429
காஞ்சீபுரம்
தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தா தனதான
பல பிறவிகளை எடுக்கும் துயர் நிலை நீங்காதோ
கொத்தார் பற்கா லற்றே கப்பாழ்
குப்பா யத்திற் செயல்மாறிக்
கொக்கா கிக்கூ னிக்கோல் தொட்டே
கொட்டா விக்குப் புறவாசித்
தித்தா நிற்றார் செத்தார் கெட்டேன்
அஆ உஉ எனவேகேள்
செற்றே சுட்டே விட்டே றிப்போ
மப்பே துத்துக் கமறாதோ
நித்தா வித்தா ரத்தோ கைக்கே
நிற்பாய்
கச்சிக் குமரேசா
நிட்டு ரச்சூர் கெட்டோ டப்போர்
நெட்டோ தத்திற் பொருதோனே
முத்தா ரத்தோ ளிற்கோ டற்பூ
முட்டா திட்டத் தணிவோனே
முற்றா நித்தா அத்தா சுத்தா
முத்தா முத்திப் பெருமாளே.
பதம்
பிரித்து உரை
கொத்து ஆர் பல் கால் அற்று
ஏக பாழ்
குப்பாயத்தில் செயல் மாறி
கொத்து ஆர் = வரிசையாயிருந்த பல் கால் அற்று
= பற்கள் வேர் போய். ஏக = விழுந்து போக. பாழ் = பாழ்படும். குப்பாயத்தில்
= சட்டையான உடலில். செயல் மாறி
= செயல்கள் தடுமாறி
கொக்காகி கூனி கோல் தொட்டே
கொட்டாவி குப்புற வாசி
கொக்காகி = (தலை மயிர்) கொக்கு போல வெளுத்து. கூனி = கூன் அடைந்து. கோல் தொட்டே = (கையில்) ஊன்று கோல் பிடித்து. கொட்டாவி = கொட்டாவி விட்ட. குப்புற = தலை குனிதலை அடைந்து. வாசி = நிலை வேறுபாடுகளை.
தித்தா நின்றார் செத்தார்
கெட்டேன்
அஆ உஉ எனவே கேள்
தித்தா = அனுபவித்து நின்றார் = நின்றார். செத்தார் = இறந்தார் கெட்டேன் =
(ஐயோ) கெட்டேன் அஆ உஉ எனவே = அஆ உஉ
என்னும் ஒலியுடன் கேள் = உறவினர் அழ
செற்றே சுட்டே விட்டு
ஏறி போம்
அ பேது துக்கம் அறாதோ
செற்று = (சுடு காட்டுக்குச்) சென்று சுட்டே விட்டு
= (அங்கே பிணத்தைச்) சுட்டு விட்டு ஏறிப் போம்
= சுடலையினின்று வெளியேறி வருகின்ற அப் பேது = அந்தப் பேதமை வாய்ந்த. துக்கம் அறாதோ = துயரம் நீங்காதோ?
நித்தா வித்தார தோகைக்கே
நிற்பாய் கச்சி குமரேசா
நித்தா = நித்தனே. வித்தார = விசித்திரம் நிறைந்த. தோகைக்கே நிற்பாய் = மயிலின் மீது (விளங்கி) நிற்பவனே. கச்சிக் குமரேசா
= காஞ்சி புரத்தில் உறையும் குமரேசனே.
நிட்டூர சூர் கெட்டு ஓட
போர்
நெட்டு ஓதத்தில் பொருதோனே
நிட்டுரச் சூர் = கொடுமை வாய்ந்த சூரன். கெட்டு ஓட =
கேடு அடைந்து (கடலிடையே) ஓட. போர் = போரினை நெட்டு = பெரிய.
ஓதத்தில் = கடலில் பொருதோனே = போரைச் செய்தவனே.
முத்து ஆர தோளில் கோடற்
பூ
முட்டாது இட்டத்து அணிவோனே
முத்து ஆரத் தோளில் = முத்து
மாலை அணிந்த தோளில் கோடற் பூ = வெண் காந்த மலரை முட்டாது = தவறாமல். இட்டத்து = விருப்பத்துடன் அணிவோனே = அணிபவனே.
முற்றா நித்தா அத்தா சுத்தா
முத்தா முத்தி பெருமாளே.
முற்றா = முதிராத நித்தா = என்றும் இளமையாக இருப்பவனே அத்தா = அத்தனே சுத்தா = தூய்மையானவனே. முத்தா = முத்தனே முத்திப் பெருமாளே = முத்தியைத்
தர வல்ல பெருமாளே.
சுருக்க
உரை
பற்கள் விழ,
செயல்கள் தடுமாற, தலை மயிர்வெளுக்க, உடல் கூன் உற்று மற்ற வேறுபாடுகளும் அடைய, இறந்து
போன பிறகு, உறவினர் ஓலமிட்டு அழுது, உடலைச் சுடுகாட்டுக்குக் கொண்டு போய் எரித்து,
வீடு திரும்பும் பேதமை வாய்ந்த துக்கம் என்னை விட்டு நீங்காதோ?
நித்தனே! மயினில்மீது
நிற்பவனே. கச்சிக் குமரனே! கொடுமை வாய்ந்த சூரன் கேடு அடைந்துக் கடலில் ஓட, அவனைத்
தொடர்ந்து போர் செய்தவனே! முத்து மாலை அணிந்த தோளில் காந்தள் மலரை விரும்பி அணிபவனே!
என்றும் இளமையானவனே! அத்தனே! தூய்மையானவனே! முத்தியைத் தருபவனே! பல பிறவிகளை எடுத்துத்
துன்புறும் நிலை என்னை விட்டு நீங்காதோ?
ஒப்புக
பற் காலற்றே கப்பாழ்.....
பற்றத் துற்றுக்
கழலக்
கொத்தைச் சொற்கற்
றுலகிற் பலபாஷை.- திருப்புகழ் கொக்குக் கொக்க
தலைமயிர் கொக்குக்
கொக்க நரைத்துப்
கலகலெ னப்பற் கட்டது விட்டு.................திருப்புகழ், தலைமயிர்கொக்கு
குப்பாயம்
= சட்டை (உடல்).
அத்தா நித்தா
அத்தா என்பது பழந்தமிழ்ச் சொல்.
அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய் – அப்பர்
அத்தா இது கேள் என ஆரியன் கூறுவான் – கம்பராமாயணம்.
அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே
– சுந்தரர்
அத்தா நித்தா முத்தா சித்தா அப்பா குமர பெருமாளே
-
திருப்புகழ், துப்பார
சோதி முருகா
நித்தா பழய ஞான சோணகிரி வீதி கந்த வேளே
- திருப்புகழ், சோதி முருகா நித்தா
செ கோடை கோடுக்கே
நிற்பாய் நித்தா செக்கர் கதிர் ஏனல்
-
திருப்புகழ், மெய்ச்சார்