பின் தொடர்வோர்

Wednesday, 13 June 2018

335.இசைந்த ஏறும்


335
பொது
 
            தனந்த தானந் தனதன தானன தனதான

 இசைந்த ஏறுங் கரியுரி போர்வையும்         எழில்நீறும்
     இலங்கு நூலும் புலியத ளாடையு        மழுமானும்
 அசைந்த தோடுஞ் சிரமணி மாலையு           முடிமீதே
     அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய          குருநாதா
 உசந்த சூரன் கிளையுடன் வேரற          முனிவோனே
     உகந்த பாசங் கயிரொடு தூதுவர்          நலியாதே
 அசந்த போதென் துயர்கெட மாமயில்       வரவேணும்
     அமைந்த வேலும் புயமிசை மேவிய    பெருமாளே.
 
பதம் பிரித்து உரை

இசைந்த ஏறும் கரி உரி போர்வையும் எழில் நீறும்
இலங்கு நூலும் புலி அதள் ஆடையும் மழு மானும்

இசைந்த - தம் மனதுக்கு உகந்த. ஏறும் - இடப வாகனமும். கரி உரி - யானைத் தோல் போர்வையும். எழில் - அழகிய. நீறும் - திருநீறும். இலங்கு - விளங்கும். நூலும் - பூணூலும். புலி அதள் ஆடையும் - புலித் தோல் ஆடையும். மழு மானும் - மழு ஆயுதமும் மானும்.

அசைந்த தோடும் சிர மணி மாலையும் முடி மீதே
அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய குரு நாதா

அசைந்த தோடும் - அசைந்து விளங்கும் தோடும்.  சிர மணி மலை - அழகிய தலை மாலையும். முடி மீதே - முடியின் மேலே.
அணிந்த ஈசன் - அணிந்துள்ள சிவபெருமான். பரிவுடன் - அன்புடன். மேவிய குருநாதா - விரும்பிய குரு மூர்த்தியே.

உசந்த சூரன் கிளையுடன் வேர் அற முனிவோனே
உகந்த பாசங் கயிறொடு தூதுவர் நலியாதே

உசந்த - உயர்ந்த. சூரன் கிளையுடன் - சூரனும் அவனுடைய சுற்றத்தாருடன். வேரற - அடியோடு அழிய. முனிவோனே - கோபித்தவனே.உகந்த - தங்களுக்கு மகிழ்ச்சி தரும். பாசங் கயிறொடு - பாசக் கயிற்றொடு. தூதுவர் - யம தூதுவர்கள். நலியாதே - (என்னை) வருத்தாமல்.

அசந்த போது என் துயர் கெட மா மயில் வர வேணும்
அமைந்த வேலும் புயம் மிசை மேவிய பெருமாளே.

அசந்த போது - நான் சோர்வு உற்றிருக்கும் சமயத்தில். என் துயர் கெட - என் துயரம் ஒழிய. மா மயில் வரவேணும் - உனது அழகிய மயிலின் மீது நீ வரவேணும்.அமைந்த வேலும் - அழகாய் அமைந்து விளங்கும் வேலை. புய மிசை - திருத் தோள்கள் மீது. மேவிய பெருமாளே - வைத்துள்ள பெருமாளே.
சுருக்க உரை

இடப வாகனமும், யானைத்தோல் போர்வையும், முப்புரி நூலும், புலித் தோல் ஆடையும், மழுவும், மானும், தோடும், தலை மாலையும் அணிந்த சிவபெருமான் விரும்பிய குரு நாதனே. சூரனை அவன் சுற்றத்தாருடன் அழித்தவனே. பாசக் கயிற்றுடன் யம தூதுவர்கள் என்னை வருத்தாமல், நான் மனம் சோர்ந்து இருக்கும் வேளையில் நீ வேலுடன் மயில் மீது வரவேணும்.

விளக்கக் குறிப்புகள்

1. இசைந்த ஏறும்.....
     இடபம் உகந்து ஏறிய ஆறு எனக்கு அறிய இயம்புஏடீ) ---
      மாணிக்கவாசகர் திருவாசகம் - திருச்சாழல்  
2 தோடும் சிரமணி மலையும் முடிமீதே

தோடுடை செவியன் விடை ஏறி ஓர் தூவெண்மதி சூடி                             --- சம்பந்தர்  தேவாரம்  

தலைக்குத் தலைமாலை அணிந்தது என்னே
    --- சுந்தரர் தேவாரம்
தலையே நீ வணங்காய் தலை மலை தலைக்கு அணிந்து                ---திருநாவுக்கரசர் தேவாரம் 


      

No comments:

Post a Comment