ?

ஒப்புக:
தேர் ஊர் கோமான் ....
விசயன் ரதமுதல் நடவிய வெளிமையு
நிகில செகதல முரைசெயு மரிதிரு மருகோனே          

.......திருப்புகழ், குருவுமடியவர்

கூதாளா...
கூதாள கிராதகுலிக் கிறைவ      ...கந்தர் அனுபூதி