498
பழமுதிர்சோலை
தானதன தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த தனதான
சீலமுள தாயர் தந்தை மாதுமனை யான மைந்தர்
சேருபொரு ளாசை நெஞ்சு தடுமாறித்
தீமையுறு மாயை கொண்டு வாழ்வுசத மாமி தென்று
தேடினது போக என்று தெருவூடே
வாலவய தான கொங்கை மேருநுத லான திங்கள்
மாதர்மய லோடு சிந்தை மெலியாமல்
வாழுமயில் மீது வந்து தாளிணைகள் தாழு மென்றன்
மாயவினை தீர அன்பு புரிவாயே
சேலவள நாட னங்கள் ஆரவயல் சூழ மிஞ்சி
சேணிலவு தாவ செம்பொன் மணிமேடை
சேருமம ரேசர் தங்க ளூரிதென வாழ்வு கந்த
தீரமிகு சூரை வென்ற திறல்வீரா
ஆவிட மேவு கண்டர் கோலமுட னீடு மன்று
ளாடல்புரி யீசர் தந்தை களிகூர
ஆனமொழி யேப கர்ந்து சோலைமலை மேவு கந்த
ஆதிமுத லாக வந்த பெருமாளே
பதம் பிரித்தல்
சீலம் உ(ள்)ள தாயர் தந்தை மாது மனை ஆன மைந்தர் சேரு பொருள் ஆசை நெஞ்சு தடு மாறி
சீலம் உள தாயர் தந்தை = நல்லொழுக்கம் உள்ள தாய், தந்தை மனையான மாது = மனைவி மைந்தர் = மக்கள் சேரு பொருள் ஆசை = சேர்ந்துள்ள பொருள் இவைகளில் ஆசை கொண்டு நெஞ்சு தடு மாறி = மனம் தடுமாற்றம் அடைந்து
தீமை உறு மாயை கொண்டு வாழ்வு சதம் ஆம் இது என்று தேடினது போக என்று தெருவூடே
தீமை உறு = கெடுதலைத் தருவதான மாயை கொண்டு = மாயையால் வாழ்வு சதமாம் இது என்று = இவ்வாழ்வே நிலையானது என்று எண்ணி தேடினது போக என்று = தேடிச் சேகரித்த எல்லாம் தொலைந்து போக வேண்டி தெருவூடே = தெருவில்
வால வயதான கொங்கை மேரு நுதலான திங்கள்
மாதர் மயலோடு சிந்தை மெலியாமல்
வால வயதான = பாலிய வயதினராய் கொங்கை மேரு = கொங்கை மேரு மலை போலவும் நுதலான திங்கள் = நெற்றி பிறைச் சந்திரன் போலவும் (கொண்டுள்ள) மாதர் = பொது மகளிர் மயலோடு = காம மயக்கால் சிந்தை மெலியாமல் = என் சிந்தை மெலிந்து போகாமல்
வாழு மயில் மீது வந்து தாள் இணைகள் தாழும் என் தன்
மாய வினை தீர அன்பு புரிவாயே
வாழும் மயில் மீது வந்து = அழியா வாழ்க்கையைக் கொண்ட மயிலின் மீது வந்து தாள் இணைகள் = உனது பாதங்கள் இரண்டையும் தாழும் = விரும்புகின்ற என் தன் = என்னுடைய மாய வினை தீர = மாய வினைகள் அழிய அன்பு புரிவாயே = அன்பைப் பாலித்து அருளுக
சேல வள நாடு அ(ன்)னங்கள் ஆர வயல் சூழும் இஞ்சி
சேண் நிலவு தாவ செம்பொன் மணிமேடை
சேல = சேல் மீன் நிறைந்த வள நாடு = வளப்ப நாடு அ(ன்)னங்கள் ஆர = அன்னங்கள் நிரம்பிய வயல் சூழும் இஞ்சி = வயல்கள் சூழ்ந்துள்ள மதில்கள் சேண் நிலவு தாவ = ஆகாயத்தில் உள்ள சந்திரனை எட்ட செம் பொன் மணி மேடை = செம் பொன் மணி மேடைகள்
சேரும் அமரேசர் தங்கள் ஊர் இது என வாழ்வு உகந்த
தீரம் மிகு சூரை வென்ற திறல் வீரா
சேரும் = கூடினவாய் அமரேசர் = தேவேந்திரன் தங்கள் ஊர் இது என = தம் ஊர் என்று சொல்லும்படி வாழ்வு உகந்து = மகிழ்ச்சி கொண்ட தீர மிகு சூரை = தைரியம் மிகுந்த சூரனை வென்ற = வெற்றி கொண்ட திறல் வீரா = திறமை உடைய வீரனே
ஆல விடம் மேவு கண்டர் கோலமுடன் நீடு மன்றுள்
ஆடல் புரி ஈசர் தந்தை களி கூர
ஆலவிடம் மேவு கண்டர் = ஆலகால விடம் பொருந்திய கழுத்தை உடையவர் கோலமுடன் = அழகுடன் நீடு = பெரிய மன்றுள் = சபையில் ஆடல் புரி ஈசர் = கூத்தாடும் ஈசர் தந்தை தந்தையாகிய சிவபெருமான் களி கூர = மகிழ்ச்சி கொள்ள
ஆன மொழியே பகர்ந்து சோலை மலை மேவு கந்த
ஆதி முதலாக வந்த பெருமாளே
ஆன மொழியே பகர்ந்து = அவருக்கு வேண்டிய உபதேச மொழியை உபதேசித்து சோலை மலை மேவு கந்த = சோலை மலையில் வீற்றிருக்கும் கந்தனே ஆதி முதலாக வந்த பெருமாளே = ஆதி முதல்வனாய் விளங்கும் பெருமாளே
சுருக்க உரை
நல்லொழுக்கம் உள்ள தாய், தந்தை, மனைவி, மக்கள், வீடு, பொருள் இவைகளில் ஆசை கொண்டு, கேடு தரும் மாயையால் இவ்வாழ்வே நிலையானதென்று எண்ணி, தேடி வைத்த பொருள் எல்லாம் தொலைந்து போகும்படி, மேரு மலையை ஒத்த கொங்கை, பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றி இவைகளை உடைய விலை மாதர்கள் மீதுள்ள காம மயக்கால் நெலிந்து போகாமல், மயில் மீது வந்து, உனது இரு திருடியை, என் மாயை அறும்படி, தந்து அருள வேண்டும்.
வளப்பமான ஊரில் வாழும் தேவேந்திரன், தம் ஊரில் மகிழ்ச்சி யுடன்வாழும் பொருட்டு, சூரனை வென்ற திறல் வீரனே! ஆலகால விடம் பொருந்திய கண்டத்தை உடைய சிவபெருமான் மகிழ, அவருக்கு உபதேசம் செய்தவனே! ஆதி முதல்வனாய் சோலை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே! என் மாய வினை தீர அன்பு புரிவாயாக.
விளக்கக் குறிப்புகள்
வாலம் = வாலிபம் (இளம் பருவம்)
No comments:
Post a Comment