பின் தொடர்வோர்

Monday, 2 May 2022

499. தலைமயிர்கொக்கு

 499



பழமுதிர்சோலை

 

                  தனதன தத்தத் தனதன தத்தத்     

                       தனதன தத்தத் தனதன தத்தத்     

                      தனதன தத்தத் தனதன தத்தத்        தனதானா

 

தலைமயிர் கொக்குக் கொக்கந ரைத்துக்    

   கலகலெ னெப்பற் கட்டது விட்டுத்     

   தளர்நடை பட்டுத் தத்தடி யிட்டுத்                     தடுமாறித்    

தடிகொடு தத்திக் கக்கல்பெ ருத்திட்    

   டசனமும் விக்கிச் சத்தியெ டுத்துச்    

   சளியுமி குத்துப் பித்தமு முற்றி                       பலகாலும்

திலதயி லத்திட் டொக்கவெ ரிக்கத்    

   திரிபலை சுக்குத் திப்பிலி யிட்டுத்    

   தெளியவ டித்துற் றுய்த்துடல்செத்திட்     டுயிர்போமுன்    

திகழ்புகழ் கற்றுச் சொற்கள்ப யிற்றித்    

   திருவடி யைப்பற் றித்தொழு துற்றுச்    

   செனனம றுக்கைக் குப்பர முத்திக்              கருள்தாராய்    

கலணைவி சித்துப் பக்கரை யிட்டுப்     

   புரவிசெ லுத்திக் கைக்கொடு வெற்பைக்      

   கடகந டத்திட் திட்டென எட்டிப்                     பொருசூரன்  

கனபடை கெட்டுத் தட்டற விட்டுத்      

   திரைகட லுக்குட் புக்கிட எற்றிக்         

   களிமயி லைச்சித் ரத்தில்ந டத்திப்             பொருகோவே

குலிசன்ம கட்குத் தப்பியு மற்றக்    

    குறவர்ம கட்குச் சித்தமும் வைத்துக் 

     குளிர்தினை மெத்தத் தத்துபு னத்திற்         றிரிவோனே

கொடியபொ ருப்பைக் குத்திமு றித்துச்     

   சமரம்வி ளைத்துத் தற்பர முற்றுக்       

   குலகிரி யிற்புக் குற்றுறை யுக்ரப்                  பெருமாளே

 

பதம் பிரித்து உரை

 

தலை மயிர் கொக்குக்கு ஒக்க நரைத்து     

கலகல என பல் கட்டது விட்டு     

தளர் நடை பட்டு தத்து அடியிட்டு தடுமாறி

தலை மயிர் கொக்குக்கு ஒக்கநரைத்து - 

தலைமயிர் கொக்கைப் போல்

   வெண்மையாக நரைத்து

 கல கல என பல் கட்டது விட்டு - பற்கள் கல கல  வென்று கழன்றுவிழுந்து

 தளர் நடை பட்டு  நடை  தளர்ந்து தத்து அடியிட்டு-    தத்தித்தத்தி அடிகளை வைத்து   தடுமாறி     தடுமாற்றம்    அடைந்து 

தடி கொடு தத்தி கக்கல் பெருத்திட்டு     

அசனமும் விக்கி சத்தி எடுத்து     

சளியும் மிகுத்து பித்தமும் முற்றி பலகாலும்

தடி கொடு தத்தி - தடியின் உதவியைக்    கொண்டு தத்தி நடந்து கக்கல் பெருத்திட்டு - ஒக்காளம் அதிகமாகி    அசனமும் விக்கி - உணவை உண்ண முடியாமல் விக்கல் எடுத்து சத்தி எடுத்து - வாந்தி எடுத்து சளியும் மிகுத்து -    சளி அதிகமாகி பித்தமும் முற்றி -   பித்தம்  அதிகரித்து பல காலும் - பல முறையும் 

தில தயிலத்து இட்டு ஒக்க எரிக்க     

திரி பலை சுக்கு திப்பிலி இட்டு     

தெளிய வடித்து உற்று உய்த்து உடல் செத்திட்டு உயிர் போ(கு) முன்

தில தயிலத்து இட்டு ஒக்க - எண்ணெயில்    இடுவதைப் போல் எரிக்க - (உடல)    எரித்தல் ண்டாகி திரி பலை சுக்கு திப்பிலி இட்டு - திரிபலி,சுக்கு,திப்பிலி ஆகியவற்றைச் சேர்த்து தெளிய வடித்து உற்று - தெளிய வடிகட்டிக்    கஷாயமாக்கி உய்த்து - பருகி உடல் உயிர் போ(கு)முன் - உடல் மடிந்து உயிர் போவதற்கு முன்னர்

[தில தயிலம் – எள்ளிலிருந்து எடுக்கப்படும் எண்ணையாகிய நல்லெண்ணை]

 திகழ் புகழ் கற்று சொற்கள் பயிற்றி      

திருவடியை பற்றி தொழுது உற்று     

செனன மறுக்கைக்கு பர முத்திக்கு அருள் தாராய்

திகழ் புகழ் கற்று - (உனது) விளங்கும்    புகழைக் கற்று சொற்கள் பயிற்று -    அப் புகழ்ச் சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்லி திருவடியைப் பற்றித் தொழுது உற்று - உன் திருவடி களைப் பற்றித் தொழுது செனன மறுக்கைக்கு - பிறப்பை நான் அறுக்கும் வண்ணம் பர - மேலான முத்திக்கு அருள் தாராய் - வீட்டின்பத் தைத்  தந்து அருளுக 

கலணை விசித்து பக்கரை இட்டு     

புரவி செலுத்தி கைக்கொடு வெற்பை     

கடுக நடத்தி திட்டென எட்டி பொரு சூரன்

கலணை விசித்து - சேணத்தைக்    கட்டி    பக்கரை இட்டு - அங்கவடியிட்டு புரவி செலுத்தி - குதிரையைச் செலுத்தி கைக் கொடு வெற்பை - துதிக்கையைக் கொண்ட மலை போன்ற யானைகளை  கடுக நடத்தி -    வேகமாக    நடத்தி திட்டென எட்டி - திடீரென்று நெருங்கி வந்து பொரு சூரன்      சண்டை செய்கின்ற சூரனுடய 

கன படை கெட்டு தட்டற விட்டு       

திரை கடலுக்குள் புக்கிட எற்றி

களி மயிலை சித்ரத்தில் நடத்தி பொரு கோவே

கன படை - பெரிய சேனைகள்    கெட்டு - அழிந்து தட்டற விட்டு - நிலை    குலையச் செய்து திரை கடலுக்குள் புக்கிட   அலை கடலுக்குள் புகுந்து எற்றி - (அவனை) மோதியும் களி மயிலை    - மகிழ்ச்சி ண்ட மயிலை சித்ரத்தில் நடத்தி இந்திரனாகிய மயிலை    அழகுடன் நடத்தி பொரு கோவே -    சண்டை செய்த தலைவனே 

குலிசன் மகட்கு தப்பியும் மற்ற

குறவர் மகட்கு சித்தமும் வைத்து

குளிர் தினை மெத்த தத்து புனத்தில் திரிவேனே

குலிசன் மகட்கு -குலிசாயுதம்  தாங்கிய  இந்திரன் மகளான    தேவ சேனைக்கு  தப்பியும் -     தெரியாமல் மற்றக் குறவர் மகட்கு -    குறவர் மகளான வள்ளியின் மீது சித்தமும் வைத்து - மனம் வைத்து    (நாடிச் சென்று) குளிர் தினை -    குளிர்ந்த தினைகள்  மெத்த     - மிகவும்  தத்து - பரவியுள்ள புனத்தில்திரிவோனே - புனத்தில் திரிந்தவனே

 கொடிய பொருப்பை குத்தி முறித்து

சமரம் விளைத்து தற்பரம் உற்று

குலகிரியில் புக்கு உறை உக்ர பெருமாளே 

கொடிய பொருப்பை - பொல்லாத    கிரௌஞ்ச மலையை   குத்தி முறித்து - குத்தி முறித்து சமரம் விளைத்து     போர் செய்து தற்பரம் உற்று மேம்பட்ட உனது    நிலையை    விளக்கி குலகிரியில் - சோலை மலையில் புக்கு உற்று உறை -புகுந்து      வீற்றிருக்கும் உக்ரப்பெருமாளே - சினம் கொண்ட பெருமாளே

 

சுருக்க உரை

 

தலை மயிர் கொக்கைப் போல நரைத்துபற்கள் கழன்று விழநடை தளர்ந்துதடி கொண்டு தத்தி நடந்துநோய்கள் மிகுந்துஎண்ணெயில் இட்டதைப் போல் உடல் எரிச்சல் கொண்டுபல மூலிகைகளைச் சேர்த்துகசாயம் வைத்துப் பருகிஎன் உயிர் போவதன் முன்உனது புகழைக் கற்றுபல முறை ஓதிபிறப்பை நான் அறுக்கும் வண்ணம்வீட்டின்பத்தைத் தந்து அருளுக. 

சேணம் கட்டிஅங்கவடி இட்டுகொடிய மலை போன்ற யானைகளைச் செலுத்திதிடீரென்று நெருங்கி வந்த சூரனுடைய பெரிய சேனைகள் அழியஅவனை மோதிஇந்திரனாகிய மயிலை அழகுடன நடத்திப் போர்செய்த தலைவனே!  இந்திரன் மகளான தேவசேனை அறியா வண்ணம் குறவர் மகளான வள்ளிக்கு மனம் வைத்துதினைப் புனத்தில் அவளை நாடித் திரிந்தவனே! பொல்லாத கிரௌஞ்ச மலையை வேலால் குத்திஉனது மேம்பட்ட நிலையை விளக்கிச் சொல்லிசோலை மலையில் புகுந்து வீற்றிருக்கும் பெருமாளே! முதுமை எய்தி நான் இறப்பதற்கு முன் உன் புகழை ஓதி முத்தி பெற வேண்டுகின்றேன்

 

விளக்கக் குறிப்புகள்

 

திரிபலை சுக்குத் திப்பிலி இட்டு

 கடுக்காய்தான்றிக்காய்நெல்லி வற்றல் இவை மூன்றும் சேர்ந்தது திரிபலை ( திரிபலா)      

 ஒப்புக

களி மயிலைச் சித்ரத்தில் நடத்தி

சூரன் மயில் வாகனமாவதற்கு முன்போர்க்களத்தில் இந்திரன் மயிலாகி      முருகனைத் தாங்கினான் 

   பன்னரு நாட்டத் தண்ணல் படர்சிறை மயூரமாகி

   முன்னுறு மகவான் தன்மேல் மொய்ம்புடன் புக்கு வைகி

                                                                -கந்த புராணம்

 

குலகிரியில் புக்கு உற்று உறை

      இது (குரு மலை) அல்லது சோலைமலை எனப்படும்

     குலமலை கோலமலை குளிர்மாமலை கொற்றமலை நிலமலை

     நீண்டமலை திருமாலிருஞ் சோலையதே-      பெரியாழ்வார்

rev 30-5-2022

பாடலை கேட்க


No comments:

Post a Comment