பின் தொடர்வோர்

Wednesday, 3 November 2021

474. அவகுண விரகனை



சிதம்பரம்

 

             தனதன தனதன தானான தானன

               தனதன தனதன தானான தானன

               தனதன தனதன தானான தானன            தந்ததான

 

அவகுண விரகனை வேதாள ரூபனை

   அசடனை மசடனை ஆசார ஈனனை

   அகதியை மறவனை ஆதாளி வாயனை        அஞ்சுபூதம்

அடைசிய சவடனை மோடாதி மோடனை

   அழிகரு வழிவரு வீணாதி வீணனை

   அழுகலை யவிசலை ஆறான வூணனை       அன்பிலாத

கவடனை விகடனை நானா விகாரனை

   வெகுளியை வெகுவித மூதேவி மூடிய

   கலியனை அலியனை ஆதேச வாழ்வென   வெம்பிவீழுங்

களியனை யறிவுரை பேணாத மாநுட

   கசனியை யசனியை மாபாத னாகிய

   கதியிலி தனையடி நாயேனை யாளுவ      தெந்தநாளோ

மவுலியி லழகிய பாதாள லோகனு

   மரகத முழுகிய காகோத ராஜனு

   மனுநெறி யுடன்வளர் சோணாடர் கோனுட   னும்பர்சேரும்

மகபதி புகழ்புலி யூர்வாழு நாயகர்

   மடமயில் மகிழ்வுற வானாடர் கோவென

   மலைமக ளுமைதரு வாழ்வே மனோகர        மன்றுளாடும்

சிவசிவ ஹரஹர தேவா நமோநம

   தெரிசன பரகதி யானாய் நமோநம

   திசையினு மிசையினும் வாழ்வே நமோநம செஞ்சொல்சேருந்

திருதரு கலவி மணவாளா நமோநம

   திரிபுர மெரிசெய்த கோவே நமோநம

   ஜெயஜெய ஹரஹர தேவா சுராதிபர்              தம்பிரானே

 

 

 

 பதம் பிரித்து உரை

 

அவகுண விரகனை வேதாள ரூபனை

அசடனை மசடனை ஆசார ஈனனை

அகதியை மறவனை ஆதாளி வாயனை

அவகுணம் - துர்க்குணம் கொண்ட விரகனை - தந்திரசாலியை வேதாள ரூபனை - வேதாளமே உருவமெடுத்தது போன்றவனை அசடனை - முட்டாளை மசடனை - குணம் கெட்டவனை ஆசார ஈனனை - ஆசாரம் குறைவு பட்டவனை அகதியை - கதி அற்றவனை மறவனை - மலை வேடன் போன்றவனை ஆதாளி வாயனை - வீம்பு பேசுபவனை அஞ்சு பூதம் அடைசிய - ஐந்து புதங்களால் சேரப்பட்ட

 

அடைசிய சவடனை மோடாதி மோடனை

அழிகரு வழி வரு வீணாதி வீணனை

அழுகலை அவிசலை ஆறு ஆன ஊணனை அன்பு இலாத

சவுடனை - பயனற்றவனை மோடாதி மோடனை - மூடருள் மூடனை அழு கருவழி வரு - அழிந்து போகும் கருவின் வழியே வந்த வீணாதி வீணனை - வீணருள் வீணனை அழுகலை அவிசலை - அவிழ்ந்து போன பதனழிந்த பண்டம் போன்றவனை ஆறு ஆன ஊணனை - அறு சுவை உண்டியை விரும்புபவனை அன்பு இலாத - அன்பு இல்லாத

கவடனை விகடனை நானா விகாரனை

வெகுளியை வெகு வித மூதேவி மூடிய

கலியனை அலியனை ஆதேச வாழ்வனை வெம்பி வீழும்

கவடனை - வஞ்சனை மிகுந்தவனை விகடனை - உன்மத்தம் கொண்டவனை நானா விகாரனை - பலவிதமான விகார நடவடிக்கைகள் பூண்டவனை வெகுளியை - கோபம் மிக்கவனை வெகுவித மூதேவி மூடிய- நிறைந்த மூதேவித்தனம் மூடியுள்ள கலியனை - சனீஸ்வரனை அலியனை - ஆண்மை இல்லாதவனை ஆதேச வாழ்வனை - வேறுபட்ட வாழ்வு வாழ்பவனை வெம்பி வீழும் - வாடி விழுகின்ற

களியனை அறிவுரை பேணாத மாநுட

கசனியை அசனியை மா பாதனாகிய

கதி இலி தனை நாயேனை ஆளுவது எந்தநாளோ

களியன் - குடியனை அறிவுரை பேணாத - நல்ல அறிவு மொழிகளை விரும்பாத மாநுட கசனியை - கசக்கித் தள்ளப்பட்ட மானுடப் பதரை அசனியை - இடி போன்ற பேச்சு உடையவனை மா பாதனாகிய - மகா பாதகனாய் கதி இலி தனை - கதி இல்லாதவனை (இத்தகைய தீய குணங்கள் உடைய) அடி நாயேனை - கீழுக்கும் கீழான அடியவனை ஆளுவது எந்நாளோ - ஆண்டருளும் நாள் ஒன்று உண்டோ?

 

மவுலியில் அழகிய பாதாள லோகனும்

மரகத முழுகிய காகோத ராஜனும்

மநு நெறி உடன் வளர் சோழ நாடர் கோனுடன் உம்பர் சேரும்

மவுலியில் - மணி முடிகள் அழகிய - அழகாக உடைய பாதாள லோகனும் - பாதாள லோகனாகிய ஆதிசேடனும் மரகத - பச்சை நிறம் முழுகிய - உடல் முழுமையும் உள்ள காகோத ராஜன் - பாம்பு அரசனான பதஞ்சலியும் மநு நெறியுடன் வளர் - மநு நெறி வழுவாது ஆட்சி செய்யும் சோணாடர் கோனுடன் - சோழ நாட்டுத் தலைவரான சோழ ராசனும் உம்பர் சேரும் - தேவர்களோடு சேர்ந்து வாழும்

மகபதி புகழ் புலியூர் வாழு நாயகர்

மட மயில் மகிழ்வுற வான்  நாடர் கோ என

மலை மகள் உமை தரு வாழ்வே மனோகர மன்றுள் ஆடும்

மகபதி - இந்திரனும் புகழ் - புகழ்கின்ற புலியூர் வாழும் நாயகர் - சிதம்பரத்தில் வாழும் சபா நாயகரும் மட மயில் - மயில் போன்ற சிவகாம சுந்தரியும் மகிழ்வுற - மகிழ்ச்சி கொள்ள வானாடர் கோவென - வானில் உள்ள தேவர்களுக்கு எல்லாம் தலைவனாக விளங்கும் மலை மகள் உமை - இமயவன் மகளாகிய பார்வதி தரு வாழ்வே - பெற்ற மகனே மனோகரா - மனதுக்கு விருப்பம் தருவபவனே மன்றுள் - அம்பலத்தில் கூத்தாடும்

சிவசிவ ஹரஹர  தேவா நமோ நம

தெரிசன பரகதி ஆனாய் நமோந ம

திசையினும் இசையினும் வாழ்வே நமோ நம செம் சொல் சேரும்

சிவ சிவ ஹர ஹர தேவா - சிவ சிவ ஹர ஹர தேவனே நமோ நம - உன்னை வணங்குகிறேன் தெரிசன பரகதி ஆனாய் - கண்டு களிக்க வேண்டிய மேலான கதிப் பொருளானவனே நமோ நம - உன்னை வணங்குகிறேன் திசையினும் - எத்திசையிலும் இசையினும் - எந்த இசை ஞானத்திலும் வாழ்வே நமோ நம - வாழ்பவனே, உன்னை வணங்குகிறேன்

திரு தரு கலவி மணாளா நமோ நம

திரிபுரம் எரி செய்த கோவே நமோ நம

ஜெயஜெய ஹரஹர தேவா சுர அதிபர் தம்பிரானே

செம் சொல் சேரும் - இனிய சொற்களைப் பேசுகின்ற திரு தரு கலவி - வள்ளி நாயகியாரின் கலவி இன்பத்தைப் பெறும் மணவாளா நமோ நம – மணவாளனே, உன்னை வணங்குகிறேன் திரி புரம் எரி செய்த - திரி புரங்களை எரித்த கோவே - தலைவனே நமோ நம - உன்னை வணங்குகிறேன் ஜெய ஜெய ஹர ஹர தேவா - ஜெய ஜெய ஹர ஹர தேவனே சுர அதிபர் தம்பிரானே - தேவர் தலைவர்களுக்குத் தம்பிரானே


சுருக்க உரை

 பல துர்க் குணங்களைக் கொண்ட, முழு மூடனானவனும், நாயினும்கீழோனாவனும் ஆகிய என்னை ஆண்டருளுவதும் ஒரு நாள் உண்டோ? ஆதிசேடனும், பதஞ்சலியும், சோழ நாட்டு அரசனும், தேவர்களோடு சேர்ந்து வரும் இந்திரனும் புகழ்கின்ற சிதம்பரத்தில் வாழ்கின்ற சபா நாயகரும்,

சிவகாம சுந்தரியும் மகிழ்ச்சி கொள்ள வானோர் தலைவனாக விளங்குபவனே! மலைமகளான உமை பெற்ற செல்வமே! அம்பலத்தில் ஆடும் தேவனே!

கதிப் பொருளே! எத்திசையிலும் எந்த இசை ஞானத்திலும் வாழ்பவனே! உன்னை வணங்குகிறேன்

வள்ளி நாயகியின் கலவி இன்பத்தைப் பெறும் மணவாளனே! உன்னை வணங்குகிறேன். நாயேனை ஆளுவதும் ஒரு நாள் உண்டாகுமோ?

 

விளக்கக் குறிப்புகள்

 ஆறான ஊணனை

     அறுசுவை உண்டி - கசப்பு, இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு காரம்

சோணாடர் கோனுடன்

சோழ நாடு, சோழன் இரண்டின் மீதும் அருணகிரியாருக்கு விருப்பும்  மதிப்பும் உண்டு

சூடான தொருசோதி மலைமேவு

சோணாடு புகழ்தேவர் பெருமாளே--திருப்புகழ், கோடானமடவார்கள்

சிதம்பரத்தில் பூசித்துப் பேறு பெற்றவர்கள்

வியாக்ரபாதர் (புலிக்கால் முனிவர்), பதஞ்சலி, இரணியவர்மன்

செஞ்சொல் சேரும் திரு

  தண்க டங்க டந்து சென்று

  பண்க டங்க டர்ந்த இன்சொல்

    திண்பு னம்பு குந்து கண்டு றைஞ்சுகோனே ---

------ திருப்புகழ், வந்துவந்துமுன்

     

  கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரைக் கொவ்வைச்  

    செவ்வாய்  வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோளண்ணல்

    வல்லமே      -                              --- கந்தர் அலங்காரம்

நடராசர் வேறு முருகன் வேறு என்னும் வேற்றுமை காட்டாது உமைதரு வாழ்வே என்றும்,  திரிபுரம் எரி செய்த கோவே என்றும் பாடியுள்ளார் 

No comments:

Post a Comment