501
பழமுதிர்சோலை
(ஆறாவது திருப்பதி மதுரைக்கு வடக்கில்
உள்ள கள்ளழகர் கோயில்)
தானதன தந்த தானதன தந்த
தானதன தந்த தனதான
வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள்
மாயம தொழிந்து தெளியேனே
மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து
மாபத மணிந்து பணியேனே
ஆதியொடு மந்த மாகியந லங்கள்
ஆறுமுக மென்று தெரியேனே
ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட
தாடுமயி லென்ப தறியேனே
நாதமொடு விந்து வானவுடல் கொண்டு
நானில மலைந்து திரிவேனே
நாகமணி கின்ற நாதநிலை கண்டு
நாடியதில் நின்று தொழுகேனே
சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற
சோகமது தந்து எனையாள்வாய்
சூரர் குலம் வென்று வாகையொடு சென்று
சோலைமலை நின்ற பெருமாளே
பதம் பிரித்து உரை
வாதினை அடர்ந்த வேல் விழியர் தங்கள்
மாயம் அது ஒழிந்து தெளியேனே
வாதினை = வாது புரியும் தன்மையே நிறைந்த , அடர்ந்த = நெருங்கும் வேல் விழிச்சியர் தங்கள் = வேல் போன்ற கண்களை உடைய விலை மாதர்களின் மாயம் அது ஒழிந்து = மாயம் என்னைப் பீடிக்காமல் தெளியேனே = தெளிவான அறிவைப் பெறவில்லை
மா மலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து
மா பாதம் அணிந்து பணியேனே
மா = நல்ல மலர்கள் கொண்டு =பூக்களைக் கொண்டு மாலைகள் புனைந்து = மலைகளைக் கட்டி மா = சிறந்த பதம் அணிந்து = திரு வடியில் அலங்கரித்து பணியேனே = பணியவில்லை
77777777777777777777777777777777777777777777777777777777777
ஆதியோடு அந்தம் ஆகிய நலங்கள்
ஆறு முகம் என்று தெரியேனே
ஆதியோடு அந்தம் = ஆரம்பம் முதல் இறுதி வரை ஆகிய உள்ள நலங்கள் = எல்லா நலங்களும் ஆறு முகம் என்று தெரியேனே = ஆறுமுகம் என்னும் உண்மையைத் தெரிந்து கொண்டவனில்லை
ஆன தனி மந்த்ர ரூப நிலை கொண்டது
ஆடும் மயில் என்பது அறியேனே
ஆன = போற்றத் தக்க தனி = ஒப்பற்ற மந்த்ர ரூப நிலை கொண்ட = பிரணவ மந்திரத்தைக் கொண்டது ஆடும் மயில் என்பது அறியேனே = ஆடும் நிலையில் உள்ள மயில் என்று அறியாதவன்
நாதமோடு விந்துவான உடல் கொண்டு
நானிலம் அலைந்து திரிவேனே
நாதமொடு = நாதமும் (சுரோணித மும்) விந்துவான = சுக்கிலமும் இவற்றால் ஆன உடல் கொண்டு = உடல் கொண்டு நானிலம் அலைந்து திரியேனே = இப்பூமியில் திரிகின்றவன் [நால் நிலம் அலைந்து = நான்கு வகையான திணைகளுடன் கூடிய பூ மண்டலத்தில் வீணே அலைந்து – வாரியார் ஸ்வாமிகள்]
நாகம் அணிகின்ற நாத நிலை கண்டு
நாடி அதில் நின்று தொழுகேனே
நாகம் = பாம்பு போன்ற (பிராண வாயு) அணிகின்ற = அடைகின்ற நாத நிலை = (ஆறாவது ஆதாரமாகிய) ஆஞ்ஞை நிலையில் (ஒளி வீசும்) ஞான சதாசிவ நிலை யைத் தரிசித்து நாடி = விரும்பி அதில் தொழுகேனே = அந்நிலையில் நின்று தொழாதவன்
[ந அகம் அணிகின்ற நாத - நான் அல்ல என்று அன்பர்கள் அர்ச்சிக்கும் சீவபோதமாகிய மலரை அணிகின்ற தலைவரே- வாரியார் ஸ்வாமிகள்]
சோதி உணர்கின்ற வாழ்வு சிவம் என்ற
சோகம் அது தந்து எனை ஆள்வாய்
சோதி உணர்கின்ற = சோதி நிலையை உணர்கின்ற வாழ்வு = வாழ்வே சிவம் என்ற = சிவ வாழ்வு என்ற சோகம் அது = அந்த நீ, நான் அற்ற நிலையை தந்து = தந்து எனை ஆள்வாய் = என்னை ஆட்கொள்வாய்
[சோதி உணர்கின்ற வாழ்வு - அருட்சோதியை உணர்கின்ற சுகவாழ்வே, சிவம் என்ற - மங்கலம் என்று கூறுகின்ற, ச அகம் அது தந்து - அது நான் என்ற சிவோகம் பாவனையைத் தந்து, - வாரியார் ஸ்வாமிகள்] சோகம் - சோஹம் - ஸ அஹம் - அது நானே
சூரர் குலம் வென்று வாகையோடு சென்று
சோலை மலை நின்ற பெருமாளே
சூரர் குலம் வென்று = அசுரர்கள் குலத்தை வென்ற வாகையோடு = வெற்றியோடு சென்று = சென்று சோலை மலை நின்ற பெருமாளே = சோலை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே
சுருக்க உரை
போருக்கு நெருங்கி வரும் வேல் போன்ற கண்களை உடைய விலை மாதர்களின் மீது உள்ள மயக்கம் என்னைப் பீடிக்காது ஒழிந்து நான் தெளிவான அறிவைப் பெறாதவன் நல்ல மலர் மாலைகளால் உன் திருவடியை அலங்கரித்து உன்னைப் பணியாதவன் ஆதி முதல் இறுதி வரை உள்ள எல்லா நலங்களும் ஆறுமுகம் என்னும் உண்மையைத் தெரியாதவன் ஒப்பற்ற மயில் ஓங்கார ரூபத்தைக் கொண்டது என்பதை அறியாதவன் நாதம், விந்து ஆகியவற்றால் ஆய உடல் கொண்டு இந்தப் பூமியில் நான் திரிகின்றேனே
பாம்பு போன்ற பிராணவாயு சென்று அடைகின்ற ஆறாவதாகிய ஆஞ்ஞை நிலையில், ஞான சதாசிவ நிலையைத் தரிசித்து விரும்பி அந்நிலையிலேயே நின்று உன்னைத் தொழாதவன் இத்தகைய இழியோனை, சோதி நிலையை உணர்கின்ற வாழ்வே சிவ வாழ்வு என்ற நிலையைத் தந்து என்னை ஆட்கொள்ளுவாயாக அசுரர்களை வென்று, சோலை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே எனக்குச் சிவ வாழ்வு தந்து அருளுக
விளக்கக் குறிப்புகள்
ஆறு முகம் என்று தெரியேனே
ஆறு முகங்களைப் பலவாறு விளக்கலாம்
1 ஆதிசக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி, பரா சக்தி, ஞான சக்தி, குடிலா சத்தி
2 அ, உ, ம், நாதம், விந்து, சக்தி
3 சிவபெருமானுடைய திருமுகங்கள் ஐந்துடன் தேவயின் திருமுகமும் சேர்ந்து ஆறு ஆயின
4 ஐசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்னும் ஆறு குணங்களைக் குறிப்பன
ஆடும் மயில் என்பது அறியேனே
ஓகார பரியின் மிசை வருவாயே - திருப்புகழ் - இரவியென
சோகம் அது தந்து எனை ஆள்வாய்(ஸ: அகம்) = சோகம் பாவனை என்பது ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்று எனப்பாவித்தல் அஹம் பிரம்மம் என்பதில் நான் என்னும் முனைப்பு முற்பட்டு நிற்பதால்
அதை முன்பின் மாற்றி சோகம் என உச்சரிக்கும்படி வைதிக சைவம் பகர்கின்றது. (வசுசெங்கல்வராயப்பிள்ளை
rev 30-5-2022
No comments:
Post a Comment