பின் தொடர்வோர்

Sunday, 6 June 2021

449. இரவியு மதியும்

 


449

திருவருணை

 

              தனதன தனனந் தனதன தனனந்

               தனதன தனனந்                       தனதான

  

இரவியு மதியுந் தெரிவுற எழுமம்

   புவிதனி லினமொன்           றிடுமாதும்

எழில்புதல் வருநின் றழுதுள முருகும்

   மிடர்கொடு நடலம்              பலகூறக்

கருகிய வுருவங் கொடுகனல் விழிகொண்

    டுயிரினை நமனுங்           கருதாமுன்

கலைகொடு பலதுன் பமுமக லிடநின்

   கழலிணை கருதும்             படிபாராய்

திருமரு வியதிண் புயனயன் விரியெண்

   டிசைகிடு கிடவந்               திடுசூரன்

திணிபுய மதுசிந் திடஅலை கடலஞ்

   சிடவலி யொடுகன்           றிடும்வேலா

அருமறை யவரந் தரமுறை பவரன்

   புடையவ ருயஅன்             றறமேவும்

அரிவையு மொருபங் கிடமுடை யவர்தங்

    கருணையி லுறையும்         பெருமாளே

 

பதம் பிரித்து உரை

  இரவியும் மதியும் தெரிவு உற எழும் அம்

புவி தனில் இனம் ஒன்றிடு மாதும்

 

இரவி - சூரியனும் மதி - சந்திரனும் தெரிவு உற- தெரியும்படி எழு - தோன்றுகின்ற அம் புவி தனில் - அழகிய பூமியில் ஒன்றிடும் - பொருந்தி வாழும் மாதும் - மனைவியும்

 


எழில் புதல்வரும் நின்று அழுது உளம் உருகும்

இடர் கொடு நடலம் பல கூற

எழில் புதல்வரும் - அழகிய மக்களும் நின்று அழுது - நின்று அழுது உளம் உருகும் - மனம் உருகும்படியான இடர் கொடு - வருத்தத்துடன் நடலம் - துன்ப மொழிகள் பல கூற - பல சொல்ல

 

கருகிய உருவம் கொடு கனல் விழி கொண்டு 

உயிரினை நமனும் கருதா முன்

கருகிய - கறுப்பு நிறங்கொண்ட உருவம் கொடு - உருவத்துடன் கனல் விழி கொண்டு - நெருப்பு வீசும் கண்ணுடன் உயிரினை - (என்) உயிரை நமனும் - காலனும் கருதா முன் - பிடிக்க வருவதற்கு முன்பு

 


கலை கொடு பல துன்பமும் அகலிட நின்

கழல் இணை கருதும்படி பாராய்

கலை கொடு - என் மயக்கத்தோடு பல துன்பமும் அகலிட - பல துயரங்களும் நீங்கும்படியாக நின் கழல் இணை - உனது திருவடியினை கருதும்படி பாராய் - நான் நினைக்கும்படி கண்பார்த்து அருள்வாய்

 


திரு மருவிய திண் புயன் அயன் விரி எண்

திசை கிடுகிட வந்திடு சூரன்

 திரு - இலக்குமி மருவிய - பொருந்திய திண் புயன் - வலிமையான தோள் உடைய திருமால் அயன் - பிரமன் விரி - பரந்த எண் திசை - எட்டு திசைகளில் உள்ள யாவரும் கிடுகிட - நடுநடுங்க வந்திடு - வந்த சூரன் - சூரனுடைய

 


திணி புயம் அது சிந்திட அலை கடல்

அஞ்சிட வலியொடு கன்றிடும் வேலா

திணி - வலிமை வாய்ந்த புயம் அது - தோள்கள் சிந்திட - அறுபட்டு விழ  அலை கடல் அஞ்சிட - அலை வீசும் கடல் பயப்பட வலியொடு - வலிமையுடன் கன்றிடும் வேலா - கோபித்த வேலனே

 


அரு மறையவர் அந்தரம் உறைபவர் அன்பு

உடையவர் உய அன்று அறம் மேவும்

அரு மறையவர் - அரிய வேதங்கள் வல்லவர்களும் அந்தரம் உறைபவர் - வானில் உறையும் தேவர்களும் அன்பு உடையவர் - அன்புடைய அடியார்களும் உய - பிழைக்கும் வண்ணம் அன்று அறம் மேவும் - அறங்களை விரும்பிச் செய்த

 



அரிவையும் ஒரு பங்கு இடமுடையவர் தங்கு

அருணையில் உறையும் பெருமாளே

அரிவையும் - பார்வதி தேவியை ஒரு பங்கு - ஒரு பக்கத்தில் இடம் உடையவர் – இடப் பக்கத்தில் கொண்டவரான சிவ பெருமான் தங்கு - வீற்றிருக்கும் அருணையில் உறையும் பெருமாளே - திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே

 

 

 சுருக்க உரை

 உலக வாழ்க்கையில் பொருந்திய மனைவி, மக்கள், சுற்றத்துடன் சூழ்ந்து அழுத உள்ளம் உருக துன்ப மொழிகள் பல கூறி, காலன் என்னைப் பிடிக்க வரு முன், என் மயக்கத்தோடு பல துன்பங்களும் நீங்க உன் திருவடிகளை நான் தியானிக்கும் படி கண் பார்த்தருள்க 

திருமால், பிரமன், மற்றும் எண் திசையில் உள்ள யாவரும், நடு நடுங்கும்படி கோபித்து வந்த சூரனுடைய தோள்களை அறுத்த வேலனே! வேதம் கற்றவர்கள், வானோர், அடியவர்கள் பிழைக்க அன்று அறம் வளர்த்த பார்வதியை ஒரு பக்கத்தில் உள்ள சிவன் வீற்றிருக்கும் திருவண்ணாமலையில் வாழும் பெருமாளே! உன் கழலிணையை நான் கருதும் படி பாராய் 


  விளக்கக் குறிப்புகள்


நடலம் - துன்ப மொழி

கலைகொடு - என் மயக்கங்கள் எல்லாம் ஒழிய

No comments:

Post a Comment