திருக்காளத்தி
தனத்தா னத்தத் தனனா தந்தத்
தனத்தா னத்தத் தனனா தந்தத்
தனத்தா னத்தத் தனனா தந்தத் தனதான
சரக்கே றித்தப் பதிவாழ் தொந்தப்
பரிக்கா யத்திற் பரிவோ டைந்துச்
சதிக்கா ரர்ப்புக் குலைமே விந்தச் செயல்மேவிச்
சலித்தே மெத்தச் சமுசா ரம்பொற்
சுகித்தே சுற்றத் தவரோ டின்பத்
தழைத்தே மெச்சத் தயவோ டிந்தக் குடிபேணிக்
குரக்கோ ணத்திற் கழுநா யுண்பக்
குழிக்கே வைத்துச் சவமாய் நந்திக்
குடிற்கே நத்திப் பழுதாய் மங்கப் படுவேனைக்
குறித்தே முத்திக் குமறா வின்பத்
தடத்தே பற்றிச் சகமா யம்பொய்க்
குலக்கால் வற்றச் சிவஞா னம்பொற் கழல்தாராய்
புரக்கா டற்றுப் பொடியாய் மங்கக்
கழைச்சா பத்தைச் சடலா னுங்கப்
புகைத்தீ பற்றப் புகலோ ரன்புற் றருள்வோனே
புடைத்தே யெட்டுத் திசையோ ரஞ்சத்
தனிக்கோ லத்துப் புகுசூர் மங்கப்
புகழ்ப்போர் சத்திக் கிரையா நந்தத் தருள்வோனே
திருக்கா னத்திற் பரிவோ டந்தக்
குறக்கோ லத்துச் செயலா ளஞ்சத்
திகழ்ச்சீ ரத்திக் கழல்வா வென்பப் புணர்வோனே
சிவப்பே றுக்குக் கடையேன் வந்துட்
புகச்சீர் வைத்துக் கொளுஞா னம்பொற்
றிருக்கா ளத்திப் பதிவாழ் கந்தப் பெருமாளே
பதம் பிரித்து உரை
சரக்கு ஏறி இத்த பதி வாழ்
தொந்த
பரி காயத்தில் பரிவோடு ஐந்து
சதி காரர் புக்கு உலை மேவு
இந்த செயல் மேவி
சரக்கு ஏறி - பொருள் மிகுந்த இத்தப் பதி வாழ் - இந்தப் பூமியில் வாழ்கின்ற தொந்தப்பரி - சம்பந்தத்தை வகிக்கின்ற காயத்தில் - இவ்வுடலில் பரிவோடு - அன்பு பூண்டவர் போன்று உள்ள ஐந்துச் சதிக்காரர் - ஐந்து (பொறிகளாகிய) மோசக்காரர்கள் புக்கு - புகுந்து உலை மேவு - அழிவுக்குக்
காரணமான இந்தச் செயல் மேவி - இத்தகைய தொழல்களை விரும்பி மேற் கொண்டு
சலித்தே மெத்த சமுசாரம்
பொன்
சுகித்தே சுற்றத்தவரோடு
இன்ப(ம்)
தழைத்தே மெச்ச தயவோடு இந்த
குடி பேணி
சலித்தே - சஞ்சலப்பட்டு மெத்த - மிகவும் சமுசாரம் - குடும்பம் பொன் - செல்வம் சுகித்தே - சுகத்துடன் அனுபவித்து சுற்றத்தவரோடு - சுற்றத்தாருடன் இன்பம் தழைத்தே - மகிழ்ச்சி மிக்கு மெச்ச - புகழும்படி
தயவோடு - அன்புடனே இந்தக் குடி பேணி - இந்த வாழ்விடத்தை விரும்பி
குரக்கோணத்தில் கழு நாய்
உண்ப
குழிக்கே வைத்து சவமாய்
நந்து
இ குடிற்கே நத்தி பழுதாய்
மங்க படுவேனை
குரக் கோணத்தில் - குளம்புத் தன்மை உள்ள மூக்கை உடைய கழு - கழுகும் நாய் - நாயும் உண்ப - உண்ண குழிக்கே வைத்து - குழியில் வைத்து சவமாய் - பிணமாய் நந்து - கெடுகின்ற இக் குடிற்கே நத்தி - குடிசையாகிய இந்த உடலையே விரும்பி பழுதாய் - பயனற்று மங்கப்படுவேனை - அழிதல் உறுகின்ற என்னை
குறித்தே முத்திக்கு ம(a)றா இன்ப
தடத்தே பற்றி சக மாயம் பொய்
குலம் கால் வற்ற சிவ ஞானம்
பொன் கழல் தாராய்
குறித்தே - குறி கொண்டு முத்திக்கு - முத்திக்கு ம(a)றா - மாறுதல் இல்லாத இன்பத் தடத்தே பற்றி - இன்ப வழியைக் கைப்பற்றி சக மாயம் - உலக மாயை பொய் - பொய் குலம் கால் - குலம் குடி
என்கின்ற பற்றுக் கோடு வற்ற - வற்றிப்போக சிவ ஞானம் - சிவ ஞானமாகிய பொன் கழல்
தாராய் - உனது அழகிய திருவடியைத் தந்து அருளுக
புர காடு அற்று பொடியாய்
மங்க
கழை சாபத்து ஐ சடலான் உங்க
புகை தீ பற்ற அ புகலோர்
அன்புற்று அருள்வோனே
புரக் காடு அற்று - திரி புரம் என்னும் காடு அழிந்து பொடியாய் மங்க - பொடியாய் மறையவும் கழைச் சாபத்து
- கரும்பு வில்லை ஏந்திய ஐ - அழகிய சடலான் உங்க - உடலை உடைய மன்மதன் அழியவும் புகைத் தீ பற்ற - புகை கொண்ட தீ பற்றச் செய்த அப் புகலோர் - அந்த வெற்றியாளராகிய சிவபெருமானால் அன்புற்று அருள்வோனே - அன்பு கொண்டு அருளப் பட்டவனே
புடைத்தே எட்டு திசையோர்
அஞ்ச
தனி கோலத்து புகு சூர் மங்க
புகழ் போர் சத்திக்கு
இரையா ஆநந்தத்து அருள்வோனே
புடைத்தே - அடித்து எட்டுத் திசையோர் - எட்டுத் திக்குகளிலும் உள்ளோர்களும் அஞ்ச - பயப்படும்படி தனிக் கோலத்து - தனிப்பட்ட உருவத்துடன் புகு சூர் - புகுந்த சூரன் மங்க - அழியும்படி அவனை புகழ்ப் போர் சத்திக்கு - போரில் புகழ் கொண்ட சத்தி வேலாயுதத்துக்கு இரையா - உணவாக ஆனந்தத்து அருள்வோனே - மகிழ்ச்சியுடன் அருளியவனே
திரு கானத்தில் பரிவோடு
அந்த
குற கோலத்து செயலாள் அஞ்ச
திகழ் சீர் அத்திக்கு அழல்
வா என்ப புணர்வோனே
திருக் கானத்தில் - அழகிய வள்ளி மலைக் காட்டில் பரிவோடு - அன்பு பூண்டு அந்தக் குறக் கோலத்து - அந்தக் குறக்கோலம் பூண்டிருந்த செயலாள் - செய்கையாளகிய வள்ளி அஞ்ச
- பயப்பட்ட பொழுது திகழ்ச் சீர் - விளங்கும் சீர் பெற்ற அத்திக்கு - (இந்த) யானைக்கு அழல் - (பயந்து) அழ வேண்டாம் வா என்ப - வா என்று சொல்லி புணர்வோனே
- அவளை அணைந்தவனே
சிவ பேறுக்கு கடையேன் வந்து உள்
புக சீர் வைத்து கொ(ள்)ளு
ஞானம் பொன்
திரு காளத்தி பதி வாழ் கந்த
பெருமாளே
சிவப் பேறுக்கு - சிவகதி அடையும் பேற்றுக்கு கடையேன் - கடையவனாகிய நான் வந்து - வந்து உள் புக - உட்சேருவதற்கு சீர் வைத்து - வேண்டிய சிறப்பினைத் தந்து கொ(ள்)ளு - என்னை ஏற்றுக் கொள்வாயாக ஞானம் பொன் - ஞானமும் பொலிவும் திரு - அழகும் நிறைந்த காளத்திப் பதி வாழ் - திருக் காளத்தி என்னும் தலத்தில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே - கந்தப் பெருமாளே
சுருக்க உரை
பொருள் மிகுந்த இfந்தப் பூமியில், உடலினுள் அன்பு பூண்டவர் போல உள்ள ஐந்து பொறிகளாகிய மோசக்காரர்கள் வாழும் இவ்வுடலை விரும்பி, குடும்பம், செல்வம் முதலிய இன்பங்களை அனுபவித்துப் பின்னர் கழுகும் நாயும் உண்ணும்படி பயனற்று அழிதல் உறுகின்ற என்னை முத்திக்கு மாறுதல் இல்லாத இன்ப வழியைக் கைப்பற்றி, உலக மாயை, பொய், குலம், குடி என்னும் பற்றுக்கோடு வற்றிப் போகச் சிவ ஞானமாகிய உனது திருவடியைத் தந்து அருளுக.
திரிபுரங்கள் பொடிபட்டு
மறையவும், மன்மதன் வெந்து சாம்பலாகவும், தீ பற்றச் செய்த சிவபெருமானின் அன்பும் அருளும் பெற்றவனே! எட்டுத் திசைகளில்
உள்ள எல்லோரும் அஞ்ச, பயங்கரமான உருவத்துடன் புகுந்த சூரன் அழியும்
படி சத்தி வேலேச் செலுத்தியவனே! வள்ளியைக் காட்டில், ‘இந்த யானைக்குப்
பயப்பட வேண்டாம்’ என்று கூறி அவளை அணைத்தவனே! சிவப் பேற்றைக் கடையவனாகிய நானும் பெறும்படி
எனக்குத் தந்து அருளுக! திருக்காளத்தியில் வீற்றிருக்கும் பெருமாளே! சிவ ஞானம் பெற
பொற்கழல் தாராய்
ஒப்புக
ஐந்து சதிக்காரர் புக்கு உலைமேவு
மூள்வுஆய தொழில் பஞ்சேந்திரயவஞ்ச
முகரிகாள் - திருநாவுக்கரசர் தேவாரம்
ஓர ஒட்டார், ஒன்றை உன்ன ஒட்டார், மலர் இட்டு உனது தாள்
சேர ஒட்டார் ஐவர் – கந்தர் அலங்காரம்
சிவஞானம் பொற்கழல் தாராய்
ஞானம் எனும் தண்டையம் புண்டரி
கந்தரு வாய் சண்ட தண்ட வெஞ்சூர் - கந்தர் அலங்காரம்
இறைவனுடைய திருவடி ஞானமே ஆகும். திருவடி என்பது தாராய் ஞானம் தா என்பதாகும்
திகழ்சீர் அத்திக்கு அழல்வா என்ப
இவ்வேழங் காத்தருள்க எந்தைநீர் சொற்றபடி செய்வேன் என ஒரு பால் சேர்ந்து தழீ இக்
கொண்டனளே -
கந்த புராணம்
விளக்க குறிப்பு
குரக்கோணத்தில் - குரம் – குளம்பு.
கோணம் - மூக்கு குளம்பு போன்று கெட்டியான
மூக்கை உடைய கழுகு. பார்க்க ‘தமர குரங்களும்’’ திருப்புகழ்
No comments:
Post a Comment