பின் தொடர்வோர்

Showing posts with label அருள். Show all posts
Showing posts with label அருள். Show all posts

Monday, 7 March 2022

489.பரமகுரு நாத

    489



      தனதனன தான தனதனன தான

           தனதனன தானத்                      தனதானா

 

பரமகுரு நாத கருணையுப தேச         

   பதவிதரு ஞானப்                                     பெருமாள்காண்      

பகலிரவி லாத ஒளிவெளியில் மேன்மை      

   பகருமதி காரப்                                          பெருமாள்காண்      

திருவளரு நீதி தினமானொக ராதி      

   செகபதியை யாளப்                               பெருமாள்காண்      

செகதலமும் வானு மருவையவை பூத      

   தெரிசனை சிவாயப்                              பெருமாள்காண்      

ஒருபொருள தாகி அருவிடையை யூரு       

   முமைதன்மண வாளப்                    பெருமாள்காண்        

உகமுடிவு கால மிறுதிகளி லாத            

   உறுதியநு பூதிப்                                        பெருமாள்காண்        

கருவுதனி லு\று மிகுவினைகள் மாய        

   கலவிபுகு தாமெய்ப்                              பெருமாள்காண்        

கனகசபை மேவி அனவரத மாடு        

   கடவுள்செக சோதிப்                                       பெருமாளே.

 

பதம் பிரித்து உரை

 

பரம குரு நாத கருணை உபதேச

பரவி தரு ஞான பெருமாள்காண்.

பரம குரு நாத - மேலான குரு நாதனே கருணை உபதேச கருணையுடன் உபதேசிப்பவனே பதவி தரு - அருட்பதவியைத் தருகின்ற (சாலோக, சாமீப, சாரூப, சாயுச்சிய பதவிகளை) ஞானப் பெருமாள்காண் -  ஞானப் பெருமாள் நீ தான்

பகல் இரவு இலாத ஒளி வெளியில் மேன்மை        

பகரும் அதிகார பெருமாள்காண்

பகல் இரவு இல்லாத - இராப்பகலற்ற ஒளி வெளியில் - ஒளிவீசும் (சிதாகாச) வெளியில் மேன்மை  - மேன்மையான   உண்மைப் பொருளை பகரம் விளக்கிச் சொல்லவல்ல அதிகாரப் பெருமாள்காண் - அதிகாரம் கொண்ட பெருமாள் நீதான்

திரு வளரும் நீதி தின மனோகர ஆதி        

செக பதியை ஆள்  பெருமாள் காண்

திரு வளரும் - முத்திச் செல்வத்தை வளர்க்கின்ற நீதி -நீதியே தினம் மனோகர - நித்திய அழகனே ஆதி - மூலப்பொருளே செக பதியை - பூவுலகச் அரசர்களையும் ஆள் அப்பெருமாள் காண் - ஆள்கின்ற அந்தப் பெருமாள் காண்

செக தலமமும் வானும் மருவு  அவை பூத

தெரிசனை சிவாய பெருமாள் காண்

செக தலமும் - மண்ணும் வானும் - விண்ணுலகமும் மருவு அவை ஐ பூத - பொருந்தியவைகளான ஐம் பூதங்களிலும் தெரிசனை - கலந்து விளங்கித் தரிசனம் தரும் சிவாயப் பெருமாள் காண் - சிவாய என்னும் பஞ்சாக்ஷரத்தின் பொருளாய் விளங்கும் பெருமாள் நீ தான்

 

ஒரு பொருள் அதாகி அரு விடையை ஊரும்

உமை தன் மணவாள பெருமாள்காண்

ஒரு பொருள் அதாகி  - ஏகப் பொருளாகி அரு -அருமையான விடையை - இடப வாகனத்தில் ஊரும் -ஏறுகின்ற உமை தன் மணவாளா - உமா தேவியின்  கணவனாகிய பெருமாள் காண் - பெருமாள் நீ தான்

உக முடிவு காலம் இறுதிகள் இல்லாத    

உறுதி அநுபூதி பெருமாள்காண்

உக முடிவு காலம் இறுதிகள் இலாத - உக முடிவு, காலம்,இறுதிகள் என்பவை இல்லாத உறுதி அநுபூதி - உறுதி நிலை பெற்ற சிவானுபூதி பெருமாள் காண் - பெருமாள் நீ தான்

கருவு தனில் ஊறு மிகு வினைகள் மாய    

கலவி புகுதா மெய் பெருமாள் காண்

கருவு தனில் ஊறும் - கருவில் இருக்கும் போதே மிகு வினைகள் மாய - கொடிய வினைகள் அழிய கலவி புகுதா சேர்க்கையில் வாராத வகைக் காக்கும் மெய்ப் பெருமாள் காண் - உண்மைப் பொருள் நீ தான்

கனக சபை மேவி அனவரதம் ஆடு

கடவுள் செக சோதி பெருமாளே

 கனக சபை மேவி - பொன்னம்பலத்தில் பொருந்தி அனவரதம்ஆடும் -எப்போதும் திருநடனம் செய்கின்ற. கடவுள் கடவுளாகிய செக சோதிப் பெருமாளே - சோதியாக விளங்கும் பெருமாளே

 

சுருக்க உரை

 

மேலான குரு நாதனே!

கருணையுடன் உபதேசிப்பவனே!

அருள் பதவிகளைத் தரும் பெருமாள் நீ தான். இரவு, பகல் இல்லாத  ஞான ஒளி வீசும் வெளியில் மேன்மையாக உண்மைப் பொருளை விளக்கிச் சொல்ல வல்ல அதிகாரம் படைத்தவன் நீ தான்.

முத்திச் செல்வத்தை  வளர்க்கின்ற நீதியே!

நித்திய அழகனே!

ஆதிப் பொருளே!

அரசர்களுக்கு அரசே!

ஏக மூர்த்தியே!

ரிஷபவாகனத்தில் ஏறும் உமா தேவியின்  கணவனே!  ஐம்பூதங்களிலும் கலந்து விளங்கித் தரிசனம் தரும் சிவாயநம என்னும் பஞசாக்ஷரத்தின் பொருளாய் விளங்கும் பெருமாள் நீ தான்.

உக முடிவிலும் அழியாமல் நிலைத்து  நிற்பவன் நீ தான். கருவிலேயே என் கொடிய வினைகளை அழித்து, நான் கலவியில் புகா வண்ணம் காக்கும் உண்மைப் பொருள் நீ தான்.

சிதம்பரத்தில் வீற்றிருக்கும் சோதியே!

உன்னைத் துதிக்கின்றேன்.

 

விளக்கக் குறிப்புகள்

 

 திரு வளரும் நீதியே.... 

நீதி நின்னை அல்லால் நெறியாதும் நினைந்து அறியேன்

                                                                                                                                 ....சம்பந்தர் தேவாரம்.    

நீதியை நினைய வல்லார் வினை நில்லாவே   ...சம்பந்தர் தேவாரம்

 

செகதமும் வானு மருவை யவை பூத....ஐம்பூதங்களையும் தந்தது

 ஐந்தெழுத்தே.    

மதிய மண்குண  மஞ்ச நால்முக  

 நகர முன்கலை கங்கை  நால்குண    

 மகர முன்சிக ரங்கி மூணிடை தங்குகோண...திருப்புகழ், மதியமண். 

 

தெரிசனை சிவாயப் பெருமாள்....

தில்லையில் அருணகிரி நாதர் முருகவேளைச் சிவபெருமானாகவே

காண்கிறார்.     

சிவசிவ ஹர ஹர  தேவா நமோநம  

 தெரிசன பரகதி யானாய் நமோநம        

திசையினு மிசையினும் வாழ்வே நமோநம...திருப்புகழ், அவகுணவிர

 

முத்தி நால்வகைசாலோகம் சாமீபம் சாரூபம் சாயுச்சியம் என்பன.

1. சாலோகம்  இறைவனுடன் அவ்வுலகில் இருக்கும் நிலை. 

2. சாமீபம்  இறைவனை நெருங்கியிருக்கும் நிலை. கடவுளின் அருகே இருப்பது. 

3. சாரூபம்  இறைவனை உருப்பெற்று விளங்கும் பேறு. கடவுளின் உருவினைப் பெற்று வாழ்வது 

4. சாயுச்சியம்  இறைவனுடன் இரண்டறக் கலத்தல் நிலை. சாயுச்சிய பதவி பெற்றோர்க்கு மீண்டும் பிறவி இல்லை என்பர்

 

ஓங்கார ரூபமாகி

ஒளியாகி வெளியாகி உதயகிரி மீதினில்

உதிக்கின்ற தெய்வமாகிச்

சகல புவனங்களும் தானாகி நின்றவொரு

சச்சிதானந்த மயமாய்ச்

சாலோக சாமீப சாரூப சாயுஜ்ய

சகல சூட்சும தாரியாய்

விக்கிர சிவலிங்க வடிவாக மிகுந்த சதுர்

வேதாந்த முத்தி முதலாய்

வெகுகோடி காலங்கள் உன்னையே நம்பினேன்

வேதனே பர நாதனே

சுக்ர கெம்பீர பரிபூரண விலாசனே

சுயம்பு ரத மீதேறியே

துலங்கு கதிர் மதியென விளங்கு சிவசங்கர

சூரி நாராயண சுவாமியே !

                                                     – சூரிய நமஸ்கார பதிகம்


சாயுஜ்யம்,சிவன்,குருநாதா,சாரூபம்,சாமீபம்,ஞானப்பொருள்,


Sunday, 6 March 2022

486. தறுகணன்

 

486

சிதம்பரம்

 

             தனதன தனன தனதன  தனன

               தனதன தனனாத்                 தனதான

 

தறுகணன் மறலி முறுகிய கயிறு

      தலைகொடு விசிறீக்                கொடுபோகுஞ்

சளமது தவிர அளவிடு சுருதி

     தலைகொடு பலசாத்                        திரமோதி

அறுவகை சமய முறைமுறை சருவி

    யலைபடு தலைமூச்                     சினையாகும்

அருவரு வொழிய வடிவுள பொருளை

     அலம்வர அடியேற்                       கருள்வாயே

நறுமல ரிறைவி யரிதிரு மருக

     நகமுத வியபார்ப்                         பதிவாழ்வே

நதிமதி யிதழி பணியணி கடவுள்                     

     நடமிடு புலியூர்க்                           குமரேசா

கறுவிய நிருதர் எறிதிரை பரவு

    கடலிடை பொடியாப்                  பொருதோனே

கழலிணை பணியு மவருடன் முனிவு

    கனவிலு மறியாப்                        பெருமாளே

 

பதம் பிரித்து உரை

 

தறுகணன் மறலி முறுகிய கயிறு

தலை கொடு விசிறி கொ(ண்)டு போகும் 

தறுகணன் = அஞ்சாமையாகிய வீரத்தை உடைய மறலி = யமன் முறுகிய மயிறு = தனது திண்ணிய பாசக் கயிற்றின் தலைகொடு விசிறி = நுனித் தலையைப் பிடித்துக் கொண்டு வீசி  கொடுபோகும் = பிடித்துக் கொண்டு போகும்

 

சளம் அது தவிர அளவிடு சுருதி

தலை கொடு பல சாத்திரம் ஓதி 

சளம் அது தவிர = வஞ்சனைத் தொழில் என்னிடம் வராதபடி அளவிடு சுருதி = அளந்து வகைப்படுத்தியுள்ள வேதம் தலைகொடு = முதலாக பல சாத்திரம் ஓதி = பல சாத்திர நூல்களை ஓதி

 

அறுவகை சமயம் முறை முறை சருவி 

அலைபடு தலை முச்சி இனை ஆகும் 

அறு வகை சமய முறை முறை = ஆறு வகைப்பட்ட சமயங்கள் ஒன்றோடொன்று சருவி அலைபடு = மாறுபட்டு மோதி தலை முச்சி = தலை வேதனையாக இனை ஆகும் = போராடும் 

அருவரு ஒழிய வடிவுள பொருளை

அலம் வர அடியேற்கு அருள்வாயே

 

அருவரு ஒழிய = அருவருப்பான செயல்கள் ஒழிய வடிவுள பொருளை = சத்தான உருவமுள்ள (பேரின்பப்) பொருளை அலம் வர = அமைதி உண்டாக அடியேற்கு அருள்வாயே = அடியேனுக்கு உபதேசித்து அருள்க 

நறு மலர் இறைவி அரி திரு மருக

நகம் உதவிய பார்ப்பதி வாழ்வே 

நறு மலர் இறைவி = நறு மணமுள்ள செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் இலக்குமிக்கும் அரி = திருமாலுக்கும் திரு மருக = அழகிய மருகனே நகம் = (இமய) மலை உதவிய = ஈன்ற பார்ப்பதி வாழ்வே = பார்வதியின் செல்வக் குமரனே 

நதி மதி இதழி பணி அணி கடவுள்

நடம் இடு புலியூர் குமரேசா 

நதி மதி இதழி பணி அணி = கங்கை, சந்திரன், கொன்றை, பாம்பு இவைகளை அணிந்த  கடவுள் = கடவுளாகிய சிவபெருமான் நடம் இடு = நடமிடும் புலியூர் குமரேசா= சிதம்பரத்தில் உள்ள குமரேசனே 

கறுவிய நிருதர் எறி திரை பரவு

கடல் இடை பொடியா(க) பொருதோனே 

கறுவிய = கோபித்து வந்த நிருதர் = அசுரர்கள் எறி = வீசுகின்ற திரை பரவு = அலைகள் பரந்துள்ள கடல் இடை = கடலிடத்தே பொடியாகப் பொருதோனே = பொடியாகும்படி சண்டை செய்தவனே

 

கழல் இணை பணியும் அவருடன் முனிவு

கனவிலும் அறியா பெருமாளே 

கழல் இணை பணியும் = உனது திருவடிகளைப் பணியும் அவருடன் = அடியார்களுடன் முனிவு = கோபம் என்பதை கனவிலும் அறியாப் பெருமாளே = கனவிலும் அறியாத (கருணாகரப்) பெருமாளே

 

சுருக்க உரை 

அஞ்சாத வீரனாகிய யமன் தனது பாசக் கயிற்றை என் மீது வீசி என்னைக் கொண்டு போகும் வஞ்சகச் செயல் என்னிடம் வராத படி, வேதம் முதலிய பல சாத்திர நூல்களை ஓதி, ஆறு வகைப்பட்ட சமயங்களும், ஒன்றற்கொன்று மாறுபட்ட கருத்துக்களைச் சொல்லி மோதும் அருவருப்பான தொழில் ஒழிய, சத்தான உருவமுள்ள பேரின்பப் பொருளை எனக்கு உபதேசித்து அருள்க 

இலக்குமிக்கும், திருமாலுக்கும் மருகனே இமயமலை அரசன் பெற்ற பார்வதியின் செல்வக் குமரனே! கங்கை, நிலா, கொன்றை, பாம்பு இவைகளை அணிந்த சிவ பெருமான் நடனம் செய்யும் தில்லையில் உள்ள குமரேசனே! கோபித்து வந்து அசுரர்களைப் பொடியாக்கியவனே! உன்னைப் போற்றிப் பணியும் அடியார்களிடம் ஒரு போதும்  கோபம் என்பதை அறியாத பெருமாளே! உண்மைப் பொருளை எனக்கு உபதேசிப்பாயாக

 

விளக்கக் குறிப்புகள் 

சளம் = வஞ்சனை 

அறுவகை சமயம் முறை முறை

   அகல்வினை யுட்சார் சட்சம யிகளோடு வெட்கா தட்கிடு

   மழிவிலி வித்தா ரத்தன மவிகார --- திருப்புகழ், அகல்வினை

Rev 30-5-2022


பாடலை கேட்க