428
காஞ்சீபுரம்
தனதனந் தத்தத் தத்தன தத்தந்
தனதனந்
தத்தத் தத்தன தத்தந்
தனதனந்
தத்தத் தத்தன தத்தந் தனதான
கனிதருங் கொக்குக் கட்செவி வெற்பும்
பழநியுந் தெற்குச்
சற்குரு வெற்புங்
கதிரையுஞ் சொற்குட் பட்டதி ருச்செந் திலும்வேலும்
கனவிலுஞ் செப்பத் தப்புமெ னைச்சங்
கடவுடம் புக்குத்
தக்கவ னைத்துங்
களவுகொண் டிட்டுக்
கற்பனை யிற்கண் சுழல்வேனைப்
புனிதனம் பைக்குக் கைத்தல ரத்நம்
பழையகங் கைக்குற்
றப்புது முத்தம்
புவியிலன் றைக்கற்
றெய்ப்பவர் வைப்பென் றுருகாஎப்
பொழுதும் வந்திக்கைக் கற்றஎ
னைப்பின்
பிழையுடன் பட்டுப்
பத்தருள் வைக்கும்
பொறையையென் செப்பிச்
செப்புவ தொப்பொன் றுளதோதான்
அனனியம் பெற்றற் றற்றொரு பற்றுந்
தெளிதருஞ் சித்தர்க்
குத்தௌ சிற்கொந்
தமலைதென் கச்சிப்
பிச்சிம லர்க்கொந் தளபாரை
அறவிநுண் பச்சைப் பொற்கொடி
கற்கண்
டமுதினுந் தித்திக்
கப்படு சொற்கொம்
பகிலஅண் டத்துற்
பத்திசெய் முத்தின் பொலமேருத்
தனிவடம் பொற்புப் பெற்றமு
லைக்குன்
றிணைசுமந் தெய்க்கப்
பட்டநு சுப்பின்
தருணிசங் குற்றுத்
தத்துதி ரைக்கம் பையினூடே
தவமுயன் றப்பொற் றப்படி
கைக்கொண்
டறமிரண் டெட்டெட்
டெட்டும்வ ளர்க்கும்
தலைவிபங் கர்க்குச் சத்யமு ரைக்கும் பெருமாளே.
பதம்
பிரித்து உரை
கனி
தரும் கொக்கு கண் செவி வெற்பும்
பழனியும்
தெற்கு சற்குரு வெற்பும்
கதிரையும்
சொற்கு உட்பட்ட திருச்செந்திலும் வேலும்
கனி தரும் கொக்கும் = பழங்களைத் தருகின்ற மாமரங்கள் (நிறைந்த). கண் செவி வெற்பும் = பாம்பு மலையாகிய திருச்செங்கோட்டையும். பழநியும் =
பழனியையும். தெற்கு சற்குரு வெற்பும் = தெற்கில் உள்ள சுவாமி மலையையும். கதிரையும் =
கதிர்காமத்தையும். சொற்கு உட்பட்டு = புகழுக்கு இருப்பிடமான திருச்செந்திலும் = திருச்செந்தூரையும். வேலும் = வேலாயுதத்தையும்.
கனவிலும்
செப்ப தப்பும் எ(ன்)னை சங்கட
உடம்புக்கு
தக்க அனைத்தும்
களவு
கொண்டிட்டு கற்பனையில் கண் சுழல்வேனை
கனவிலும் செப்பத் தப்பும் = கனவில் கூடச் சொல்லி அறியாத. எனை = என்னை. சங்கட = சங்கடம் தரும். உடம்புக்குத் தக்க அனைத்தும் = உடலுக்குத் தகுந்த சகல பொருள்களையும். களவு கொண்டிட்டு = திருட்டு வழியிலாவது அடைந்து. கற்பனையின் கண் = (கபட) யோசனைகளிலேயே நோக்கம் கொண்டு. சுழல்வேனை = சுழலும்
என்னை.
புனிதன்
அம்பைக்கு கைத்தல ரத்நம்
பழைய
கங்கைக்கு உற்ற புது முத்தம்
புவியில்
அன்றைக்கு அற்று எயப்பவர் வைப்பு என்று உருகா
புனிதன் = பரிசுத்தமானவனுடைய அம்பைக்கு = தேவி
பார்ப்பதியின் கைத்தல = கையில் விளங்கும். ரத்நம் = இரத்தினம் பழைய கங்கைக்கு உற்ற = பழைய கங்கா தேவிக்குக் கிடைத்த. புது
முத்தம் = புதிய முத்தம் புவியில் = பூமியில். அன்றைக்கு அற்று எய்ப்பவர் = அன்றைக்கு என்று ஒன்றும் சேமித்து வைக்காமல் இறைவன் திருவுளச் சம்மதம் என்று
யாவற்றையும் விட்டுஇளைத்த (பெரியோர்களின்) வைப்பு
என்று உருகா = காப்பு நிதி என்று கூறி உருகி.
எப்பொழுதும்
வந்திக்கைக்கு அற்ற எ(ன்)னை பின்
பிழையுடன்
பட்டு பத்தருள் வைக்கும்
பொறையை என் செப்பி செப்புவது ஒப்பு ஒன்று உளதோ தான்
எப்பொழுதும் = எல்லாப் பொழுதினிலும். வந்திக்கைக்கு அற்ற = வணங்குதலே இல்லாத. எனை = என்னை. பின் பிழையுடன் பட்டு = பின்னும் என் குற்றங்களைப் பொருட்படுத்தாது பொறுத்துச் சம்மதித்து. பத்தருள் வைக்கும் பொறையை = உனது பக்தர்கள் கூட்டத்துள் ஒருவனாக வைத்துள்ள உனது கருணையை. என் செப்பிச் செப்புவது = நான் என்ன சொல்லிப் புகழ்வது. ஒப்பு ஒன்று உளதோ தான்= (உன் கருணைக்கு) நிகர் ஒன்று நிகரோ? (இல்லை என்றபடி).
அனனியம்
பெற்று அற்று அற்று ஒரு பற்றும்
தெளி
தரும் சித்தர்க்கு தெளிசில் கொந்த
அமலை
தென் கச்சி பிச்சி மலர் கொந்தள பாரை
அனனியம் பெற்று = (நீ வேறு
நான் வேறு இல்லை என்ற) அத்துவைத (= அன்னியமின்மை) நிலையைப் பெற்று அற்று ஒரு பற்றும் அற்று = எவ்வித பற்றும் நன்றாக அற்றுப் போய் தெளிதரும்
சித்தர்க்கு = தெளிவு அடைந்த மனம் கொண்ட
சித்தத்தவர்களின் தள்ளிசில் = தெளிந்து உணர்ந்த மெய்ஞ்ஞானம் கொண்ட. கொந்த அமலை =
பூங்கொத்துக்கள் அணிந்த மலம் அற்றவள் தென் கச்சி
= அழகிய கச்சிப் பதியில் பிச்சி மலர் = பிச்சி
மலரை அணிந்துள்ள கொந்தளம் = கூந்தலை உடைய. பாரை = பரா சக்தி.
அறிவி
நுண் பச்சை பொன் கொடி கற்கண்டு
அமுதினும்
தித்திக்கப்படு சொல் கொம்பு
அகில
அண்டத்து உற்பத்தி செய் முத்தின் பொல(ம்) மேரு
அறவி = அறச் செல்வி நுண் பச்சை = நுண்ணிய
பச்சை நிறமுள்ள பொன் கொடி = அழகிய கொடி போன்றவள் கற்கண்டு அமுதினும் = கற்கண்டு, அமுது இவை இரண்டைக் காட்டிலும்
தித்திக்கப் படு = இனிக்கும் சொல் கொம்பு = சொற்களை
உடைய கொம்பனையாள் அகில அண்டத்து = எல்ல அண்டங்களையும் உற்பத்தி செய் =
தோற்றுவிக்கும். முத்தின் = முத்து (மேருமலை) பொல(ம்) மேரு = பொன் மேருமலை.
தனி
வடம் பொற்பு பெற்ற முலை குன்று இணை
சுமந்து எய்க்கப்பட்ட நுசிப்பின்
தருணி
சங்கு உற்று தத்து திரை கம்பையினூடே
தனி = ஒப்பற்ற வடம் = மணி வடத்தின். பொற்புப் பெற்ற முலைக் குன்று இணை = அழகு
பெற்ற இரண்டு கொங்கை மலைகளை. சுமந்து எய்க்கப்பட்ட = சுமந்து அதனால் இளைத்து நிற்கும். நுசுபின்
= இடையை உடைய தருணி = இளமைப் பருவத்தினளான (உமா தேவி) சங்கு உற்றுத் தத்து = சங்குகள் பொருந்தித் ததும்பிப் பரவிச் செல்லும் திரை = அலைகளை உடைய. கம்பையினூடே = கம்பை
ஆற்றுக்கு அருகே
தவம்
முயன்று அ பொற்ற படி கைக்கொண்டு
அறம்
இரண்டு எட்டு எட்டும் வளர்க்கும்
தலைவி
பங்கர்க்கு சத்யம் உரைக்கும் பெருமாளே.
தவம் முயன்று = தவம்
செய்து. அப் பொற்ற = அந்தச் சிறப்புள்ள. படி = இரு நாழி நெல்லை கைக்கொண்டு = கையில்
கொண்டு. அறம் இரண்டு எட்டு எட்டும் = முப்பத்திரண்டு அறங்களையும். வளர்க்கும் தலைவி = வளர்த்த தலைவியாகிய காமாட்சி தேவியின். பங்கர்க்கு =பங்காளராகிய
சிவ பெருமானுக்கு. சத்யம் உரைக்கும் பெருமாளே = மெய்ப் பொருளை உபதேசித்த பெருமாளே.
சுருக்க உரை
மாமரங்கள் நிறைந்த திருச்செங்கோட்டையும், பழனியையும், சுவாமி மலையையும், கதிர் காமத்தையும், திருச்செந்தூரையும், வேலா யுதத்தையும், கனவில் கூட சொல்லி அறியாது, உடற் சுகத்துக்கு வேண்டிய பொருட்களைத் திருடியாவது அடைந்து, கபட யோசனைகளில் ஈடுபட்டுச் சுழல்பவனும், எல்லாவிதமான பற்றுக்களையும் விட்டொ ழித்து நீ ஒன்றுதான் வைப்பு நிதி என்ற உள்ளம் கொண்டு, உன்னை வணங்காதவனும் ஆகிய என்னை, என் குற்றங்களையும் பொருட் படுத்தாது, தெளிந்த சிந்தை உள்ள பத்தர்கள் கூட்டத்தில் வைத்துள்ள உன் கருணையை எப்படிச் சொல்லிப் புகழ்வது?
அத்துவைத நிலையைத் தெளிந்து உணர்ந்த சித்தம் கொண்டவர்கள் நன்குணர்ந்த பார்வதி, அறச் செல்வி, இனிமை வாய்ந்தவள், கம்பை ஆற்றில் தவம் செய்து இரண்டுநாழி நெல்லைப் பெற்று முப்பத்திரண்டு அறம் புரிந்தவள், இத்தகையவள் பங்கரான சிவ பெருமானுக்கு மெய்ப்பெருளை உபதேசித்தவனே! உன் கருணையை எவ்வாறு
சொல்லுவது?
விளக்கக் குறிப்புகள்
கைத்த
ரத்நம் .....
கையால் எடுத்தணைத்துக் கந்தனென் பேர் புனைந்து
மெய்யாறும் ஒன்றாக மேவுவித்துச் செய்ய
---- கந்தர் கலி வெண்பா
பழைய
கங்கைக்கு உற்ற....
முதலில் கங்கையில் வளர்ந்து விளையாடின
பின்னரே பார்வதி தேவி வந்து எடுத்து
வளர்த்தவள் ஆதலின் பழைய கங்கை என்றார்.
எய்ப்பவர்
வைப்பு என்று ....
மனத்துணையே என் தன் வாழ் முதலே
எனக்கு எய்ப்பில் வைப்பே.. மாணிக்கவாசகர், திருவாசகம்-நீத்தல்
விண்ணப்பம்
பத்தருள்
வைக்கும் பொறையை .....
இடுதலைச் சற்றுங் கருதேனைப் போதமி லேனையன்பாற்
கெடுதலி லாததொண் டரிற்கூட் டியவா.... கந்தர அலங்காரம்
அனனியம்
பெற்று....
அனன்யம் – அன்னியம் இல்லாதது. ஆன்மா வேறு இறைவன்
வேறு என்பது இன்றி ஒன்றுபட்டிருக்கும் நிலை
நீவேறானாதிருக்க நான் வேறெனாதிருக்க - திருப்புகழ்,
ஒருத்தனாம் வகைதிரு அருளாலே---- திருப்புகழ், கருப்புவிலில்.
என்னையும் ஒருவன் ஆக்கி யிருங் கழல்
சென்னியில் வைத்த சேவக போற்றி --- மாணிக்கவாசகர், திருவாசகம்-
போற்றித்
திருவகல்.
தருணி
சங்குற்றுத் தத்து திரைக் கம்பையினூடே....
உமை நங்கை வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளங்காட்டி வெருட்டிட வஞ்சி வெருவியோடித்
தழுவ வெளிப்பட்ட கள்ளக் கம்பனை..
---
சுந்தரர் தேவாரம்
தவமுயன்றப்
பொற்றப்படி கைக்கொண்டற......
புதியமுடு கரியதவ முற்றுக் கச்சியினி லுறமேவும்
புகழ் வனிதை தருபுதல்வ... - திருப்புகழ், கருகியறிவகல
சத்ய
முகைர்கும் பெருமாளே.....
யான்றா னெனுஞ்சொல் லிரண்டுங்கெட் டாலன்றி
தோன்றாது சத்தியந் தொல்லைப் பெருநிலஞ்
சூகரமாய்க். . கந்தர் அலங்காரம் .
இரண்
டெட்டெட் டெட்டும் வளர்க்கும்....
இரண்டு எட்டு + எட்டு + எட்டு = 16 + 8 + 8 = 32 அறங்கள்.
ஈசன் அளித்த இரண்டு நாழி அளவு நெல்லினைக் கொண்டே அம்பிகை 32 வகையான அறங்களைச் செய்து மக்கள் குறைவின்றி வாழ வழிவகுத்ததால்தான்
அந்த பராசக்தி இங்கு “அறம் வளர்த்த நாயகி” எனும் பெயர் பெற்றாள். ‘அபிராமி அந்தாதி’யில்,
அபிராமி பட்டர், திருக்கடவூர் அன்னை அபிராமியைப் போற்றி பாடும்போது “ஐயனளந்த படியிரு நாழிகொண்டு இவ்வண்டமெல்லாம் உய்ய அறம் செய்யும்
உன்னையும் போற்றி ஒருவர் தம்பால் செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்
மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உன்றன் மெய்யருளே” என்று
பாடுகிறார். - ‘இப்படிப்பட்ட அறம்செய்த நாயகி நீ இருக்கும்போது, நான் கற்ற செந்தமிழ்ப்
பாக்களால் வேறு எவரிடமெல்லாமோ சென்று பொய்யையும், மெய்யையும் சொல்லி முகஸ்துதி செய்து
வாழ்வேனோ? இல்லை.
எக் குலம் குடிலோடு உலகு
யாவையும்,
இல் பதிந்து, இரு நாழி நெலால் அறம்
எப்பொதும் பகிர்வாள் --- பச்சை ஒண்கிரி திருநள்ளாறு திருப்புகழ்
No comments:
Post a Comment