479
சிதம்பரம்
தத்த தந்ததன தான தந்ததன
தத்த தந்ததன தான தந்ததன
ததத் தந்ததன தான தந்ததன தனதான
கட்டி முண்டகர பாலி யங்கிதனை
முட்டி யண்டமொடு தாவி விந்துவொலி
கத்த மந்திரவ தான வெண்புரவி மிசையேறிக்
கற்ப கந்தெருவில் வீதி கொண்டுசுடர்
பட்டி மண்டபமு டாடி யிந்துவொடு
கட்டி விந்துபிச காமல் வெண்பொடிகொ டசையாமற்
சுட்டு வெம்புரநி றாக விஞ்சைகொடு
தத்து வங்கள்விழ சாடி யெண்குணவர்
சொர்க்கம் வந்துகையு ளாக எந்தைபத முறமேவித்
துக்கம் வெந்துவிழ ஞான முண்டுகுடில்
வச்சி ரங்களென மேனி தங்கமுற
சுத்த கம்புகுத வேத விந்தையொடு புகழ்வேனோ
எட்டு ரண்டுமறி யாத என்செவியி
லெட்டி ரண்டுமிது வாமி லிங்கமென
எட்டி ரண்டும்வெளி யாமொ ழிந்தகுரு முருகோனே
எட்டி ரண்டுதிசை யோட செங்குருதி
யெட்டி ரண்டுமுரு வாகி வஞ்சகர்மெ
லெட்டி ரண்டுதிசை யோர்கள் பொன்றஅயில் விடுவோனே
செட்டி யென்றுசிவ காமி தன்பதியில்
கட்டு செங்கைவளை கூறு மெந்தையிட
சித்த முங்குளிர நாதி வண்பொருளை நவில்வோனே
செட்டி யென்றுவன மேவி யின்பரச
சத்தி யின்செயலி னாளை யன்புருக
தெட்டி வந்துபுலி யூரின் மன்றுவளர் பெருமாளே
பதம் பிரித்தது உரை
கட்டி முண்டக அரபாலி அங்கிதனை
முட்டி அண்டமொடு தாவி விந்து ஒலி
கத்த மந்திர அவதான வெண் புரவி மிசை ஏறி
கட்டி = (பிராண வாயுவை பாழாக ஓட ஒட்டாமல்) அதன் நிலையில் பிடித்துக் கட்டி முண்டக அர பாலி அங்கி தனை= மூலாதார கமலத்துள்ள அருள் பாலிக்கும் சிவாக்கினியை மு(மூ)ட்டி = எழச் செய்து அண்டமொடு தாவி = அண்டமாகிய கபால முதலிவற்றைத் தாவச் செய்து விந்து ஒலி கத்த = விந்து நாதம் தோன்றி முழங்க மந்திர அவதான வெண் புரவி மிசை ஏறி = கட்டப்பட்ட கூடத்தில் சாவதானமாக நிற்கும் வெண்மைப் புரவியின் மேல் ஏறி
கற்பக அம் தெருவில் வீதி கொண்டு சுடர்
பட்டி மண்டபம் ஊடாடி இந்துவொடு
கட்டி விந்து பிசகாமல் வெண் பொடி கொடு அசையாமல்
கற்பக அம் தெருவில் = கற்பகத் தருவைப் போல் விரும்பியதை அளிக்க வல்ல அழகிய மேலைச் சிவ வீதியில் வீதி கொண்டு = நேராக ஓடச் செலுத்தி சுடர் பட்டி மண்டபம் ஊடாடி = எல்லா தத்துவங்களும் ஒன்றுபடும் லலாட மண்டபத்தில் தியானம் முதலியவைகளைப் பழகி இந்துவொடு விந்து பிசகாமல் கட்டி = சந்திர கலை சலியாமலும், விந்து கழலாமலும் உறுதி பெறக் கட்டி வெண் பொடி கொடு = அந்த வெண்ணீற்றை அணிந்து கொண்டு அசையாமல் = அசையாமல் நின்று
சுட்டு வெம் புரம் நீறு ஆக விஞ்சை கொடு
தத்துவங்கள் விழ சாடி எண் குணவர்
சொர்க்கம் வந்து கையுள் ஆக எந்தை பதம் உற மேவி
வெம் புரம் நீறு ஆக சுட்டு = திரிபுரமாகிய மும்மலங்களும் வெந்து நீறாகும்படி சுட்டு விஞ்ஞை கொடு = சித்து வித்தைகள் எல்லாம் கைவரப் பெற்று தத்துவங்கள் வீழ சாடி = தத்துவ சேஷ்டைகள் எல்லாம் வேரற்று விழும்படி அழித்து எண் குணவர் சொர்க்கம் = எண்குணவராகிய சிவபதவி வந்து கையுள் ஆக = கை கூடி வந்து சித்திக்க எந்தை பதம் உற மேவி = அச்சிவ பதவியில் நிலை பெற்று
துக்கம் வெந்து விழ ஞான உண்டு குடில்
வச்சிரங்கள் என மேனி தங்கம் உற
சுத்த அகம் புகுத வேத விந்தையொடு புகழ்வேனோ
துக்கம் வெந்து விழ = பிறவித் துன்பம் நீங்க ஞானம் உண்டு = ஞானாமிர்த பானம் குடித்து குடில் வச்சிரங்கள் என = தேகம் வச்சிர காயமாக மேனி தங்கம் உற = நிறம் தங்கம் போலாக சுத்த அகம் புகுத வேத விந்தையொடு = புது மேனியுடன் விசித்திரத்துடன் புகழ்வேனோ = உனது திருப்புகழைப் பாடுவேனோ
எட்டு இரண்டும் அறியாத என் செவியில்
எட்டும் இரண்டும் இது ஆம் இலிங்கம் என
எட்டு இரண்டும் வெளியா மொழிந்த குரு முருகோனே
எட்டு இரண்டும் அறியாத = எட்டும் இரண்டும் பத்து என்பதையும் தெரியாத என் செவியில் = என் காதுகளில் எட்டும் இரண்டும் இது ஆம் இலிங்கம் என = இவையே சிவக் குறியாகிய இலிங்கம் என்று எட்டு இரண்டும் வெளியா = அந்த அகார உகார மகார இலக்கணங்களைத் தெளிவாக மொழிந்த குரு முருகோனே = உபதேசித்த குருவான முருகோனே
[எட்டு இரண்டும் இதுவாம் லிங்கம் என = ஆகார உகார மாகார சேர்க்கையின் பரிணாமமே பஞ்சாட்சரமாகிய சிவ சின்னம் என்று உபதேசித்து, எட்டும் இரண்டும் வெளியாம் மொழிந்த குரு முருகோனே = பத்து லட்சணங்கள் கொண்ட பக்தி மார்க்கத்தை எனக்கு உபதேசித்த முருக ஆச்சார்ய மூர்த்தியே (பக்தியின் இலக்கணக்கள்- 1 சொற்கள் சரி வராமல் தழுதழுத்தல் 2 நா அசைதல் 3 இதழ்கள் துடித்தல், 4 லேசான உடல் நடுக்கம் 5 மயிர் கூச்சம் ( புளகாங்கிதம் ), 6 உடல் சூடு அடைந்து வியர்த்தல் 7தள்ளாடி விழல், 8 கண்ணீர் பெருகுதல், 9 தளர்ந்து இரங்கல், 10 தன் வசம் இழந்து பரவசப்படுதல்) – என நடராஜன் பொருள் விளக்கம் அளிப்பார்]
எட்டு இரண்டு திசை ஓட செம் குருதி
எட்டு இரண்டும் உருவாகி வஞ்சகர் மேல்
எட்டு இரண்டு திசையோர்கள் பொன்ற அயில் விடுவோனே
எட்டு இரண்டு திசை ஓட = பத்து திக்குகளிலும் ஓடும்படி செம் குருதி = சிவப்பு நிற இரத்தம் எட்டு இரண்டும் உருவாகி = பத்து நாட்கள் உருவத் திருமேனி விளங்க
[எட்டு இரண்டும் உருவாகி = போர் புரிவதற்காக பத்து வீர உருவங்கள் எடுத்து, அல்லது 16 திரு உருவங்கள் கொண்டு, ( 1 ஞான சக்திதர மூர்த்தி 2 ஸ்கந்த மூர்த்தி 3தேவ சேனாபதி4சுப்ரமண்ய மூர்த்தி 5கஜவாகன மூர்த்தி 6 சரவணபவ மூர்த்தி 7கார்த்திகேய மூர்த்தி 8 குமார மூர்த்தி 9 சண்முக மூர்த்தி 10 தாரகாரி 11 சேனானி 12 பிரம்ம சாஸ்தா 13வள்ளி கல்யாண சுந்தரர் 14 பால சுவாமி 15க்ரவுஞ்ச பேதன மூர்த்தி 16சிகி வாகனசுவாமி ) - நடராஜன்]
வஞ்சகர் மேல் = (பாசறையில் இருந்து) வஞ்சகர்களாகிய அசுரர்களும் எட்டு இரண்டு திசையோர்கள் = பின்னும் பத்துத் திசை அண்டங்களில் இருந்த அசுரர்களும் பொன்ற = அழிய அயில் விடுவோனே = வேலை விடுபவனே
செட்டி என்று சிவகாமி தன் பதியில்
கட்டு செம் கை வளை கூறும் எந்தை இட(ம்)
சித்தமும் குளிர அநாதி வண் பொருளை நவில்வோனே
செட்டி என்று சிவகாமி = செட்டி வடிவெடுத்த சிவகாமி அங்கயற் கண்ணியாய் தன் பதியில் = மதுரையில் கட்டு செம் கை வளை கட்டு = செவ்விய கையில் வளையல் கட்டுகளை கூறும் = விலை கூறின எந்தை இடம் = சிவபெருமானுடைய சித்தமும் குளிர = மனமும் குளிரும்படி அநாதி வண் பொருளை = தனித்த மூலப் பொருளை நவில்வோனே = உபதேசித்தவனே
சிவகாமி தன் பதியில் கட்டு செம் கை வளை கட்டு கூறும் செட்டி எந்தை இடம் என்று பதம் மாற்றி அமைத்து, ‘பார்வதிதேவி பூ உலகில் உதித்த மதுரையில் வளையல் செட்டியாக கட்டு கட்டாக வளையல்களை விலை கூறி வியாபாரம் செய்த என் தந்தை சிவபெருமான்’ என பொருள் கொள்ளலாம்
செட்டி என்று வனம் ஏவி இன்பரச
சத்தியின் செயல் இ(ன்)னாளை அன்பு உருக
தெட்டி வந்து புலியூரில் மன்று வளர் பெருமாளே
செட்டி என்று = வளையல் செட்டியின் வேடத்துடன் வனம் ஏவி = தினை வனத்துக்குச் சென்று இன்பரச சத்தியின் செயல் இ(ன்)னாளை = அங்கே இச்சா சத்தி மயமான வள்ளி நாயகியை அன்பு உருக = அன்பு கனிந்து தெட்டி வந்து = வஞ்சித்துக் கவர்ந்து புலியூரில் = சிதம்பரத்தில் மன்று வளர் பெருமாளே = (பொன்) அம்பலத்தில் விளங்கும் பெருமாளே
சுருக்க உரை
பிராண வாயுவை வீணாக்காமல் அதன் இடத்தில் பிடித்துக் கட்டி, மூலாதாரத்துள் சிவாக்கினியை மூளச் செய்து, அண்டமாகிய கபாலம் வரை தாவச் செய்து, விந்து நாதம் தோன்றி முழங்க, வெள்ளைப் புரவியின் மேல் ஏறி, மேலைச் சிவ வீதியில் ஓடச் செலுத்தி, பிரகாச மண்டபத்தில் தியானங்களைப் பழகி, வெண்ணீற்றை அணிந்து, அசையாமல் நின்று, சித்து வித்தைகள் கைவரப் பெற்று, சிவ பதவி கை கூடி வந்து, அங்கு உற்று, பிறவித் துன்பம் போக ஞானாமிர்த பானம் பருகி, தேகம் அழகுற்று உனது திருப்புகழைப் எடுத்துப் பாடுவேனோ?
எட்டும் இரண்டும் தெரியாத என் செவிகளில் அந்த அகார, உகார, மகார இலக்கணங்களைத் தௌiவாக உபதேசித்த குரு மூர்த்தியே! எட்டு திக்குகளிலும் இரத்தம் ஓடும்படி பத்து நாட்கள் உருவத் திருமேனி விளங்கப் பாசறையில் இருந்து, வஞ்சகர்களாகிய அசுரர்களும், பத்துத் திசையில் இருந்த அசுரர்களும் அழியும்படி வேலைச் செலுத்தியவனே! செட்டி வடிவெடுத்து சிவகாமியின் ஊராகிய மதுரையில் செவ்விய கைகளில் வளையல் கட்டுகளை விலை கூறிய சிவபெருமான் மனம் குளிர தனித்த மூலப் பொருளை அவருக்கு உபதேசம் செய்தவனே! செட்டியின் வேடத்தில் தினை வனத்துக்குச் சென்று, அங்கு இச்சா சத்தியான வள்ளி நாயகியை அன்புடன் வஞ்சித்துக் கவர்ந்து வந்து, அம்பலத்தில் விளங்கி நிற்கும் பெருமாளே! உன் புகழைப் பாடுவேனோ?
விளக்கக் குறிப்புகள்
எட்டும் இரண்டும் தெரியாத என் செவியில்
அடியார்களுக்கு உரிய பத்து இலக்கணங்களுள் ஒன்றேனும் எனக்கு இல்லை என்பதைக் குறிக்கும்
ஒப்புக
பத்துக்கொலாம் அடியார் செய்கைதானே --
திருநாவுக்கரசர் தேவாரம்
பத்தாம் அடியார்க்கோர் பாங்கனுமாம்
-- திருநாவுக்கரசர் தேவாரம்
பத்து உடை அடியவர்க்கு எளியவன் -- திருவாய் மொழி
பத்து உடையீர் ஈசன் பழ அடியீர் பாங்கு உடையீர் - திருவெம்பாவை
எட்டும் இரண்டும் வெளியா மொழிந்த குரு
பட்டிமண்டபம் ஏற்றினை ஏற்றினை
எட்டினொடு இரண்டும் அறியேனையே
--- திருவாசகம், திருச்சதகம்
அநாதி வண் பொருளை
ஓரெழுத்து - ஓரெழுத்தாகிய ஓம் என்பதே அ, உ, ம் என்னும் மூன்று எழுத்தாகி, அம்மூன்றும் கூடி, ஓம் என்று எழுதும்போது விந்துவாயும், ஓம் என்று உச்சரிக்கும் போது நாதமாகவும் விரிதலால், அ,உ,ம என்னும் மூன்றெழுத்தும், விந்து நாதங்களாகிய வரிவடிவும், ஒலி வடிவும் கூடி ஐந்து எழுத்தாயிற்று. ஆகவே பிரணவமே பஞ்சாக்ஷரமாகும்
ஐந்தெழுத்து : சி - சிவம்; வ - அருள் சத்தி; ய - ஆன்மா; ந - திரோதானம்; ம - ஆணவ மலம்; சி , வ - பதியை உணர்த்துவன; ய - பசுவை உணர்த்தும்; ந,ம - பாசத்தை உணர்த்தும்.
ஆறு எழுத்து (ஓம் சிவாயநம) ஓம் என்பதை விளக்கி அதன் விரிவாக ஓம் நமசிவாய என்னும் ஆறு எழுத்தையும் சிவ பெருமானுக்கு முருகன் விளக்கினார்
எட்டு இரண்டும் உருவாகி வஞ்சகர் மேல்
உருவத் திருமேனியுடன் பத்து நாளில் சூரசம்மாரத்தை முருகன் முடித்தார் என்பதைக் குறிக்கும்
சிவகாமி தன் பதியில் கட்டு
மதுரையில் சிவபெருமான் தேவிக்கு வளையல் விற்ற திருவிளையாடல்
No comments:
Post a Comment