321
திருமுட்டம்
ஸ்ரீமுஷ்ணம் என்று தற்சமயம்
வழங்கப்படுகிறது
விருத்தாசலம் அருகில் இருக்கும்
ஸ்தலம்
தனதத்த தான தனதத்த தான
தனதத்த தான தனதான
கழைமுத்து மாலை புயல்முத்து
மாலை
கரிமுத்து
மாலை மலைமேவுங்
கடிமுத்து மாலை வளைமுத்துமாலை
கடல்முத்து மாலை யரவீனும்
அழல்முத்து மாலை யிவைமுற்று
மார்பி
னடைவொத்து லாவ அடியேன்முன்
அடர்பச்சை மாவி லருளிற்பெ
ணோடு
மடிமைக்கு ழாமொ டருள்வாயே
மழையொத்த சோதி குயில்தத்தை
போலு
மழலைச்சொ லாயி யெமையீனு
மதமத்த நீல களநித்த நாதர்
மகிழ்சத்தி யீனு முருகோனே
செழுமுத்து மார்பி னமுதத்தெய்
வானை
திருமுத்தி மாதின் மணவாளா
சிறையிட்ட சூரர் தளைவெட்டி
ஞான
திருமுட்ட மேவு பெருமாளே
பதம் பிரித்து உரை
கழை முத்து மாலை புயல் முத்து மாலை
கரி முத்து மாலை மலை மேவும்
கழை முத்து மாலை - மூங்கில்
தரும் முத்தாலாகிய மாலை புயல் முத்து மாலை - மேகம் தரும் முத்தாலாகிய
மாலை கரி முத்து மாலை - யானை
தரும் முத்தாலாகிய மாலை மலை மேவும் - மலையில்
கிடக்கும்
கடி முத்து மாலை வளை முத்து மாலை
கடல் முத்து மாலை அரவு ஈனும்
கடி - சிறப்பு
வாய்ந்த முத்து மாலை - முத்தாலாகிய
மாலை வளை முத்து மாலை - சங்கில்
கிடக்கும் முத்தாலாகிய மாலை கடல் முத்து மாலை
- கடலில் கிடக்கும் முத்தாலாகிய மாலை அரவு ஈனும் - பாம்பினிடமிருந்து
கிடைக்கும்
அழல் முத்து மாலை இவை முற்று மார்பில்
அடைவு ஒத்து உலாவ அடியேன் முன்
அழல் - சூடுள்ள முத்து மாலை - முத்தாலாகிய
மாலை இவை முற்றும் - இப்படிப்பட்ட
எல்லா மாலைகளும் மார்பில் அடை ஒத்து - மார்பில்
தகுதி பெறவே உலாவ - புரண்டு அசைய அடியேன் முன் - அடியேன்
எதிரே
அடர் பச்சை மாவில் அருளில் பெ(ண்)ணோடும்
அடிமை குழாமொடு அருள்வாயே
அடர் பச்சை - அடர்ந்த பச்சை நிற மாவில் - குதிரையாகிய
மயில் மீது அருளில் - திருவருள்
சுரந்து பெண்ணோடும் - உனது
பத்தினிகளாகிய வள்ளி, தெய்வயானை இவர்களுடன் அடிமை குழாமொடு - அடியார்
கூட்டத்தோடு அருள்வாயே - அருள்
செய்வாயாக
மழை ஒத்த சோதி குயில் தத்தை போலும்
மழலை சொல் ஆயி எமை ஈனும்
மழை ஒத்த சோதி - மேகம்
போல் கருத்த சோதியான உமை குயில் தத்தை போலும் - குயிலும்
கிளியும் போன்றவள் மழலைச் சொல் ஆயி - மழலை
பேசும் தாய் எமை ஈனும் - எம்மைப்
பெற்ற
மத மத்தம் நீல கள நித்த நாதர்
மகிழ் சத்தி ஈனும் முருகோனே
மத மத்தம் - பொன்
ஊமத்தம் பூவை அணிந்தவரும் நீல கள - நீல
நிறம் கொண்ட கழுத்தை உடையவரும் நித்த நாதர் - என்றும்
அழியாமல் இருக்கும் தலைவரான சிவபெருமான் மகிழ் - மகிழ்கின்ற சத்தி - சத்தியான பார்வதி தேவி ஈனும் முருகோனே - பெற்ற
குழந்தையே
செழு முத்து மார்பின் அமுத தெய்வானை
திரு முத்தி மாதின் மணவாளா
செழு முத்து - செழுப்புள்ள
முத்து மாலை அணிந்த மார்பில் - மார்பை
உடைய அமுதத் தெய்வானை - அமுத
மயமான தெய்வ யானை திருமுத்தி - அழகிய
முத்தியைத் தர வல்ல மணவாளா - மணவாளனே
சிறை விட்ட சூரர் தளை வெட்டி ஞான
திருமுட்டம் மேவும் பெருமாளே
சிறை இட்ட - தேவர்களைச்
சிறையில் வைத்த சூரர் - சூரர்கள் தளை வெட்டி - விலங்கைத்
தறித்து எறிந்தவனே ஞான - ஞான
மூர்த்தியே திருமுட்டம் மேவு பெருமாளே - திருமுட்டம்
என்ற ஊரில் வீற்றிருக்கும் பெருமாளே - பெருமாளே
சுருக்க உரை
மூங்கில், மேகம், யானை, கடல், பாம்பு, மலை ஆகியவற்றிலிருந்து
பெறப்படும் முத்துக்களாலாகிய மாலையை அணிந்த மார்பிலே அசைய என் முன் வந்தருள வேண்டும்.
பச்சை நிற மயிலின் மேல் திருவருள் சுரந்து, உனது பத்தினிகளான
வள்ளி, தேவசேனை இருவருடன் அடியார் கூட்டத்துடன் வந்து அருள் புரிவாயாக.
மேகம் போல் கறுத்த கூந்தலும், குயில், கிளி போன்றவளுமாகிய பார்வதியும், நீல கண்டத்தை உடைய சிவபெருமானும்
ஈன்ற மகனே, முத்தி தர வல்ல தேவசேனையின் மணவாளனே, சூரர்கள் தேவர்களுக்கு இட்ட விலங்கைத்
தகர்த்தவனே, அருள் செய்து அடிமைக்கு முன் அடியார் கூட்டத்துடன் வந்து அருள் புரிய வேண்டும்
விளக்கக் குறிப்புகள்
கழை முத்து
முத்து பிறக்கின்ற இடங்கள் இருபது என்று கூறுவர்
தந்த வராகம் மருப்பிப்பி பூகம் தழைகதலி
நந்து சலஞ்சலம் மீன்தலை கொக்கு நளினமின்னார்
கந்தரஞ் சாலி கழைகன்னல் ஆவின்பல் கட்செவிகார்
இந்து உடும்பு கரா முத்தம் ஈனும் இருபதுமே
திருமுத்தி மாதின்
தேவசேனை முத்தி மாது- ஞானா சக்தி. வள்ளி
இச்சா சக்தி
முத்தைத்தரு பத்தித் திருநகை --- திருப்புகழ், முத்தைத்தரு
அடிமைக் குழாமொடு அருள்வாயே
பழய அடியவ ருடனிமை யவர்கணை
திகிரி திரியும் வருகென வருதரு
பவுரி வருமொரு மரகத துரகத மிசையேறிப்
திருப்புகழ், கொடியமறலி
No comments:
Post a Comment