பின் தொடர்வோர்

Wednesday, 7 July 2021

459 குழவியு மாய்

459


திருவருணை

 

         தனதன தானான தானன தனதன தானான தானன

          தனதன தானான தானன                   தனதான

 

குழவியு மாய்மோக மோகித குமரனு மாய்வீடு காதலி

   குலவனு மாய்நாடு காடொடு                 தடுமாறிக்

குனிகொடு கூனீடு மாகிடு கிழவனு மாயாவி போய்விட

   விறகுட னேதூளி யாவது                  மறியாதாய்ப்

பழயச டாதார மேனிகழ் கழியுடல் காணாநி ராதர

   பரிவிலி வானாலை நாடொறு               மடைமாறிப்

பலபல வாம்யோக சாதக வுடல்கொடு மாயாத போதக

   பதியழி யாவீடு போயினி                 யடைவேனோ

எழுகடல் தீமூள மேருவு மிடிபட வேதாவும் வேதமு

   மிரவியும் வாய்பாறி யோடிட               முதுசேடன்

இருளறு பாதாள லோகமு மிமையமு நீறாக வாள்கிரி

   யிருபிள வாய்வீழ மாதிர                   மலைசாய

அழகிய மாபாக சாதன னமரரு மூர்பூத மாறுசெய்

   அவுணர்த மாசேனை தூளெழ               விளையாடி

அமரினை மேவாத சூரனை அமர்செயும் வேலாயு தாவுயர்

   அருணையில் வாழ்வாக மேவிய            பெருமாளே

 

பதம் பிரித்து உரை

 

குழவியுமாய் மோகம் மோகித குமரனுமாய் வீடு காதலி

குலவனுமாய் நாடு காடொடு தடுமாறி

குழவியுமாய் - குழந்தையாகப் பிறந்து மோக - மாயை மோகித - காம மயக்கம் இவை உடைய குமரனுமாய் - குமரப் பருவத்தனாய் வீடு காதலி - வீடு, மனைவி இவைகளோடு கூடிய குலவனுமாய் - நல்ல குலத்தவனாய் நாடு காடொடு - நாட்டிலும், காட்டிலும் தடுமாறி - உழன்று தடுமாற்றம் அடைந்துப் (பின்னர்)

குனி கொடு கூன் நீடு மா கிடு கிழவனுமாய் ஆவி போய்விட

விறகுடனே தூளியாவதும் அறியா தாய்

குனிவொடு - உடல் வளைந்து கூன் நீடு மா கிடு - கூன் பெரியதாய் ஆன கிழவனுமாய் - கிழவனுமாய்

ஆவி போய் விட - உயிர் போன பிறகு விறகுடனே - (உடல்) விறகுடன் தூளியாவது - சாம்பற் பொடி ஆவதையும் அறியா தாய் - அறிந்து தாவி

பழ சட் ஆதார மேல் நிகழ் கழி உடல் காணா நிராதர

பரிவிலி வான் நாலை மடை மாறி

பழய சடாதார மேல் - பழமையான ஆறு ஆதாரங்களின் மேல் நிலையில் நிகழ் - காணக் கூடிய கழி உடல் காணா - உடம்பு கழி பட்ட நிலையை அடைந்து நிராதர - சார்பு வேண்டாததும் பரிவிலி - துன்பம் இல்லாததுமான வான் - ஆகாயத்தில் நாடோறும் - நாள் தோறும் நாலை மடை மாறி - நாலு அங்குலப் பிரமாண வாயுவைக் கழியாது திருப்பி

பல பலவாம் யோக சாதக உடல் கொடு மாயாத போதக

பதி அழியா வீடு போய் இனி அடைவேனோ

பலபலவாம் யோக சாதக - பல விதமான யோகப் பயிற்சிகள் செய்த உடல் கொடு - உடலை வளர்த்து மாயாத - அழிவில்லாததும் போதக பதி - அறிவு மயமானதுமான அழியா வீடு போய் - அழியாத முத்தி வீட்டை நாடிச் சென்று இனி - இனியாவது அடைவேனோ - சேருவேனோ?

எழு கடல் தீமூள மேருவும் இடிபட வேதாவும் வேதமும்

இரவியும் வாய் பாறி ஓடிட முது சேடன்

எழு கடல் தீ மூள - ஏழு கடல்களும் நெருப்பு மூண்டு எரியவும் மேருவும் மிடி பட - மேரு மலையும் பொடிபடவும் வேதாவும் வேதமும் - பிரமனும், வேதங்களும் இரவியும் - சூரியனும் வாய் பாறி ஓடிட - இடம் விட்டுப் பெயர்ந்து ஓடவும் முது சேடன் - பழைய ஆதிசேடன்

இருள் அறு பாதாள லோகமும் இமையமும் நீறாக வாள் கிரி

இரு பிளவாய் வீழ மாதிர மலை சாய

இருள் அறு - இருட்டு இல்லாத பாதாள லோகமும் - பாதாள லோகமும் இமையமும் - இமைய மலையும் நீறாக - பொடியாகவும் வாள் கிரி - சக்ரவாளகிரி இரு பிளவாய் வீழ - இரண்டு பிளவுபட்டு வீழவும் மாதிர மலை சாய - (எட்டுத்) திக்குகளில் உள்ள மலைகள் சாய்ந்து விழவும்

அழகிய மா பாகசாதனன் அமரரும் ஊர் பூத மாறு செய்

அவுணர் தம் மா சேனை தூள் எழ விளையாடி

அழகிய - அழகு வாய்ந்த மா - சிறந்த பாகசாதனன் - இந்திரனும் அமரரும் - தேவர்களும் ஊர் பூதமாறு செய் - (தங்கள்) பொன்னுலகில் குடியேறவும் அவுணர் தம் மா சேனை - அசரர்களுடைய பெரிய சேனை தூள் எழ - தூள் பொடியாகவும் விளையாடி - விளையாடி

அமரினை மேவாத சூரரை அமர் செயும் வேலாயுதா உயர்

அருணையில் வாழ்வாக மேவிய பெருமாளே

அமரினை - அமைதியை மேவாத - பொருந்தாத சூரனை - சூரர்களோடு அமர் செயும் - சண்டை செய்த வேலாயுதா - வேலாயுதனே உயர் அருணையில் - சிறப்பு வாய்ந்த அண்ணா மலையில் வாழ்வாக மேவிய பெருமாளே - வாழ்வாக வீற்றிருக்கும் பெருமாளே

 

சுருக்க உரை

 குழந்தையாகப் பிறந்து, மாயை, காம மயக்கம் இவைகள் நிறைந்த குமரப் பருவத்தனாய், வீடு, மனைவி, இவைகளுடன் கூடிய நற்குலத்தினனாய் உலகில் தடுமாறி, பின்னர் உடல் வளைந்து, கூன் பெருகி, உயிர் நீங்க, உடம்பை விறகுடன் எரிப்பதையும் அறிந்து தாவி, ஆறு ஆதாரங்களின் மேல் நிலையில், யோகப் பயிற்சிகள் செய்து வளர்த்த உடலை நீத்து, இறைவனுடைய முத்தி வீட்டை நாடிச் சென்று னியேனும் அடைவேனோ எட்டு திசைகளில் உள்ள மலைகள் விழுந்து பொடிபட, தேவர்கள் தங்கள்ஊர் புக, அசுரர்கள் அழிய, போர் புரிந்த வேலாயுதத்தை ஏந்தியவனே அண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே நான் அழியாத வீட்டை அடைவேனோ?

 

ஒப்புக

 

 குலவனுமாய்

நலம் இலாதானை நல்லனே என்று நரைத்த

மாந்தரை இளையனே

குலம் இலாதானை குலவனே என்று கூறினும்

கொடுப்பார் இலை                     ...சுந்தரர் தேவாரம்

 

 அறியா தாய்

நின்னையுணர்ந் துணர்ந் தெல்லாம் ஒருங்கிய

நிர்க்குணம் பூண் டென்னை மறந்திருந்தேன்

இறந்து விட்ட திவ்வுடம்பே....            கந்தர் அலங்காரம்

 

ஒத்துப் பு லனுயிர் ஒன்றாய் உடம்பொடு


செத்திட் டிருப்பார் சிவயோகி யார்களே       .... திருமந்திரம்

 

நாலை மடை மாறி

கோலமு முதிப்ப கண்டுள நாலினை மறித்தி தம்பெறு

 கோவென முழக்கு சங்கொலி விந்துநாதம்... திருப்புகழ், நாலுசதுரத்த

 பாகசாதனன்: காரணப்பெயர். பாகன் எனபவன் விருத்திராசுரனின் தம்பி ; விருத்திராசுரனை இந்திரன் கொன்றதைக்கேட்ட பாகன் இந்திரனோடு எதிர்த்துப் போர்புரிந்து இந்திரனாற் கொல்லப் பட்டான். பாகனைக் கொன்ற காரணத்தால் இந்திரன் பாகசாதனன் எனப்பட்டான்.


பாடலை கேட்க                   Rev 9-8-2022

 




No comments:

Post a Comment