478. எழுகடல்
சிதம்பரம்
478
தனதன தனன தனதன தனன
தனதன தனன தனதான
எழுகடல் மணலை அளவிடி னதிக
மெனதிடர் பிறவி அவதாரம்
இனியுள தபய மெனதுயி ருடலு
மினியுடல் விடுக முடியாது
கழுகொடு நரியு மெரிபுவி மறலி
கமலனு மிகவு மயர்வானார்
கடலுன தபய மடிமையு னடிமை
கடுகியு னடிகள் தருவாயே
விழுதிக ழழகி மரகத வடிவி
விமலிமு னருளு முருகோனே
விரிதல மெரிய குலகிரி நெரிய
விசைபெறு மயிலில் வருவோனே
எழுகடல் குமுற அவுணர்க ளுயிரை
யிரைகொளும் அயிலை யுடையோனே
இமையவர் முநிவர் பரவிய புலியு
ரினில்நட மருவு பெருமாளே.
பதம் பிரித்து உரை
எழு கடல் மணலை அளவிடில் அதிகம்
எனது இடர் பிறவி அவதாரம்
எழு கடல் மணலை = ஏழு கடல்களில் உள்ள மணலை அளவிடில் = அளவிட்டுப் பார்த்தால் அதிகம் = அந்த அளவினும் அதிகமாக உள்ள எனது இடர் பிறவி = என்னுடைய துன்பம் தரும் பிறவிகள் என்னும் அவதாரம் = பிறவித் தோற்றங்கள்.
இனி உனது அபயம் எனது உயிர் உடலும்
இனி உடல் விடுக முடியாது
இனி உனது அபயம் = இனி நான் உனக்கே அடைக்கலம் எனது உயிர் உடலும் = என்னுடை உயிரும் உடலும் இனி = இனியும் உடல் விடுக முடியாது = பிறப்பெடுத்து உடலை விட (என்னால்) முடியாது.
கழுகொடு நரியும் எரி புவி மறலி
கமலனும் மிகவும் அயர்வானார்
நரியும் எரி = நெருப்பும் . புவி = மண்ணும் மறலி = யமனும் கமலன் = பிரமனும் மிகவும் அயர்வானார் = (இவர்கள் எல்லோரும்) சோர்வு அடைந்து விட்டார்கள்
கடன் உனது அபயம் அடிமை உன் அடிமை
கடுகி உன் அடிகள் தருவாயே
கடன் உனது அபயம் = என் கடமை உன்னிடம் அடைக்கலம் புகுவதே அடிமை உன் அடிமை = நான் அடிமை பூண்பதும் கடுகி = விரைவில் உன் அடிகள் தருவாயே = உன் திருவடிகளைத் தந்து அருளுக.
விமலி முன் அருள் முருகோனே
விழு = சிறந்து. திகழ் அழகி = விளங்கும் அழகி மரகத வடிவி = மரகத வடிவம் கொண்டவள் விமலி = பரிசுத்த மானவள் (ஆகிய பார்வதி). முன் அருளும் முருகோனே = முன்பு ஈன்றெடுத்த குழந்தையே.
விரி தலம் எரிய குலகிரி நெரிய
விசை பெறு மயிலில் வருவோனே
விரி தலம் = விரிந்த இடமாகிய (கடல், பூமி). எரிய = எரி கொள்ள குல கிரி நெரிய = கிரௌஞ்ச மலை நெரிந்து பொடிபட. விசை பெறு = வேகமாய் மயிலினில் வருவோனே = மயில் மீது வருபவனே.
இரை கொளும் அயிலை உடையோனே
எழு கடல் குமுற = ஏழு கடல்களும் கொந்தளிக்க அவுணர்கள் உயிரை = அசுரர்களுடைய உயிரை இரை கொ(ள்)ளும் அயிலை = உணவாகக் கொண்ட வேலாயுதத்தை உடையோனே = உடையவனே.
நடம் மருவு பெருமாளே.
சுருக்க உரை
கணக்கற்ற பிறவிகள் எடுத்த நான் இனி உனக்கு அடைக்கலம். இனியும் பிறப்பெடுத்து உடலை விட என்னால் முடியாது. பிரமனும், கழுகும், நரியும்,யமனும்,என்னைப்பலமுறை படைத்தும்பலமுறை பிரித்தும் மிகவும் அலுத்துப்போய் விட்டார்கள்.
அடியனாகிய என்னுடைய கடன் உன்னிடம் அடைக்கலம் புகுவதே. உனது திருவடிகளைத் தந்தருளுவாயாக. அழகியான பார்வதி பெற்ற குழந்தையே! கடலும், கிரௌஞ்சமும் பொடிபட விரைவில் மயிலில் வந்தவனே! அசுரர்கள் உடலை அழிக்க வேலை எய்தியவனே! தேவர்கள் போற்றும் பெருமாளே!..
அக்ரம் வியோம கோளகை மிசை வாழும்
அக்ஷர தேவி கோவின் விதிப்படி மாறி மாறி
அனைத்து உரு ஆய காயம் அது அடைவே கொண்டு
இப்படி யோனி வாய் தொறும் உற்பவியா விழா
உலகில் தடுமாறியே திரிதரு காலம்
எத்தனை ஊழி காலம் என தெரியாது வாழி
இனி பிறவாது நீ அருள் புரிவாயே
- திருப்புகழ், அப்படியேழுமேழும்
இமையோர் முனிவர் பரவிய...
மரகத முழுகிய காகோத ராஜஈ
மநுநெறி யுடன்வளர் சேணாடர் கோனுட னும்பர்சேரும்
--திருப்புகழ், அவகுண.
வேதத் தோன்முத லாகிய தேவர்கள்
பூசித் தேதொழ வாழ்புலி யூரினில்
---திருப்புகழ், ஆரத்தோடணி.
மாதா உடல் சலித்தாள், வல்வினையேன் கால் சலித்தேன்,
வேதாவும் மை சலித்து விட்டானே --- நாதா
இருப்பையூர் வாழ் சிவனை, இன்னம் ஓர்அன்னை
கருப்பை ஊர் வாராமல் கா. --- பட்டினத்தார்.
விளக்க குறிப்பு
கடன் உனது அபயம் ---
காக்கக் கடவிய நீ, காவாது இருந்தக்கால் ஆர்க்குப் பரம் ஆம் அறுமுகவா..... களிகூரும் உனைத் துணை தேடும் அடியேனை சுகப்படவே வை கடன்ஆகும், இதுக் கனம் ஆகும்
. திருப்புகழ், நிலையாத.
No comments:
Post a Comment