பின் தொடர்வோர்

Wednesday, 24 March 2021

433.நச்சரவ மென்று

 

433




காஞ்சீபுரம்

தத்தன தனந்த தத்தன தனந்த

தத்தன தனந்த        தனதான

 

நச்சரவ மென்று நச்சரவ மென்று

   நச்சுமிழ் களங்க                      மதியாலும்

நத்தொடு முழங்க னத்தொடு முழங்கு

   நத்திரை வழங்கு                      கடலாலும்

இச்சையுணர் வின்றி யிச்சையென வந்த

   இச்சிறுமி நொந்து                   மெலியாதே

எத்தனையு நெஞ்சில் எத்தனை முயங்கி

   இத்தனையி லஞ்ச                லெனவேணும்

பச்சைமயில் கொண்டு பச்சைமற மங்கை

   பச்சைமலை யெங்கு               முறைவோனே

பத்தியுட னின்று பத்திசெயு மன்பர்

   பத்திரம ணிந்த                       கழலோனே

கச்சிவர் குரும்பை கச்சவர் விரும்பு

   கச்சியில மர்ந்த                      கதிர்வேலா

கற்பக வனங்கொள் கற்பக விசும்பர்

   கைத்தளை களைந்த                 பெருமாளே.

 

பதம் பிரித்து உரை

 

நச்சு அரவம் என்று நச்சு அரவம் என்று

நச்சு உமிழ் களங்க மதியாலும்

 

நச்சு அரவம் என்று = கேது என்னும் பாம்பு தன்னைமென்று (வெளிவிட்ட காரணத்தால்) நச்சு அரவம் என்று = தானும் ஒரு விஷப் பாம்பு என்று நினைத்து நச்சு உமிழ் = விடத்தை என் மீது கக்குகின்ற களங்கம் = கறையைக் கொண்ட மதியாலே = நிலவாலும்.

 

நத்தோடு முழங்கு(ம்) கனத்தோடு முழங்கு(ம்)  

நத் திரை வழங்கு(ம்) கடலாலும்

 

நத்தொடு = சங்கினுடன் முழங்(கு) = பேரொலி செய்யும் (கடலாலும்) கனத்தோடு = கத்தோடு முழங்கு = முழங்குகின்ற (கடலாலும்) நத் = விசேடமான திரை வழங்கும் = அலைகள் வீசும் கடலாலும்

 

இச்சை உணர்வின்றி இச்சை என வந்த

இச்சிறுமி நொந்து மெலியாதே

 

இச்சை உணர்வு இன்றி = பக்தித் தொண்டு, தெளிவு இவை இரண்டும் இல்லாமல் இச்சை என வந்த = ஆசைப் படுகின்றேன் எனக் கூறி வந்த இச்சிறுமி = இந்தச் சிறு பெண் நொந்து = மனம் வாடி மெலியாதே = மெலிந்து போகாமலும்

 

எத்தனையு(ம்) நெஞ்சில் எத்தன(ம்) முயங்கி

இத்தனையில் அஞ்சல் என வேணும்

 

எத்தனையும் = எவ்வளவோ நெஞ்சில் = மனதில் எத்தனம் முயங்கி = முயற்சிகளை மேற்கொண்டு செய்பவளாகிய (இவளை) இத்தனையில் = இந்தச் சமயத்திலேயே அஞ்சல் என வேணும் = பயப்பட வேண்டாம் என்று சொல்லி அருள் செய்ய வேண்டுகிறேன்.

 

பச்சை மயில் கொண்டு பச்சை மற மங்கை

பச்சை மலை எங்கும் உறைவோனே

 

பச்சை மயில் கொண்டு = பச்சை மயிலை வாகனமாகக் கொண்டு பச்சை மற மங்கை = பச்சை நிறம் கொண்ட வேடப் பெண்ணாகிய வள்ளியின் பச்சை மலை எங்கும் = பசுமை வாய்ந்த மலை இடங்களில் எல்லாம் உறைவோனே = உறைபவனே

 

பத்தியுடன் நின்று பத்தி செய்யும் அன்பர்

பத்திரம் அணிந்த கழலோனே

 

பத்தியுடன் நின்று = பக்தியுடன் நிலைத்து நின்று. பத்தி செய்யும் அன்பர் = பக்தி செய்கின்ற அடியார்கள் பூசிக்கும் பத்திரம் அணிந்த = இலை, பூ முதலியவைகளை அணிந்த கழலோனே = திருவடியை உடையவனே

 

கச்சு இவர் குரும்பை  கச்சவர் விரும்பு(ம்)

கச்சியில் அமர்ந்த கதிர் வேலா

 

கச்சு இவர் = கச்சு அணிந்த குரும்பை = தென்னங் குரும்பை போன்ற கொங்கைகளை கச்சவர் = கைத்தவர்கள் (வெறுத்தவர்கள்) விரும்பும் = விரும்புகின்ற கச்சியில் அமர்ந்த = காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் கதிர் வேலா = ஒளி வீசும் வேலனே.

 

கற்பக வனம் கொள் கற்பு அகம் விசும்பர்

கை தளை களைந்த பெருமாளே.

 

கற்பக வனம் கொள் = கற்பக மரங்கள் நிறைந்த. கற்பு அகம் = நீதி நெறியில் நிற்கும் உள்ளத்தைக் கொண்ட விசும்பர் =  விண் உலகத்தோர் கைத் தளை களைந்த = கை விலங்குகளை அழிழ்த்து எறிந்த பெருமாளே = பெருமாளே.

 

சுருக்க உரை

 கேதுவாகிய பாம்பு தன்னை விழுங்கிய காரணத்தால் தானும் ஒரு  விஷப்பாம்பு என்று நினைத்து என் மீது விஷத்தைக் கக்கும் நிலவிவாலும், சங்கு, மேகம் இவைகளுடன் சேர்ந்து அலைகளின் பேரொலியும் மழுங்கும் கடலாலும், பக்தித் தொண்டு, தெளிவு இவை இரண்டும் இல்லாமல், ஆசைப்படுகின்றேன் எனக் கூறி வந்த இந்தச் சிறுமி காம விரகத்தால் வாடி மெலிந்து போகாமல் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொள்ளும் என்னை அஞ்ச வேண்டாம் என்று கூறி அருள் புரிய வேண்டும்.

பச்சை மயில் வாகனத்தின் மேல் ஏறி, பசுமை வாய்ந்த மலை இடங்களில் எல்லாம் உறைபவனே! பத்தி செய்யும் அன்பர்கள் பூசிக்கும் இலை, பூ ஆகியவைகளை அணிந்த

திருவடியை உடையவனே! கற்பகச் சோலைகள் உள்ள விண்ணுலகோரின் விலங்கு களைக் களைந்தவனே! கச்சியில் விரும்பி உறையும் பெருமாளே! இந்தப் பெண் காம நோயால் வாடாமல் அருள் புரிவாயாக.

 

 

விளக்கக் குறிப்புகள்

அகப் பொருள் துறையைச் சார்த்தது. நிலவும், கடலும் விரக வேதனை   தருவன. (தெருவினில் நடவா) என்று தொடங்கும் திருப்புகழ்ப் பாடல் காண்க.

 

இந்தப் பாடலின் ஈற்றடிகளைக் கொண்டு வேறொரு பாடலை   அமைக்கலாம்.

நச்சுமிழ் களங்க மதியாலும்,

   நத்திரை வழங்கு கடலாலும்,

இச்சிறுமி நொந்து மெலியாதே,

   இத்தனையில் அஞ்சல் என வேணும்,

பச்சைமலை எங்கும் உறைவோனே,

   பத்திரம் அணிந்த கழலோனே,

கச்சியில்  அமர்ந்த கதிர் வேலா,

   கைத்தளை களைந்த பெருமாளே).

No comments:

Post a Comment