பின் தொடர்வோர்

Saturday, 31 July 2021

464. தமரம் குரங்களும்



திருவருணை

 

              தனதன தந்தனந் தானதத்த தந்த 

                தனதன தந்தனந் தானதத்த தந்த

                தனதன தந்தனந் தானதத்த தந்த  தனதனத் தனதான

 தமரகு ரங்களுங் காரிருட்பி ழம்பு 

   மெழுகிய அங்கமும் பார்வையிற்கொ ளுந்து 

   தழலுமிழ் கண்களுங் காளமொத்த கொம்பு  முளகதக் கடாமேல் 

தனிவரு மந்தகன் பாசம்விட்டெ றிந்து 

   அடவரு மென்றுசிந் தாகுலத்தி ருந்து 

   தமரழ மைந்தருஞ் சோகமுற்றி ரங்க     மரணபக் குவமாநாள் 

கமலமு கங்களுங் கோமளத்தி லங்கு 

   நகையுநெ டுங்கணுங் காதினிற்று லங்கு 

   கனககு தம்பையுந் தோடும்வஜ்ர அங்க  தமுமடற் சுடர்வேலுங் 

கடிதுல கெங்கணுந் தாடியிட்டு வந்த 

   மயிலுமி லங்கலங் கார்பொற்ச தங்கை 

   கழலொலி தண்டையங் காலுமொக்க வந்துரமெனக்     கருள்கூர்வாய்

இமகிரி வந்தபொன் பாவைபச்சை வஞ்சி

   அகிலத லம்பெறும் பூவைசத்தி யம்பை  

   யிளமுலை யின்செழும் பாலகுடித்தி லங்கு மியல்நிமிர்த் திடுவோனே 

இறைவரி றைஞ்சநின் றாகமப்ர சங்க 

   முரைசெய் திடும்ப்ரசண் டாவிசித்து நின்ற 

   ரணமுக துங்கவெஞ் சூருடற்பி ளந்த    அயிலுடைக் கதிர்வேலா

அமணர டங்கலுங் கூடலிற்றி ரண்டு 

   கழுவிலு தைந்துதைந் தேறவிட்டு நின்ற    

   அபிநவ துங்ககங் காநதிக்கு மைந்த    அடியவர்க் கெளியோனே 

அமரர்வ ணங்குகந் தாகுறத்தி கொங்கை 

   தனில்முழு குங்கடம் பாமிகுத்த செஞ்சொ 

   லருணைநெ டுந்தடங் கோபுரத்த மர்ந்த   அறுமுகப் பெருமாளே 


 

பதம் பிரித்து உரை

 தமரம் குரங்களும் கார் இருள் பிழம்பு

மெழுகிய அங்கமும் பார்வையில் கொளுந்து 

தழல் உமிழ் கண்களும் காளம் ஒத்த கொம்பும் உ(ள்)ள கதம் கடமா மேல் 

தமர - ஒலி செய்கின்ற குரங்களும் - (கால்) குளம்புகளும் கார் இருள் பிழம்பு - கரிய நிறமுடைய இருளின் திரட்சி மெழுகிய - பூசுவது போன்ற அங்கமும் - உடலும் பார்வையில் - பார்க்கும் பார்வையில் கொளுந்து தழல் உமிழும் - எரிகின்ற நெருப்பைக் கக்கும் கண்களும் - கண்களும் காளம் ஒத்த கொம்பும் - ஊது கொம்பு போன்ற நீண்ட கொம்புகளும் உள - உள்ள கதம் - கோபத்தை உடைய கடமா மேல் - மத யானையைப் போன்ற எருமையின் மீது

தனி வரும் அந்தகன் பாசம் விட்டு எறிந்து 

அட வரும் என்று சிந்தாகுலத்து இருந்து 

தமர் அழ மைந்தரும் சோகம் உற்று இரங்க மரண பக்குவம் ஆ நாள்

தனி வரும் அந்தகன் - ஒப்பற்ற நிலையில் வரும் நமன் பாசம் விட்டு எறிந்து - பாசக் கயிற்றை வீசி எறிந்து அட வரும் என்று - கொல்ல வருவான் என்னும் சிந்தாகுலத்து இருந்து - மனக் கவலையால் இருந்து தமர் அழ - சுற்றத்தார்கள் அழவும் மைந்தரும் சோகம் உற்று  இரங்க - மக்களும் கவலை உற்று வருந்த மரண பக்குவம் - மரணம் குறுகி ஆம் நாள் -  கூடும் நாளில்

கமல முகங்களும் கோமளத்து இலங்கு

நகையு(ம்) நெடும் க(ண்)ணும் காதினில் உற்று உலங்கு  

கனக குதம்பையும் தோடும் வஜ்ர அங்கதமும் அடர் சுடர் வேலும்

கமல முகங்களும் - தாமரை போன்ற திருமுகங்களும் கோமளத்து இலங்கு -அழகுடன் விளங்குகின்ற நகையும் - புன்சிரிப்பும் நெடுங் கண்ணும் - நீண்ட கண்களும் காதினில் உற்று உலங்கு - காதில் விளங்கும் கனக குதம்பையும் - பொன்னாலாகிய காதணியும் தோடும் - தோடும் வஜ்ர அங்கதமும்  - வைர இரத்தினத்தால் ஆகிய தோள்

அணியாகிய வாகுவலயமும் அடல் சுடர் வேலும் - வெற்றி பொருந்திய ஒளி வீசும் வேலாயுதமும்

கடிது உலகு எங்கணும் தாடி இட்டு வந்த 

மயிலும் இலங்கு அலங்கார பொன் சதங்கை 

கழல்ஒலி தண்டையம் காலும் ஒக்க வந்து வரம் எனக்கு அருள் கூர்வாய்

கடிது உலகு எங்கணும் - விரைவாக உலக முழுமையும் தாடியிட்டு வந்த - பயணம் போய் வந்த மயிலும் - மயிலும் இலங்கு அலங்கார - விளங்கும் அலங்காரமாய்  உள்ள பொன் சதங்கை - பொன்னாலான சதங்கை கழல் - வீரக் கழல்கள் ஒலி தண்டையம் - ஒலிக்கும் தண்டைகள் (அணிந்துள்ள) காலும் - திருவடிகளும் ஒக்க வந்து - இவை யாவும் ஒன்று படக் கூடி வர வரம் எனக்கு அருள் கூர்வாய் - வரத்தை எனக்கு அருள் புரிவாயாக

இமகிரி வந்த பொன் பாவை பச்சை வஞ்சி

அகில தலம் பெறும் பூவை சத்தி அம்பை

இள முலையின்செழும் பால் குடித்து இலங்கும் இயல் நிமிர்ந்திடுவோனே

இமகிரி வந்த பொன் பாவை - இமகிரியின் அரசன் பயந்த அழகிய பதுமையாகிய பார்வதி பச்சை வஞ்சி - பச்சை நிறம் கொண்ட பூவை அகில தலம் பெறும் பூவை - அண்டங்களை எல்லாம் பெற்ற பூவை சத்தி அம்பை - சத்தி அம்பை எனப்படும் உமையின் இள முலையின் செழும் பால் - கொங்கைளிலிருந்து செழுமையான பாலை குடித்து இலங்கும் - குடித்து விளங்குகின்ற இயல் நிமிர்திடுவேனே - (பாண்டியனுக்கு இயற்கையாக அமைந்த) கூனை (சம்பந்தராக வந்து) நிமிர்த்தியவனே

இறைவர் இறைஞ்ச நின்று ஆகம ப்ரசங்கம் 

உரை செய்திடும் ப்ரசண்டா விசித்து நின்ற 

ரண முக துங்க வெம் சூர் உடல்பிளந்த அயில் உடை கதிர்வேலா

இறைவர் இறைஞ்ச - சிவபெருமான் வணங்கிக் கேட்க நின்று - அவர் முன் நின்று ஆகம ப்சரங்க உரை செய் - ஆகம ஞான உபதேசம் செய்த ப்ரசண்டா - வீரனே விசித்து நின்ற - பேரணிகளை இறுகக் கட்டி ரணமுக துங்க - போர் முனைக்கு எழுந்த வெம் - கொடிய சூர் உடல் பிளந்த - சூரனுடைய உடலைப் பிளந்த அயில் உடை கதிர் வேலா - வேலாயுதத்தை உடைய ஒளி வீசும் வேலனே

அமணர் அடங்கலும் கூடலில் திரண்டு  

கழுவில் உதைந்து உதைந்து ஏற விட்டு நின்ற 

அபிநவ துங்க கங்கா நதிக்கு மைந்த அடியவர்க்கு எளியோனே

அமணர் அடங்கலும்  - சமணர்கள் அனைவரும் கூடலில் திரண்டு - மதுரையில் கூட்டமாக  கழுவில் உதைந்து உதைந்து ஏற - காலூன்றி கழுவில் ஏறும்படி விட்டு நின்ற - விட்டு நின்ற அபிநவ - புதுமைப் பிரானே துங்க கங்கா நதிக்கு மைந்த  - பரிசுத்தமான கங்கை நதிக்கு மகனே அடியவர்க்கு எளியோனே - அடியவர்களுக்கு எளிமையானவனே

அமரர் வணங்கு(ம்) கந்தா குறத்தி கொங்கை 

தனில் முழுகும் கடம்பா மிகுத்த செம் சொல் 

அருணை நெடும் தடம் கோபுரத்து அமர்ந்த அறுமுகப் பெருமாளே

அமரர் வணங்கும் கந்தா - தேவர்கள் தொழும் கந்தனே குறத்தி கொங்கை தனில் முழுகும் கடம்பா - குறப் பெண்ணாகிய வள்ளியின் கொங்கைகளில் முழுகிய கடம்பனே மிகுத்த செம் சொல் - மிகவும் வல்ல புகழ் விளங்கும் அருணை நெடும் தடம் - திருவண்ணாமலையின் பெரிய கோபுரத்து அமர்ந்த - கோபுரத்தில் வீற்றிருக்கும் அறுமுகப் பெருமாளே - ஆறு முகப் பெருமாளே

 சுருக்க உரை

 கரிய நிற உடலும், கொடுமையும் நிறைந்த நமன் எருமை மீது வந்து, பாசக் கயிற்றை வீசி, என்னைக் கொண்டு போக வரும் மரண சமயத்தில், சுற்றம் அழ, மக்கள் வருந்த, உனது திருமுகங்கள் விளங்க, அணி கலன்களோடு, வேலாயுதமும், மயிலும் ஒன்றுபடக் கூடி வரும் வரத்தை எனக்குத் தந்தருளுக.

இமவான் பெண்ணாகிய பார்வதி, சத்தி, அம்பை என்ற உமா தேவியினுடைய முலைப்பாலை உண்டு, பாண்டியனின் கூனை நிமிர்த்திய சிவ பெருமான் வணங்கிக் கேட்க, அவருக்கு ஆகம உபதேசம் செய்த வீரனே சூரனுடைய உடலைப் பிளந்த ஒளிவேலனே! சமணர்களைக் கழுவில் ஏற்றிய புதுமைப் பிரானே!  கங்கையின் மைந்தனே!  தேவர்கள் வணங்கும் கந்தனே அடியார்க்கு எளிமையானவனே!  குறப் பெண்வளளியின் கொங்கைகளைத் தழுவும் கடம்பனே!  அருணை கோபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே என் எதிர் தோன்ற வரம் அளிக்க வேண்டுகிறேன்

   விளக்கக் குறிப்புகள் 

 கதக் கடமா மேல்

தந்தைகாண்  தண் கடமா முகத்தினாற்குத் 

 தாதை காண் தாழ்ந்து அடியே வணங்குவார்க்குச் சிந்தைதான் ----திருநாவுக்கரசர் தேவாரம்

 

செம் சொல் அருணை   

       சொல் - புகழ்  

 சமணர்கள் கழுவேறிய வரலாறு

கூன் பாண்டியன்  என்ற பாண்டிய மன்னன் வெப்பு நோயால் வருந்தி இருந்த சமயம். அதை போக்க  சமணர்களால்  இயலாமல் போக மன்னனின் உதவியாளர்கள் சம்பந்தரை நாடினர்  அதை எதிர்த்த சமனர்கள் சம்பந்தரை போட்டிக்கு அழைக்க, தர்க வாதத்திலும்  அனல் வாதத்திலும் தோற்று போக  புனல் வாதத்திற்கு அழைத்தனர்

அதன் படி இருதிறத்தாரும் தத்தம் சமய உண்மைகள் எழுதிய ஏட்டினை ஆற்றில் இடும்போதுஎவருடைய ஏடு நீர் ஓட்டத்துக்கு எதிர்த்துச் செல்கின்றதோ அவர்கள் சமயமே மெய்ச்சமயம் எனக் கொள்ளலாம்என்றனர் அப்பொழுது அமைச்சர் குலச்சிறையார் இதிலும் தோற்றவர்களுக்கு என்ன தண்டனை எனக் கேட்டார். சமணர்கள் இவ்வாதில் தோல்வியுற்றோமானால்எங்களை இவ் வேந்தன் கழுவேற்றலாம் என்றனர் மன்னனும் ஒப்புக்கொண்டான் 

ஞானசம்பந்தரும் சமண முனிவர்களும் வைகையாற்றின் கரையை அடைந்தனர். முதலில் சமணர்கள் தங்கள் சமய உண்மையாக கூறும் `அஸ்தி நாஸ்திஎன்ற வசனத்தை எழுதி ஆற்றிலிட்டனர் அம்மொழி ஆற்று நீரோட்டத்தை எதிர்க்கும் ஆற்றலின்றி நீர் ஓடும் நெறியிலேயே ஓடிற்று.

ஞான சம்பந்தர்திருப்பாசுரம் எனப்படும் `வாழ்க அந்தணர்என்னும் திருப்பதிகத்தை பாடிஅதனை ஏட்டில் எழுதச் செய்து அவ் ஏட்டை ஆற்றில் இட்டார். ஏடு வைகை ஆற்று வெள்ளத்தைக் கிழித்து எதிர் ஏறிச் சென்றது

அத்திருப்பதிகப் பாடலில் `வேந்தனும் ஓங்குகஎன  அருளிச் செய்ததால் பாண்டியன்                        கூன் நிமிர்ந்து நின்றசீர் நெடு மாறன் ஆயினான்.

சமணர்கள் தாங்கள் செய்த சபதத்தின்படிக் கழுவேறினர்


பாடலை கேட்க                     Rev 9-8-2022

 

No comments:

Post a Comment