438
காஞ்சீபுரம்
தத்தத்தத் தானன தானன
தத்தத்தத் தானன தானன
தத்தத்தத் தானன தானன தனதான
மக்கட்குக்
கூறரி தானது
கற்றெட்டத் தான்முடி யாதது
மற்றொப்புக் கியாதுமொ வாதது மனதாலே
மட்டிட்டுத்
தேடவொ ணாதது
தத்வத்திற் கோவைப டாதது
மத்தப்பொற் போதுப கீரதி மதிசூடும்
முக்கட்பொற்
பாளரு சாவிய
அர்த்தக்குப் போதக மானது
முத்திக்குக் காரண மானது பெறலாகா
முட்டர்க்கெட்
டாதது நான்மறை
யெட்டிற்றெட் டாதென வேவரு
முற்பட்டப் பாலையி லாவது புரிவாயே
செக்கட்சக்
ராயுத மாதுலன்
மெச்சப்புற் போதுப டாவிய
திக்குப்பொற் பூதர மேமுதல் வெகுரூபம்
சிட்டித்துப்
பூதப சாசுகள்
கைக்கொட்டிட் டாடக கோததி
செற்றுக்ரச் சூரனை மார்பக முதுசோரி
கக்கக்கைத்
தாமரை வேல்விடு
செச்சைக்கர்ப் பூரபு யாசல
கச்சுற்றப் பாரவ யோதர முலையாள்முன்
கற்புத்தப்
பாதுல கேழையு
மொக்கப்பெற் றாள்விளை யாடிய
கச்சிக்கச் சாலையில் மேவிய பெருமாளே
பதம்
பிரித்து உரை
மக்கட்குக் கூற அரிதானது
கற்று எட்டத்தான் முடியாதது
மற்று ஒப்புக்கு இயாதும்
ஒவ்வாதது மனதாலே
மக்கட்குக்
கூற அரிதானது = மக்களுக்கு அது இத்தன்மைத்து என்று எடுத்துச் சொல்லுவதற்கு
அரிதானது.
கற்று எட்டத் தான் = கல்வியின் மூலமாக எட்டிப் பிடிக்கலாம் என்றால் முடியாதது = அங்ஙனம் எட்டுதற்கும் முடியாதது மற்று = பின்னர் ஒப்புக்கு = ஒன்றை ஒப்பிடலாம் என்றால் இயாதும் ஒவ்வாதது = (ஒப்பிடுவதற்கு) எப்பொருளுமே ஒப்பிட ஒண்ணாதது மனதாலே = மனதைக் கொண்டு
தத்வத்தில் கோவை படாதது
மத்த பொன் போது பகீரதி
மதி சூடும்
மட்டிட்டு = அளவிட்டு தேட ஒணாதது = தேடுதற்கு முடியாதது தத்வத்தில் = அறிவு அராய்ச்சிக்கும் கோவை படாதது = ஒரு வழியான வரிசையில் அமையாதது மத்தப் பொன் போது = ஊமத்த மலரின் மகரந்தப் பொடி கொண்ட மலரையும் பகீரதி = கங்கை நதியையும் மதி = நிலவையும் சூடும் = சடையில் அணிகின்ற
முக்கண் பொற்பாளர் உசாவிய
அர்த்த(த்து)க்கு போதகமானது
முத்திக்கு காரணம் ஆனது
பெறலாகா
முக்கண் பொற்பாளர் = மூன்று கண்களை உடைய அழகர் உசாவிய = சொல்லுக என்று கேட்க அர்த்தத்துக்கு = பொருளுக்கு போதகம் ஆனது = உபதேச வித்தாக இருப்பது முத்திக்கு = வீட்டின்பத்துக்கு காரணம் ஆனது = காரணமாக விளங்குவது பெறலாகா = பெறுதற்கு முடியாததாய்
முட்டர்க்கு எட்டாதது
நான் மறை
எட்ட இல் தெட்டாது எனவே
வரும்
முற்பட்டு அப்பாலையில்
ஆவது புரிவாயே
முட்டர்க்கு எட்டாதது = மூடர்களுக்கு எட்டாததாய் இருப்பது நான் மறை = நான்கு வேதங்களுக்கும் எட்ட இல் = எட்ட முடியவில்லை என்று விளக்கம் தெட்டாது எனவே வரும் முற்பட்டும் = உறாத வழியில் முற்பட்டும் அப்பாலையில் ஆவது = அந்த நிலைக்கு அப்பாலான நிலையில் உள்ளது எதுவோ அந்தப் பொருளை புரிவாயே = (அடியேனுக்கு) உபதேசித்து அருள்வாயாக.
செக்கண் சக்ராயுத மாதுலன்
மெச்ச புல் போது படாவிய
திக்கு பொன் பூதரமே முதல்
வெகு ரூபம்
செக்
கண் = சிவந்த கண்களை உடைய சக்ராயுத = சக்கரம் ஏந்திய மாதுலன் = மாமன். மெச்ச = மெச்சிப் புகழ புல் =
புல்லும்.
போது = மலரும். படா = படர உள்ள. வியம் = பெரிய திக்கு = திசைகளில் உள்ள. பொன் பூதரமே = மேரு மலை முதல் = முதலான. வெகு ரூபம் = பலப்பல உருவ பேதங்களை.
சிட்டித்து பூத பசாசுகள்
கை கொட்டிட்டு ஆட மகோததி
செற்று உக்ர சூரனை மார்பகம்
முது சோரி
சிட்டித்து
= படைத்தும் பூத பசாசுகள் = பூதங்களும், பேய்களும் கைக்கொட்டிட்டு ஆட =
கை கொட்டி ஆட.
மகோததி = பெரிய கடலை செற்றும் = அடக்கியும் உக்ரச் சூரனை =
கொடுமையுடன் எழுந்த சூரனை = சூரனது மார்பகம் =
மார்பிடத்தில்
முது = முற்றின சோரி = இரத்தத்தை
செக்கர் கர்ப்பூர புய
அசல
கச்சு உற்ற பார பயோதர
முலையாள் முன்
கக்க
= சொரியவும் கைத்தாமரை = தாமரை போன்ற
கைகளிலிருந்து வேல் விடு = வேலைச் செலுத்திய செச்சை = சந்தனக் குழம்பு கர்ப்பூர = பச்சைக் கற்பூரம் இவைகளை பூசியுள்ள புய அசல = மலை போன்ற புயங்களை உடையவனே கச்சு உற்ற = கச்சு அணிந்ததும் பார = கனமானதும் பயோதர = பால் கொண்டதுமான முலையாள் = கொங்கைகளை உடையவளும் முன் = முன்பு ஒரு நாள்
கற்பு தப்பாது உலகு ஏழையும்
ஒக்க பெற்றாள் விளையாடிய
கச்சி கச்சாலையில் மேவிய
பெருமாளே.
கற்பு தப்பாது = கற்பு நிலை தவறாமல் உலகம் ஏழையும் = ஏழு உலகங்களையும் ஒக்கப் பெற்றாள் = ஒருங்கே ஈன்றவளுமான (காமாட்சி தேவி) விளையாடிய = தவம் செய்து மகிழ்ந்த கச்சி = கச்சிப் பதியில் கச்சாலையில் = கச்சபாலயம் என்ற திருக் கோயிலில் மேவிய = வீற்றிருக்கும் பெருமாளே = பெருமாளே
மக்களுக்கு எடுத்துக் கூற முடியாததும், நூல்களைக் கற்று எட்ட முடியாததும்,
எதையாவது ஒப்பிடலாம் என்றால் எதுவுமே ஒப்பிட ஒண்ணாததும், மனதால் அளவிட முடியாததும்,
ஆராய்ச்சிக்கு அமையாததும், ஆகிய பொருளைத் தமக்கு உபதேசம் செய்யும்படி, ஊமத்தை மலரையும்,
கொன்றையையும், கங்கையையும்,
நிலவையும் அணிந்த சிவபெருமான் கேட்க, அத்தகைய பொருளுக்கு உபதேச வித்தாக
இருப்பது, வீட்டின்பத்துக்குக் காரணமாக இருப்பது, தங்களுக்கும்
எட்டாதது, எல்லாவற்றுக்கும் அப்பால் உள்ள அந்தப் பொருளை அடி யேனுக்கு
உபதேசித்து அருள்வாயாக.
சக்கரம் ஏந்திய மாமனாகிய திருமால் மெச்சிப் புகழ, பல உருவ பேதங்களைப்
படைத்து, பெரிய கடலை அடக்கி, சூரனது மார்பில் வேலாயுதத்தைச் செலுத்திய திருப் புயங்களை
உடையவனே ! கற்பு நிலை தவறாமல் ஏழு உலகங்களையும் ஈன்ற காமாட்சி தேவி தவம் செய்து மகிழ்ந்த,
கச்சிப் பதியில் வீற்றிருக்கும் பெருமாளே
! எல்லாவற்றுக்கும் அப்பால் உள்ள ஒப்பற்ற பொருளை எனக்கும் உபதேசித்து அருள்வாயாக.
முதல்
நான்கு அடிகள் மெய்ப் பொருள் தத்துவத்தை விளக்குகின்றன. இதே கருத்துள்ள மற்ற திருப்புகழ்ப்
பாடல்கள்:
வாசித்துக்காணொ, காணொதாதது,
வேதத்திற்கேள்வி, சுருதியூடு.
ஒப்புக
உலகு ஏழயும் ஒக்கப் பெற்றாள்.....
பொற்பட்டுத்தரி
அப்பெண்
பழய
அண்டத்தைப் பெற்ற மடப் பெண் பணிவாரை
... திருப்புகழ், புனைமடந்தைக்கு
நான்மறை எட்ட இல் தெட்டாது....
மெய்யா
விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா
என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
... திருவாசகம்,
சிவபுராணம்.
வான
நாடரும் அறி ஒணாத நீ
மறையில்
ஈறும் முன் தொடர் ஒணாத நீ
ஏனை
நாடரும் தெரி ஒணாத நீ
என்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவா
...
திருவாசகம், திருச்சதகம்.
விளக்கக்
குறிப்பு
கச்சிக்
கச்சாலையில் மேவிய..
திருப்பாற்கடலைக்
கடைந்த போது, மத்தாகிய மந்திர மலை அழுந்த, அதைத் திருமால் ஆமை உருவம் எடுத்து முதுகில்
தாங்கினார். இதனால் இறுமாப்படைந்து கடலைக் கலக்க, சிவபெருமான் ஏவ, விநாயகர், அந்த ஆமையைக்
கொன்று, அதன் ஓட்டை சிவபெருமான் அணியத் தந்தனர். திருமால் தமது குற்றம் தீர பூசித்த
சோதி லிங்கமே கச்சபேசர்.