பின் தொடர்வோர்

Showing posts with label ஞானம். Show all posts
Showing posts with label ஞானம். Show all posts

Sunday, 13 March 2022

493 விடுங்கை

 493

சிதம்பரம்

 


          தனந்தத் தத்தன தானன தானன

             தனந்தத் தத்தன தானன தானன

             தனந்தத் தத்தன தானன தானன  தனதான

 

விடுங்கைக் கொத்தக டாவுடை யானிட

   மடங்கைக் கைச்சிறை யானஅ நேகமும்

   விழுங்கப் பட்டற வேயற லோதியர்          விழியாலே

விரும்பத் தக்கன போகமு மோகமும்

   விளம்பத் தக்கன ஞானமு மானமும்

   வெறுஞ்சுத் தச்சல மாய்வெளி யாயுயிர்   விடுநாளில்

இடுங்கட் டைக்கிரை யாயடி யேனுடல்

   கிடந்திட் டுத்தம ரானவர் கோவென

   இடங்கட் டிச்சுடு காடுபு காமுன                மனதாலே

இறந்திட் டுப்பெற வேகதி யாயினும்

   இருந்திட் டுப்பெற வேமதி யாயினும்

   இரண்டிற் றக்கதொ ரூதியம் நீதர          இசைவாயே

கொடுங்கைப் பட்டம ராமர மேழுடன்

   நடுங்கச் சுக்ரிவ னோடம ராடிய

   குரங்கைச் செற்றும கோததி தூளெழ      நிருதேசன்

குலங்கட் பட்டநி சாசரர் கோவென

   இலங்கைக் குட்டழ லோனெழ நீடிய

   குமண்டைக் குத்திர ராவண னார்முடி      அடியோடே

பிடுங்கத் தொட்டச ராதிப னாரதி

   ப்ரியங்கொட் டக்கநன் மாமரு காஇயல்

   ப்ரபஞ்சத் துக்கொரு பாவல னாரென      விருதூதும்

ப்ரசண்டச் சொற்சிவ வேதசி காமணி

   ப்ரபந்தத் துக்கொரு நாதச தாசிவ

   பெரும்பற் றப்புலி யூர்தனில் மேவிய     பெருமாளே.

 

   பதம் பிரித்து உரை

  

விடுங்கைக்கு ஒத்த கடா உடையான் இடம்

அடங்கி கை சிறையான அநேகமும்

விழுங்கப்பட்டு அறவே அறல் ஓதியர் விழியாலே

விடுங்கைக்கு ஒத்த = ஏறி நடத்துவதற்கு ஏற்ற. கடா = எருமைக் கடாவை உடையான் இடம் = உடைய யமன் வசத்தே    அடங்கி அடங்கி. கைச்சிறையான = கை வசத்திலிருந்த அநேகமும் = பல     பொருள்களும் அறல் = கருமணலைப் போல் கரு நிறம் கொண்ட ஓதியர் = கூந்தலை உடைய விலை மாதர்களின்   விழியாலே = கண்களால் விழுங்கப்பட்டடு = கவரப்பட்டு

 விரும்ப தக்கன போகமும் மோகமும்

விளம்ப தக்கன ஞானமும் மானமும்

வெறும் சுத்த சலமாய் வெளியாய் உயிர் விடும் நாளில்

விரும்பத் தக்கன = விரும்பி அடையத் தக்கனவான போகமும் = சுக போகங்களும் மோகமும் = ஆசைகளும்   விளம்பத் தக்கன வெளியாய் விடு = ஆவி வெளிப்பட்டுப் போகின்ற. நாளில் = அந்த நாளில்.

 இடும் கட்டைக்கு இரையாய் அடியேன் உடல்

கிடந்திட்டு தமர் ஆனவர் கோ என

இடம் கட்டி சுடு காடு புகா முனம் மனதாலே

அடியேன் = அடியேனுடைய உடல் = இவ்வுடல் இடும் கட்டைக்கு = (சுடு காட்டில்) அடுக்கப்படும் விறகு கட்டைகளுக்கு  இரையாய் = உணவாகி கிடந்திட்டு = கிடக்கும் போது தமர்ஆனவர்    = சுற்றத்தார்கள் கோ என கோ என்று கதற இடம் கட்டி = கிடக்கும் இடத்தில் (பாடையில்) கட்டி சுடு காடு புகா முனம் = சுடு காட்டுக்குப் போவதற்கு முன்னே மனதாலே = என் மனம்.

 இறந்திட்டு பெறவே கதியாயினும்

இருந்திட்டு பெறவே மதியாயினும்

இரண்டில் தக்கது ஒரு ஊதியம் நீ தர இசைவாயே

இறந்திட்டு =(உன்னுடன் இரண்டறக்)     கலந்திட்டு கதியாயினும் பெறவே = நற்கதி அடையும் பலனைப் பெறவாவது   இருந்திட்டு = (அல்லது) இந்த உலகில் இருக்கும் போதே மதியாயினும் பெறவேஅறிவைப் பெறவாவது இரண்டில் தக்கதொரு மேற் சொன்ன இரண்டில் எனக்குத் தகுந்ததான ஊதியம்    = வரத்தை நீதர இசைவாயே = நீயே முடிவு செய்து அதைக் கொடுக்க இசைந்தருளுக

கொடுங்கை பட்ட மராமரம் ஏழுடன்

நடுங்க சுக்ரிவன் அவனோடு அமர் ஆடிய

குரங்கை செற்று மகா உததி தூள் எழ நிருதேசன்

கொடுங்கைப் பட்ட = கொடுமைக்கு இடமான மரா மரம் ஏழுடன் =    ஏழு மராமரங்களுடன் சுக்ரீவன் நடுங்க சுக்ரீவன் நடுங்கும்படி அவனோடு  அமர் ஆடிய =   அவனுடன்  சண்டை  செய்து   குரங்கைச் செற்று = குரங்காகிய வாலியை அழித்து மகா உததி = பெரிய கடல் தூள் எழ தூள் படும்படி நிருதேசன்    அரக்கர்தலைவனுடைய

குலம் கண் பட்ட நிசாசரர் கோ என

இலங்கைக்குள் தழலோன் எழ நீடிய

குமண்டை குத்திர ராவணனார் முடி அடியோடே

குலம் கண் பட்ட குலத்தைச் சார்ந்த நிசாசரர் அரக்கர்கள் எல்லாம் கோ என கோவென அலற   இலங்கைக்குள் = இலங்கை நகருள்   தழலோன் அக்கினி பகவான்   எழ =   எழுந்துவேலை செய்ய   நீடிய =   பெருத்த குமண்டை = செல்வம் மேலீட்டால் செருக்குண்ட குத்திர = வஞ்சகம் கொண்ட இராவணனார் = இராவணனனுடைய முடி =   தலைகள் அடியோடே = அடியோடு

 பிடுங்க தொட்ட சர அதிபனார் அதி

ப்ரியம் கொள் தக்க நல் மா மருகா இயல்

ப்ரபஞ்சத்துக்கு ஒரு பாவலனார் என விருது ஊதும்

பிடுங்க =பிடுங்கப்படும்படிதொட்ட = செலுத்திய சராதிபன் அம்பைக் கொண்ட மேலோனாகிய இராமன். அதி அதிக ப்ரயம் கொள் தக்க அன்பு கொள்ளத் தக்க   நல்   = நல்ல மா சிறந்த மருகா = மருகனே இயல் = இயற்றமிழ் ஆதிய முத்தமிழ் வழங்கும்   ப்ரபஞ்சத்துக்கு = உலகத்துக்கு ஒரு ஒப்பற்ற பாவலன் = கவி அரசன் என என்று விருது ஊதும் = வெற்றிச் சின்னங்கள் ஊதும்.

 ப்ரசண்ட சொல் சிவ வேத  சிகாமணி

ப்ரபந்தத்துக்கு ஒரு நாத சதாசிவ

பெரும்பற்றப் புலியூர் தனில் மேவிய பெருமாளே.

 ப்ரசண்ட = வீரம்வாய்ந்த சொல் = பதிகங்களை ஓதிய சிவ வேத சிகாமணி = சிவ வேத சிகாமணியாகிய ஞான சம்பந்த மூர்த்தியே ப்ரபந்தத்துக்கு ஒரு நூல் வகைகளுக்கெல்லாம் ஒரு நாத = ஒப்பற்ற தலைவனே சதாசிவ = என்றும்

மங்களமானவனே பெரும்பற்றப் புலியூர் தனில் மேவிய பெருமாளே = சிதம்பரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே!

( வியாக்கிரபாதர் பெரும் பற்று வைத்துச் சிவநடனத்தைத் தரிசிக்கத் தவஞ்செய்த

திருத்தலம் சிதம்பரம்)

 சுருக்க உரை

 கரு மணல் போல் கறுத்த கூந்தலை உடைய விலைமாதர்களின் கண்களால் கவரப்பட்டுவிரும்பி அடையும் போகப் பொருள்களும்புகழத் தக்க அறிவும் பெருமையும் முழுப் பொய்யாகியமன் வசத்தே அடங்கி, என் உயிர் பிரிந்துநான் இறக்கும் நாளில்என் உடல் விறகுக் கட்டைகளுக்கு உணவாகும் நாளில்சுற்றத்தார் அலறசுடு காட்டுக்குப் போவதற்கு முன்னம்என் மனம் உன்னோடு ஒருமைப்பட்டு நற்கதி அடையும் பலனைப் பெறவாவதுஅல்லது இவ்வுலகில் இருக்கும் போதே நான் நல்ல அறிவைப் பெறவாவது,இந்த இரண்டில் எனக்குத் தகுந்தது எது என்று நீயே முடிவு செய்துஅதை எனக்குக் கொடுக்க இசைந்தருளுக.

 கொடுமைக்கு இடமான ஏழு மராமரங்களுடன்சுக்ரீவன் நடுங்கஅவனோடு போர் செய்த வாலியாகிய குரங்கை அழித்துகடல் தூள் படஅரக்கர்கள் அலறஇலங்கை நகரம் தீப்புகவஞ்சகம் கொண்ட இராவணன் தலைகள் அடியோடு பிடுங்கப்படும்படி அம்பைச் செலுத்திய இராமபிரான் விரும்பும் மருகனே!. முத்தமிழ் வழங்கும் உலகத்தில் கவி அரசன் என்ற வெற்றி சின்னங்கள் ஊதும் வீரம் வாய்ந்த சம்பந்த மூர்த்தியே!. நூல் வகைகளுக்கெல்லாம் தலைவனே! தில்லையில் வீற்றிருக்கும் பெருமாளே!. எனக்குத் தகுந்த வரத்தை நீயே முடிவு செய்து தந்தருளுக.


விளக்கக் குறிப்புகள்

 மராமரம் ஏழுடன் நடுங்கச் சுக்ரீவன்....

   இவை கிட்கிந்தைக்கு அருகில் இருந்த ஏழு ஆச்சா மரங்கள். இவற்றை   இராமர் ஒரு பாணத்தால் பிளந்தார்.

 எழுவகை மராமரமு நிகரொன்றுமில்

   வலிய திறல் வாலி யுரமும் நெடுங்கட லலையேழும்.

.                  ..திருப்புகழ்விடமும்வடி

 

மராமரம் ஏழும் எய்த வலத்தினான் ...பெரிய திருமொழி    

 

வாலியைக் கொன்று அரசி இளைய வானரத்துக் களித்தவனே                      ...பெருமாள்   திருமொழி

 

ப்ரபந்தத்துக்கு ஒரு நாத.....

அணைந்த மாமறை முதல் கலை அகிலமும் ஓதாது உணர்ந்த முத்தமிழ் விரகன் வந்தான் என ஊத

    ...பெரிய புராணம், திருஞான சம்பந்தர்.

 

அருணகிரி நாதர் வரம் கேட்கும் நயம் கவனிக்கத் தக்கது.





Thursday, 24 February 2022

485. சுடரனைய

 

485

சிதம்பரம்




 

                தனதனன தனதான தனதனன தனதான

                    தனதனன தனதான                 தனதான

 

சுடரனைய திருமேனி யுடையழகு முதுஞான

     சொருப கிரி யிடமேவு                          முகமாறும்

சுரர்தெரிய லளிபாட மழலைகதி நறைபாய

     துகிரிதழின் மொழிவேத                        மணம்வீச

அடர்பவள வொளிபாய அரியபரி புரமாட

     அயில்கரமொ டெழில்தோகை                மயிலேறி

அடியனிரு வினைநீறு படஅமர ரிதுபூரை

     அதிசயமெ னருள்பாட                       வரவேணும்

விடைபரவி அயன்மாலொ டமரர்முநி கணமோட

     மிடறடைய விடம்வாரி                       யருள்நாதன்

மினலனைய இடைமாது இடமருவு குருநாதன்

      மிகமகிழ அநுபூதி                         யருள்வோனே

இடர்கலிகள் பிணியோட எனையுமருள் குறமாதி

     னிணையிளநிர் முலைமார்பி           னணைமார்பா

இனியமுது புலிபாத னுடனரவு சதகோடி

     யிருடியர்கள் புகழ்ஞான                  பெருமாளே

 

பதம் பிரித்து உரை

 

 

சுடர் அனைய திருமேனி உடை அழகு முது ஞான

சொருப கிரீடம் மேவும் முகம் ஆறும்

 

சுடர் அனைய திருமேனியுடை = (காலைக்) கதிர் போன்ற உடலின் அழகும் = அழகும் முது ஞான சொருப = முற்றின ஞானத்தின் திருவுருவமும்  கிரீடம் மேவும் = மகுடம் பொருந்திய முகம் ஆறும் = ஆறு முகங்களும்

 

சுரர் தெரியல் அளி பாட மழலை கதி நறை பாய

துகிர் இதழின் மொழி வேத மணம் வீச

 

சுரர் = தேவர்கள் (சூட்டிய) தெரியல் = மாலைகளிலிருக்கும் அளி பாட = வண்டுகள் பாட மழலைகதி = (அதனால் அம்மாலைகளிலிருந்து) மெதுவான வகையில் நறை பாய = துளித் துளியாகத் தேன் பாய துகிர் இதழின் = பவளம் போன்ற

வாயிதழிலிருந்து சொல்லப்படும் மொழி வேத = வேத மொழிகளின் மணம் வீச = நறு மணம் வீச

 

அடர் பவள ஒளி பாய அரிய பரிபுரம் ஆட

அயில் கரமொடு எழில் தோகை மயில் ஏறி

 

அடர் பவள ஒளி பாய = அடர்ந்த பவள நிறத்தின் ஒளி பாய அரிய = அருமையான பரிபுரம் ஆட = கால் சிலம்பு ஒலிக்க அயில் கரமொடு = வேல் ஏந்திய திருக் கரத்தோடு எழில் தோகை மயில் ஏறி = அழகிய கலாபம் உள்ள மயிலின் மீது ஏறி

 

அடியன் இரு வினை நீறுபட அமரர் இது புரை

அதிசயம் என அருள் பாட வரவேணும்

 

அடியன் = அடியேனுடைய இரு வினை நீறுபட = அடியேனாகிய என் இரண்டு வினைகளும் பொடிபட்டு அழிய அமரர் = (அதைக் கண்டு) தேவர்கள் இது பூரை அதிசயம் என = (இவன் ஒன்றுக்கும் உதவாதவன் கடவுள் இவனுக்கு அருள் செய்வது) என்ன ஆச்சரியம் என அருள் பாட = (உனது) திருவருளைக் கொண்டாடிப் பாட வர வேணும் = நீ எழுந்தருளி என் முன் வர வேண்டும்

 

விடை பரவி அயன் மாலொடு அமரர் முநி கணம் ஓட

மிடறு அடைய விடம் வாரி அருள் நாதன்

 

விடை பரவி = நந்தி எம்பெருமானைப் போற்றி வணங்கி அயன் மாலொடு = பிரமன், திருமாலுடன் அமரர் முநி கணம் = தேவர்களும் முனிவர் கூட்டங்களும் ஓட = ஓடி வந்து தம்மிடம் சரணம் புக மிடறு அடைய = தமது நெஞ்சிடையே பொருந்தி நிற்கும்படி விடம் வாரி அருள் நாதன் = விடத்தை வாரி உண்டு (சரணம் அடைந்தவர்களுக்கு) அருள் புரிந்த தலைவன்

 

மி(ன்)னல் அனைய இடை மாது இடம் மருவு குரு நாதன்

மிக மகிழ அநுபூதி அருள்வோனே

மி(ன்)னல் அனைய இடை மாது = மின்னல் போன்ற

இடையை உடைய பார்வதியை இடம் மருவு குரு நாதன் = (தனது) இடப்பாகத்தில் பொருந்தி உள்ள குரு மூர்த்தியாகிய சிவபெருமான் மிக மகிழ = மிகவும் மகிழ அநுபூதி அருள்வோனே = அவருக்கு ஞான உபதேசத்தை அருளியவனே

 

இடர் கலிகள் பிணி ஓட எனையும் அருள் குற மாதின்

இணை இளநீர் முலை மார்பில் அணை மார்பா

 

இடர் கலிகள் = துன்பங்களும், வறுமையும் பிணி ஓட = நோய்களும் விலக எனையும் அருள் = என்னையும் ஒரு பொருளாகக் கருதி அருளியவனே குற மாதின் = குறப் பெண் வள்ளியின் இணை இள நீர் முலை மார்பில் = இரண்டு இள நீர் போன்ற கொங்கைகள் அமைந்த மார்பில் அணை மார்பா = அணையும் மார்பனே

 

இனிய முது புலி பாதன் உடன் அரவு சதகோடி

இருடியர்கள் புகழ் ஞான பெருமாளே

 

இனிய = இன்ப நிலையில் முது புலி பாதன் உடன் = பழைய முனிவரான வியாக்ரபாதருடன் அரவு = பாம்பு உருவமுள்ள (பதஞ்சலி முனிவரும்) சத கோடி = நூறு கோடி இருடியர்கள் = முனிவர்களும் புகழ் = புகழும் ஞான பெருமாளே = ஞான மூர்த்தியாகிய பெருமாளே 

சுருக்க உரை 

ஒளி வீசும் திரு மேனியின் அழகும், முதிர்ந்த ஞான வடிவும், ஆறு திருமுகங்களும் விளங்க, பவள வாயினின்று சொல்லப்படும் வேத மொழி மணம் வீச, காலில் சிலம்புகள் ஒலிக்க, தோகை மயிலின் மீது ஏறி, அடியேனுடைய இரு

வினைகளும் பொடிபட, தேவர்கள் ஒன்றுமில்லாதவனுக்கு இறைவன் திருவருள் செய்தது ஆச்சரியம் என்று சொல்லும்படி, உன் திருவருளைக் கொண்டாட, நீ என் முன் எழுந்தருளி வரவேண்டும்

 

நந்தி பகவானை வணங்கி, பிரமன், திருமால், தேவர்கள், முனிவர் கூட்டங்கள் ஓடி வந்து சரணம் புக, நந்தி அளித்த விடையைப் பெற்றுதம் நெஞ்சில் விடம் அடைந்து

நிற்கும்படி, அதை உண்டு, சரண் புகுந்தவர்களுக்கு அருள் புரிந்த சிவபெருமானுக்கு, அவருடைய இடப் பாகத்தில் உள்ள உமை மகிழும்படி, ஞான உபதேசத்தை அருளியவனே !  எனது துன்பங்கள், வறுமை, நோய் எல்லாம் விலக எனக்கு

அருளியவனே ! வள்ளியின் கொங்கைகளை  அணைந்தவனே ! பழைய முனிவரான வியாக்ரபாதருடன், பதஞ்சலியும் புகழ்கின்ற ஞான மூர்த்தியாகிய பெருமாளே ! என் முன்னே வர வேண்டுகிறேன்


விளக்கக் குறிப்புகள்

  பூரை = ஒன்றும் இல்லாதவன் திருமாது = பார்வதி

 முது புலிபாதரு டனரவு சத கோடி

 தில்லையில் முதலில் தவம் செய்தவர் வியாக்கிரபாதர் பின்பு தான் பதஞ்சலி வந்து   அவருடன் கூடினார்

rev 30-5-2022


பாடலை கேட்க