பின் தொடர்வோர்

Sunday, 6 June 2021

452.இருவினையஞ்ச

 452


 திருவருணை

 

              தனதன தந்த தனதன தந்த

              தனதன தந்த           தனதான

 

இருவினை யஞ்ச மலவகை மங்க

    இருள்பிணி மங்க                           மயிலேறி

இனவரு ளன்பு மொழியக டம்பு

    வினதக முங்கொ                           டளிபாடக்

கரிமுக னெம்பி முருகனெ னண்டர்

    களிமலர் சிந்த                         அடியேன்முன்

கருணைபொ ழிந்து முகமும லர்ந்து

    கடுகி நடங்கொ                          டருள்வாயே

திரிபுர மங்கை மதனுடல் மங்க

    திகழ்நகை கொண்ட                   விடையேறிச்

சிவம்வெளி யங்க ணருள்குடி கொண்டு

    திகழந டஞ்செய்                         தெமையீண

அரசியி டங்கொள் மழுவுடை யெந்தை

    அமலன்ம கிழ்ந்த                           குருநாதா

அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை

    அமளிந லங்கொள்                      பெருமாளே 

பதம் பிரித்து உரை

 இருவினை அஞ்ச மல வகை மங்க

இருள் பிணி மங்க மயில் ஏறி

இரு வினை - இரண்டு வினைகளும் அஞ்ச - அஞ்சி அழிய  மலவகை - மலக் கூட்டங்கள் மங்க - அழிய இருள் பிணி - அஞ்ஞானமும், நோய்களும் மங்க - ஒடுங்க மயில் ஏறி - நீ மயில் மீது ஏறி

இன அருள் அன்பு மொழிய கடம்புவின்

அதகமும் கொ(ண்)டு அளி பாடக்

இன அருள் - அருள் சம்பந்தமான அன்பு மொழிய - மொழிகளைக் கூற கடம்புவின் அதகமும் கொண்டு - உனது கடப்ப மலராம் உயிர் மருந்தைக் கொண்டு அளி பாட - வண்டுகள் பாட

கரி முகன் எம்பி முருகன் என அண்டர்

களி மலர் சிந்த அடியேன் முன்

கரி முகன் - விநாயகர் எம்பி - என் தம்பியே முருகன் என - முருகனே என்று அன்புடன் அழைக்க அண்டர் - தேவர்கள் களி மலர் சிந்த - மகிழ்ச்சியுடன் மலர் பொழிய அடியேன் முன் - அடியேனுக்கு எதிரே

கருணை பொழிந்து முகமும் மலர்ந்து

கடுகி நடம் கொ(ண்)டு அருள்வாயே

கருணை பொழிந்து - கருணை மிக மிக்கு

முகமும் மலர்ந்து - முகம் மலர்ந்து

கடுகி - வேகமாக நடம் கொ(ண்)டு அருள்வாயே - நடனத்துடன் வந்து அருள் புரிவாயாக

திரி புரம் மங்க மதன் உடல் மங்க

திகழ் நகை கொண்ட விடை ஏறி

திரி புரம் மங்க - திரிபுரங்கள் அழிய மதன் உடல் மங்க - மன்மதனது உடல் அழிய

திகழ் நகை கொண்ட - விளங்கும் சிரிப்பைக் கொண்ட விடை ஏறி - இடப வாகனரான

சிவம் வெளி அங்கண் அருள் குடி கொண்டு

திகழ நடம் செய்து எமை ஈண

சிவம்  - சிவபெருமான் வெளி அங்கண் - ஒளி பொருந்திய வெட்ட வெளியில் அருள் குடி கொண்டு -  திருவருளுடன் வீற்றிருந்து திகழ - விளங்கும்படி எமை ஈண - என்னைப் பெற்ற

அரசி இடம் கொள் மழுவுடை எந்தை

அமலன் மகிழ்ந்த குருநாதா

அரசி - பார்வதியை இடம் கொள் - இடது பாகத்தில் ஏற்றுக் கொண்ட மழு உடை எந்தை - பரசு ஆயுதத்தை ஏந்திய எந்தையாகிய சிவபெருமான் அமலன் - மாசற்றவன் மகிழ்ந்த குரு நாதா - மகிழ்ந்த குரு நாதனே

அருணை விலங்கல் மகிழ் குற மங்கை

அமளி நலம் கொள் பெருமாளே

அருணை விலங்கல் - திரு அண்ணா மலையில் மகிழ் - மகிழும் குற மங்கை - குற மங்கையாகிய வள்ளியின்  அமளி - படுக்கை நலம் கொள் பெருமாளே - இன்பத்தை அனுபவிக்கும் பெருமாளே

சுருக்க உரை

 

இரண்டு வினைகளும், மும்மலங்களும், அஞ்ஞானமும், நோய்களும் ஒழிய மயில் மீது ஏறி, அருள், அன்பு சம்பந்தமான மொழிகளைக் கூறி,  கடம்ப மலர் கொண்டு வண்டுகள் பாட, விநாயகர் அன்புடன் அழைக்க,  தேவர்கள் மலர்களைப் பொழிய, அடியேன் எதிரே வந்து அருள் புரிய வேண்டும்

 திரிபுரத்தையும் , மன்மதனையும் எரித்து விடைமேல் ஏறி வருபவரும், வெட்ட வெளியில் நடம் புரிபவரும், பார்வதியை இடது பாகத்தில் ஏற்றுக் கொண்டவருமான எந்தை சிவபெருமான் மகிழ்ந்த குருநாதனே நடனம் செய்து என்னை அருள்வாய் 


No comments:

Post a Comment