பின் தொடர்வோர்

Showing posts with label வரம். Show all posts
Showing posts with label வரம். Show all posts

Sunday, 13 March 2022

493 விடுங்கை

 493

சிதம்பரம்

 


          தனந்தத் தத்தன தானன தானன

             தனந்தத் தத்தன தானன தானன

             தனந்தத் தத்தன தானன தானன  தனதான

 

விடுங்கைக் கொத்தக டாவுடை யானிட

   மடங்கைக் கைச்சிறை யானஅ நேகமும்

   விழுங்கப் பட்டற வேயற லோதியர்          விழியாலே

விரும்பத் தக்கன போகமு மோகமும்

   விளம்பத் தக்கன ஞானமு மானமும்

   வெறுஞ்சுத் தச்சல மாய்வெளி யாயுயிர்   விடுநாளில்

இடுங்கட் டைக்கிரை யாயடி யேனுடல்

   கிடந்திட் டுத்தம ரானவர் கோவென

   இடங்கட் டிச்சுடு காடுபு காமுன                மனதாலே

இறந்திட் டுப்பெற வேகதி யாயினும்

   இருந்திட் டுப்பெற வேமதி யாயினும்

   இரண்டிற் றக்கதொ ரூதியம் நீதர          இசைவாயே

கொடுங்கைப் பட்டம ராமர மேழுடன்

   நடுங்கச் சுக்ரிவ னோடம ராடிய

   குரங்கைச் செற்றும கோததி தூளெழ      நிருதேசன்

குலங்கட் பட்டநி சாசரர் கோவென

   இலங்கைக் குட்டழ லோனெழ நீடிய

   குமண்டைக் குத்திர ராவண னார்முடி      அடியோடே

பிடுங்கத் தொட்டச ராதிப னாரதி

   ப்ரியங்கொட் டக்கநன் மாமரு காஇயல்

   ப்ரபஞ்சத் துக்கொரு பாவல னாரென      விருதூதும்

ப்ரசண்டச் சொற்சிவ வேதசி காமணி

   ப்ரபந்தத் துக்கொரு நாதச தாசிவ

   பெரும்பற் றப்புலி யூர்தனில் மேவிய     பெருமாளே.

 

   பதம் பிரித்து உரை

  

விடுங்கைக்கு ஒத்த கடா உடையான் இடம்

அடங்கி கை சிறையான அநேகமும்

விழுங்கப்பட்டு அறவே அறல் ஓதியர் விழியாலே

விடுங்கைக்கு ஒத்த = ஏறி நடத்துவதற்கு ஏற்ற. கடா = எருமைக் கடாவை உடையான் இடம் = உடைய யமன் வசத்தே    அடங்கி = அடங்கி. கைச்சிறையான = கை வசத்திலிருந்த அநேகமும் = பல     பொருள்களும் அறல் = கருமணலைப் போல் கரு நிறம் கொண்ட ஓதியர் = கூந்தலை உடைய விலை மாதர்களின்   விழியாலே = கண்களால் விழுங்கப்பட்டடு = கவரப்பட்டு

 விரும்ப தக்கன போகமும் மோகமும்

விளம்ப தக்கன ஞானமும் மானமும்

வெறும் சுத்த சலமாய் வெளியாய் உயிர் விடும் நாளில்

விரும்பத் தக்கன = விரும்பி அடையத் தக்கனவான போகமும் = சுக போகங்களும் மோகமும் = ஆசைகளும்   விளம்பத் தக்கன வெளியாய் விடு = ஆவி வெளிப்பட்டுப் போகின்ற. நாளில் = அந்த நாளில்.

 இடும் கட்டைக்கு இரையாய் அடியேன் உடல்

கிடந்திட்டு தமர் ஆனவர் கோ என

இடம் கட்டி சுடு காடு புகா முனம் மனதாலே

அடியேன் = அடியேனுடைய உடல் = இவ்வுடல் இடும் கட்டைக்கு = (சுடு காட்டில்) அடுக்கப்படும் விறகு கட்டைகளுக்கு  இரையாய் = உணவாகி கிடந்திட்டு = கிடக்கும் போது தமர்ஆனவர்    = சுற்றத்தார்கள் கோ என = கோ என்று கதற இடம் கட்டி = கிடக்கும் இடத்தில் (பாடையில்) கட்டி சுடு காடு புகா முனம் = சுடு காட்டுக்குப் போவதற்கு முன்னே மனதாலே = என் மனம்.

 இறந்திட்டு பெறவே கதியாயினும்

இருந்திட்டு பெறவே மதியாயினும்

இரண்டில் தக்கது ஒரு ஊதியம் நீ தர இசைவாயே

இறந்திட்டு =(உன்னுடன் இரண்டறக்)     கலந்திட்டு கதியாயினும் பெறவே = நற்கதி அடையும் பலனைப் பெறவாவது   இருந்திட்டு = (அல்லது) இந்த உலகில் இருக்கும் போதே மதியாயினும் பெறவே= அறிவைப் பெறவாவது இரண்டில் தக்கதொரு = மேற் சொன்ன இரண்டில் எனக்குத் தகுந்ததான ஊதியம்    = வரத்தை நீதர இசைவாயே = நீயே முடிவு செய்து அதைக் கொடுக்க இசைந்தருளுக

கொடுங்கை பட்ட மராமரம் ஏழுடன்

நடுங்க சுக்ரிவன் அவனோடு அமர் ஆடிய

குரங்கை செற்று மகா உததி தூள் எழ நிருதேசன்

கொடுங்கைப் பட்ட = கொடுமைக்கு இடமான மரா மரம் ஏழுடன் =    ஏழு மராமரங்களுடன் சுக்ரீவன் நடுங்க = சுக்ரீவன் நடுங்கும்படி அவனோடு  அமர் ஆடிய =   அவனுடன்  சண்டை  செய்து   குரங்கைச் செற்று = குரங்காகிய வாலியை அழித்து மகா உததி = பெரிய கடல் தூள் எழ = தூள் படும்படி நிருதேசன்   =  அரக்கர்தலைவனுடைய

குலம் கண் பட்ட நிசாசரர் கோ என

இலங்கைக்குள் தழலோன் எழ நீடிய

குமண்டை குத்திர ராவணனார் முடி அடியோடே

குலம் கண் பட்ட = குலத்தைச் சார்ந்த நிசாசரர் = அரக்கர்கள் எல்லாம் கோ என = கோவென அலற   இலங்கைக்குள் = இலங்கை நகருள்   தழலோன் = அக்கினி பகவான்   எழ =   எழுந்துவேலை செய்ய   நீடிய =   பெருத்த குமண்டை = செல்வம் மேலீட்டால் செருக்குண்ட குத்திர = வஞ்சகம் கொண்ட இராவணனார் = இராவணனனுடைய முடி =   தலைகள் அடியோடே = அடியோடு

 பிடுங்க தொட்ட சர அதிபனார் அதி

ப்ரியம் கொள் தக்க நல் மா மருகா இயல்

ப்ரபஞ்சத்துக்கு ஒரு பாவலனார் என விருது ஊதும்

பிடுங்க =பிடுங்கப்படும்படிதொட்ட = செலுத்திய சராதிபன் = அம்பைக் கொண்ட மேலோனாகிய இராமன். அதி = அதிக ப்ரயம் கொள் தக்க = அன்பு கொள்ளத் தக்க   நல்   = நல்ல மா = சிறந்த மருகா = மருகனே இயல் = இயற்றமிழ் ஆதிய முத்தமிழ் வழங்கும்   ப்ரபஞ்சத்துக்கு = உலகத்துக்கு ஒரு = ஒப்பற்ற பாவலன் = கவி அரசன் என = என்று விருது ஊதும் = வெற்றிச் சின்னங்கள் ஊதும்.

 ப்ரசண்ட சொல் சிவ வேத  சிகாமணி

ப்ரபந்தத்துக்கு ஒரு நாத சதாசிவ

பெரும்பற்றப் புலியூர் தனில் மேவிய பெருமாளே.

 ப்ரசண்ட = வீரம்வாய்ந்த சொல் = பதிகங்களை ஓதிய சிவ வேத சிகாமணி = சிவ வேத சிகாமணியாகிய ஞான சம்பந்த மூர்த்தியே ப்ரபந்தத்துக்கு ஒரு = நூல் வகைகளுக்கெல்லாம் ஒரு நாத = ஒப்பற்ற தலைவனே சதாசிவ = என்றும்

மங்களமானவனே பெரும்பற்றப் புலியூர் தனில் மேவிய பெருமாளே = சிதம்பரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே!

( வியாக்கிரபாதர் பெரும் பற்று வைத்துச் சிவநடனத்தைத் தரிசிக்கத் தவஞ்செய்த

திருத்தலம் சிதம்பரம்)

 சுருக்க உரை

 கரு மணல் போல் கறுத்த கூந்தலை உடைய விலைமாதர்களின் கண்களால் கவரப்பட்டு, விரும்பி அடையும் போகப் பொருள்களும், புகழத் தக்க அறிவும் பெருமையும் முழுப் பொய்யாகி, யமன் வசத்தே அடங்கி, என் உயிர் பிரிந்து, நான் இறக்கும் நாளில், என் உடல் விறகுக் கட்டைகளுக்கு உணவாகும் நாளில், சுற்றத்தார் அலற, சுடு காட்டுக்குப் போவதற்கு முன்னம், என் மனம் உன்னோடு ஒருமைப்பட்டு நற்கதி அடையும் பலனைப் பெறவாவது, அல்லது இவ்வுலகில் இருக்கும் போதே நான் நல்ல அறிவைப் பெறவாவது,இந்த இரண்டில் எனக்குத் தகுந்தது எது என்று நீயே முடிவு செய்து, அதை எனக்குக் கொடுக்க இசைந்தருளுக.

 கொடுமைக்கு இடமான ஏழு மராமரங்களுடன், சுக்ரீவன் நடுங்க, அவனோடு போர் செய்த வாலியாகிய குரங்கை அழித்து, கடல் தூள் பட, அரக்கர்கள் அலற, இலங்கை நகரம் தீப்புக, வஞ்சகம் கொண்ட இராவணன் தலைகள் அடியோடு பிடுங்கப்படும்படி அம்பைச் செலுத்திய இராமபிரான் விரும்பும் மருகனே!. முத்தமிழ் வழங்கும் உலகத்தில் கவி அரசன் என்ற வெற்றி சின்னங்கள் ஊதும் வீரம் வாய்ந்த சம்பந்த மூர்த்தியே!. நூல் வகைகளுக்கெல்லாம் தலைவனே! தில்லையில் வீற்றிருக்கும் பெருமாளே!. எனக்குத் தகுந்த வரத்தை நீயே முடிவு செய்து தந்தருளுக.


விளக்கக் குறிப்புகள்

 மராமரம் ஏழுடன் நடுங்கச் சுக்ரீவன்....

   இவை கிட்கிந்தைக்கு அருகில் இருந்த ஏழு ஆச்சா மரங்கள். இவற்றை   இராமர் ஒரு பாணத்தால் பிளந்தார்.

 எழுவகை மராமரமு நிகரொன்றுமில்

   வலிய திறல் வாலி யுரமும் நெடுங்கட லலையேழும்.

.                  ..திருப்புகழ், விடமும்வடி

 

மராமரம் ஏழும் எய்த வலத்தினான் ...பெரிய திருமொழி    

 

வாலியைக் கொன்று அரசி இளைய வானரத்துக் களித்தவனே                      ...பெருமாள்   திருமொழி

 

ப்ரபந்தத்துக்கு ஒரு நாத.....

அணைந்த மாமறை முதல் கலை அகிலமும் ஓதாது உணர்ந்த முத்தமிழ் விரகன் வந்தான் என ஊத

    ...பெரிய புராணம், திருஞான சம்பந்தர்.

 

அருணகிரி நாதர் வரம் கேட்கும் நயம் கவனிக்கத் தக்கது.





Sunday, 6 June 2021

451.இருவர் மயலோ

 


451

திருவருணை

இடர் தீர்க்கும் திருப்புகழ்

                

    தனன தனனா தனன தனனா

     தனன தனனா                 தனதான

 

இருவர் மயலோ அமளி விதமோ

    எனென செயலோ                               அணுகாத

இருடி அயன்மா லமர ரடியா

    ரிசையு மொலிதா                            னிவைகேளா

தொருவ னடியே னலறு மொழிதா

    னொருவர் பரிவாய்                          மொழிவாரோ

உனது பததூள் புவன கிரிதா

    னுனது கிருபா                                    கரமேதோ

பரம குருவா யணுவி லசைவாய்

    பவன முதலா                                       கியபூதப்

படையு முடையாய் சகல வடிவாய்

    பழைய வடிவா                                    கியவேலா

அரியு மயனோ டபய மெனவே

    அயிலை யிருள்மேல்                        விடுவோனே

அடிமை கொடுநோய் பொடிகள் படவே

    அருண கிரிவாழ்                               பெருமாளே


  பதம் பிரித்து உரை

இருவர் மயலோ அமளி விதமோ

என் என செயலோ அணுகாத

இருவர் மயலோ - தெய்வயானை, வள்ளி ஆகிய இருவர் மீது கொண்ட ஆசையாலோ? அமளி விதமோ - வேறு உனது திருக் கோயிலில் நடக்கும் ஆரவாரங்களோ? என் என செயலோ - என்ன என்ன காரணமோ? (அடியேனுக்குத் தெரியாது) அணுகாதே - உன்னை அணுக முடியாதவர்களாகிய

இருடி அயன் மால் அமரர் அடியார்

இசையும் ஒலி தான் இவை கேளாது

இருடி - முனிவர்கள் அயன் - பிரமன் மால் - திருமால் அமரர் - தேவர்கள் அடியார் - அடியவர்கள்  இசையும் ஒலி தான் இவை கேளாது – இரைச்சலிடுகின்ற பேரொலியால் ( அடியேன் அழைக்கும் ஒலி கேட்காது

ஒருவன் அடியேன் அலறும் மொழி தான்

ஒருவர் பரிவாய் மொழிவாரோ

ஒருவன் அடியேன் - தன்னந்தனியனாய் (இங்கு) நான் அலறு மொழி தான் - இங்கு முறையிட்டு அலறும் மொழிகள்

ஒருவர் - யாரேனும் ஒருவர் பரிவாய் – அன்புடன் மொழிவாரோ - (உன்னிடம்) வந்து தெரிவிப்பார்களா?

உனது பத தூள் புவன கிரி தான்

உனது கிருபாகரம் ஏதோ

உனது பத தூள் - உன்னுடைய திருவடித் தூசு புவன - பூமியில் உள்ள கிரி தான் - மலைகள் ஆகும் உனது கிருபாகரம் ஏதோ [ கிருபை ஆகரம்]- உனது திருவருள் தன்மை எத்தகையதோ?

பரம குருவாய் அணுவில் அசைவாய்

பவன முதல் ஆகிய பூத

பரம - மேலான குருவாய் – குரு மூர்த்தியாய் அணுவில் அசைவாய் - அணுவிலும் அசைவு காட்டுபவனாய் பவனம் - வாயு முதலான பூதம் - ஐம்பூதங்களாகிய

படையும் உடையாய் சகல வடிவாய்

பழைய வடிவாகிய வேலா

படையும் உடையாய் - சேனைகளையும் உடையவனே சகல வடிவாய் பழைய வடிவாகிய - பழமை முதல் புதுமை வரை உள்ள சகல வடிவமும் ஆய்

வேலா - வேலனே

அரியும் அயனோடு அபயம் எனவே

அயிலை இருள் மேல் விடுவோனே

அரியும் அயனோடு - திருமாலும், பிரமனும் அபயம் எனவே - அடைக்கலம் என்று உன்னிடம் ஓலமிட அயிலை - வேலாயுதத்தை இருள் மேல் விடுவேனே - இருள் வடிவம் எடுத்த அசுரன் மீது செலுத்தியவனே

அடிமை கொடு நோய் பொடிகள் படவே

அருண கிரி வாழ் பெருமாளே

அடிமை கொடு நோய் - அடியேன் பட்ட பொல்லா நோய் பொடிகள் படவே - பொடிபட்டுத் தூளாகுமாறு (அருளி) அருணகிரி வாழ் பெருமாளே – திரு வண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே

சுருக்க உரை

 

என்ன காரணத்தாலோ, முனிவர்கள், பிரமன், திருமால், அடியவர்கள் ஆகிய அனைவரும் முறையிட்டு அலறும் ஒலிகள் உன் செவிகளில் விழவில்லை. அங்ஙனம் இருக்க அடியேன் தன்னந்தனியாக முறையிடம் மொழிகளை யாரேனும் அன்புடன் உன்னிடம் வந்து  தெரிவிக்கமாட்டார்களா? உன்னுடைய விஸ்வருபத்தில் திருபாதத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் தூசு, பூமியில் உள்ள மலைகள் ஆகும். ஆதலின் பெரியோனே! உனது திருவருள் எத்தகையதோ, அறியேன். மேலான குரு மூர்த்தியாகி, அணுவில் இயங்கும் இயக்கமாய் இருப்பவ்னே! ஐம்பூதங்களுக்கும் அதிபதியே பழமை முதல் புதுமை வரை உள்ள சகல வடிவமும் ஆக அமைந்த வேலனே! சூரன் மீது வேலைச் செலுத்தி அவனை அழித்தவனே! அடியேன் படும் பொல்லா நோயைத் தூளாகுமாறு அருள வேண்டும். உனது திரு அருள் ஏதோ?

 இந்தத் திருப்புகழ் மிகவும் உருக்கமானது.கருங்கல் மனத்தையும் கரைந்து உருகச் செய்யும். சுவாமிகள் உருகி உருகி ஒவ்வொரு சொல்லும் உணர்ச்சி மயமாய் ஓதுதற்கு இனிமையாய் பாடியருளுகின்றனர். இப் பாடலை சற்று அமைதியாக ஒருமுறை பாடினால் உரைகுழறி, கண்களில் தொடுமணல் கேணியில் ஊற்றுப் போல் விழி அருவி பெருகி, உள்ளம் நெகிழ்ந்து, ஒருமை உறுதல் கண்கூடு. அன்பர்கள் இவ்வரிய திருப்புகழை மனப்பாடம் செய்துகொண்டு நாள்தோறும் முருகவேளிடம் முறையிட்டு வரின், அப் பரமபதியின் கருணை வெள்ளம் பொங்கி வருதல் ஒருதலை.- வாரியார் ஸ்வாமிகள்

ஒப்புக

அணுகாத இருடி அயன்மால் அமரர் அடியார் ---

அரியசமயம் ஒருகோடி, அமரர் சரணர் சதகோடி,

அரியும் அயனும், இவர்கூடி

அறியஅறிய அறியாத அடிகள் அறிய, அடியேனும்

அறிவுள் அறியும் அறிவு ஊற    அருள்வாயே

                                                               --- (சுருதிமறைகள்)

அமரர் அடியார் இசையும் ஒலி ….

 

குமர குருபர முருக சரவண

குகஷண் முககரி  பிறகான

குழக சிவசுத சிவய நமஎன

குருவன் அருள்குரு     மணியேஎன்று

அமுத இமையவர் திமிர்தம் இடுகடல்

அதென அநுதினம்          உனையோதும்

அமலை அடியவர் கொடிய வினைகொடும்

அபயம் இடுகுரல்     அறியாயோ.     

---குமர குருபர  திருப்புகழ்.

 அணுவில் அணுவாய் ---

 அணுவிலும் அணுவாய் பெரிதினும் பெரிதாய் உள்ள பரம ஆன்மா இந்தச் செந்துவினது இருதய குகையில் உளது.  தன்னுடைய மகிமைக்கு ஏதுவாய் உள்ள அதனைக் கன்ம நீக்கம் உள்ளோன் தனக்கு ஆதாரமான ஈசனது பிரகாசத்தினால் சோகமில்லாதவனாய்க் காண்கின்றான்

 சகல வடிவாய் ---

எல்லா வடிவங்களாக விளங்குபவர் முருகப் பெருமானே. பிரம தேவராக நின்று ஆக்கல் தொழில் புரிபவரும் அவரே.  திருமாலாக நின்று அளித்தல் தொழில் புரிபவரும் அவரே.  உருத்திரமூர்த்தியாக நின்று அழித்தல் தொழில் புரிபவரும் அவரே.

 பழைய வடிவாகிய வேலா ---

 தேவர்கள் சூரபன்மன் கொடுமைக்கு ஆற்றாது சிவபெருமானை வேண்டி குறையிரந்து நின்றனர். அது கேட்ட அரனார் ஆறுமுகமாகிக் காட்சி தந்து ஆறு திருமுகங்கள் தோறும் உள்ள நெற்றிக் கண்களில் இருந்து அருட்பெருஞ் ஜோதிப் பொறிகளை வெளிப்படுத்தினார்.  எனவே, சிவமூர்த்தியின் பழைய வடிவு ஆறுமுக வடிவு. – வாரியார் ஸ்வாமிகள்

 பரமகுரு ---

சனகாதிகளுக்குக் கல்லாலின் புடையமர்ந்து வாக்கிறந்த வான் பொருளை சொல்லாமல் சொல்லிய தென்முகப் பரமாசிரியருக்கும் "ஓம்" எனும் தனி மந்திரத்தை உபதேசித்தவர் முருகப் பெருமான். ஆதலின், பரமகுரு என்றனர்.

உனது பத தூள் புவனம்  

முருக வேள் விசுவ ரூபத்தில் அவரது உள்ளடி தான் மலைகள் யாவும் ·    -- கந்த புராணம்

·    ஆடு பாம்பு அரை ஆர்த்தது உடைஅதை, அஞ்சு பூதமும் ஆர்த்தது உடையதே -- சம்பந்தர் தேவாரம்