பின் தொடர்வோர்

Tuesday, 10 October 2017

326.அப்படியேழு மேழும்

326
பொது
பிறவி அற இந்த பாடலை பாடலாம் எனபர் பெரியவர்கள்

          தத்தன தான தானன தத்தன தான தானன
            தத்தன தான தானன                  தனதான
        

அப்படி யேழு மேழும்வ குத்தவ ழாது போதினி
    னக்ரம்வி யோம கோளகை              மிசைவாழும்
அக்ஷர தேவி கோவின்வி திப்படி மாறி மாறிய
    னைத்துரு வாய காயம               தடைவேகொண்
டிப்படி யோனி வாய்தொறு முற்பவி யாவி ழாவுல
   கிற்றடு மாறி யேதிரி                  தருகாலம்
எத்தனை யூழி காலமெ னத்தெரி யாது வாழியி
   னிப்பிற வாது நீயருள்                 புரிவாயே
கற்பக வேழ மேய்வன பச்சிள ஏனல் மீதுறை
    கற்புடை மாது தோய்தரு                       மபிராம
கற்புர தூளி லேபன மற்புய பாக சாதன
    கற்பக லோக தாரண                           கிரிசால
விப்ரச மூக வேதன பச்சிம பூமி காவல
    வெட்சியு நீப மாலையு                   மணிவோனே
மெத்திய ஆழி சேறெழ வெற்பொடு சூர னீறெழ
   விக்ரம வேலை யேவிய              பெருமாளே
 
பதம் பிரித்து உரை
 
அப்படி ஏழும் ஏழும் வகுத்து வழாது போதினின்
அக்ரம் வியோம கோளகை மிசை வாழும்

அப்படி - அவ்வகையில் ஏழு ஏழும் - பதினான்கு உலகங்களும் வழாது - தவறில்லாமல் வகுத்து - படைத்து போதினின் - தாமரை மலரில் அக்ரம்முதன்மைத் தானமான வியோம கோளம் மிசை - அண்ட கோளத்திலும் வாழும் - வாழ்கின்றவரும்

அக்ஷர தேவி கோவின் விதிப்படி மாறி மாறி
அனைத்து உரு ஆய காயம் அது அடைவே கொண்டு


அக்ஷர தேவி கோவின் - சரஸ்வதியின் கணவனுமான பிரமதேவன் இட்ட- விதிப்படி  எழுதியுள்ள விதியின்படி மாறி மாறி - (பிறப்புக்கள்) மாறி மாறி- அனைத்து உரு - எல்லா உருவங்களையும் கொண்ட காயமது - உடல்களை அடைவே கொண்டு - முறையே நான் எடுத்து

இப்படி யோனி வாய் தொறும் உற்பவியா விழா
உலகில் தடுமாறியே திரிதரு காலம்

இப்படி யோனி தொறு - இவ்வாறாக (எண்பத்து நான்கு நூறாயிரம்) யோனி பேதங்களிலும் உற்பவியா - தோன்றிப் பிறந்தும் விழா - பின்னர் இறந்தும்- உலகில் தடுமாறி - இங்ஙனம் உலகில் தடுமாற்றம் அடைந்து  திரிதரு காலம் - அலைகின்ற காலம்

எத்தனை ஊழி காலம் என தெரியாது வாழி
இனி பிறவாது நீ அருள் புரிவாயே
எத்தனை யூழி காலம் எனத் தெரியாது - எத்தனை ஊழி காலம் என்று எனக்குத் தெரியாது- வாழி - (இறைவனே) நீ வாழ்வாயாக- இனிப் பிறவாது - நான் இனிப் பிறவாமல்- நீ அருள் புரிவாயே - நீ அருள் புரிவாயாக-


கற்பகம் வேழம் ஏய்வன பச்சிள ஏனல் மீது உறை
கற்புடை மாது தோய் தரும் அபிராம

கற்பகம் - தென்னை வேழம் - கரும்பு ஏய்வன - (இவைகளுக்கு) ஒப்பாக (நீண்டு வளர்ந்துள்ள) பச்சிளம் ஏனல் - பசிய இளந் தினைகள் உள்ள புனத்தில் வீற்றிருந்த கற்புடை மாது - கற்பு நிறைந்த வள்ளி தோய் தரு அபி ராம - அணைதரும் அழகனே


கற்புர தூளி லேபன மல் புய பாக சாதன
கற்பக லோல தாரண கிரி சால

கற்பக தூளி லேபன - பச்சைக் கற்பூரப் பொடி பூசிய மற் புய - மல் யுத்தத்துக்கு ஏற்ற புயத்தை உடையவனே பாக சாதனன் - இந்திரனுடைய கற்பக லோகம் - கற்பக மரங்கள் உள்ள பொன்னுலகத்துக்கு தாரண - நிலைத்த வாழ்வைத் தந்தவனே கிரி சாலம் - மலைக் கூட்டத்தில் விளங்குபவனே


விப்ர சமூக வேதன பச்சிம பூமி காவல
வெட்சியு(ம்) நீப மாலையும் அணிவோனே

விப்ர சமூக - அந்தணர் கூட்டத்தில் இருப்பவனே வேதன - வேதத்தில உள்ளவனே பச்சிம - மேற் புறத்தில் உள்ள - பூமி காவல - பூமியின் காவலனே ( விண்ணுலகத்தின் காவலனே) வெட்சியும் நீப மாலையும் அணிவோனே - வெட்சியும் கடப்ப மலையையும் அணிபவனே
பச்சிம பூமி  – பச் இம பூமி – பூமி பொலிவு உள்ள பொன் உலகின் எனவும் பொருள் கொள்ளலாம்

        
மெத்திய ஆழி சேறு எழ வெற்பொடு சூரன் நீறு எழ
விக்ரம வேலை ஏவிய பெருமாளே-
 
மெத்திய ஆழி - (நீர்) நிரம்பிய கடல் சேறு எழ - சேறு பட்டு எழவும் வெற்பொடு - எழு கிரிகளும் சூரன் நீறு எழ - சூரனும் பொடிபட்டு அழியவும் விக்ரம வேலை - பராக்ரமம் பொருந்திய வேலை ஏவிய பெருமாளே - செலுத்திய பெருமாளே

சுருக்க உரை .
பதினான்கு உலகங்களையும் தவறுதல் இல்லாத வகையில் வகுத்து
அண்ட கோளத்திலும் வாழ்பவனும், சரஸ்வதிக்குத் தலைவனுமாகிய
பிரமனின் விதிப்படி, மாறி மாறி பல உடல் உருவங்களை எடுத்துப் பிறந்து, இறந்து, தடுமாறும் நான் இனி பிறவா வண்ணம் அருள்புரிவாயாக
பசிய தினைப் புனத்தில் வீற்றிருந்த கற்பு நிறைந்த வள்ளி அணைதரும்
அழகனே, வாசனைப் பொருள்கள் அணிந்தவனே, மல் யுத்தம் புரிவதற்கு ஏற்ற  புயங்களை உடையவனே, இந்திரனின் பொன்னுலகை நிலைக்கச் செய்தவனே, மலைகளில் வாழ்பவனே, அந்தணர்கள் கூட்டத்தில் இருப்பவனே, வேதத்தில் உள்ளவனே, பூமியின் காவலனே, வெட்சியும், கடப்பமும் அணிபவனே, கடல் சேறு படவும், எழு கிரிகளும் சூரனும் அழிபட வேலை எய்தியவனே, நான் இனிப் பிறவாது அருள் புரிவாயாக.
  
விளக்கக் குறிப்புகள்
கோவின் விதிப்படி மாறி மாறி---
ஏட்டின் விதிப்டி யேகொடு மாபுர
வீட்டி லடைத்திசை வேகசை மூணதி
லேற்றி யடித்திட வேகட லோடம தெனவேகி  திருப்புகழ்: ஏட்டின்விதி

பதினான்கு உலகங்கள்
மேலுலகம் 7. பூலோகம், புவலோகம், சுவலோகம், சனலோகம், தபோலோகம், மகாலோகம், சத்தியலோகம்
கீழுலகம் 7. அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், இராசதலம், பாதாளம்

அக்ரம் - நுணி





Thursday, 5 October 2017

325. அதல சேட னாராட

325
பொது
 
          தனன தான தானான தனன தான தானான
            தனன தான தானான               தனதான
 
அதல சேட னாராட அகில மேரு மீதாட
       அபின காளி தானாட                        அவளோடன்
றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட
       அருகு பூத வேதாள                              மவையாட
மதுர வாணி தானாட மலரில் வேத னாராட
       மருவு வானு ளோராட                             மதியாட
வனச மாமி யாராட நெடிய மாம னாராட
       மயிலு மாடி நீயாடி                             வரவேணும்
 கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு
       கருதலார்கள் மாசேனை                      பொடியாகக்
கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது
       கனக வேத கோடுதி                        அலைமோதும்
உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத
       உவண மூர்தி மாமாயன்                       மருகோனே
உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ
       னுளமு மாட வாழ்தேவர்                        பெருமாளே.
 
பதம் பிரித்தல்
 
அதல(ம்) சேடனார் ஆட அகில மேரு மீது ஆட
அபின காளி தான் ஆட அவளோடு அன்று

அதலம் - கீழ் உலகத்து உள்ள. சேடனார் - ஆதி சேடன்.    ஆட - ஆடவும். அகில(ம்) மீது - பூமி மீதுள்ள. மேரு ஆட - மேரு மலை ஆடவும் அபின்னம் - ஒற்றுமையுடன் (சிவனது நடனத்துக்கு வேற்றுமை இல்லாத வகையில்)  காளி தான் ஆட- காளி தேவி ஆடவும் அவளோடு அன்று- அவளுடனே அன்று

அதிர வீசி வாதாடும் விடையில் ஏறுவார் ஆட
அருகு பூத வேதாளம் அவை ஆட

அதிர - அவள் நடுங்கும்படி வீசி - காலைத் தூக்கி. வாதாடும் - தருக்கம் செய்து போட்டியிட்டு விடையில் ஏறுவார் ஆட - இடப வாகனரான சிவபெருமான் ஆடவும்  அருகு  -  அவருக்குச் சமீபத்தில் பூத வேதாளம் அவை  ஆட -அவரைச் சூழ்ந்து நின்று பூதங்களும் பேய்களும் ஆடவும்

மதுர வாணி தான் ஆட மலரில் வேதனார் ஆட
மருவு வான் உளோர் ஆட மதி ஆட

மதுர வாணி தான் ஆட - இனிமையான சரஸ்வதி ஆடவும் மலரில் - தாமரை மலரில் வேதனார் ஆட – பிரமன் ஆடவும் மருவு - பொருந்தியுள்ள
வான் உளோர் ஆட - விண்ணவர்கள் ஆடவும்.
மதி ஆட - சந்திரன் ஆடவும்.

வனச மாமியார் ஆட நெடிய மாமனார் ஆட
மயலும் ஆடி நீ ஆடி வரவேணும்

வனச - செந்தாமரை மலரில் மாமியாராட - உனது மாமியாகிய இலக்குமி ஆடவும் நெடிய - விஸ்வ ரூபம் எடுத்த மாமனார் ஆட - மாமனாராகிய திருமால் ஆடவும் மயிலும் ஆடி - மயில் ஆடவும் நீயாடி - நீயும் நடனம் புரிந்து வரவேணும் - வரவேணும்.

கதை விடாத தோள் வீமன் எதிர் கொள் வாளியால் நீடு
கருதலார்கள் மா சேனை பொடியாக

கதை விடாத தோள் வீமன் - கதாயுதத்தை எப்போதும் தோளில் வைத்துள்ள வீமசேனன் எதிர் கொள் - எதிர்த்துச் செலுத்தின வாளியால் நீடு - அம்பு செலுத்தவதில் பெரிய கருதலார்கள் - பகைவர்களின் மா சேனை - பெருஞ் சேனைகள். பொடியாக - பொடிபட (உதவிய).

கதறு காலி போய் மீள விஜயன் ஏறு தேர் மீது
கனக வேத கோடு ஊதி அலை மோதும்

கதறு காலி - கதறிச் சென்ற பசுக் கூட்டங்கள். போய் மீள - போனவை மீண்டுவர (புல்லாங் குழலை ஊதினவரும்). விஜயன் ஏறு தேர் மீது - அருச்சனன் ஏறிச் சென்ற தேர் மீது (பாகனாயிருந்து). கனக - பொன் மயமானதும். வேத - வேத ஒலியைத் தருவதும் கோடு ஊதி - சங்கத்தை ஊதினவரும் அலை மோதும் - அலைகள் வீசுகின்ற

உததி மீதிலே சாயும் உலக மூடு சீர் பாதம்
உவணம் ஊர்தி மா மாயன் மருகோனே

உததி மீதலே - கடலிலே சாயும் – பள்ளி கொண்ட வரும் உலகம் மூடு சீர் பாதம் - உலகத்தையே அளந்து மூடிய திருவடிகளை உடையவரும் உவணம் ஊர்தி - கருட வாகனராகியவரும் ஆகிய திருமால் மாமாயன் மருகோனே - சிறந்த மாயோனாகிய திருமாலின் மருகனே.

உதய தாம மார்பான ப்ரபுட தேவ மா ராஜன்
உளமும் ஆட வாழ் தேவர் பெருமாளே.
உதய தாம - அன்று அலர்ந்த மலர் மாலையை. மார்பான - அணிந்த மார்பினரான ப்ரபுட தேவ மாராசன் - பிரபுட தேவ மகாராஜனுடைய உளமும் ஆட - உள்ளம் நெகிழ்ந்துருகும் வண்ணம் வாழ் - அவனது உள்ளத்தில் வாழ்கின்ற தேவர் பெருமாளே - தேவர்கள் பெருமாளே.
 
சுருக்க உரை
ஆதிசேடன், மேரு மலை, காளி, சிவபெருமான், அவர் அருகில் உள்ள பூத வேதாளங்கள், சரஸ்வதி, தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன், விண்ணோர், மதி, இலக்குமி, திருமால் இவர்கள் அனைவரும் ஆடி வர, நீயும் உன் மயில் மீது ஏறி நடமாடி வந்து என் முன்னே வரவேணும்.
 
கதாயுதத்தை ஒரு போதும் விடாத வீமசேனனை எதிர்த்த பெருஞ் சேனைகள் பொடிபட உதவியவரும், பசுக் கூட்டங்களைக் குழல் ஊதி மீட்டவரும், அருச்சுனனுக்குத் தேர்ப்பாகனாக இருந்தவரும், கடலில் பள்ளி கொள்பவரும், உலகத்தை அளந்தவருமாகிய திருமாலுக்கு மருகனே, பிரபுட  தேவ மகாராஜனுடைய உள்ளத்தில் வாழ்பவனே.
தேவர்கள் பெருமாளே. மயில் மீது ஏறி ஆடி என் முன்னே வரவேணும்.

 
  விளக்கக் குறிப்புகள்

1. சம்பந்தாண்டான் என்பவரோடு அருணகிரியார் வாது செய்த போது முருக வேளைப் பிரபுட தேவராஜனுடைய சபையில் வரவழைக்கப் பாடிய பாடல் இது.

சயிலமெ றிந்தகை வேற்கொடு
மயிலினில் வந்தெனை யாட்கொளல்
சகமறி யும்படி காட்டிய குருநாதா --- திருப்புகழ்,  அரிவையர்நெஞ்சு

முருக பெருமான் கம்பத்திலிருந்து வெளிப்பட்டுப் பிரபுடதேவராஜன் முதலிய அனைவரும் கண்டு களிக்கக் காட்சியளித்த  திருவருட் செயல் உலகமறிய நிகழ்ந்தது என சொல்கிறார்

2. அதிர வீசி வாதாடும்....
   முதிரும் நீர்ச் சடைமுடி முதல்வ. நீ முழங்கு அழல்
   அதிர வீசி ஆடுவாய் அழகன் நீ..                                             `                                                                 .----சம்பந்தர் தேவாரம்
   
3. அருக பூதவேதாளம் அவையாட....
 ஊன் அடைந்த வெண்தலையினோடு பலி திரிந்து
 கான் அடைந்த பேய்களோடு பூதம் கலந்து உடனே..

                                                             -- சம்பந்தர் தேவாரம்