பின் தொடர்வோர்

Saturday, 5 October 2019

387.நித்தம் உற்று


387
பொது
                      தத்தனத் தனதனத்த      தனதான

நித்தமுற் றுனைநினைத்து                   மிகநாடி
   நிட்டைபெற் றியல்கருத்தர்         துணையாக
நத்தியுத் தமதவத்தி                     னெறியாலே
   லக்யலக் கணநிருத்த                மருள்வாயே
வெற்றிவிக் ரமவரக்கர்                   கிளைமாள
   விட்டநத் துகரனுக்கு                 மருகோனே
குற்றமற் றவருளத்தி                  லுறைவோனே
   குக்குடக் கொடி தரித்த               பெருமாளே.

பதம் பிரித்து உரை

நித்தம் உற்று உனை நினைத்து மிக நாடி
நிட்டை பெற்று இயல் கருத்தர் துணையாக

நித்தம் - தினந்தோறும் உற்று - பொருந்தி. உனை நினைத்து - உன்னைத் தியானித்து. மிக நாடி - மிகவும் விரும்பி நிட்டை பெற்று - நிட்டை நிலையை அடைந்து. இயல் கருத்தர் - ஒழுகும் கருத்து அமைந்த பெரியோர்களின் துணையாக - துணை என

நத்தி உத்தம தவத்தின் நெறியாலே
(இ)லக்ய (இ)லக்கண நிருத்தம் அருள்வாயே

நத்தி - விரும்பியும் உத்தம தவத்தின் நெறியாலே - சிறந்த தவ ஒழுக்கத்தை நான் பற்றுவதின் பயனாக இலக்கிய இலக்கண - இலக்கிய இலக்கண நூல்களில் கண்டவாறு நிருத்தம் அருள்வாயே - பற்றின்மை என்னும் பாக்கியத்தை எனக்கு அருள்வாயே.

வெற்றி விக்ரம அரக்கர் கிளை மாளவிட்ட
நத்து கரனுக்கு மருகோனே

வெற்றி விக்ரம - வெற்றியும் வலிமையும் கொண்ட அரக்கர் - அசுரர்களின் கிளை மாள விட்ட - சுற்றத்தார்கள் யாவரும் இறக்கும்படி.
நத்து - சங்கம் ஏந்திய கரனுக்கு - திருக்கரங்களை உடைய (திருமாலுக்கு)  மருகோனே - மருகனே

குற்றம் அற்றவர் உ(ள்)ளத்தில் உறைவோனே
குக்குட கொடி தரித்த பெருமாளே.

குற்றம் அற்றவர் - மாசில்லாத பெரியோர்களின் உ(ள்)ளத்தில் உறைவோனே -  உள்ளத்தில் விளங்குபவனே குக்குடக் கொடி  தரித்த பெருமாளே - சேவல் கொடியை ஏந்திய பெருமாளே.

சுருக்க உரை
நாள்தோறும் ஒருமைப் பட்டு உன்னை  நினைத்து மிக விரும்பித் தியான நிலையைப் பெற்று ஒழுகும் பெரியோர்களின் துணை கொண்டு சிறந்த தவ ஒழுக்கத்தை நான் பற்றுவதன் பயனாக, இலக்கிய இலக்கண நூல்களில் கண்டபடி பற்றின்மை என்னும் பாக்கியத்தை எனக்கு அளித்து அருள்வாயாக.

வெற்றியும் வலிமையும் கொண்ட அசுரர்கள் குலம் முழுமையும் இறக்க வைத்த, சங்கு ஏந்திய திருக்கைகளை உடைய திருமாலுக்கு  மருகனே, மாசில்லாத பெரியோர்களின் உள்ளத்தில் உறைபவனே, சேவல் கொடியை ஏந்திய பெருமாளே, எனக்கு பற்றின்மையைப் புகட்டுவாயாக.

விளக்கக் குறிப்புகள்

நிருத்தம் - முருகவேளின் நிருத்த தரிசனம் எனவும் பொருள் கொள்ளலாம்.
 தில்லை, திருச்செந்தூர், திருத்தணிகை, கொடுங் குன்றம் ஆகிய தலங்களில்
 முருகன் நிருத்த தரிசனத்தை கண்டு களித்துள்ளார் அருணகிரி நாதர்.

கண்டு உற கடம்புடன் சந்த மகுடங்களும்
கஞ்ச மலர் செங்கையும்  சிந்து வேலும்
கண்களும் முகங்களும் சந்திர நிறங்களும்
கண்குளிர என்றன் முன் சந்தியாவோ..     திருப்புகழ், தண்டையணி                                     

எத்திக்கும் உற்ற புகழ் வெற்றி திருத்தணியில்
இற்றைத் தினத்தில் வர வேணும்...            திருப்புகழ், முத்துத்தெறி

பொழுதினிலும் அருள் முருக சுத்தக் கொடுங்கிரியில்
நிர்த்தச் சரண்களை மறந்திடேனே..       திருப்புகழ்,  எதிர்பொருது
    
மணி திகழ் மிகு புலியூர்வியாக்ரனும்
அரிது என முறை முறை ஆடல் காட்டிய பெருமாளே
                                                                   . திருப்புகழ்,.மகரமொடு     




No comments:

Post a Comment