பின் தொடர்வோர்

Wednesday, 25 July 2018

339.இருந்த வீடுங்

339
பொது
தீபம் ஜோதி நமஸ்துப்யம் தீபம் ஸர்வம் தமோபகம்
தீபேன சாத்யதி சர்வம் தீப ரூப ப்ரபோ நம


                     தனந்த தானந் தந்தன தனதன தனதான

இருந்த வீடுங் கொஞ்சிய சிறுவரு             முருகேளும்
     இசைந்த வூரும் பெண்டிரு மிளமையும்  வளமேவும்
விரிந்த நாடுங் குன்றமு நிலையென           மகிழாதே
     விளங்கு தீபங் கொண்டுனை வழிபட அருள்வாயே
குருந்தி லேறுங் கொண்டலின் வடிவினன்  மருகோனே
     குரங்கு லாவுங் குன்றுரை குறமகள்     மணவாளா
திருந்த வேதந் தண்டமிழ் தெரிதரு           புலவோனே
     சிவந்த காலுந் தண்டையு மழகிய         பெருமாளே.


பதம் பிரித்து உரை

இருந்த வீடும் கொஞ்சிய சிறுவரும் உரு கேளும்
இசைந்த ஊரும் பெண்டிரும் இளமையும் வளம் மேவும்

இருந்த வீடும் - நான் குடியிருந்த வீடும். கொஞ்சிய சிறுவரும் - நான் கொஞ்சிப் பேசிய குழந்தைகளும் உரு கேளும் - பொருந்திய சுற்றத்தாரும் இசைந்த ஊரும் - என் மனதுக்கு உகந்த ஊரும் பெண்டிரும் - மனைவி முதலிய பெண்டிர்களும் இளமையும் - எனது இளமையும் வளம் மேவும் - செல்வம் நிறைந்த.

விரிந்த நாடும் குன்றமும் நிலை என மகிழாதே
விளங்கு தீபம் கொண்டு உனை வழி பட அருள்வாயே

விரிந்த நாடும் - பரந்துள்ள நாடும் குன்றமும் - மலைகளும் நிலை என - எப்போதும் நிலைத்து இருக்கும் என்று எண்ணி மகிழாதே - நான் மகிழ்வு உறாமல் விளங்கு தீபம் - ஒளி தரும் தீபங்களை கொண்டு - ஏற்றி உனை வழி பட அருள்வாயே - உன்னை வழி பட அருள் செய்வாயாக.

குருந்தில் ஏறும் கொண்டலின் வடிவினன் மருகோனே
குரங்கு உலாவும் குன்று உரை குற மகள் மணவாளா

குருந்தில் ஏறும் - குருந்த மரத்தில் ஏறின கொண்டலின் வடிவினன் - மேக வண்ணனாகிய திருமாலின் மருகோனே - மருகனே குரங்கு உலாவும் - குரங்குகள் உலவுகின்ற குன்று உறை - வள்ளி மலையில் வாசம் செய்த குற மகள் மணவாளா - குறப் பெண்ணாகிய வள்ளியின் கணவனே.

திருந்த வேதம் தண் தமிழ் தெரி தரு புலவோனே
சிவந்த காலும் தண்டையும் அழகிய பெருமாளே.

திருந்த - திருத்தமான முறையில் வேதம் - மறைகளை தண் - இன்பமான தமிழ் தெரி தரு - திரு நெறித் தமிழ் எனும் தேவாரமாக உலகோர் தெரியத் தந்த புலவோனே - ஞானசம்பந்தப் பெருமானாகிய புலவனே சிவந்த காலும் - செம்மை வாய்ந்த திருவடியும் தண்டையும் - அதில் அணிந்த தண்டையும் அழகிய பெருமாளே - அழகு பொலியும் பெருமாளே.

சுருக்க உரை
வீடு, குழந்தைகள், சுற்றம் , நாடு, மனைவி, இளமை முதலியவற்றை நிலை என்று நினைத்து மகிழாமல், விளக்கு ஏற்றி உன்னை வழிபட அருள்வாய். திருமாலின் மருகனே, மலையில் வாழும் குற மகள் வள்ளியின் மணவாளா, வேதங்களைத் தமிழில் யாவரும் தெரிந்து கொள்ளும்படி எழுதி ஞான சம்பந்தராக அவதரித்தவனே, உனது  திருவடிகளை வழிபட அருள்வாயே.

விளக்கக் குறிப்புகள்

1                                                     குருந்தில் ஏறும்...
கண்ணன் யமுனையில் நீராடும் மங்கையர்களின் துகிலை எடுத்துக் கொண்டு கரையில் உள்ள குருந்த மரத்தில் ஏறியதைக் குறிக்கும்.
  கொல்லையஞ் சாரற் குருந் தொசித்த மாயவன் ---
                                                            சிலப்பதிகாரம்

கொங்க லர்ந்த மலர்க்கு ருந்த
மொசித்த கோவல னெம்பிரான்
சங்கு தங்கு தடங்க டல்துயில்
கொண்ட தாமரைக் கண்ணினன்...---
                             -திருமங்கை ஆழ்வார் ,பெரியதிருமொழி               .
                                                                              
2.தமிழ் வேதம் ....
சம்பந்தர் தேவாரம் என்று கொள்ளலாம்-- ரிக் வேதம்
ருக்கு ஐயம் போக உரைத்தோன்             --கந்தர் அந்தாதி                
சுருதித் தமிழ்க் கவி--                    திருப்புகழ், கவடுற்ற.             

3. விளங்கு தீபங் கொண்டுனை வழிபட.....                    
விளக்கினால் பெற்ற இன்பம் மெழுக்கினால் பதிற்றி ஆகும்
துளக்கு இல் மலர் தொடுத்தால் தூய விண் ஏறல் ஆகும்
விளக்கு இட்டார் பேறு சொல்லின் மெய்ஞ்ஞெறி ஞானம் ஆகும்
அளப்பு இல் கதம் சொன்னார்க்கு அடிகள்தாம் அருளும் ஆறே
                                              - திருநாவுக்கரசர் தேவாரம்
                                                                              

குரங்குலாவு குன்று - வள்ளி மலை.



Sunday, 22 July 2018

339.இருநோய்மலம்


338
பொது
 
           தனதான தத்ததன தனதான தத்ததன
            தனதான தத்ததன                            தனதான

      இருநோய்ம லத்தைசிவ வொளியால்மி ரட்டியெனை
            யினிதாவ ழைத்தெனது                       முடிமேலே
      இணைதாள ளித்துனது மயில்மேலி ருத்தியொளி
            ரியல்வேல ளித்துமகி                     ழிருவோரும்
      ஒருவாகெ னக்கயிலை யிறையோன ளித்தருளு
            மொளிர்வேத கற்பகந                 லிளையோனே
      ஒளிர்மாம றைத்தொகுதி சுரர்பார்து தித்தருள
            உபதேசி கப்பதமு                         மருள்வாயே
      கருநோய றுத்தெனது மிடிதூள்ப டுத்திவிடு
            கரிமாமு கக்கடவு                            ளடியார்கள்
      கருதாவ கைக்குவர மருள்ஞான தொப்பைமகிழ்
            கருணாக டம்பமல                       ரணிவோனே
      திருமால ளித்தருளு மொருஞான பத்தினியை
            திகழ்மார்பு றத்தழுவு                     மயில்வேலா
      சிலைதூளெ ழுப்பிகவ டவுணோரை வெட்டிசுரர்
            சிறைமீள விட்டபுகழ்                  பெருமாளே.
 
பதம் பிரித்து உரை

 
இரு நோய் மலத்தை சிவ ஒளியால் மிரட்டி எனை
இனிதா அழைத்து எனது முடி மேலே

இரு நோய் - பிறப்பு, இறப்பு என்னும் பெரிய நோய்களையும். மலத்தை - ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களையும். சிவ ஒளியால் - சிவன் அருள் கொண்டு. மிரட்டி - வெருட்டி ஒட்டி. எனை இனிதா அழைத்து - என்னை இனிமையாக அழைத்து. எனது முடி மேலே - எனது தலையின் மேல்.

இணை தாள் அளித்து உனது மயில் மேல் இருத்தி ஒளிர்
இயல் வேல் அளித்து மகிழ் இருவோரும்

இணை தாள் அளித்து - (உனது) இரண்டு திருவடிகளைச் சூட்டி. மயில் மேல் இருத்தி - மயிலின் மேல் இருக்கச் செய்து. ஒளிர் இயல் - விளங்குகின்றதும் பொருந்தியதுமான. வேல் அளித்து - வேலாயுதத்தை என் கையில் தந்து. மகிழ் - நான் மகிழும்படி. இருவோரும் - நாம் இருவரும்.


ஒருவாக என கயிலை இறையோன் அளித்து அருளும்
ஒளிர் வேத கற்பக நல் இளையோனே

ஒருவாக என - ஒன்று படுவோமாக என்று. கயிலை மலை இறையோன் - கயிலை மலைக் கடவுளாகிய சிவபெருமான். அளித்தருளும் - பெற்று அருளிய. ஒளிர்- விளங்கும். வேத கற்பக - வேதம் போற்றும் கற்பகம் அனைய விநாயகருக்கு. நல் இளையோனே - நல்ல தம்பியே.

ஒளிர் மா மறை தொகுதி சுரர் பார் துதித்து அருள
உபதேசிக பதமும் அருள்வாயே

ஒளிர் - விளங்கும். மா மறைத் தொகுதி - சிறந்த வேதப் பகுதிகளையும். சுரர் - தேவர்களும். பார் - உலகத்தவர்களும். துதித்து அருள - போற்றி செய்ய. உபதேசிகப் பதமும் - உபதேச மொழிகளையும். அருள்வாயே - (எனக்கு) அருள் புரிவாயாக.


கரு நோய் அறுத்து எனது மிடி தூள் படுத்திவிடு
கரி மா முக கடவுள் அடியார்கள்

கரு நோய் - கருவில் சேரும் பிறவி நோயை. அறுத்து - ஒழித்து. எனது மிடி - என்னுடைய தரித்திரம். தூள் படுத்தி விடு - தூளாக்கி ஒழித்து விடும். கரி மா முகக் கடவுள் அடியார்கள் - யானையின் அழகிய முகத்தை உடைய கடவுள் அடியார்கள்.

கருதா வகைக்கு வரம் அருள் ஞான தொப்பை மகிழ்
கருணா கடப்ப மலர் அணிவோனே

கருதா வகைக்கு - நினைத்திராத அத்தனை அளவுக்கு. வரம் அருள் - வரங்களைத் தருகின்ற. ஞான தொப்பை மகிழ் - ஞான மூர்த்தியும் தொப்பைக் கடவுளுமான விநாயகர் மகிழும். கருணா - கருணா மூர்த்தியே. கடப்ப மலர் அணிவோனே - கடப்ப மலர் அணிபவனே.


திருமால் அளித்து அருளும் ஒரு ஞான பத்தினியை
திகழ் மார்பு உற தழுவும் அயில் வேலா

திருமால் அளித்து அருளும் - திருமால் பெற்றருளிய. ஒரு - ஒப்பற்ற. ஞான பத்தினியை - ஞான பத்தினியாகிய வள்ளியை. திகழ் மார்பு உற - விளங்கும் மார்பில் பொருந்த. தழுவும் அயில் வேலா - அணைந்த கூர்மையான வேலனே.

சிலை தூள் எழுப்பி கவடு அவுணோரை வெட்டி சுரர்
சிறை மீள விட்ட புகழ் பெருமாளே.
 

சிலை - கிரௌஞ்ச மலையை. தூள் எழுப்பி - தூளாக்கி.
கவடு அவுணோரை - கபடம் நிறைந்த அசுரர்களை. வெட்டி - வெட்டி அழித்து. சுரர் சிறை மீள விட்ட - தேவர்களைச் சிறையினின்று நீக்கின. புகழ் பெருமாளே - புகழை உடைய பெருமாளே.


சுருக்க உரை

பிறவிப் பிணியையும் மும்மலங்களையும் சிவன் அருளால் வெட்டி, என்னை இனிதாக அழைத்து, மயில் மேல் இருத்தி, நாம் இருவரும் ஒன்று படுவோமாக என்று அருளிய கற்பக விநாயகருக்கு நல்ல இளையோனே, சிறந்த வேதப் பகுதிகளையும், விண்ணவரும் உலகோரும் போற்றும் உபதேச மொழிகளையும் எனக்கு அருள் புரிவாயாக. 

என் பிறவி நோயை ஒழித்து, என் தரித்திரத்தையும் தூளாக்கி, கருதும் அளவுக்கு மேலாகவே வரங்களைத் தரும் ஞான மூர்த்தியாகிய விநாயகர் மகிழும் கருணா மூர்த்தியே, திருமால் பெற்ற ஞான பத்தினியான வள்ளியை மார்பில் அணைத்தவனே, கபட அசுரர்களை வெட்டி தேவர்கள் சிறையை மீட்டவனே, என்னை ஒருவனாகக் கருதி உபதேசப் பதம் அருள்வாய்.


விளக்கக் குறிப்புகள்

1. மயில் மேலிருத்தி....
வேல் மயில் கொடுத்து....சிந்தை கூறாய் – திருப்புகழ், வெடித்தவார்.
இயல் வேலுடன் மா அருள்வாயே         திருப்புகழ், சிவமாதுடனே.
2. ஒரு வாகென...
நீ வேறெனாதிருக்க நான்வே றெனாதிருக்க
     – திருப்புகழ், நாவேறு பாமணத்த.
திகழ்வோ டிருவோ ரொருரூ பமதாய்
திசைலோ கமெலா மநுபோகி             - திருப்புகழ், சிவமாதுடனே
3.கற்பகம் ...
விநாயகருக்கு ஒரு சிறப்புப் பெயர்.
4. ஞான தொப்பை மகிழ்...
வித்தகத் திப்பவள தொப்பையப் பற்கிளைய
வெற்றிசத் திக்கரக முருகோனே             -திருப்புகழ்,  தத்துவத்து.
5. பிறவி – அது ஒரு பிணி. ‘பவரோக வத்தியநாத பெருமாளே’ என்பார் இன்னொரு திருப்புகழில்.
6   எனை இனிதா அழைத்து -  “நீவாவென நீயிங்கழைத்து”
                                                   – திருப்புகழ், ஆராதனராடம்பரத்து
7.   எனது முடிமேலே இணைதாள ளித்துனது – “அணுகிமுன் அளித்த பாதம் அருள்வாயே”              – திருப்புகழ், மனையவள் நகைக்க
8. ஞான பத்தினி – “சுந்தர ஞான என குறமாது”, “ஞான குறமாதினை”, “ஏடார் குழற்சுருபி ஞான ஆதனத்தி மிகு மேராள் குறத்தி

      திரு மணவாளா”                                         - திருப்புகழ்