பின் தொடர்வோர்

Showing posts with label வேதம். Show all posts
Showing posts with label வேதம். Show all posts

Thursday, 24 February 2022

485. சுடரனைய

 

485

சிதம்பரம்




 

                தனதனன தனதான தனதனன தனதான

                    தனதனன தனதான                 தனதான

 

சுடரனைய திருமேனி யுடையழகு முதுஞான

     சொருப கிரி யிடமேவு                          முகமாறும்

சுரர்தெரிய லளிபாட மழலைகதி நறைபாய

     துகிரிதழின் மொழிவேத                        மணம்வீச

அடர்பவள வொளிபாய அரியபரி புரமாட

     அயில்கரமொ டெழில்தோகை                மயிலேறி

அடியனிரு வினைநீறு படஅமர ரிதுபூரை

     அதிசயமெ னருள்பாட                       வரவேணும்

விடைபரவி அயன்மாலொ டமரர்முநி கணமோட

     மிடறடைய விடம்வாரி                       யருள்நாதன்

மினலனைய இடைமாது இடமருவு குருநாதன்

      மிகமகிழ அநுபூதி                         யருள்வோனே

இடர்கலிகள் பிணியோட எனையுமருள் குறமாதி

     னிணையிளநிர் முலைமார்பி           னணைமார்பா

இனியமுது புலிபாத னுடனரவு சதகோடி

     யிருடியர்கள் புகழ்ஞான                  பெருமாளே

 

பதம் பிரித்து உரை

 

 

சுடர் அனைய திருமேனி உடை அழகு முது ஞான

சொருப கிரீடம் மேவும் முகம் ஆறும்

 

சுடர் அனைய திருமேனியுடை = (காலைக்) கதிர் போன்ற உடலின் அழகும் = அழகும் முது ஞான சொருப = முற்றின ஞானத்தின் திருவுருவமும்  கிரீடம் மேவும் = மகுடம் பொருந்திய முகம் ஆறும் = ஆறு முகங்களும்

 

சுரர் தெரியல் அளி பாட மழலை கதி நறை பாய

துகிர் இதழின் மொழி வேத மணம் வீச

 

சுரர் = தேவர்கள் (சூட்டிய) தெரியல் = மாலைகளிலிருக்கும் அளி பாட = வண்டுகள் பாட மழலைகதி = (அதனால் அம்மாலைகளிலிருந்து) மெதுவான வகையில் நறை பாய = துளித் துளியாகத் தேன் பாய துகிர் இதழின் = பவளம் போன்ற

வாயிதழிலிருந்து சொல்லப்படும் மொழி வேத = வேத மொழிகளின் மணம் வீச = நறு மணம் வீச

 

அடர் பவள ஒளி பாய அரிய பரிபுரம் ஆட

அயில் கரமொடு எழில் தோகை மயில் ஏறி

 

அடர் பவள ஒளி பாய = அடர்ந்த பவள நிறத்தின் ஒளி பாய அரிய = அருமையான பரிபுரம் ஆட = கால் சிலம்பு ஒலிக்க அயில் கரமொடு = வேல் ஏந்திய திருக் கரத்தோடு எழில் தோகை மயில் ஏறி = அழகிய கலாபம் உள்ள மயிலின் மீது ஏறி

 

அடியன் இரு வினை நீறுபட அமரர் இது புரை

அதிசயம் என அருள் பாட வரவேணும்

 

அடியன் = அடியேனுடைய இரு வினை நீறுபட = அடியேனாகிய என் இரண்டு வினைகளும் பொடிபட்டு அழிய அமரர் = (அதைக் கண்டு) தேவர்கள் இது பூரை அதிசயம் என = (இவன் ஒன்றுக்கும் உதவாதவன் கடவுள் இவனுக்கு அருள் செய்வது) என்ன ஆச்சரியம் என அருள் பாட = (உனது) திருவருளைக் கொண்டாடிப் பாட வர வேணும் = நீ எழுந்தருளி என் முன் வர வேண்டும்

 

விடை பரவி அயன் மாலொடு அமரர் முநி கணம் ஓட

மிடறு அடைய விடம் வாரி அருள் நாதன்

 

விடை பரவி = நந்தி எம்பெருமானைப் போற்றி வணங்கி அயன் மாலொடு = பிரமன், திருமாலுடன் அமரர் முநி கணம் = தேவர்களும் முனிவர் கூட்டங்களும் ஓட = ஓடி வந்து தம்மிடம் சரணம் புக மிடறு அடைய = தமது நெஞ்சிடையே பொருந்தி நிற்கும்படி விடம் வாரி அருள் நாதன் = விடத்தை வாரி உண்டு (சரணம் அடைந்தவர்களுக்கு) அருள் புரிந்த தலைவன்

 

மி(ன்)னல் அனைய இடை மாது இடம் மருவு குரு நாதன்

மிக மகிழ அநுபூதி அருள்வோனே

மி(ன்)னல் அனைய இடை மாது = மின்னல் போன்ற

இடையை உடைய பார்வதியை இடம் மருவு குரு நாதன் = (தனது) இடப்பாகத்தில் பொருந்தி உள்ள குரு மூர்த்தியாகிய சிவபெருமான் மிக மகிழ = மிகவும் மகிழ அநுபூதி அருள்வோனே = அவருக்கு ஞான உபதேசத்தை அருளியவனே

 

இடர் கலிகள் பிணி ஓட எனையும் அருள் குற மாதின்

இணை இளநீர் முலை மார்பில் அணை மார்பா

 

இடர் கலிகள் = துன்பங்களும், வறுமையும் பிணி ஓட = நோய்களும் விலக எனையும் அருள் = என்னையும் ஒரு பொருளாகக் கருதி அருளியவனே குற மாதின் = குறப் பெண் வள்ளியின் இணை இள நீர் முலை மார்பில் = இரண்டு இள நீர் போன்ற கொங்கைகள் அமைந்த மார்பில் அணை மார்பா = அணையும் மார்பனே

 

இனிய முது புலி பாதன் உடன் அரவு சதகோடி

இருடியர்கள் புகழ் ஞான பெருமாளே

 

இனிய = இன்ப நிலையில் முது புலி பாதன் உடன் = பழைய முனிவரான வியாக்ரபாதருடன் அரவு = பாம்பு உருவமுள்ள (பதஞ்சலி முனிவரும்) சத கோடி = நூறு கோடி இருடியர்கள் = முனிவர்களும் புகழ் = புகழும் ஞான பெருமாளே = ஞான மூர்த்தியாகிய பெருமாளே 

சுருக்க உரை 

ஒளி வீசும் திரு மேனியின் அழகும், முதிர்ந்த ஞான வடிவும், ஆறு திருமுகங்களும் விளங்க, பவள வாயினின்று சொல்லப்படும் வேத மொழி மணம் வீச, காலில் சிலம்புகள் ஒலிக்க, தோகை மயிலின் மீது ஏறி, அடியேனுடைய இரு

வினைகளும் பொடிபட, தேவர்கள் ஒன்றுமில்லாதவனுக்கு இறைவன் திருவருள் செய்தது ஆச்சரியம் என்று சொல்லும்படி, உன் திருவருளைக் கொண்டாட, நீ என் முன் எழுந்தருளி வரவேண்டும்

 

நந்தி பகவானை வணங்கி, பிரமன், திருமால், தேவர்கள், முனிவர் கூட்டங்கள் ஓடி வந்து சரணம் புக, நந்தி அளித்த விடையைப் பெற்று,  தம் நெஞ்சில் விடம் அடைந்து

நிற்கும்படி, அதை உண்டு, சரண் புகுந்தவர்களுக்கு அருள் புரிந்த சிவபெருமானுக்கு, அவருடைய இடப் பாகத்தில் உள்ள உமை மகிழும்படி, ஞான உபதேசத்தை அருளியவனே !  எனது துன்பங்கள், வறுமை, நோய் எல்லாம் விலக எனக்கு

அருளியவனே ! வள்ளியின் கொங்கைகளை  அணைந்தவனே ! பழைய முனிவரான வியாக்ரபாதருடன், பதஞ்சலியும் புகழ்கின்ற ஞான மூர்த்தியாகிய பெருமாளே ! என் முன்னே வர வேண்டுகிறேன்


விளக்கக் குறிப்புகள்

  பூரை = ஒன்றும் இல்லாதவன் திருமாது = பார்வதி

 முது புலிபாதரு டனரவு சத கோடி

 தில்லையில் முதலில் தவம் செய்தவர் வியாக்கிரபாதர் பின்பு தான் பதஞ்சலி வந்து   அவருடன் கூடினார்

rev 30-5-2022


பாடலை கேட்க





Thursday, 27 May 2021

447.அழுதுமாவா


திருவருணை

 

            தனதனா தானனத் தனதனா தானனத்

              தனதனா தானனத்                   தனதான

 

திருவருணை முருகா!

அடியேன் மீண்டும் மீண்டும் பிறவியில் உழலாமல்,

உண்மை ஞானத்தைப் பெற்று உய்ய உபதேசித்து அருளாயோ?

 

அழுதுமா வாயெனத் தொழுதுமூ டுடுநெக்

     கவசமா யாதரக்                            கடலூடுற்

றமைவில்கோ லாகலச் சமயமா பாதகர்க்

     கறியொணா மோனமுத்                 திரைநாடிப்

பிழைபடா ஞானமெய்ப் பொருள்பெறா தேவினைப்

     பெரியஆ தேசபுற்                            புதமாய

பிறவிவா ராகரச் சுழியிலே போய்விழப்

     பெறுவதோ நானினிப்                  புகல்வாயே

பழையபா கீரதிப் படுகைமேல் வாழ்வெனப்

     படியுமா றாயினத்                          தனசாரம்

பருகுமா றானனச் சிறுவசோ ணாசலப்

     பரமமா யூரவித்                            தகவேளே

பொழுதுசூழ் போதுவெற் பிடிபடா பார்முதற்

     பொடிபாடா வோடமுத்                   தெறிமீனப்

புணரிகோ கோவெனச் சுருதிகோ கோவெனப்

     பொருதவே லாயுதப்                    பெருமாளே

 

 

பதம் பிரித்து உரை

 

அழுதும் ஆவா என தொழுதும் ஊடுடு நெக்கு

அவசமாய் ஆதார கடல் ஊடுற்று

அழுதும் ஆவா எனத் தொழுதும் - அழுதும் ஆவா என இரங்கித் தொழுதும் ஊடுடு - அவ்வப்போது நெக்கு - பக்தியால் நெகிழ்ந்து அவசமாய் - தன் வசமற்று ஆதரக் கடல் - ஆதாரம் என்ற அன்புக் கடலில் ஊடுற்று – மூழ்கி [திளைத்து]

 

அமைவில் கோலாகல சமய மா பாதகர்க்கு

அறி ஒணா மோன முத்திரை நாடி

அமைவில் - ஆறுதல் இல்லாத கோலாகல சமய மா பாதகர்க்கு - ஆடம்பரமான சமய வதப் பாதகர்களுக்கு அறி ஒணா - அறிதற்கு முடியாத மோன முத்திரை நாடி - மௌனக் குறியைத்தேடி

 

பிழை படா ஞான மெய் பொருள் பெறாதே வினை

பெரிய ஆதேச புற்பதம் ஆய

பிழை பட - தவறுதல் இல்லாத ஞானப் பொருள் பெறாதே - ஞான மெய்ப் பொருளை நான் அடையாமல் வினைப் பெரிய ஆதேசம் - வினைக்கு ஈடான பெரிய வேறுபாடு அடையும் புற்புதம் ஆய - நீர்க்குமிழி போல் நிலை இல்லாத

 

பிறவி வாராகரம் சுழியிலே போய் விழ

பெறுவதோ நான் இனி புகல்வாயே

பிறவி வாராகரம் சுழியிலே - பிறவி என்ற கடல் நீரச்சுழியிலே நான் இனி - நான் இனி மேல் போய் விழப் பெறுவதோ - போய் விழக் கடவேனோ புகல்வாயே - சொல்லி அருளுக

 

பழைய பாகீரதி படுகை மேல் வாழ்வு என

படியும் ஆறு ஆயின தன சாரம்

பழைய பாகீரதி - பழைய கங்கை என்னும் படுகை மேல் வாழ்வு எனப்படியும் - நீர் நிலைப் படுகையின் மேல் செல்வக் குமரர்களாய்த் தோன்றி ஆறு ஆயின - (கார்த்திகை மாதர்களாகிய) ஆறு தாய் மார்களின் தனசாரம் - முலைப்பாலை

பருகுமாறு ஆனன சிறுவ சோணாசல

பரம மாயூர வித்தக வேளே

பருகும் - உண்ட ஆனனச் சிறுவ - ஆறு திரு முகங்களை உடைய குழந்தையே சோணாசல பரம - திரு அண்ணாமலைப் பரமனே மாயூர - மயில் வாகனனே வித்தக வேளே - ஞான மூர்த்தியே [எல்லோராலும் விரும்பப்படும் பெரியவரே!]

பொழுது சூழ் போது வெற்பு இடிபடா பார் முதல்

பொடி படா ஓட முத்து எறி மீன

பொழுது சூழ் போது - மாலை வேளையில் வெற்பு - கிரௌஞ்சம் பிடிபடா - பொடிபட பார் முதல் பொடிபடா ஓட - பூமி முதலியவை பொடி பட்டு ஓட முத்து எறி - முத்துக்களை வீசுவதும் மீன - மீன்களைக் கொண்டதுமான

புணரி கோ கோ என சுருதி கோ கோ என

பொருத வேலாயுத பெருமாளே

புணரி - கடல் கோ கோ என - கோ கோ என்று கதற சுருதி கோ கோ என - வேதங்கள் கோகோ என்று கதற பெருத- போர் செய்த வேலாயுதப் பெருமாளே - வேலாயுதத்தை ஏந்தும் பெருமாளே

 

சுருக்க உரை

 அழுதும், இரங்கித் துதித்தும் மனம் நெகிழ்ந்தும், பக்தி என்னும் கடலில் திளைத்து ஆறுதல் இல்லாத ஆடம்பரமான சமய வாதப் பாதகர்களால் அறிந்து கொள்ள முடியாத மௌனக் குறியைத் தேடி, தவறுதல் இல்லாத ஞான மெய்ப் பொருளை

அடையாமல் நீர்க்குமிழி போல் நிலை இல்லாத பிறவிக் கடலாகிய நீர்ச் சுழியில் விழுவதற்கு நான் கடவேனோ?

கங்கையின் படுகையில் தோன்றி, ஆறு கார்த்திகைப் பெண்களின் முலைப்பாலை உண்ட, ஆறு திரு முகங்களை உடையவனே! மயில் வாகனனே! ஞான மூர்த்தியே! கிரௌஞ்ச மலை, பூமி முதலியவை பொடிபட, கடல், வேதங்கள் ஆகியவை முறையிட வேலைச் செலுத்திப் போர் செய்தவனே! நான் பிறவிச் சுழலில் வீழப்பெறுவதோ?


விளக்கக் குறிப்புகள்

 

அழுதும் ஆவா எனத் தொழுது

(நெக்கு நெக்கு உள் உருகி உருகி

நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும்

நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி

நானா விதத்தால் கூத்து நவிற்றி)-- மாணிக்க வாசகர் திருவாசகம்

 

புற்புதம் - நீர்க்குமிழி.  நீர்க்குமிழி போல் தோன்றி உடனே அழியக் கூடிய பிறவியாகிய கடலில் நான் விழலாமோ?  விழுந்து துன்புறலாமோ?  என்பது பிரார்த்தனை.

மோன முத்திரை - மோனத்தின் அடையாளம்.மோனம்தான் ஞானத்தின் முடிவு. "மோனம் என்பது ஞானவரம்பு" என்பது கொன்றைவேந்தன்.

 

ஒப்புக

 

அழுது அழுது ஆட்பட முழுதும் அலாப் பொருள் தந்திடாயோ.

                                                               --- திருப்புகழ்,  விரகற.