322
க்ஷேத்திரக் கோவை
தந்த தானன தானான தந்தன
தந்த தானன தானான தந்தன
தந்த தானன
தானான தந்தன தனதான
கும்ப கோணமொ டாரூர் சிதம்பரம்
உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு
கொன்றை வேணியர் மாயூர மம்பெறு சிவகாசி
கொந்து லாவிய ராமேசு ரந்தனி
வந்து பூஜைசெய் நால்வேத தந்திரர்
கும்பு கூடிய வேளூர் பரங்கிரி தனில்வாழ்வே
செம்பு கேசுர மாடானை யின்புறு
செந்தி லேடகம் வாழ்சோலை
யங்கிரி
தென்றன் மாகிரி நாடாள வந்தவ செகநாதஞ்
செஞ்சொ லேரக மாவா வினன்குடி
குன்று தோறுடன் மூதூர்வி ரிஞ்சைநல்
செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில் வருதேவே
கம்பை மாவடி மீதேய சுந்தர
கம்பு லாவிய காவேரி சங்கமு
கஞ்சி ராமலை வாழ்தேவ தந்திர வயலூரா
கந்த மேவிய போரூர்ந டம்புரி
தென்சி வாயமு மேயாய கம்படு
ண்டி யூர்வரு சாமீக டம்பணி மணிமார்பா
எம்பி ரானொடு வாதாடு மங்கையர்
உம்பர் வாணிபொ னீள்மால் சவுந்தரி
எந்த நாள்தொறு மேர்பாக நின்றுறு துதியோதும்
இந்தி ராணிதன் மாதோடு நன்குற
மங்கை மானையு மாலாய்ம ணந்துல
கெங்கு மேவிய தேவால யந்தொறு பெருமாளே
பதம் பிரித்து உரை
கும்பகோணமோடு ஆரூர் சிதம்பரம்
உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு
கொன்றை வேணியர் மாயூரம் அம்பெறு சிவகாசி
கும்பகோணமொடு - கும்பகோணம் மற்றும் ஆரூர் - திருவாரூர் சிதம்பரம் - சிதம்பரம் உம்பர் வாழ்வுறு சீகாழி
- தேவர்கள் வாழ்க்கைக் கொள்ளும்
சீர்காழி நின்றிடு - நிலையாகக் கொண்ட கொன்றை வேணியர் - கொன்றை மலர் கொண்ட சடையினர் வாழும் மாயூரம் - மயிலாடுதுறை அம் பெறு சிவகாசி - அழகும் மங்களகரமும் உள்ள
சிவகாசி
கொந்து உலாவிய ராமேசுரம் தனி
வந்து பூஜை செய் நால் வேத தந்திரர்
கும்பு கூடிய வேளூர் பரங்கிரி தனில் வாழ்வே
கொந்து உலாவிய - உலாவுகின்ற ராமேசுரம் - இராமேசுரம் தனி வந்து பூஜை செய் - ஒப்பற்ற நிலையில் வந்து பூசை
செய்கின்ற நால் வேத தந்தரர் - நான்கு திரளான மக்கள் கூட்டங்கள் வேதங்களும் வல்ல கல்வியாளர்கள் கும்பு கூடிய - கூட்டம் கூடிய வேளூர் - புள்ளிருக்கும் வேளூர் பரங்கிரி - திருப்பரங்குன்றம் தனில் வாழ்வே - என்னும் தலங்களில் வீற்றிருக்கும்
செல்வமே
செம்புகேசுரம் ஆடானை இன்புறு
செந்தில் ஏடகம் வாழ் சோலையங்கிரி
தென்றல் மா கிரி நாடாள வந்தவ செகநாதம்
செம்புகேசுரம் - திருஆனைக்கா ஆடானை - திருவாடானை இன்புறு செந்தில் - (நீ) மகிழ்ந்து வாழும் திருச்
செந்தூர் ஏடகம் - திருஏடகம் வாழ் சோலையங்கிரி - நீ வாழும் (ஆறு திருப் பதிகளுள்
ஒன்றான) சோலைமலை (பழமுதிர் சோலை) தென்றல் மா கிரி - தென்றல் காற்று வீசும் சிறந்த பொதியமலை நாடாள வந்தவ - எனப்பட்ட தலங்களில் வீற்றிருக்க வந்தவனே செகநாதம் - ஜெகநாதம்
செம் சொல் ஏரகம் மா ஆவினன்குடி
குன்று தோறுடன் மூதூர் விரிஞ்சை நல்
செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில் வரு தேவே
செம் சொல் ஏரகம் - செம்மையான சொல் புகழ் பெற்ற
சுவாமி மலை மா - சிறந்த ஆவினன்குடி - பழனி குன்று தோறுடன்- குன்று தோறாடல் இவையுடன் மூதூர் - மூதூர் பழம்பதி எனப்படும் திருப்புனவாயில் விரிஞ்சை - விரிஞ்சிபுரம் நல் செம் பொன் மேவிய - (ஆகிய தலங்களில் வீற்றிருக்கும்)
சிறந்த செம்பொன் நிறம் கொண்ட மேனிய
- திருமேனியை உடையவனே சோணாடு - சோழ நாட்டில் வஞ்சியில் வரு தேவே - கருவூரில் எழுந்தருளிய தெய்வமே
கம்பை மா அடி மீது ஏய சுந்தர
கம்பு உலாவிய காவேரி சங்கமுகம்
அம் சிரா மலை வாழ்தேவ தந்திர வயலூரா
கம்பை - கம்பா நதி விளங்கும் (காஞ்சியில்) மா அடி மீது ஏய - மாமரத்தின் அடியில் பொருந்தியுள்ள சுந்தர - அழகனே கம்பு உலாவிய - சங்குகள் உலவும் காவேரி சங்கமுகம் - காவேரி கடலுடன் சங்கமமாகும் காவிரிப் பூம்பட்டினத்திலும் சிரா மலை வாழ் தேவ - திருச்சிராப் பள்ளியிலும்
வாழும் தேவனே தந்திர - பூத சேனைகளை உடையவனே வயலூரா - வயலூர்ப் பெருமானே
கந்தம் மேவிய போரூர் நடம் புரி
தென் சிவாயமும் மேயாய் அ கம் படு மணி மார்பா
கண்டியூர் வரு சாமீ கடம்பு அணி மணி மார்பா
கந்த மேவிய - நறுமணங்கள் நிரம்பிய போரூர் திருப்போரூர், நடம்புரி தென்சிவாயமும் மேயாய் ... நீ நடனம் புரிந்த ஸ்தலமாம் அழகிய சிவாயம் என்ற திருவாட்போக்கி எனப்படும் தலங்களில்
விளங்குபவனே, அகம்படு- பாவத்தைத் போக்குகின்ற [ அகம் படு – அந்த தலை (பிரமனது) அறுபட்ட] கண்டியூர்வரு சாமீ - திருக்கண்டியூரில் எழுந்தருளும் ஸ்வாமியே, க டம்பு அணி மணிமார்பா ... கடப்ப மாலையை அணிந்துள்ள அழகிய
மார்பனே,
எம்பிரானொடு வாதாடு மங்கையர்
உம்பர் வாணி பொன் நீள் மால் சவுந்தரி
எந்த நாள் தொறும் ஏர்பு ஆக நின்று உறு
துதி ஓதும்
எம்பிரானொடு வாதாடு மங்கையர் .. எங்கள் சிவபிரானுடன் நடனப் போட்டி செய்த காளியும், அவளைச் சேர்ந்த தோழியரும்,
உம்பர் வாணி – தேவலோகத்து ஸரஸ்வதியும் பொன் நீள்மால் சவுந்தரி . லக்ஷ்மி எனப்படும் நெடுமாலுக்கு உரிய அழகியும், (ஆகிய இவர்கள் யாவரும்) எந்த நாள்தொறும் ஏர்பு ஆக
நின்று ... தினந்தோறும் உள்ளத்தில் எழுச்சியுடன்
நின்று, உறு துதி ஓதும் -பொருந்திய துதியுடன்
போற்றுகின்ற
இந்திராணி தன் மாதோடு நன் குற
மங்கை மானையும் மாலாய் மணந்து உலகு
எங்கும் மேவிய தேவாலயம் தோறு(ம்) பெருமாளே
இந்திராணி தன் மாதோடு ... இந்திரன் மனைவி சசியின் பெற்ற மகள் தேவயானையுடன் நன் குறமங்கை மானையும் .. குறக்குலத்தில் தோன்றிய பெண் மான் வள்ளியையும்
மாலாய் மணந்து . ஆசையுடன் திருமணம் செய்து கொண்டு உலகெங்கு மேவிய தேவாலயந்தொறு பெருமாளே.
... உலகத்தில் எங்குமுள்ள தேவாலயங்கள்
தோறும் வீற்றிருக்கும் பெருமாளே!
சுருக்க உரை
கும்பகோணம், திருவாரூர், சிதம்பரம், தேவர்கள் வாழும் சீகாழி, திருப்பரங்குன்றம் முதலிய ஸ்தலங்களில் வீற்றிருக்கும் செல்வமே, சோழ நாட்டில்
சிறந்த தலைநகரமான கருவூரில் எழுந்தருளியுள்ள தெய்வமே, கம்பா நதி விளங்கும் காஞ்சியில்
மாமரத்தின் அடியில் பொருந்தி விளங்கும் அழகனே, சங்குகள் உலவும் காவேரி கடலுடன் சங்கமம்
ஆகும் முகத்துவாரத்தில் உள்ள காவிரிப் பூம்பட்டினத்திலும், திரிசிராப்பள்ளியிலும்
வாழ்கின்ற தேவனே, பூத சேனைகளை உடையவனே வயலூர் பெருமானே
இந்திராணி பெற்ற தேவசேனையுடன், குற மங்கையாகி வள்ளியையும்
திருமணம் செய்து கொண்டு, உலகில் எங்குமுள்ள ஸ்தலங்களில் வீற்றிருக்கும்
பெருமாளே எனக்கு அருள் புரிவாயாக
விளக்கக் குறிப்புகள்
கும்பகோணம்
தாவி முதல் காவிரி நல் யமுனை கங்கை
சரசுவதி பொற்றாமரைப் புட்கரணி தெண்நீர்க்
கோவியொடு குமரி வரு தீர்த்தம் சூழ்ந்த
குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே
- திருநாவுக்கரசர் தேவாரம்
ஆரூர்
ஆரூர் தில்லைஅம்பலம் வல்லம் நல்லம்
வடகச்சியும் அச்சிறுபாக்கம் நல்ல - சம்பந்தர் தேவாரம்,
வேளூர்
வைத்தீசுரன் கோயில் என்பதாகும்
பரங்கிரி திருப்பரங்குன்றம் முதலாவது படை வீடாகும்
சோலையங்கிரி பழமுதிர் சோலை,
மூதூர் - பழம்பதி, விருத்தபுரி, திருப்புனவாயில் என்பது
முருகனுக்கு
மிகவும் உகந்த 29 க்ஷேத்திரங்களைத் தொகுத்தளிக்கும் சிறப்பான பாடல் இது. அவைகளாவன
(1) கும்பகோணம் -
காசி விஸ்வநாதர், கும்பேசர், நாகேஸ்வரர் கோயில்கள் உள்ள மகாமகத் ஸ்தலம்
(2) திருவாரூர் -
சப்த விடங்கத் தலங்களுள் முதன்மையான ஸ்தலம் ( இந்த ஸ்தலத்தையும் சிதம்பரத்தையும் முதலில் சொல்லிய காரணம்: சம்பந்த பெருமான் அருளிய க்ஷேத்திரக் கோவைப் பதிகம் தொடக்கம் “ஆரூர் தில்லை அம்பலம்’ என வருவதினால் என அறியலாம்.
(3) சிதம்பரம் -
பஞ்ச பூதத் ஸ்தலங்களுள் ஆகாயத் ஸ்தலம் - நடராஜப் பெருமான் நடனமாடிய கனகசபை
(4) சீகாழி - சம்பந்தர் அவதரித்த ஸ்தலம், சூரனுக்கு அஞ்சி இந்திரன் மூங்கிலாக மாறி ஒளிந்த இடம்
(5) மாயூரம் - பார்வதி மயிலாக மாறி சிவனை வழிபட்ட ஸ்தலம். மயிலாடுதுறை என இன்று அழைக்கப்படிகிறது.
(6) சிவகாசி - பாண்டிய நாட்டில் வட நாட்டுக் காசிக்கு சமமான புண்ணிய ஸ்தலம்
(7) ராமேஸ்வரம் -
சிவனை ஸ்ரீராமன் பூஜை செய்து வழிபட்ட க்ஷேத்திரம்
(8) வைத்தீஸ்வரன்கோயில் - முருகன் முத்துக்குமரனாகக் காட்சி தரும் ஸ்தலம், செவ்வாய் ஸ்தலம்
(9) பரங்கிரி - திருப்பரங்குன்றம் - ஆறு படைவீடுகளில் முதலாவது, மதுரைக்கு அருகில் உள்ளது,
(10) ஜம்புகேஸ்வரம் -
திருவானைக்கா - பஞ்ச பூதத் தலங்களில் அப்பு ஸ்தலம், திருச்சிக்கு வடக்கே
(11) திருவாடானை -
சிவகங்கைக்கு அருகே உள்ள ஸ்தலம்
(12) திருச்செந்தூர் - ஆறுபடைவீட்டில் இரண்டாம் படைவீடு, திருநெல் வேலி அருகில்
(13) திருவேடகம் - சம்பந்தர் மதுரையில் இட்ட ஏடு வைகையில் மேற்கே எதிர்த்துச் சென்று தங்கிய ஸ்தலம்
(14) சோலயங்கிரி பழமுதிர்ச்சோலை - மதுரைக்கு வடக்கே உள்ள ஆறாவது படைவீடு
(15) பொதியமலை – பாபநாசம் அம்பா சமுத்திரத்திலிருந்து அருகில் உள்ளது, அகத்தியர் க்ஷேத்திரம்
(16) பூரி ஜெகந்நாதம் - ஒரிஸ்ஸா கடற்கரையிலுள்ள விஷ்ணு. ஸ்வாமிகளுக்கு முருகனாகத் தெரிகிறார்
(17) திருவேரகம் - சுவாமிமலை - தந்தை சிவனுக்கு முருகன் உபதேசித்த நான்காம் படைவீடு
(18) திருஆவினன்குடி - பழநி மலையிலும் ஆவினன்குடி அடிவாரத்திலும் உள்ள மூன்றாம் படைவீடு
(19) குன்றுதோறாடல் - பல மலைகளுக்கும் பொதுவாக வழங்கும் ஐந்தாவது படைவீடு
(20) மூதூர் -
திருப்புனவாயில் - வேதங்கள் பூஜித்த தலம், திருவாடானைக்கு அருகில் உள்ளது
(21) விரிஞ்சை -
விரிஞ்சிபுரம், வேலூருக்கு மேற்கே உள்ள ஸதலம்.
(22) வஞ்சி -
சோணாடுவஞ்சி என்பதனால் கருவூர், திருச்சிக்கு உள்ளது,
(23) கம்பை
மாவடி - காஞ்சீபுரத்தில், ஏகாம்பரநாதர் கோயிலில் மாமரத்தின் கீழ் இருக்கும் முருகன்
(24) காவேரி
சங்கமுகம் - காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்) - சீகாழிக்குத் தென்கிழக்கில், பட்டினத்தார் அவதரித்த ஊர் (2 கோயில்கள் - பல்லவனீச்சரம், சாயாவனம் - இவை வைப்புத் தலங்கள்)
(25) சிராமலை - திருச்சிராப்பள்ளி, திரிசிரன் என்ற அரக்கன் பூஜித்த திருப்பதி, தாயுமானவர் ஸ்தலம்
(26) வயலூர் – திருச்சிக்கு அருகில், ஸ்வாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரம் கிடைத்த ஸ்தலம்,
(27) திருப்போரூர் -
செங்கற்பட்டுக்கு வட கிழக்கே சமரமராபுரி, என்று வழங்கும் ஸ்தலம்,
(28) சிவாயம் -
வாட்போக்கி – குழித் தலைக்கு அருலில் உள்ள ரத்னகிரி, என்ற ஸ்தலம்
(29) திருக்
கண்டியூர் - தஞ்சாவூருக்கு வடக்கே திருவையாற்றுக்கு போகும் வழி. ஸப்தஸ்தான ஸ்தலம்).
உலகெங்கு
மேவிய தேவாலயந்தொறு
பெருமாளே ….
என்பதினால் உலகில் உள்ள எல்லா மதத்து கோயில்களிலும் இருப்பவன் முருகனே எனக் காண்பிக்கிறார்
"யாதொரு தெய்வங்கொண்டீர் அத்தெய்வமாகி யாங்கே மாதொரு பாகனார்
தாம் வருவர்" என்னும் சித்தியார் வாக்கு
No comments:
Post a Comment