467
திருவருணை
தானதன தானத் தானதன தானத்
தானதன தானத்
தனதான
பேதகவி ரோதத் தோதகவி நோதப்
பேதையர்கு லாவைக் கண்டுமாலின்
பேதைமையு றாமற் றேதமக லாமற்
பேதவுடல் பேணித்
தென்படாதே
சாதகவி காரச் சாதலவை போகத்
தாழ்விலுயி ராகச்
சிந்தையாலுன்
தாரைவடி வேலைச் சேவல்தனை யேனற்
சாரல்மற மானைச்
சிந்தியேனோ
போதகம யூரப் போதகக டாமற்
போதருணை வீதிக்
கந்தவேளே
போதகக லாபக் கோதைமுது வானிற்
போனசிறை மீளச்
சென்றவேலா
பாதகப தாதிச் சூரன்முதல் வீழப்
பாருலகு வாழக்
கண்டகோவே
பாதமலர் மீதிற் போதமலர் தூவிப்
பாடுமவர் தோழத்
தம்பிரானே
பதம் பிரித்து உரை
பேதக
விரோத தோதக
விநோத
பேதையர் குலாவை கண்டு மாலின்
பேதக - மனம் வேறுபட்ட
விரோத - பகைமை
தோதக - வஞ்சகம், இவைகளைக் கொண்ட
விநோத - விசித்திரமான
பேதையர் - பேதையராகிய மங்கையர்கள்
குலாவை - மகிழ்ச்சியுடன் உறவாடுதலை
கண்டு - பார்த்து
மாலின் - மோகத்தால்
பேதைமை உறா மற்று ஏதம் அகலாமல்
பேத உடல் பேணி தென் படாதே
பேதைமை உறா - அறியாமை உற்று
மற்று ஏதம் – அதனால் குற்றம் குறைகள்
அகலாமல் - என்னை விட்டு நீங்காமல்
பேதம் - மாறுதலை அடையும்
உடல் பேணி – உடலை விரும்பிப் பாதுகாத்து
தென் படாதே - வெளியே உலவாமல்
சாதக(ம்) விகார சாதல் அவை போக
தாழ்வில் உயிராக சிந்தையால் உன்
சாதக(ம்) - பிறப்பும்
விகாரம் - (பாலன், குமரன், கிழவன் என்னும் வேறுபாடும்
சாதல் - இறப்பும்
அவை போக – ஆகிய இவைகள் தொலைய
தாழ்வு இல் - குறைவு இல்லாத உயிராக - என் உயிர் விளங்க
சிந்தையால் – மனத்தால்
தாரை வடிவேலை சேவல் தனை ஏனல்
சாரல் மற மானை சிந்தியேனோ
உன் தாரை - உனது புகழ் கொண்ட
வடி வேலை – கூர்மையான வேலையும்
சேவல் தனை - சேவலையும்
ஏனல் சாரல் - தினைப் புன மலைச் சாரலில் இருந்த
மற மானை - வேடர்களின் மான் போன்ற
வள்ளியையும் சிந்தியேனோ - தியானிக்க மாட்டேனோ?
போதக மயூர போதக போது அக அகடு ஆ மன்
போது அருணை வீதி கந்த வேளே
போதகம் - யானை
மயூர(ம்) - மயில் (இவைகளின் மேல்) போது
அக(ம்) - மலர் ஆசனம் இட்ட
அகடு ஆ மன் போது -நடு இருப்பிடத்தில் எழுந்தருளி வருகின்ற
போதக கலாப கோதை முது வானில்
போன சிறை மீள சென்ற வேலா
போதகம் - யானையாகிய ஐராவதம் வளர்த்த
கலாபக் கோதை - மயில் போன்ற தேவசேனை
வாழ்ந்த முது - பழைய
வானில் – விண்ணுலகத்தார்
போன - சென்றிருந்த
சிறை மீள - சிறையினின்றும் அவர்கள் மீண்டு வர
சென்ற – போருக்கு
எழுந்த வேலா - வேலனே
பாதக பதாதி சூரன் முதல் வீழ
பார் உலகு வாழ கண்ட கோவே
பாதாக - பெரிய பாபச் செயல்களைச் செய்த
பதாதி - காலாட்படைகளை உடைய
சூரன் முதல் வீழ - சூரன் முதலானோர் வீழ்ந்து மடிய
பார் உலகு வாழ - மண்ணுலகும், விண்ணுலகும்
வாழும் பொருட்டு கண்ட
கோவே - கருணை புரிந்த தலைவனே
பாத மலர் மீதில் போது மலர் தூவி
பாடும் அவர் தம்பிரானே
பாத மலர் மீதில் - உனது திருவடி மலரை நினைந்து போது
மலர் தூவி - ஞான பூசனை செய்து
பாடும் அவர் தோழ – பாடும் தொண்டர்களுடைய தோழனே
தம்பிரானே - தம்பிரானே
சுருக்க உரை
பகைமையும் வஞ்சகமும் கொண்ட விலை மாதர்களுடன் உறவாடுவதால் என்அறியாமை அதிகரித்து, அதனால் ஏற்படும் குற்றங்கள் என்னை விட்டு நீங்காது, உடலை விரும்பிப் போற்றி, நான் வாழாமல், பிறப்பும், இறப்பும் தொலைந்து என் உயிர் விளங்கும் பொருட்டு, உனது கூர்மையான வேலையும், சேவலையும், வேடப் பெண் வள்ளியையும் தியானிக்க மாட்டேனோ?
யானை, மயில் இவைகளை நடுவில் அமைத்துத் திருவண்ணாமலை வீதியில் உள்ள கந்தவேளே! ஐராவதம் என்ற யானை வளர்த்த தேவசேனை வாழ்ந்த விண்ணுலகத்தோர் சிறையினின்று மீளும்படி போருக்கு எழுந்த வேலனே! சூரனும் அவனுடைய
சேனைகளும் மடியவும், மண்ணும் விண்ணும் வாழவும் கருணை புரிந்த தலைவனே! உனது திருவடி மலரை நினைத்து, ஞான பூசனை செய்யும் தொண்டர்களுடைய தோழனே! தம்பிரானே! வேல், சேவல், இவைகளையும், வள்ளி அம்மையையும் தியானிக்க மாட்டேனோ?
விளக்கக் குறிப்புகள்
போதகம் மயூரப் போது அக
அருள் செய்வதற்கும் போர் புரிவதற்கும் எழுந்தருளும் போது முருக வேள் பிணிமுகம்
என்னும் யானை மீது செல்வார் என்பர்
கடுஞ்சின விறல்வேள் களிறூர்ந் தாங்கு -------- பதிற்றுப் பத்து
மாறாவென்றிப் பிணிமுக ஊர்தி ஒண்செய்யோனும்
------ புறநானூறு
சேயுயர் பிணிமுகம் ஊர்ந்தமர் உழக்கி - ----- பரிபாடல்
ஓடாப் பூட்கை பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டியாங் கெய்தினர் வழிபட- திருமுருகாற்றுப் படை
சாதக விகாரச் சாதல் - துன்பமான பிறப்பு இறப்பு
பாடலை கேட்க rev 9-8-2022
No comments:
Post a Comment