451
திருவருணை
இடர் தீர்க்கும் திருப்புகழ்
தனன தனனா தனன தனனா
தனன தனனா தனதான
இருவர் மயலோ அமளி விதமோ
எனென செயலோ அணுகாத
இருடி அயன்மா லமர ரடியா
ரிசையு மொலிதா னிவைகேளா
தொருவ னடியே னலறு மொழிதா
னொருவர் பரிவாய் மொழிவாரோ
உனது பததூள் புவன கிரிதா
னுனது கிருபா கரமேதோ
பரம குருவா யணுவி லசைவாய்
பவன முதலா கியபூதப்
படையு முடையாய் சகல வடிவாய்
பழைய வடிவா கியவேலா
அரியு மயனோ டபய மெனவே
அயிலை யிருள்மேல் விடுவோனே
அடிமை கொடுநோய் பொடிகள் படவே
அருண கிரிவாழ் பெருமாளே
இருவர் மயலோ அமளி விதமோ
என் என செயலோ அணுகாத
இருவர்
மயலோ - தெய்வயானை, வள்ளி ஆகிய இருவர் மீது கொண்ட ஆசையாலோ? அமளி
விதமோ - வேறு உனது திருக் கோயிலில் நடக்கும் ஆரவாரங்களோ? என்
என செயலோ - என்ன என்ன காரணமோ? (அடியேனுக்குத் தெரியாது) அணுகாதே
- உன்னை அணுக முடியாதவர்களாகிய
இருடி அயன் மால் அமரர் அடியார்
இசையும் ஒலி தான்
இவை கேளாது
இருடி
- முனிவர்கள் அயன் - பிரமன் மால்
- திருமால் அமரர்
- தேவர்கள் அடியார் - அடியவர்கள் இசையும் ஒலி
தான் இவை கேளாது – இரைச்சலிடுகின்ற
பேரொலியால் ( அடியேன் அழைக்கும்
ஒலி கேட்காது
ஒருவன் அடியேன் அலறும் மொழி தான்
ஒருவர் பரிவாய் மொழிவாரோ
ஒருவன்
அடியேன் - தன்னந்தனியனாய் (இங்கு) நான் அலறு
மொழி தான் - இங்கு முறையிட்டு அலறும்
மொழிகள்
ஒருவர்
- யாரேனும் ஒருவர் பரிவாய்
– அன்புடன் மொழிவாரோ
- (உன்னிடம்) வந்து தெரிவிப்பார்களா?
உனது பத தூள் புவன கிரி தான்
உனது கிருபாகரம் ஏதோ
உனது
பத தூள் - உன்னுடைய திருவடித் தூசு புவன
- பூமியில் உள்ள கிரி தான் - மலைகள் ஆகும் உனது
கிருபாகரம் ஏதோ [ கிருபை ஆகரம்]- உனது திருவருள் தன்மை எத்தகையதோ?
பரம குருவாய் அணுவில் அசைவாய்
பவன முதல் ஆகிய பூத
பரம
- மேலான குருவாய் – குரு
மூர்த்தியாய் அணுவில் அசைவாய் - அணுவிலும் அசைவு காட்டுபவனாய் பவனம்
- வாயு முதலான பூதம் - ஐம்பூதங்களாகிய
படையும் உடையாய் சகல வடிவாய்
பழைய வடிவாகிய வேலா
படையும்
உடையாய் - சேனைகளையும் உடையவனே சகல வடிவாய் பழைய
வடிவாகிய - பழமை முதல் புதுமை வரை
உள்ள சகல வடிவமும் ஆய்
வேலா
- வேலனே
அரியும் அயனோடு அபயம் எனவே
அயிலை இருள் மேல் விடுவோனே
அரியும்
அயனோடு - திருமாலும், பிரமனும்
அபயம் எனவே - அடைக்கலம் என்று
உன்னிடம் ஓலமிட அயிலை
- வேலாயுதத்தை இருள் மேல் விடுவேனே
- இருள் வடிவம் எடுத்த அசுரன்
மீது செலுத்தியவனே
அடிமை கொடு நோய் பொடிகள் படவே
அருண கிரி வாழ் பெருமாளே
அடிமை கொடு நோய் - அடியேன் பட்ட பொல்லா நோய் பொடிகள் படவே - பொடிபட்டுத் தூளாகுமாறு (அருளி) அருணகிரி வாழ் பெருமாளே – திரு வண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே
சுருக்க உரை
என்ன காரணத்தாலோ, முனிவர்கள், பிரமன், திருமால், அடியவர்கள் ஆகிய அனைவரும் முறையிட்டு அலறும் ஒலிகள் உன் செவிகளில் விழவில்லை. அங்ஙனம் இருக்க அடியேன் தன்னந்தனியாக முறையிடம் மொழிகளை யாரேனும் அன்புடன் உன்னிடம் வந்து தெரிவிக்கமாட்டார்களா? உன்னுடைய விஸ்வருபத்தில் திருபாதத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் தூசு, பூமியில் உள்ள மலைகள் ஆகும். ஆதலின் பெரியோனே! உனது திருவருள் எத்தகையதோ, அறியேன். மேலான குரு மூர்த்தியாகி, அணுவில் இயங்கும் இயக்கமாய் இருப்பவ்னே! ஐம்பூதங்களுக்கும் அதிபதியே பழமை முதல் புதுமை வரை உள்ள சகல வடிவமும் ஆக அமைந்த வேலனே! சூரன் மீது வேலைச் செலுத்தி அவனை அழித்தவனே! அடியேன் படும் பொல்லா நோயைத் தூளாகுமாறு அருள வேண்டும். உனது திரு அருள் ஏதோ?
இந்தத் திருப்புகழ் மிகவும் உருக்கமானது.கருங்கல் மனத்தையும் கரைந்து உருகச் செய்யும். சுவாமிகள் உருகி உருகி ஒவ்வொரு சொல்லும் உணர்ச்சி மயமாய் ஓதுதற்கு இனிமையாய் பாடியருளுகின்றனர். இப் பாடலை சற்று அமைதியாக ஒருமுறை பாடினால் உரைகுழறி, கண்களில் தொடுமணல் கேணியில் ஊற்றுப் போல் விழி அருவி பெருகி, உள்ளம் நெகிழ்ந்து, ஒருமை உறுதல் கண்கூடு. அன்பர்கள் இவ்வரிய திருப்புகழை மனப்பாடம் செய்துகொண்டு நாள்தோறும் முருகவேளிடம் முறையிட்டு வரின், அப் பரமபதியின் கருணை வெள்ளம் பொங்கி வருதல் ஒருதலை.- வாரியார் ஸ்வாமிகள்
ஒப்புக
அணுகாத
இருடி
அயன்மால் அமரர்
அடியார்
---
அரியசமயம் ஒருகோடி, அமரர் சரணர் சதகோடி,
அரியும் அயனும், இவர்கூடி
அறியஅறிய அறியாத அடிகள் அறிய, அடியேனும்
அறிவுள் அறியும் அறிவு ஊற அருள்வாயே
--- (சுருதிமறைகள்)
அமரர் அடியார் இசையும் ஒலி ….
குமர குருபர முருக சரவண
குகஷண் முககரி பிறகான
குழக சிவசுத சிவய நமஎன
குருவன் அருள்குரு மணியேஎன்று
அமுத இமையவர் திமிர்தம் இடுகடல்
அதென அநுதினம் உனையோதும்
அமலை அடியவர் கொடிய வினைகொடும்
அபயம் இடுகுரல் அறியாயோ.
---குமர குருபர திருப்புகழ்.
அணுவில் அணுவாய் ---
அணுவிலும் அணுவாய் பெரிதினும் பெரிதாய் உள்ள பரம ஆன்மா இந்தச் செந்துவினது இருதய குகையில் உளது. தன்னுடைய மகிமைக்கு ஏதுவாய் உள்ள அதனைக் கன்ம நீக்கம் உள்ளோன் தனக்கு ஆதாரமான ஈசனது பிரகாசத்தினால் சோகமில்லாதவனாய்க் காண்கின்றான்
சகல வடிவாய் ---
எல்லா வடிவங்களாக விளங்குபவர் முருகப் பெருமானே. பிரம தேவராக நின்று ஆக்கல் தொழில் புரிபவரும் அவரே. திருமாலாக நின்று அளித்தல் தொழில் புரிபவரும் அவரே. உருத்திரமூர்த்தியாக நின்று அழித்தல் தொழில் புரிபவரும் அவரே.
பழைய வடிவாகிய வேலா ---
தேவர்கள் சூரபன்மன் கொடுமைக்கு ஆற்றாது சிவபெருமானை வேண்டி குறையிரந்து நின்றனர். அது கேட்ட அரனார் ஆறுமுகமாகிக் காட்சி தந்து ஆறு திருமுகங்கள் தோறும் உள்ள நெற்றிக் கண்களில் இருந்து அருட்பெருஞ் ஜோதிப் பொறிகளை வெளிப்படுத்தினார். எனவே, சிவமூர்த்தியின் பழைய வடிவு ஆறுமுக வடிவு. – வாரியார் ஸ்வாமிகள்
பரமகுரு ---
சனகாதிகளுக்குக் கல்லாலின் புடையமர்ந்து வாக்கிறந்த வான் பொருளை சொல்லாமல் சொல்லிய தென்முகப் பரமாசிரியருக்கும் "ஓம்" எனும் தனி மந்திரத்தை உபதேசித்தவர் முருகப் பெருமான். ஆதலின், பரமகுரு என்றனர்.
உனது பத தூள் புவனம்
முருக வேள் விசுவ ரூபத்தில் அவரது உள்ளடி தான் மலைகள் யாவும் · -- கந்த புராணம்
·
ஆடு பாம்பு அரை ஆர்த்தது உடைஅதை, அஞ்சு பூதமும் ஆர்த்தது உடையதே -- சம்பந்தர் தேவாரம்
No comments:
Post a Comment