பின் தொடர்வோர்

Wednesday, 15 September 2021

473. பங்கயனார்


திருக்காளத்தி

 


தென் கயிலாயமாகிய திருக்காளத்தியில் வாழும் முருகா, கலங்காத அறிவைத் தந்து எங்களுகளுக்கு அருள் செய்வீர்.

       

         தந்தன தானத் தந்தன தானத்                             

                தந்தன தானத்                    தனதான

 

பங்கய னார்பெற் றிடுஞ்ச ராசர

    அண்டம தாயுற் றிருந்த பார்மிசை

    பஞ்சவர் கூடித் திரண்ட தோர்நர          உருவாயே

பந்தம தாகப் பிணிந்த ஆசையில்

   இங்கித மாகத் திரிந்து மாதர்கள்

   பண்பொழி சூதைக் கடந்த டாதுழல்        படிறாயே

சங்கட னாகித் தளர்ந்து நோய்வினை

   வந்துடல் மூடக் கலங்கி டாமதி

   தந்தடி யேனைப் புரந்தி டாயுன             தருளாலே

சங்கரர் வாமத் திருந்த நூபுர

   சுந்தரி யாதித் தருஞ்சு தாபத

   தண்டைய னேகுக் குடம்ப தாகையின்    முருகோனே

திங்களு லாவப் பணிந்த வேணியர்

   பொங்கர வாடப் புனைந்த மார்பினர்

   திண்சிலை சூலத் தழுந்து பாணியர்    நெடிதாழ்வார்

சிந்துவி லேவுற் றெழுந்த காளவி

   டங்கள் மீதிற் சிறந்த சோதியர்

   திண்புய மீதிற் றவழ்ந்து வீறிய               குருநாதா

சிங்கம தாகத் திரிந்த மால்கெரு

    வம்பொடி யாகப் பறந்து சீறிய

   சிம்புள தாகச் சிறந்த காவென            வருகோமுன்

செங்கதி ரோனைக் கடிந்த தீவினை

   துஞ்சிட வேநற் றவஞ்செய் தேறிய

   தென்கயி லாயத் தமர்ந்து வாழ்வருள்      பெருமாளே

 

பதம் பிரித்து உரை

 பங்கயனார் பெற்றிடும் சர(ம்) அசர(ம்)

அண்டமதாய் உற்றிருந்த பார் மிசை

பஞ்சவர் கூடி திரண்டது ஓர் நர உருவாயே

பங்கயனார் - தாமரை மலரில் உள்ள [பங்கயம் - பங்கஜம், சேற்றில் உதித்தது] பிரமன் பெற்றிடும் - படைத்துள்ள சரம் அசரம் - அசைவன, அசையாதனவாய் உள்ள அண்டமதாய் உற்று இருந்த - அண்டமாகிப் பொருந்தி இருக்கும் பார் மிசை - இந்தப் பூமி மேல் பஞ்சவர் கூடி - ஐம்பூதங்களும் கூடி திரண்டது ஓர் - ஒன்றாகி ஒரு நர உருவாயே - மனித உருவம் அமைந்து

 பந்தமது ஆகி பிணிந்த ஆசையில்

இங்கிதமாக திரிந்து மாதர்கள்

பண்பு ஒழி சூதை கடந்திடாது உழல் படிறு ஆயே

பந்தமது ஆகப் பிணிந்த - பாசத்தால் கட்டுண்ட ஆசையில் - ஆசையில் ங்கிதமாகத் திரிந்து - இன்பமுற்றுத் திரிந்து மாதர்கள் - விலை மாதர் பண்பு ஒழி சூதை - நற்குணம் இல்லாத வஞ்சகச் சூழலை கடந்திடாது -  கடந்திடாமல் உழல் - திரிகின்ற படிறு ஆயே - பொய் கலந்தவனாய்

 சங்கடன் ஆகி தளர்ந்து நோய் வினை

வந்து உடல் மூடி கலங்கிடா மதி

தந்து அடியேனை புரந்திடாய் உனது அருளாலே

சங்கடனாகி - வேதனைப் படுபவனாகி தளர்ந்து - சோர்வடைந்து நோய் வினை வந்து - பிணியும் வினையும் வந்து உடல் மூடக் கலங்திடா - உடலை மூடி அதனால் கலக்கம் அடையாத மதி - அறிவை தந்து - கொடுத்து அடியேனை - அடியேனாகிய என்னை புரந்திடாய் - காப்பாற்றுவாயாக உனது அருளாலே - உன்னுடைய திருவருளைப் பாலித்து

சங்கரர் வாமத்து இருந்த நூபுர

சுந்தரி  ஆதி தரு(ம்) சுதா பத

தண்டையனே குக்குட பதாகையின் முருகோனே

சங்கரர் - சிவபெருமானுடைய வாமத்து இருந்த - இடது பாகத்தில் உறையும் நூபுர சுந்தரி - சிலம்பணிந்த அழகி ஆதித் தரும் - ஆதி பெற்ற சுதா - குழந்தையே பத தண்டயனே - தண்டைகள் அணிந்த பாதங்களை உடையவனே குக்குட பதாகையின் - கோழிக் கொடியைக் கொண்ட முருகோனே - முருகனே

 திங்கள் உலாவப் பணிந்த வேணியர்

பொங்கு அரவு ஆட புனைந்த மார்பினர்

திண் சிலை சூலத்து அழுந்து பாணியர் நெடிது ஆழ்வார்

திங்கள் உலாவ - நிலவு (சடையில்) உலாவ பணிந்த - பணித்த வேணியர் - சடையை உடையவர் பொங்கு அரவு ஆட - மேலெழுந்து பாம்பு ஆடும்படி புனைந்த - அணிந்துள்ள மார்பினர் - மார்பை உடையவர் திண் சிலை - வலிமை வாய்ந்த (பினாகம் என்னும்) வில்லும் சூலத்து அழுந்தும் – சூலாயுதமும் பொருந்தி உள்ள பாணியர் - திருக்கையை உடையவர் நெடிது ஆழ்வார் - நிரம்ப ஆழ்ந்தும் நீண்டும் உள்ள

சிந்துவிலே உற்று எழுந்த காள விடம்

கள(ம்) மீதில் சிறந்த சோதியர்

திண் புய(ம்)மீதில் தவழ்ந்து வீறிய குருநாதா

சிந்துவிலே - கடலில் உற்று எழுந்த காளம் - இருந்து தோன்றிய கரிய  விடம் - விஷத்தை  களம் மீதில் சிறந்த -

கண்டத்தில் விளங்கும்படி வைத்த சோதியர் - பேரொளியினர் திண் புயம் மீதில் - (அத்தகைய பெருமானுடைய) வலிய தோள்களில் தவழ்ந்து வீறிய - தவழ்ந்து பொலிந்த குரு நாதா - குருநாதரே

 சிங்கமதாக திரிந்து மால் கெருவம்

பொடியாக பறந்து சீறிய

சிம்புளதாக சிறந்து அகா என வரு கோ முன்

சிங்கமதாக - நரசிங்கமாக திரிந்த மால் - திரிந்த திருமாலின்  கெருவம் பொடியாக - அகந்தை பொடி பட்டு அழிய [கெருவம் – கர்வம்] பறந்து சீறிய - பறந்து கோபித்த சிம்புளதாகி - சரபப் பட்சியாய் (உரு எடுத்து) சிறந்து -  விளங்கி அகா எனவரு கோ முன் - ஆகா என்று சப்தித்து வந்த பெருமானாகிய வீரபத்திரர் முன்பு

செம் கதிரோனை கடிந்த தீ வினை

துஞ்சிடவே நல் தவம் செய்து ஏறிய

தென் கயிலாயத்து அமர்ந்து வாழ்வருள் பெருமாளே

செம் கதிரோனை - சூரியனை கடிந்த - தண்டித்த தீ வினை தோஷம் துஞ்சிடவே - நீங்க நல் தவம் செய்து ஏறிய - நல்ல தவத்தைச் செய்து சிறப்படைந்த தென் கயிலாயத்து அமர்ந்து - தென் கயிலாயமாகிய திருக்காளத்தியில் வீற்றிருந்து அருள் பெருமாளே - அடியார்களுக்கு அருளும் பெருமாளே

 

சுருக்க உரை

 பிரமன் படைத்த அசையும் அசையாப் பொருள்கள் உள்ள அண்டமாகப் பொருந்தி இருக்கும் இப்பூமியில், ஐம்புதங்களுடன் ஒன்றாகக் கூடி, மனிதனாய் உரு

எடுத்து, பந்த பாசங்களால் கட்டுண்டு, இன்பமுற்றுத் திரிந்து, பொது மகளிர்களின் சூழலைக் கடந்திடாமல் திரிகின்ற, பொய் கலந்தவனாய், வேதனைப் படுபவனாய்ச் சோர்வடைந்து, நோயுற்று, கலக்கம் அடையாத அறிவைத் தந்து அடியேனைக் காப்பாற்றுவாயக

சிவபெருமான் இடப்பாகத்தில் உறையும் உமை பெற்ற குழந்தையே தண்டைகள் அணிந்த பாதங்களை உடையவனே நிலவு சடையில் இருக்கவும், பாம்பு ஆடவும், பினாகம் என்ற வில்லும் சூலாயுதமும் கையில் ஏந்திய சிவபெருமான் கடலில் எழுந்த கரிய விடத்தைக் கழுத்தில் கொண்டவர் அத்தகைய பெருமானுக்குக் குருநாதரே நரசிங்கமாகத் திரிந்த திருமாலின் கர்வத்தை அடக்க, சரபப் பட்சியாய் வந்த வீரபத்திரர் முன்பு தக்க்ஷ யாகத்தில் சூரியனைத் தண்டித்த தோஷம் நீங்க, தென் கயிலாயத்தில் தவம் செய்து சிறப்படைந்த காளத்தியில் வீற்றிருக்கும் பெருமாளே அடியேனைக் காக்க வந்திடாயோ?

 

விளக்கக் குறிப்புகள்

 

சிங்கமதாகத் திரிந்த மால்கொடு

நரசிங்கத்தை வீர பத்திரர் சரபப் பட்சியாக அடக்கிய வரலாறு

இரணியன் இரத்தத்தை உறிஞ்சிய பின் வெறி ஏறி திருமால் உக்கிரம் கொண்டார் சிவபெருமான் வீரபத்திரரை ஏவ, அவர் சரபப் பட்சி உருவம் எடுத்து அந்த நரசிங்கத்தை அடக்கினார்

செஞ்சச் சிம்புட் சொருபம தானவர் – திருப்புகழ், செஞ்சொற்பண்

 செங்கதிரோனைக் கடிந்த தீ வினை

தக்க யாகத்தில் ஒரு சூரியனுடைய கண்ணைப் பறித்தும், ஒரு சூரியனுடைய பற்களைத் தகர்த்தும் வீர பத்திரர் தண்டனை புரிந்தார்

சூரியனார் தொண்டை வாயினிற் பற்களை

வாரி நெரித்தவா றுந்தீபற          – திருவாசகம், திருவுந்தியார்

 

தீவினை துஞ்சிடவே நல் தவம் செய்தேறிய

வீரபத்திரர் சூரியனைக் கடிந்த தீ வினை தீர தவம் செய்தார்

அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்

அருக்கன் ஆவான் அரன் உரு அல்லனோ - திருநாவுக்கரசர் தேவாரம்

 பஞ்சவர் கூடி – மண், நீர் கனல் காற்ரு விண் என்ற ஐம்பூதங்களின் பரிணாமத்தால் இந்த மனித உடம்பு உண்டாயாயிற்று. அதனால் இந்த உடம்பு “பூத பரிணாம தநு” என்று பேர் பெற்றது.

 சம் - சுகம்.  கரம் - செய்வது.  சுகத்தைச் செய்கின்றவர் சங்கரர். 

 கு - பூமி.  குடம் - பேதிப்பது. பூமியைக் காலினால் பேதிப்பதால் கோழி, குக்குடம் என்று பேர் பெற்றது

 திங்களு லாவப் பணிந்த என்பதை திங்கள் உலாவ அப்பு ( கங்கை) பணிந்தவர் என்றும் பொருள் கொள்ளாலாம்

No comments:

Post a Comment