பின் தொடர்வோர்

Monday, 28 June 2021

456. கரிமுக

 


456

திருவருணை

 

           தனதனத் தனதனத் தனதனத் தனதனத்

                தனதனத் தனதனத்                       தனதான

 

கரிமுகக் கடகளிற் றதிககற் பகமதக்

   கஜமுகத் தவுணனைக்          கடியானை

கடலையெட் பயறுநற் கதலியிற் கனிபலக்

   கனிவயிற் றினிலடக்           கியவேழம்

அரிமுகத் தினனெதிர்த் திடுகளத் தினின்மிகுத்

   தமர்புரிக் கணபதிக்          கிளையோனே

அயிலெடுத் தசுரர்வெற் பலைவுறப் பொருதுவெற்

   றியைமிகுத் தறுமுகக்            குமரேசா

நரிமிகுக் கிளைகளைப் பரியெனக் கடிவளக்

   கையில்பிடித் தெதிர்நடத்         திடுமீசன்

நடனமிப் படியிடத் தினுமிசைத் தரையினிற்

   கரியுரித் தணிபவற்           கொருசேயே

துரிபெறச் சரிபொழிற் கனவயற் கழகுளத்

   துரியமெய்த் தரளமொய்த்        திடவீறிச்

சுரர்துதித் திடமிகுத் தியல்தழைத் தருணையிற்

   சுடரயிற் சரவணப்            பெருமாளே

  

கரி முக கடம் களிறு அதிக கற்பக மத

கஜ முகத்து அவுணனை கடி யானை

கரி முகக் கடம் - யானை முகத்தையும் மதத்தையும்

உடைய களிறு - யானை அதிக -சிறந்த

   கற்பக - விநாயகர் மதக் கஜ முகத்து 

அவுணன் யானை முகமுடைய கஜமுகா சூரனை

 கடி யானை -அடக்கிய யானை


 

கடலை எள் பயறு நல் கதலியின் கனி பல

கனி வயிற்றினில் அடக்கிய வேழம்

கடலை, எள், பயறு - கடலை, எள், பயறு நல் கதலியின் கனி - நல்ல வாழையின் பழங்கள் பலக் கனி - பலாப் பழங்கள் (ஆகியவற்றை) வயிற்றினில் அடக்கிய - தனது வயிற்றில் அடக்கிய வேழம் - யானை

 


 அரி முகத்தினன் எதிர்த்திடு களத்தினின் மிகுத்த

அமர் புரி கணபதிக்கு இளையோனே

அரி - அழகிய முகத்தினன் - முகம் கொண்டவர் எதிர்த்திடு - எதிர்த்து வந்து களத்தினில் - போர்க் களத்தில் மிகுத்த - பெரிய அமர் புரி - போர் செய்யும் கணபதிக்கு இளையோனே - கணபதிக்குத் தம்பியே


 

அயில் எடுத்து அசுரர் வெற்பு அலைவு உற பொருது

வெற்றியை மிகுத்த அறுமுக குமரேசா

அயில் எடுத்து - வேலைச் செலுத்தி அசுரர் வெற்பு - அசுரர்களின் மலை போன்ற கூட்டம் அலைவுற - அலைச்சல் உறும்படி பெருது - சண்டை செய்து வெற்றியை மிகுத்த - வெற்றி மிகக் கொண்ட அறுமுகக் குமரேசா - ஆறுமுகத்துக் குமரேசனே

 

நரி மிகு கிளைகளை பரி என கடிவளம்

கையில் பிடித்து எதிர் நடத்திடும் ஈசன்

நரி மிகுக் கிளைகளை - நரியின் பெரிய கூட்டங்களை பரி என - குதிரை என்று கடிவளக் கையில் பிடித்து - கடிவாளத்தைக் கையில் ஏந்தி எதிர் நடத்திடும் ஈசன் - (பாண்டியன்) எதிரே நடத்திய சொக்கேசர் (தமது)

 


நடனம் இ படி இடத்து இ(ன்)னும் இசை தரையினில்

கரி உரித்து அணிபவர்க்கு ஒரு சேயே

நடனம் - திருவிளையாடலை இப்படி இடத்து - இந்தப் பூமியில் (நடத்தினவர்) இ(ன்)னும் - பின்னும் இசை தரையினில் - சொல்லப்படும் இந்தப் பூமியில் கரி உரித்து அணிபவற்கு - யானையின் தோலை உரித்து அணிந்தவராகிய சிவ பெருமானின் ஒரு - ஒப்பற்ற சேயே - குழந்தையே

 

துரி பெற சரி பொழில் கன வயல் அழகு உள

துரிய மெய் தரளம் மொய்த்திட வீறி

துரி பெற - (காய் கனிகள் ஆகிய) சுமையைப் பெறுவதால் சரி பொழில் - சரியும் சோலைகளிலும் கன வயற்கு - பெருமை வாய்ந்த வயலிலும் அழகு உள - அழகு உள்ளதாகவும் துரிய மெய்த் தரளம் - தூய்மையான முத்துக்கள் மொய்த்திட வீறி - நெருங்கிக் கிடக்க மிக்கெழுந்து

 


சுரர் துதித்திட மிகுத்து இயல் தழைத்து அருணையில்

சுடர் அயில் சரவண பெருமாளே

 

சுரர் துதித்திட - தேவர்கள் துதி செய்ய மிகுத்த இயல் தழைத்த - உனது கருணைக் குணம் விளங்கும் அருணையில் - திருவண்ணா மலையில் சுடர் அயில் - ஒளி வீசும் வேல் ஏந்திய சரவணப் பெருமாளே - சரவணப் பொய்கையில் தோன்றிய பெருமாளே

 


சுருக்க உரை

 யானை முகத்தை உடைய கஜமுகா சூரனை அடக்கியவரும், கடலை, எள் முதலியவற்றை அடைக்கும் வயிற்றைக் கொண்டவரும், யானை முகம் உடையவரும் ஆகிய விநாயகருக்குத் தம்பியே! அசுரர்கள் குலம் அலைச்சல் உறும்படி போர் செய்து வென்ற அறுமுகக் குமரனே!

நரிகளைப் பரிகளாக மாற்றித் திருவிளையாடல் புரிந்தவரும், யானையின்தோலை உரித்து  அணிந்தவருமாகிய சிவ பெருமானின் மகனே! அழகிய சோலைகளை உடைய அருணையில் தேவர்கள் துதி  செய்ய, கருணைக்குணம் மிக்க வீற்றிருக்கும்  வேலேந்திய சரவணப் பெருமாளே

 

விளக்கக் குறிப்புகள்

 

 நரிமிகுக் கிளைகளை பரியெனக்

   வாசி வாணிகனெ னக்குதிரை விற்றுமகிழ்

   வாதவூரனடி மைக்கொளுக்ரு பைக்கடவுள்

--- திருப்புகழ், ஆசைநாலுசது

    

  

கஜ முகத் தவுணனை

      தேவர்களை வருத்திய கஜ முகா சூரனைத் தம்முடைய தந்தத்தை முரித்து அவன்   மேல் தாக்க, அவன் பெருசசாளியாகி கணபதிதை தாக்கினான் அவன் முதுகில் தாவி   கணபதி என்னைச் சுமப்பாயாக என்று சபித்தார். அவனும் அவருக்கு வாகனமாயினன் 

 

மாணிக்கவாசகர் வரலாறு

 

மதுரையை அடுத்து திருவாதவூர் - அங்கே வதவுரார் என்று ஒரு சிறுவன் - சிறு வயதில் இருந்தே அறிவுக் கூர்மை , இறை பக்தி என்று பலரையும் வியக்க வைத்தான். அவன் புகழ்   பரவியது - பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியன் இதை கேட்டு, தனது அரசவையில் இடம் அளித்து தென்னவன் பிரம்மராயன் என்ற பெயர் இட்டு தன் சபையில் முதல் மந்திரி ஆக்கினான். எல்லாம் நன்றாக சென்றது.

அப்போது அரபு நாட்டு உயர் ஜாதி குதிரைகள் கப்பல் மூலம் சோழர் துறைமுகத்தில் விலைக்கு வருவதை அறிந்த மன்னன், தன் முதல் மந்திரியிடம் நிறைய பொன் கொடுத்து அவற்றில் நல்ல பரிகளை வாங்கி வர அனுப்பி வைத்தான். அவ்வாறே வதவுரார் சோழ நட்டு துறைமுக நகரம் செல்ல பயணித்தார்.

வழியில் திருபெருந்துறை அடைந்த வதவுரார், சற்று இளைப்பாரினார். அப்போது அங்கே அற்புதம் நிகழ்ந்தது - ஒரு மரத்தடியில் ஈசன் போதனை செய்து கொண்டு அவருக்கு காட்சி தந்தார்.

வாதவூரார் பொன்னோரு திருப்பெருந்துறையை (அறந்தாங்கி அருகே இருக்கும் ஆவுடையார் கோவில்) அடைந்தார். அங்கே இருந்த குருந்த மரத்தின் அடியில் சிவபெருமானே குருவடிவு எடுத்து அமர்ந்திருந்தார். அவர்முன் சென்று வாதவூரார் பணிந்தார். குருவின் திருக்கரத்தில் இருப்பது என்னவென்று வாதவூரார் கேட்க, அவர் சிவஞான போதம் என்றார்

‘சிவம் என்பதும், ஞானம் என்பதும், போதம் என்பதும் யாது? அடியேனுக்கு இவற்றைப் போதித்தால் நான் உமது அடிமையாவேன்’ என்றார் பக்குவமடைந்திருந்த வாதவூரார். சிவஞானத்தை அவருக்கு போதித்து, திருவடி தீட்சையும் கொடுத்தார் குருமூர்த்தி வடிவத்தில் வந்த சிவபிரான்.

தன் மந்திரிக் கோலத்தை அகற்றிக் கோவணம் பூண்டு, வாய்பொத்திக் குருவின் முன் வாய்பொத்தி நின்ற வாதவூராரை, ஆண்டவன் ஆணை இட்ட பின் அரசன் ஆணையை மறந்து - பரிகளை வாங்க வைத்திருந்த பொன் அனைத்தையும் திருபெருந்துறை கோயிலை கட்ட செலவிட்டார் … அதனால் என்ன நடந்தது?

 

 - நரியை பரியாய் மாற்றிய கதை

அவருடன் வந்த அரசனின் சிப்பந்திகள் அழைத்தனர். உடன் செல்ல மறுத்துவிட்டார் வாதவூரார். பாண்டியன் ஒற்றர்களிடம் திருமுகம் (அரசனின் ஆணை தாங்கிய ஓலை) கொடுத்துக் கையோடு வாதவூராரை அழைத்துவரக் கட்டளையிட்டான்.  ‘குதிரைகள் வர நல்ல நாளில்லை. ஆவணிமாத மூல நட்சத்திர நாளன்று மதுரைக்குக் குதிரைகள் வந்து சேருமென்று போய்ச் சொல்’ என்று அரசனிடம் திருப்பி அனுப்பினார்.

 

சொன்ன நாளும் அருகில் வந்துகொண்டிருந்தது. ஆனால் குதிரைகள் வருவதாகக் காணோம். மன்னனுக்குக் கோபம் வந்தது. மீண்டும் ஒற்றர்களிடம் குதிரைகள் இருக்குமிடத்தை அறிந்துகொண்டு வரச்சொல்லி அனுப்பினான். அவர்கள் ‘எங்குமே குதிரைகள் தென்படவில்லை’ என்ற செய்தியோடு திரும்பினர்.  ஆவணி மூலமும் வந்தது. குதிரைகள் வரவில்லை.அவரை சிறையில் அடைத்தார். வாதவூரார் சிவனை தியானித்தார்.

உடனே சிவபெருமானின் சிவகணங்களை குதிரை வீரர்களாகவும், நரிகளைக் குதிரைகளாகவும் மாற்றி மதுரைக்கு அனுப்பி, தாமே அதற்குத் தலைவராக நடத்தி வந்தார். ஏராளமான உயர் ரகக் குதிரைகள் மதுரையை நோக்கி வரும் செய்தியை ஒற்றர்கள் மன்னனுக்குச் சொல்லவே அவன் மகிழ்ந்து அமைச்சரைப் போற்றினான். குதிரைப் அணிவகுப்புத் தலைவன் அரசனிடம் குதிரைகளை முன்னும் பின்னும் நடத்தி, அவற்றின் உறுப்புச் சிறப்பைக் கூறி, ‘இவை உன்னுடையவை’ என்று கூறி ஒப்படைத்தான். விலைகூடிய பீதாம்பரம் ஒன்றை அரசன் அவனுக்குப் பரிசாக அளித்தான். அவனோ அதைத் தன் சவுக்கினால் வாங்கி, குதிரையின் மேல் போட்டுவிட்டு விடைபெற்றான். அன்றிரவே குதிரைகள் மீண்டும் நரியாக மாறி, முதலில் அந்தக் கொட்டடியில் இருந்த குதிரைகளையும் கடித்துவிட்டு ஓடின.

இதை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மிகவும் கோபம் கொண்டான். கொடுத்த பொன்னையெல்லாம் திருப்பித் தரும்வரை திருவாதவூராரை வைகையாற்று மணலில் வெய்யில் நேரத்தில் நிறுத்தி வைக்குமாறு கூறினான்.

சிவபெருமானுக்கு பக்தனின் துயரம் பொறுக்கவில்லை. கங்கையை வைகையில் பெருக்கெடுக்கச் செய்கிறார். கரையை உடைத்துக்கொண்டு ஓடத் தொடங்கிவிட்டது.

 

உடனே பாண்டியன் வீட்டுக்கு ஓர் இளைஞன் வந்து கரையை அடைக்கவேண்டும் என்று முரசு அறைவிக்கிறான்.

ஒரே ஒரு வந்திக் கிழவி, பிட்டு சுட்டு விற்பவள், மட்டும் தனிக்கட்டை. எவ்வளவு சொல்லியும் பாண்டியனின் வீரர்கள் கிழவியை விடவில்லை, அவள் வீட்டில் இருந்தும் ஒருவர் வரவேண்டும். நீ இல்லை என்றால் வேறு ஆளை அமர்து என்று கூறுகின்றனர்

 

 அவள் வீட்டில் இளைஞர்கள் யாரும் இல்லை. என்ன செய்வது என்று யோசிக்கையில் சிவபெருமானே ஓர் இளைஞன் வடிவில் வந்தியிடம் வந்து அவள் சார்பாக வேலை செய்யட்டுமா என்று கேட்கிறார். செய், ஆனால் நான் கூலியாக உதிர்ந்த பிட்டு மட்டுமே தருவேன் என்று வந்தி கூறுகிறாள். அதற்குச் சம்மதித்த சிவபெருமான் தனது ‘வேலையைத்’ தொடங்குகிறார்.

அன்றைக்குப் பார்த்து வந்திக்கு எல்லாப் பிட்டும் உதிர்ந்து போகிறது. இளைஞன் மூக்கு முட்டச் சாப்பிட்டுவிட்டு, மரநிழலில் துண்டை விரித்துத் தூங்குகிறான். மன்னன் வந்து பார்க்கிறான். கரையில் மற்றவர் பங்குகள் அடைபட்டிருக்கின்றன. வந்தியின் பகுதி உடைந்தே கிடக்கிறது.கோபம் கொண்ட அரசன் அவனைப் பிரம்பால் அடித்தான்.

கூலியாளோ ஒரு கூடை மண்ணை உடைப்பில் கொட்ட, அது மாயமாகச் சரியாகிவிட்டது. அவன் மறைந்து போனான். ஆனால் அவன் மீது பட்ட பிரம்படி அண்ட சராசரங்களின் அனைத்து உயிர்களின்மேலும், கருவில் இருந்த குழந்தை மீதும், படவே பாண்டியன் கலங்கிப் போனான்.

அப்போது சிவபிரானின் குரல் கேட்டது, ‘மன்னவா! வாதவூராரின் பொருட்டு இத்திருவிளையாடலை நாம் செய்தோம். இதனை அறியாது நீ கோபம் கொண்டாய்’ என்று அக்குரல் சொல்லிற்று.

மன்னன் மீண்டும் வாதவூரடிகளைத் தனக்கு மந்திரியாக இருக்க வேண்டினான். அவருக்கு அந்த ஆசை சிறிதும் இல்லாமையால், சிவத்தலங்களுக்குச் சென்று பாடித் துதித்தவண்ணம் இருந்தார். அரிமர்த்தன பாண்டியன் மீண்டும் அமைச்சராகத் தன்னிடம் இருக்கக் கோரியும் அதனை விரும்பாத திருவாதவூரார் சிவத்தலங்களைத் தரிசித்தவாறு திருச்சிற்றம்பலம் எனப்படும் சிதம்பரத்துக்கு வந்தார். அங்கும் சிவபிரான் அவர்முன்னர் ஒரு வேதியர் போல வந்தார்.

அவரை வரவேற்று வணங்கி 'தாங்கள் யாரோ?' என்று வாதவூரார் கேட்டார்.'நான் பாண்டி நாட்டைச் சேர்ந்தவன். உமது புகழைக் கேட்டு நீர் பாடிய பதிகங்களை ஓத வந்தேன்' என்று அந்தணர் கூறினார். 'நான் சொல்கிறேன், நீர் அவற்றை எழுதும்' என்று கூறினார் திருவாதவூரார். அதற்கு ஒப்புக்கொண்ட அந்தணர், வாதவூரார் சொல்லச் சொல்லச் செய்யுட்களை எழுதி முடித்தார். இறுதியில் திருச்சிற்றம்பலமுடையார் மீது ஒரு கோவைப் பிரபந்தம் பாடவேண்டும் என்று வேண்டினார். வாதவூரடிகளும் பாடி முடித்தார்.

முடித்ததும், ஓலைச்சுவடியின் முடிவில் 'மாணிக்கவாசகன் சொற்படி அம்பலவாணன்' என்று கையொப்பமிட்டு, திருமுறையைக் கோவிலின் திருவாயிற்படியில் வைத்து மறைந்தார். அதைப் பார்த்த தில்லைவாழ் அந்தணர் ஒருவர் அவ்வேடுகளை எடுத்துப் பார்க்க, அது திருவாசகமும், திருக்கோவையாரும் கொண்ட சுவடியாய் இருந்தது. மிகவும் மனமகிழ்ந்த அவர் தில்லை மூவாயிரவரைக் கூட்டிப் பூசைகள் செய்தார். மூவாயிரவர் நடந்த நிகழ்ச்சிகளின் பொருள் என்ன என்று வாதவூராரைக் கேட்டனர். அவர்கள் அனைவரையும் திருச்சிற்றம்பலத்துக்கு அழைத்துச் சென்ற வாதவூரார் பொருள் இதுவே என்று கூறித் தில்லையம்பலத்தைக் காட்டி மறைந்தார்.

- நன்றி விக்கி

 


No comments:

Post a Comment