493
சிதம்பரம்
தனந்தத் தத்தன தானன தானன
தனந்தத் தத்தன தானன தானன
தனந்தத் தத்தன தானன தானன தனதான
விடுங்கைக் கொத்தக டாவுடை யானிட
மடங்கைக்
கைச்சிறை யானஅ நேகமும்
விழுங்கப்
பட்டற வேயற
லோதியர் விழியாலே
விரும்பத் தக்கன போகமு மோகமும்
விளம்பத்
தக்கன ஞானமு மானமும்
வெறுஞ்சுத்
தச்சல மாய்வெளி யாயுயிர் விடுநாளில்
இடுங்கட் டைக்கிரை யாயடி
யேனுடல்
கிடந்திட்
டுத்தம ரானவர் கோவென
இடங்கட்
டிச்சுடு காடுபு காமுன மனதாலே
இறந்திட் டுப்பெற வேகதி
யாயினும்
இருந்திட்
டுப்பெற வேமதி யாயினும்
இரண்டிற்
றக்கதொ ரூதியம் நீதர இசைவாயே
கொடுங்கைப் பட்டம ராமர மேழுடன்
நடுங்கச்
சுக்ரிவ னோடம ராடிய
குரங்கைச்
செற்றும கோததி தூளெழ நிருதேசன்
குலங்கட் பட்டநி சாசரர் கோவென
இலங்கைக்
குட்டழ லோனெழ நீடிய
குமண்டைக்
குத்திர ராவண னார்முடி அடியோடே
பிடுங்கத் தொட்டச ராதிப னாரதி
ப்ரியங்கொட்
டக்கநன் மாமரு காஇயல்
ப்ரபஞ்சத்
துக்கொரு பாவல னாரென விருதூதும்
ப்ரசண்டச் சொற்சிவ வேதசி காமணி
ப்ரபந்தத்
துக்கொரு நாதச தாசிவ
பெரும்பற்
றப்புலி யூர்தனில் மேவிய பெருமாளே.
பதம் பிரித்து உரை
விடுங்கைக்கு ஒத்த கடா உடையான் இடம்
அடங்கி கை சிறையான அநேகமும்
விழுங்கப்பட்டு அறவே அறல் ஓதியர் விழியாலே
விடுங்கைக்கு ஒத்த = ஏறி நடத்துவதற்கு ஏற்ற. கடா = எருமைக் கடாவை உடையான் இடம் = உடைய யமன் வசத்தே அடங்கி = அடங்கி. கைச்சிறையான = கை வசத்திலிருந்த அநேகமும் = பல பொருள்களும் அறல் = கருமணலைப் போல் கரு நிறம் கொண்ட ஓதியர் = கூந்தலை உடைய விலை மாதர்களின் விழியாலே = கண்களால் விழுங்கப்பட்டடு = கவரப்பட்டு
விரும்ப தக்கன போகமும் மோகமும்
விளம்ப தக்கன ஞானமும் மானமும்
வெறும் சுத்த சலமாய் வெளியாய் உயிர் விடும் நாளில்
விரும்பத் தக்கன = விரும்பி அடையத் தக்கனவான போகமும் = சுக போகங்களும் மோகமும் = ஆசைகளும் விளம்பத் தக்கன வெளியாய் விடு = ஆவி வெளிப்பட்டுப் போகின்ற. நாளில் = அந்த நாளில்.
இடும் கட்டைக்கு இரையாய் அடியேன் உடல்
கிடந்திட்டு தமர் ஆனவர் கோ என
இடம் கட்டி சுடு காடு புகா முனம் மனதாலே
அடியேன் = அடியேனுடைய உடல் = இவ்வுடல் இடும் கட்டைக்கு = (சுடு காட்டில்) அடுக்கப்படும் விறகு கட்டைகளுக்கு இரையாய் = உணவாகி கிடந்திட்டு = கிடக்கும் போது தமர்ஆனவர் = சுற்றத்தார்கள் கோ என = கோ என்று கதற இடம் கட்டி = கிடக்கும் இடத்தில் (பாடையில்) கட்டி சுடு காடு புகா முனம் = சுடு காட்டுக்குப் போவதற்கு முன்னே மனதாலே = என் மனம்.
இறந்திட்டு பெறவே கதியாயினும்
இருந்திட்டு பெறவே மதியாயினும்
இரண்டில் தக்கது ஒரு ஊதியம் நீ தர இசைவாயே
இறந்திட்டு =(உன்னுடன் இரண்டறக்) கலந்திட்டு கதியாயினும் பெறவே = நற்கதி அடையும் பலனைப் பெறவாவது இருந்திட்டு = (அல்லது) இந்த உலகில் இருக்கும் போதே மதியாயினும் பெறவே= அறிவைப் பெறவாவது இரண்டில் தக்கதொரு = மேற் சொன்ன இரண்டில் எனக்குத் தகுந்ததான ஊதியம் = வரத்தை நீதர இசைவாயே = நீயே முடிவு செய்து அதைக் கொடுக்க இசைந்தருளுக
கொடுங்கை பட்ட மராமரம் ஏழுடன்
நடுங்க சுக்ரிவன் அவனோடு அமர் ஆடிய
குரங்கை செற்று மகா உததி தூள் எழ நிருதேசன்
கொடுங்கைப் பட்ட = கொடுமைக்கு இடமான மரா மரம் ஏழுடன் = ஏழு மராமரங்களுடன் சுக்ரீவன் நடுங்க = சுக்ரீவன் நடுங்கும்படி அவனோடு அமர் ஆடிய = அவனுடன் சண்டை செய்து குரங்கைச் செற்று = குரங்காகிய வாலியை அழித்து மகா உததி = பெரிய கடல் தூள் எழ = தூள் படும்படி நிருதேசன் = அரக்கர்தலைவனுடைய
குலம் கண் பட்ட நிசாசரர் கோ என
இலங்கைக்குள் தழலோன் எழ நீடிய
குமண்டை குத்திர ராவணனார் முடி அடியோடே
குலம் கண் பட்ட = குலத்தைச் சார்ந்த நிசாசரர் = அரக்கர்கள் எல்லாம் கோ என = கோவென அலற இலங்கைக்குள் = இலங்கை நகருள் தழலோன் = அக்கினி பகவான் எழ = எழுந்துவேலை செய்ய நீடிய = பெருத்த குமண்டை = செல்வம் மேலீட்டால் செருக்குண்ட குத்திர = வஞ்சகம் கொண்ட இராவணனார் = இராவணனனுடைய முடி = தலைகள் அடியோடே = அடியோடு
பிடுங்க தொட்ட சர அதிபனார் அதி
ப்ரியம் கொள் தக்க நல் மா மருகா இயல்
ப்ரபஞ்சத்துக்கு ஒரு பாவலனார் என விருது ஊதும்
பிடுங்க =பிடுங்கப்படும்படிதொட்ட = செலுத்திய சராதிபன் = அம்பைக் கொண்ட மேலோனாகிய இராமன். அதி = அதிக ப்ரயம் கொள் தக்க = அன்பு கொள்ளத் தக்க நல் = நல்ல மா = சிறந்த மருகா = மருகனே இயல் = இயற்றமிழ் ஆதிய முத்தமிழ் வழங்கும் ப்ரபஞ்சத்துக்கு = உலகத்துக்கு ஒரு = ஒப்பற்ற பாவலன் = கவி அரசன் என = என்று விருது ஊதும் = வெற்றிச் சின்னங்கள் ஊதும்.
ப்ரசண்ட சொல் சிவ வேத சிகாமணி
ப்ரபந்தத்துக்கு ஒரு நாத சதாசிவ
பெரும்பற்றப் புலியூர் தனில் மேவிய பெருமாளே.
ப்ரசண்ட = வீரம்வாய்ந்த சொல் = பதிகங்களை ஓதிய சிவ வேத சிகாமணி = சிவ வேத சிகாமணியாகிய ஞான சம்பந்த மூர்த்தியே ப்ரபந்தத்துக்கு ஒரு = நூல் வகைகளுக்கெல்லாம் ஒரு நாத = ஒப்பற்ற தலைவனே சதாசிவ = என்றும்
மங்களமானவனே பெரும்பற்றப் புலியூர் தனில் மேவிய பெருமாளே = சிதம்பரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே!
( வியாக்கிரபாதர் பெரும் பற்று வைத்துச் சிவநடனத்தைத் தரிசிக்கத் தவஞ்செய்த
திருத்தலம் சிதம்பரம்)
சுருக்க உரை
கரு மணல் போல் கறுத்த கூந்தலை உடைய விலைமாதர்களின் கண்களால் கவரப்பட்டு, விரும்பி அடையும் போகப் பொருள்களும், புகழத் தக்க அறிவும் பெருமையும் முழுப் பொய்யாகி, யமன் வசத்தே அடங்கி, என் உயிர் பிரிந்து, நான் இறக்கும் நாளில், என் உடல் விறகுக் கட்டைகளுக்கு உணவாகும் நாளில், சுற்றத்தார் அலற, சுடு காட்டுக்குப் போவதற்கு முன்னம், என் மனம் உன்னோடு ஒருமைப்பட்டு நற்கதி அடையும் பலனைப் பெறவாவது, அல்லது இவ்வுலகில் இருக்கும் போதே நான் நல்ல அறிவைப் பெறவாவது,இந்த இரண்டில் எனக்குத் தகுந்தது எது என்று நீயே முடிவு செய்து, அதை எனக்குக் கொடுக்க இசைந்தருளுக.
கொடுமைக்கு இடமான ஏழு மராமரங்களுடன், சுக்ரீவன் நடுங்க, அவனோடு போர் செய்த வாலியாகிய குரங்கை அழித்து, கடல் தூள் பட, அரக்கர்கள் அலற, இலங்கை நகரம் தீப்புக, வஞ்சகம் கொண்ட இராவணன் தலைகள் அடியோடு பிடுங்கப்படும்படி அம்பைச் செலுத்திய இராமபிரான் விரும்பும் மருகனே!. முத்தமிழ் வழங்கும் உலகத்தில் கவி அரசன் என்ற வெற்றி சின்னங்கள் ஊதும் வீரம் வாய்ந்த சம்பந்த மூர்த்தியே!. நூல் வகைகளுக்கெல்லாம் தலைவனே! தில்லையில் வீற்றிருக்கும் பெருமாளே!. எனக்குத் தகுந்த வரத்தை நீயே முடிவு செய்து தந்தருளுக.
விளக்கக் குறிப்புகள்
மராமரம் ஏழுடன் நடுங்கச் சுக்ரீவன்....
இவை கிட்கிந்தைக்கு அருகில் இருந்த ஏழு ஆச்சா மரங்கள். இவற்றை இராமர் ஒரு பாணத்தால் பிளந்தார்.
எழுவகை மராமரமு நிகரொன்றுமில்
வலிய திறல் வாலி யுரமும் நெடுங்கட லலையேழும்.
. ..திருப்புகழ், விடமும்வடி
மராமரம் ஏழும் எய்த வலத்தினான் ...பெரிய திருமொழி
வாலியைக் கொன்று அரசி இளைய வானரத்துக் களித்தவனே ...பெருமாள் திருமொழி
ப்ரபந்தத்துக்கு ஒரு நாத.....
அணைந்த மாமறை முதல் கலை அகிலமும் ஓதாது உணர்ந்த முத்தமிழ் விரகன் வந்தான் என ஊத
...பெரிய புராணம், திருஞான சம்பந்தர்.
அருணகிரி நாதர் வரம் கேட்கும் நயம் கவனிக்கத் தக்கது.
No comments:
Post a Comment