481
சிதம்பரம்
தான தான தான தானன தான தந்த
தத்த தந்த தத்த தந்த தந்ததான
காய மாய வீடு மீறிய கூடு நந்து
புற்பு தந்த னிற்கு ரம்பை கொண்டுநாளுங்
காசி லாசை தேடி வாழ்வினை நாடி யிந்த்ரி
யப்ர மந்த டித்த லைந்து சிந்தைவேறாய்
வேயி லாய தோள மாமட வார்கள் பங்க
யத்து கொங்கை யுற்றி ணங்கி நொந்திடாதே
வேத கீத போத மோன மெய்ஞான நந்த
முற்றி டின்ப முத்தி யொன்று தந்திடாயோ
மாய வீர தீர சூரர்கள் பார நின்ற
விக்ர மங்கொள் வெற்பி டந்த செங்கைவேலா
வாகை வேடர் பேதை காதல வேழ மங்கை
யைப்பு ணர்ந்த வெற்ப கந்த செந்தில்வேளே
ஆயும் வேத கீத மேழிசை பாட வஞ்செ
ழுத்த ழங்க முட்ட நின்று துன்றுசோதீ
ஆதி நாத ராடு நாடக சாலை யம்ப
லச்சி தம்ப ரத்த மர்ந்த தம்பிரானே
பதம் பிரித்து உரை
காயம் மாய வீடு மீறிய கூடு நந்து
புற்புதம் தனில் குரம்பை கொண்டு நாளும்
காயம் மாய வீடு = உடல் என்பது ஒரு மாய வீடு மீறிய கூடு = (அது) மிக்கெழுந்ததொரு கூடு போன்றது நந்து(ம்) = அழிந்து மறையும் புற்புதம் தனில் = நீர்க்குமிழியில் குரம்பை கொண்டு = சிறு குடிலைக் கொண்டு நாளும் = நாள் தோறும்
காசில் ஆசை தேடி வாழ்வினை நாடி இந்த்ரிய
ப்ரமம் தடித்து அலைந்து சிந்தை வேறாய்
காசில் ஆசை = பொருள் மீது ஆசை கொண்டு தேடி = (அதற்காகப் பல இடத்தும்) தேடி வாழ்வினை நாடி = (சுக) வாழ்க்கையை விரும்பி இந்த்ரிய ப்ரமம் = ஐம்பொறிகளால் ஆகிய மோக மயக்கம் தடித்து = வலுவடைந்து அலைந்து = அலைச்சல் உற்று சிந்தை வேறாய் = மனம் வேறுபட்டுக் கலங்கி
வேயில் ஆய தோள மா மடவார்கள் பங்கயத்து
கொங்கை உற்று இணங்கி நொந்திடாதே
வேயில் ஆய = மூங்கில் போன்ற தோள் = தோள்களை உடைய மா = அழகிய மடவார்கள் = பெண்களின் பங்கயத்து = தாமரை மொட்டை ஒத்த கொங்கை உற்று = தனங்களை விரும்பி இணங்கி = அவை வசப்பட்டு நொந்திடாதே = மனம் நோகாமல்
வேத கீத போத மோன ஞான நந்த
முற்றிடு இன்ப முத்தி ஒன்று தந்திடாயோ
வேத கீதம் போதம் = வேதம், இசை, அறிவு மோனம் = மௌனம் ஞானம் = மெய்ஞ்ஞானம் நந்த = தழைத்து வளர்ச்சி உறவும் முற்றிடு இன்ப முத்தி = பெருகிப் பூரணமான இன்ப முத்தி என்னும் ஒன்று = ஒப்பற்ற ஒன்றை தந்திடாயோ = தந்தருள மாட்டாயோ?
மாய வீர தீர சூரர்கள் பாற நின்ற
விக்ரமம் கொள் வெற்பு இடந்த செம் கை வேலா
மாய = மாயத்தில் வல்ல வீர = வீர தீர சூரர்கள் = தீரமான சூரர்களான ( சூரன், சிங்கமுகன், தாரகன்) என்போர் பாற = சிதறி அழிய நின்ற = வெற்றி கொண்டு நின்ற செங்கை வேலனே = செங்கை வேலனே விக்ரமம் கொள் = வலிமை கொண்ட வெற்பு = கிரௌஞ்ச மலையை இடந்த = பிளவு செய்த செம் கை வேலா = செங்கை வேலனே
வாகை வேடர் பேதை காதல வேழ மங்கையை
புணர்ந்த வெற்ப கந்த செந்தில் வேளே
வாகை வேடர் = வெறியாளராகிய வேடர்களின் பேதை = மகளாகிய (வள்ளியின்) காதல = காதலனே வேழ மங்கையை = ஐராவதம் என்ற யானை வளர்த்த மங்கையான தேவசேனையை புணர்ந்த = கலந்த வெற்ப = மலைக் கிழவோனே கந்த = கந்தனே செந்தில் வேளே = திருச்செந்தூரில் வாழும் வேளே
ஆயும் வேத கீதம் ஏழிசை பாட அஞ்சு
எழுத்து தழங்க முட்ட நின்று துன்று சோதீ
ஆயும் = ஆய்ந்து வேத கீதம் = வேத கீதங்களையும் ஏழிசை பாட = ஏழு இசைகளையும் பாட அஞ்சு எழுத்து = (சிவாய நம என்ற) ஐந்தெழுத்தை ஓதி தழங்க = முழங்க முட்ட நின்று = அவ்வொலி முழுமையும் நின்று துன்று = நெருங்கி விளங்கும் சோதீ = சோதியே
ஆதி நாதர் ஆடு நாடக சாலை அம்பல
சிதம்பரத்து அமர்ந்த தம்பிரானே
ஆதி நாதர் = ஆதிநாதராகிய சிவபெருமான் ஆடு = ஆடுகின்ற நாடக சாலை = நாடக சாலையாகிய அம்பல = பொன்னம்பலத்தைக் கொண்ட சிதம்பரத்து அமர்ந்த = சிதம்பரத்தில் வீற்றிருக்கும் தம்பிரானே = தம்பிரானே
சுருக்க உரை
மாய வீடாகிய இந்த உடல் நிலையில்லாத கூடு போன்றது நீர்fக்குமிழி போன்ற இந்த சிறு குடிலைக் கொண்டு நாள் தோறும் ஐம்பொறிகளாலாகிய மோக வாழ்க்கையை விரும்பி, அலைச்சல் உற்று, மனம் கலங்கி, மாதர் கொங்கையை விரும்பி, மனம் நொந்து போகாமல், பூரணமான இன்ப முத்தி என்ற ஒப்பற்ற ஒன்றைத் தந்து அருளுக
வீர தீர சூரர்களை சிதறி அழித்த செங்கை வேலனே! கிரௌஞ்ச மலையைப் பிளவு செய்த வேலனே! வள்ளியின் காதலனே! தெய்வ யானையைக் கலந்த மலைக் கிழவனே!
வேத கீதங்களையும் ஏழிசைகளையும் பாடவும், ஐந்தெழுத்தை ஓதி முழங்கவும் சோதி மயமாக இருப்பவனே! சிவபெருமான் நடமிடும் தில்லையில் அமர்ந்த பெருமாளே! எனக்கு முத்தி ஒன்று தந்திடாயோ?
No comments:
Post a Comment