பின் தொடர்வோர்

Friday, 26 March 2021

436புனமடந் தைக்கு

 


 436

காஞ்சீபுரம்

 

         தனதனந் தத்தத் தத்தன தத்தந்

         தனதனந் தத்தத் தத்தன தத்தந்

         தனதனந் தத்தத் தத்தன தத்தந்   தனதான

 

புனமடந் தைக்குத் தக்கபு யத்தன்

        குமரனென் றெத்திப் பத்தர்து திக்கும்

        பொருளைநெஞ் சத்துக் கற்பனை முற்றும்          பிறிதேதும்

புகலுமெண் பத்தெட் டெட்டியல் தத்வம்

        சகலமும் பற்றிப் பற்றற நிற்கும்

        பொதுவையென் றொக்கத் தக்கதொ ரத்தந்     தனைநாளும்

சினமுடன் தர்க்கித் துச்சிலு கிக்கொண்

        டறுவருங் கைக்குத் திட்டொரு வர்க்குந்

        தெரிவரும் சத்யத் தைத்தெரி சித்துன்              செயல்பாடித்

திசைதொறுங் கற்பிக் கைக்கினி யற்பந்

        திருவுளம் பற்றிச் செச்சைம ணக்குஞ்

        சிறுசதங் கைப்பொற் பத்மமெ னக்கென்           றருள்வாயே

கனபெருந் தொப்பைக் கெட்பொரி யப்பம்

        கனிகிழங் கிக்குச் சர்க்கரை முக்கண்

        கடலைகண் டப்பிப் பிட்டொடு மொக்குந்          திருவாயன்

கவளதுங் கக்கைக் கற்பக முக்கண்

        திகழுநங் கொற்றத் தொற்றைம ருப்பன்

        கரிமுகன் சித்ரப் பொற்புகர் வெற்பன்              றனையீனும்

பனவியொன் றெட்டுச் சக்ரத லப்பெண்

        கவுரிசெம் பொற்பட் டுத்தரி யப்பெண்

        பழயஅண் டத்தைப் பெற்றம டப்பெண்          பணிவாரைப்

பவதரங் கத்தைத் தப்பநி றுத்தும்

        பவதிகம் பர்க்குப் புக்கவள் பக்கம்

        பயில்வரம் பெற்றுக் கச்சியில் நிற்கும்               பெருமாளே.

 

பதம் பிரித்து உரை

 

புன மடந்தைக்கு தக்க புயத்தன்

குமரன் என்று ஏத்தி பத்தர் துதிக்கும்

பொருளை நெஞ்சத்து கற்பனை முற்றும் பிறிது ஏதும்

புன மடந்தைக்கு = தினைப் புனத்து மடந்தையாகிய வள்ளிக்கு தக்க = தக்கதான புயத்தன் = புயங்களை உடையவன் குமரன் என்று ஏத்தி = என்று போற்றி துதிக்கும் பொருளை = பக்தர்கள் துதிக்கின்ற பொருளை நெஞ்சத்து = மனத்தில் கொண்ட கற்பனை முற்றும் = கற்பனைகள் முழுமையும் பிறிது ஏதும் = பிறவான பலவற்றையும்

 

புகலும் எண்பது எட்டு எட்டு இயல் தத்(து)வம்

சகலமும் பற்றி பற்று அற நிற்கும்

பொதுவை என்று ஒக்க தக்கது ஓர் அத்தம் தனை நாளும்

 

புகலும் = (புகழ்ந்து) சொல்லப்படும் எண்பத்து எட்டு எட்டு = தொண்ணூற்றாறு இயல் தத்துவம் = என்று சொல்லப்பட்ட தத்துவ உண்மைகளும் சகலமும் = ஆக எல்லாவற்றையும் பற்றி = பற்றியும் பற்று அற நிற்கும் = பற்று இல்லாமலும் நிற்கும் பொதுவை = பொதுப் பொருளை என்(றூழி) ஒக்கத் தக்க = சூரியனுக்கு ஒப்பாகத் தக்க

[உதயசூரியனை ஒப்பாகக் கூறுவது மரபு]. (பேரொளியைக் கொண்ட) ஓர் அத்தம் தனை =

ஒப்பற்றச் செல்வத்தை நாளும் = நாள் தோறும்.

 

சினமுடன் தர்க்கித்து சிலுக்கி கொண்டு

அறுவரும் கைக்குத்து இட்டு ஒருவர்க்கும்

தெரி அரும் சத்(தி)யத்தை தெரிசித்து உன் செயல் பாடி

 

சினமுடன் = கோபத்துடன் தர்க்கித்து = வாதாடிப் பேசி சிலுகிக் கொண்டு = சண்டையிட்டு அறுவரும் = அறு வகைச் சமயத்தாரும் கைக்குத்திட்டு = கைக்குத்துடன் வாதம் செய்து. ஒருவர்க்கும் = ஒருவருக்கும் தெரி அரும் = தெரிதற்கு அரிதான சத்தியத்தை = சத்தியப் பொருளை தெரிசித்து = தெரிசனம் செய்து உன் செயல் பாடி = உன் திருவிளையாடல்களைப் பாடி

 

திசை தொறும் கற்பிக்கைக்கு இனி அற்பம்

திரு உள்ளம் பற்றி செச்சை மணக்கும்

சிறு சதங்கை பொன் பத்மம் எனக்கு என்று அருள்வாயே

 

திசை தொறும் = திக்குகள் தோறும் (உள்ள வருக்கும்) கற்பிக்கைக்கு = எடுத்து உபதேசிக்க இனி = இனி மேல் நீ அற்பம் = சற்று. திரு உள்ளம் பற்றி = தயை கூர்ந்து செச்சை மணக்கும் = (உனது) வெட்சி மாலை மணம் வீசும். சிறுசதங்கை = சிறிய சதங்கை அணிந்துள்ள பொன் = அழகிய. பத்மம் = திருவடித் தாமரையை எனக்கு என்று அருள்வாயே = எனக்கு எப்போது தந்துஅருள்வாய்?

 

கன பெரும் தொப்பைக்கு எள் பொரி அப்பம்

கனி கிழங்கு இக்கு சர்க்கரை முக்கண்

கடலை கண்டு அப்பி பிட்டொடு மொக்கும் திரு வாயன்

 

கன = கனத்த பெரும் தொப்பைக்கு = பெரிய யிற்றில் எள் பொரி அப்பம்கனி கிழங்கு இக்கு = எள், பொரி, அப்பம், பழம்

கிழங்கு, கரும்பு இவைகளையும். சர்க்கரை = சர்க்கரை முக்கண் = தேங்காய். கடலை, கண்டு அப்பி = கடலை,கற்கண்டு இவைகளை வாரி உண்டு பிட்டுடன் மொக்கும் = பிட்டுடன்விழுங்கும் திரு வாயன் = திரு வாயை உடையவர்

 

கவள(ம்) துங்க கை கற்பக(ம்) முக்கண்

திகழு(ம்) நம் கொற்றத்து ஒற்றை மருப்பன்

கரி முகன் சித்ர பொன் புகர் வெற்பன் தனை ஈனும்

 

கவளம் = சோற்றுத் திரளை உட்கொள்ளும் துங்க = உயர்ந்த கை =துதிக்கையை உடைய கற்பக = கற்பக விநாயகர் முக்கண் = முக்கண்ணர் திகழும் = விளங்கும் நம் கொற்றத்து = நமது வீரம் வாய்ந்த ஒற்றை மருப்பன் = ஒற்றைக் கொம்பர் கரி முகன் = யானை முகத்தினர் சித்ர = அழகிய  பொன் புகர் = பொலிவுள்ள (மத்தகத்தில்) புள்ளிகளை உடைய வெற்பன் தனை = மலை போன்ற கணபதியை ஈனும்= பெற்ற.

 

பனவி ஒன்று எட்டு சக்ர தல பெண்

கவுரி செம் பொன் பட்டு தரி அ பெண்

பழய அண்டத்தை பெற்ற மட பெண் பணிவாரை

 

பவவி = பார்ப்பனி ஒன்று எட்டு = ஒன்பது. சக்ர தலப் பெண் = நவ சக்ரபீடத்துப் பெண் கவுரி = கவுரி. செம் பொன் = செவ்விய அழகிய. பட்டுத் தரி அப்பெண் = பட்டாலாகிய மேலாடை அணிந்துள்ள அந்தப் பெண். பழய = பழையவளும்  அண்டத்தைப் பெற்ற = அண்டங்களைப் பெற்றவளுமாகிய மடப் பெண் = மடப் பெண் பணிவாரை = தன்னைப் பணிபவர்களுடைய

 

பவ தரங்கத்தை தப்ப நிறுத்தும்

பவதி கம்பர்க்கு புக்கவள் பக்கம்

பயில் வரம் பெற்று கச்சியில் நிற்கும் பெருமாளே.

 

பவ தரங்கத்தை = பிறப்பு என்னும் அலைகடலை தப்ப நிறுத்தும் = விலக்கிநிறுத்தும் பவதி = பார்வதி. கம்பர்க்கு = ஏகாம்பர நாதரை புக்கவள் =(கணவனாக) அடைந்தவள் பக்கம் பயில் = (ஆகிய உமா தேவிக்குப்) பக்கத்தில் அமர்ந்து வரம் பெற்று = வரத்தைப் பெற்று கச்சியில் நிற்கும் பெருமாளே = காஞ்சீபுரத்தில் நின்றருளும் பெருமாளே

 

சுருக்க உரை

 தினைப் புனத்து மடந்தையகிய வள்ளிக்குத் தக்கதான புயங்களை உடையவர். குமரன் என்று பக்தர்களால் போற்றப் படும் பொருளை, மனத்தில் நிறுத்தி, தொண்ணூற்றாறு தத்துவங்களுக்கும் தன்னுள் அடக்கி, அவைகளால் பற்றப்படாது நிற்கும் பொதுவான பொருளை, பேரொளியான பெருஞ்  செல்வத்தை, அறு சமய வாதிகளும் ஒருவரை ஒருவர் குத்தி  அறிய முடியாத  சத்தியப் பொருளைத் தரிசனம் செய்து,  உன் திருவிளையாடல்களைப் பாடி, யாவருக்கும் எடுத்து உபதேசிக்க, தயை கூர்ந்து, உனது பாத தாமரைகளை எனக்குத் தந்து அருள் புரிவாயாக.

 

பெரிய வயிற்றில் எள், கடலை முதலிய உணவுப் பொருள்களை வாரி  உண்ணும்  கணபதியைப் பெற்ற பார்ப்பனியாகிய கவுரி, தன்னைப் பணிபவர்களின் பிறப்பை அறுப்பவள், ஏகாம்பர நாதரைக் கணவனாக அடைந்தவள். அவளுடைய பக்கத்தில்  அமர்ந்து, கச்சியில் நின்றருளும் பெருமாளே !. உன் சதங்கை அணிந்த  திருவடியை  எனக்குத் தந்து அருளுக.

 

விளக்கக் குறிப்புகள்

 

அறுவரும் கைக்குத்திட்டு....

        அகல்வினை உட்சார் சட்சம யிகளோடு வெட்கா தட்கிடு

        மறவிலி வித்தா ரத்தன மவிகார...திருப்புகழ் , அகல்வினை.

 

எத்தி = ஏத்தி. =  துதி செய்து.

எண்பத்தெட்டு எட்டு = எண்பத்து எட்டுஎட்டு = 96 (தத்துவங்கள்).

முக்கண் =       தேங்காய்.

 

வரம் பெற்றுக் கச்சியில் நிற்கும் பெருமாளே...

தந்தை சொல்லி அனுப்பியும் பிரமனைச் சிறையினின்று விடாது,

பின்னர் அவர் நேரில் வந்து சொல்லிய பின் பிரமனை முருகன்

விடுத்தார். இந்த குற்றம் நீங்க, முருக வேள் குமர கோட்டத்தில் தவம் புரிந்து, தோஷம் நீங்கி வரம் பெற்றார்.

 

திருவுளம் பற்றிச் செச்சை மணக்கும்...

தாம் பெற விரும்பிய உபதேசப் பொருளை உலகினர் யாவரும் அறிய வேண்டும் என்று அருணகிரி நாதர் கேட்டது அவருடைய கருணையைக் காட்டுகின்றது. கருணைக்கு அருணகிரி என்பதற்கு இது ஒரு சான்றாகும் - வ.சு. செங்கல்வராய பிள்ளை.

 ஒன்று எட்டுச் சக்ர தலப் பெண் ---

 ஒன்றும் எட்டும் --- ஒன்பது. நவசக்ர பீடத்தில் வாழ்பவள் தேவி.

கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே  ---  அபிராமி அந்தாதி.

அண்டத்தைப் பெற்ற மடப்பெண் ---

அண்டங்களை எல்லாம் ஈன்றவள் அம்பிகை.

அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே, பின்னையும்

கன்னி என மறை பேசும் ஆனந்தரூப மயிலே. --- தாயுமானார்.