பின் தொடர்வோர்

Thursday, 17 June 2021

453.இருவினை யூண்பசும்பை

 


453

திருவருணை

               

               தனதன தாந்ததந்த தனதன தாந்ததந்த

               தனதன தாந்ததந்த          தனதான

 

இருவினை யூண்பசும்பை கருவிளை கூன்குடம்பை

    யிடரடை பாழ்ம்பொதும்ப                  கிதவாரி

இடைதிரி சோங்குகந்த மதுவது தேங்குகும்ப

    மிரவிடை து|ங்குகின்ற                பிணநோவுக்

குருவியல் பாண்டமஞ்சு மருவிய கூண்டுநெஞ்சொ

    டுயிர்குடி போங்குரம்பை             யழியாதென்

றுலகுட னேன்று கொண்ட கருமபி ராந்தொழிந்து

    னுபயப தாம்புயங்க                   ளடைவேனோ

அருணையி லோங்குதுங்க சிகரக ராம்புயங்க

    ளமரர் குழாங்குவிந்து                 தொழவாழும்

அடியவர் பாங்கபண்டு புகலகி லாண்டமுண்ட

    அபிநவ சார்ங்ககண்டன்               மருகோனே

கருணைம்ரு கேந்த்ரஅன்ப ருடனுர கேந்த்ரர்கண்ட

    கடவுள்ந டேந்த்ரர்மைந்த             வரைசாடுங்

கலபக கேந்த்ரதந்த்ர அரசநி சேந்த்ரகந்த

    கரகுலி சேந்த்ரர்தங்கள்                பெருமாளே

 

பதம் பிரித்து உரை

 

இருவினை ஊண் பசும் பை கரு விளை கூன் குடம்பை

இடர் அடை பாழ் பொதும்பு அகித வாரி

இரு வினை- இரண்டு வினைகளுக்கும்,

ஊண் பசும் பை - உணவிடமான தோல் பை கரு விளை- கரு வளருவதற்கு இடமான கூன் - பாத்திரம் (ஆகிய) குடம்பை - உடம்பு இடர் அடை - துன்பங்களையே அடைத்து வைத்துள்ள பாழ்ம் பொதும்பு - பாழடையப் போவதான குகை அகித வாரி - துன்பமும் தீமையும் கொண்ட கடலின்

 

இடை திரி சோங்கு கந்தம் மது அது தேங்கு கும்பம்

இரவு இடை தூங்குகின்ற பிண நோவுக்கு

இடை திரி - நடுவில் திரிகின்ற சோங்கு - மரக்கலம் கந்தம் - மலச்சேறும் மது அது - நீரும்தேங்கும் கும்பம் - நிரம்பிய இடம் இரவு இடை துங்குகின்ற - இரவிலே தூங்குகின்ற  பிண நோவுக்கு - பிணம் போன்ற நோயினுக்கு

 

உருவு இயல் பாண்டம் அஞ்சும் மருவிய கூண்டு நெஞ்சொடு

உயிர் குடி போம் குரம்பை அழியாது என்று

உருகு - உருவாய் அமைந்த பாண்டம் - பாத்திரம் அஞ்சும் - ஐம்பூதங்களும் மருவு கூண்டு – பொருந்தி உள்ள கூடு நெஞ்சொடு - மனத்துடன் உயிர் - உயிரும் குடி போ(கு)ம் - (உடலை விட்டு) வெளியேறும் குரம்பை - சிறு குடில் அழியாது என்று - அழியாமல் நிலைத்து நிற்கும் என்று

 

உலகுடன் ஏன்று கொண்ட கரும பிராந்தி ஒழிந்து

உன் உபய பதாம் புயங்கள் அடைவேனோ

உலகுடன் ஏன்று கொண்ட - உலகத்தாரிடம் நான் கொண்டுள்ள கரும - வினைப் பயனால் வரும் பிராந்தி - மயக்கம் ஒழிந்து - நீங்கப் பெற்று உன் - உனது உபய - இரண்டு பதாம் புயங்கள் - தாமரைத் திருவடிகளை அடைவேனோ - அடையும் பாக்கியத்தைப் பெறுவேனோ

 

அருணையில் ஓங்கு துங்க சிகரம் கராம் புயங்கள்

அமரர் குழாம் குவிந்து தொழ வாழும்

அருணையில் ஓங்கு - திரு அண்ணாமலையில் உயர்ந்து ஓங்கிய  துங்க - பரிசுத்தமான சிகர - கோபுர வாயிலில் கராம் புயங்கள் குவிந்து  - கை கூப்பி அமரர் தொழ வாழும் - தேவர்கள் தொழ வாழ்கின்ற

 

அடியவர் பாங்க பண்டு புகல் அகிலாண்டம் உண்ட

அபிநவ சார்ங்க கண்டன் மருகோனே

அடியவர் பாங்க - அடியார்களின் தோழனே பண்டு - முன் ஒரு காலத்தில் புகல் - சொல்லப்படுகின்ற அகிலாண்டம் உண்ட - எல்லா  உலகங்களையும் உண்ட அபிநவ - புதுமை வாய்ந்த சார்ங்க - சாரங்கம் என்னும் வில்லை ஏந்திய கண்டன் - வீரனாகிய திருமாலின் மருகோனே – மருகனே

 

கருணை ம்ருகேந்த்ர அன்பருடன் உரகேந்த்ரர் கண்ட

கடவுள் நடேந்த்ரர் மைந்த வரை சாடும்

கருணை - கருணை நிறைந்த ம்ருகேந்த்ர அன்ப - புலிக்கால் கொண்ட வியாக்ரபாதருடன் உரகேந்த்ரர் - சர்ப்ப சிரேஷ்டரான பதஞ்சலியும் கண்ட - தரிசித்த நடேந்த்ரர் - நடராஜரின் மைந்த - மகனே வரை சாடும் - மலைகளைத் தூளாக்கும்

 

கலபக கேந்த்ர தந்த்ர அரச நிசேந்த்ர கந்த

குலிச கர இந்த்ரர் தங்கள் பெருமாளே

கலபக - தோகை உடைய மயில் வாகனனே கேந்த்ர தந்த்ர - நூல்களில் வல்லவனே அரச - அரசனே நிசிசேந்த்ர - சத்திய சிரேஷ்டரே கந்த - கந்தனே குலிச கர - குலிசாயுதத்தைக் கையில் கொண்ட இந்த்ரர் தங்கள் - தேவேந்திரர்களுக்கு பெருமாளே - பெருமாளே

 

சுருக்க உரை

 

மலமும் நீரும் தேங்கி நோய்களுக்கு இடமானதும், ஐந்து புலன்களுக்கு ஒரு கூடாக இருப்பதுமான உடலை நிலை என்று எண்ணி, வினைப் பயனால் மயக்கம் நீங்கப் பெற்று, உனது இரு தாள்களை அடைவேனோ 

அருணையில் உயர்ந்த கோபுர வாயிலில் வீற்றிருப்பவனே சாரங்கம் என்ற வில்லை ஏந்திய திருமாலின் மருகனே வியாக்ரபாதரும்பதஞ்சலியும் தரிசித்த நடராஜர் பெற்ற குமரனே பல நூல்களில் வல்லவனே தேவர்கள் பெருமானே உன் தாமரைத் திருவடிகளை அடைவேனோ

 

 விளக்கக் குறிப்புகள்

 ஒப்புக

கந்த மதுவது தேங்கு 

 மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை---          -திருவாசகம்

புயங்கள் குவிதல்   கரங் குவிவார் உண்மகிழும் கோள் கழல்கள்

       வெல்க                                     --                 திருவாசகம்

ம்ருகேந்த்ரர், உரகேந்த்ரர்

தில்லை நடராஜப் பெருமானது ஆடல் வியாக்ரபாதர், பதஞ்சலி என்ற இருவர்  காணும் பொருட்டே ஆடப்பட்டது.

பதஞ்சலி புலிக்காலண்ணல் இருவரும் உணர்வாற் காண எல்லையில் அருளால் ஈசன் திருநட இயற்கைகாட்டும் தில்லை மூதூர்  கந்த புராணம்

No comments:

Post a Comment