பழமுதிர்சோலை
தனன தான தான தத்த
தனன தான தான தத்த
தனன தான தான தத்த தனதான
துடிகொ ணோய்க ளோடு வற்றி
தருண மேனி கோழை துற்ற
இரும லீளை வாத பித்த மணுகாமல்
துறைக ளோடு வாழ்வு விட்டு
உலக நூல்கள் வாதை யற்று
சுகமு ளாநு பூதி பெற்று மகிழாமே
உடல்செய் கோர பாழ்வை யிற்றை
நிதமு மூணி னாலு யர்த்தி
யுயிரி னீடு யோக சித்தி பெறலாமே
உருவி லாத பாழில் வெட்ட
வெளியி லாடு நாத நிர்த்த
உனது ஞான பாத பத்ம முறுவேனோ
கடிது லாவு வாயு பெற்ற
மகனும் வாலி சேயு மிக்க
மலைகள் போட ஆழி கட்டி யிகலூர்போய்க்
களமு றானை தேர்நு றுக்கி
தலைக ளாறு நாலு பெற்ற
அவனை வாளி யால டத்தன் மருகோனே
முடுகு வீர சூர பத்மர்
தலையின் மூளை நீறு பட்டு
முடிவு தாக ஆடு நிர்த்த மயில்வீரா
முநிவர் தேவர் ஞான முற்ற
புநித சோலை மாம லைக்குள்
முருக வேல த்யாகர் பெற்ற பெருமாளே
பதம் பிரித்து உரை
துடி கொள் நோய்களோடு வற்றி
தருண மேனி கோழை துற்ற
இருமல் ஈளை வாத(ம்) பித்தம் அணுகாமல்
துடி கொள் = துடிக்கச் செய்கின்ற நோய்களோடு = பிணிகளால் வற்றி = (உடல்) வற்றி தருண மேனி = இளமையைக்காட்டும் மேனியில் கோழை துற்ற =கோழை நெருங்க இருமல் ஈளை வாதம் பித்தம் = இத்தகைய நோய்கள் அணுகாமல் = என்னை அணுகாதபடி
துறைகளோடு வாழ்வு விட்டு
உலக நூல்கள் வாதை அற்று
சுகமு(ள்)ள அநுபூதி பெற்று மகிழாமே
துறைகளோடு = இல்லறம் துறவறம் என்னும் கூறுகளை உடைய
(வழிகளைக் கொண்ட) வாழ்வை விட்டு = வாழ்க்கையை விட்டு உலக நூல்கள் = உலக நூல்களைக்
(கற்க வேண்டிய) வாதை அற்று = வேதனை நீங்க சுகம் உள = சுகத்தைக் கொடுக்கும் அநுபூதி பெற்று =
அனுபூதியைப் பெற்று மகிழாமே = மகிழ்ச்சி அடையாமல்
உடல் செய் கோர பாழ் வயிற்றை
நிதமும் ஊணினால் உயர்த்தி
உயிரின் நீடு யோக சித்தி பெறலாமே
உடல் செய் = உடலை வளர்க்கும் கோர = கோரமான பாழ் வயிற்றை = பாழான வயிற்றை நிதமும் = நாள்தோறும் ஊணினால் =
உணவினால் உயர்த்தி = வளரச் செய்து உயிரின் = ஆயுள் காலம் நீடு = வளரும்படியான யோக சித்தி பெறலாமே = யோக சித்தியைப் பெறலாமோ? (நன்றல்ல என்றபடி)
உரு இலாத பாழில் வெட்ட
வெளியில் ஆடு நாத நிர்த்த
உனது ஞான பத்மம் உறுவேனோ
உரு இலாத பாழில் = உருவம் கடந்த பாழ் வெளியில் வெட்ட வெளியில் =
வெட்ட வெளியில் ஆடு நிர்த்த =
ஆடுகின்ற கூத்தனே உனது ஞான பத்மம் = உன்னுடைய ஞானத் திருவடிக் கமலங்களை உறுவேனோ = (நான்)அடைவேனோ?
கடிது உலாவு வாயு பெற்ற
மகனும் வாலி சேயு(ம்) மிக்க
மலைகள் போட ஆழி கட்டி இகலூர் போய்
கடிது உலாவும் = வேகத்தில் உலாவ
வல்ல வாயு பெற்ற = வாயு பெற்ற மகனும்
= மகனாகிய அனுமனும் வாலி சேயும் = வாலியின் மகனான அங்கதனும் மிக்க = நிரம்ப மலைகள் போட = மலைகளைப் போட்டு ஆழி கட்டி = அணை கட்டி இகலூர் போய் =
பகைவனான இராவணின் ஊருக்குப் போய்
களம் உறு ஆனை தேர் நுறுக்கி
தலைகள் ஆறு நாலு பெற்ற
அவனை வாளியால் அடு அத்தன் மருகோனே
களம் உறு = போர்க்களத்தில் இருந்த ஆனை தேர் நுறுக்கி = யானைகளையும் தேர்களையும் தூளாக்கி தலைகள் ஆறு நாலு பெற்ற = பத்துத் தலைகளை உடைய அவனை = இராவணனை வாளியால் = அம்பால் அடு அத்தன் = கொன்ற அண்ணலாகிய திருமாலின் மருகோனே = மருகனே
முடுகு வீர சூர பத்பர்
தலையின் மூளை நீறு பட்டு
முடிவதாக ஆடு(ம்) நிர்த்த மயில் வீரா
முடுகு = முடகி வந்த வீர சூர பத்பர் = வீரனாகிய சூரபத்மனின் தலையின் மூளை = தலையிலுள்ள மூளை நீறு பட்டு முடிவதாக = தூளாகி முடிவு பெற ஆடு நிர்த்த = நடனம் செய்த மயில் வீர = மயில் வீரனே
முநிவர் தேவர் ஞானம் உற்ற
புநித சோலை மா மலைக்குள்
முருக வேல த்யாகர் பெற்ற பெருமாளே
முநிவர் தேவர் ஞானம்உற்ற = முனிவர்களும், தேவர்களும் ஞானம் அடைந்த புநித = பரிசுத்த சோலை மா மலைக்குள் = சோலை மா மலைக்குள் (வீற்றிருக்கும்) முருக வேல = முருகனே, வேலனே த்யாகர் - கொடையில் சிறந்த மூர்த்தியாகிய சிவபெருமான் பெற்ற பெருமாளே = ஈன்றருளிய பெருமாளே
சுருக்க உரை
துடிக்கச் செய்யும் நோய்களால் உடல் இளைத்து, இளமையான உடலில் கோழை நெருங்க, இருமல், ஈளை, வாதம், பித்தம் முதலியவை என்னை அணுகாதபடி, இல் வாழ்வை விடுத்து, உலக நூல்களைக் கற்க வேண்டிய வேதனை நீங்கி, அனுபூதியைப் பெற்று மகிழாமல், உடலை வளர்க்கும் உணவினால் அதை வளரச் செய்து, யோக சித்தியைப் பெறுதல் நன்றோ?
உருவம் கடந்த பாழ் வெளியில் நடனக் கூத்தாடியவனே உனது ஞானக் கமலத் திருவடிகளை நான் அடைவேனோ? வாயு தேவனின் மகனான அனுமனும், வாலியின் புதல்வனான அங்கதனும், மலைகளால் கடலில் அணை கட்டி, பகைவன் ஊராகிய இலங்கைக்குப் போய், பத்துத் தலைகளை உடைய இராவணனை அம்பினால் கொன்ற திருமாலின் மருகனே! சூரபத்மரைத் தூளாக்கி, துடிக் கூத்தாடிய வீரனே! முனிவர்களும், தேவர்களும் ஞானம் அடைந்த பரிசுத்தமான சோலை மா மலைக்குள் வீற்றிருக்கும் வேலனே! கொடையில் சிறந்த சிவபெருமான் பெற்ற மகனே! உனது ஞான பத்ம பதங்களை நான் உறுவேனோ?
விளக்கக் குறிப்புகள்
சூரபத்மர்
சூரன், பதுமன், சிங்கமுகன், தாரகன் என்னும் நால்வர் பூதர்கள் போருக்குப் பின்னர் முருக வேள் அவர்களுக்கு அருள் புரிந்தார் தாரகன் ஐயனாருக்கு யானை வாகனம் ஆனான். சிங்கமுகன் துர்கைக்குச் சிங்க வாகன மானான். சூரன் கந்த வேளுக்கு மயில் வாகனமானான். பதுமன் முருகனுக்குச் சேவல் கொடி ஆனான்.
முடிவதாக ஆடு நிர்த்த மயில் வீரா
சூரனை அழித்தவுடன் முருகவேள் ஆடிய கூத்து, துடி எனப்படும்
Rev 30-5-2022
No comments:
Post a Comment