482
தானன தத்தந் தானன தத்தந்
தானன தத்தந் தனதான
காவியு டுத்துந் தாழ்சடை வைத்துங்
காடுகள் புக்குந் தடுமாறிக்
காய்கனி துய்த்துங் காயமொ றுத்துங்
காசினி முற்றுந் திரியாதே
சீவனொ டுக்கம் பூத வொடுக்கம்
தேறவு திக்கும் பரஞான
தீபவி ளக்கங் காண எனக்குன்
சீதள பத்மந் தருவாயே
பாவநி றத்தின் தாருக வர்க்கம்
பாழ்பட வுக்ரந் தருவீரா
பாணிகள் கொட்டும் பேய்கள் பிதற்றும்
பாடலை மெச்சுங் கதிர்வேலா
தூவிகள் நிற்குஞ் சாலி வளைக்குஞ்
சோலைசி றக்கும் புலியூரா
சூரர்மி கக்கொண் டாட நடிக்குந்
தோகைந டத்தும் பெருமாளே.
பதம் பிரித்து உரை
காவி உடுத்தும் தாழ் சடை வைத்தும்
காடுகள் புக்கும் தடு மாறி
காவை உடுத்தும் = காவித்துணி கட்டியும் தாழ் சடை வைத்தும் = தாழ்ந்து தொங்கும்படி சடையை வளர்த்து வைத்தும் காடுகள் புக்கும் = காட்டில் புகுந்தும். தடுமாறி = தடுமாறியும்
காய் கனி துய்த்தும் காயம் ஒறுத்தும்
காசினி முற்றும் திரியாதே
காய் கனி துய்த்தும் = காய், பழங்களை உண்டும். காயம் ஒறுத்தும் = உடலை (விரதம் முதலியவைகளால்) வருத்தியும். காசினி முற்றும் = உலகம் முழுவதையும். திரியாதே = திரிந்து அலையாமலும்
சீவன் ஒடுக்கம் பூத ஒடுக்கம்
தேற உதிக்கும் பர ஞான
சீவன் ஒடுக்கம் = சீவனுடைய ஒடுக்கமும். பூத ஒடுக்கம் = ஐம்பூதங்களுடைய ஒடுக்கமும். தேற உதிக்கும் = நன்றாக உண்டாகும்படி பர ஞான = மேலான ஞான
தீப விளக்கம் காண எனக்கு உன்
சீதள பத்மம் தருவாயே
தீப விளக்கம் காண = ஒளி விளக்கத்தை நான் காணும்படி. எனக்கு உன் = எனக்கு உன்னுடைய. சீதள பத்மம் தருவாயே = குளிர்ந்த தாமரை போன்ற திருவடியைத் தந்தருளுக
பாவ நிறத்தின் தாருக வர்க்கம்
பாழ்பட உக்ரம் தரு வீரா
பாவ நிறத்தின் = பாவத்தின் நிறம் கொண்ட. தாருக வர்க்கம் = தாரகனுடைய கூட்டத்தினராகிய அசுரர்கள். பாழ்பட = பாழ்பட்டு அழிய. உக்ரம் தரு வீரா = கோபம் கொண்ட வீரனே
பாணிகள் கொட்டும் பேய்கள் பிதற்றும்
பாடலை மெச்சும் கதிர் வேலா
பாணிகள் கொட்டும் = கைகளைக் கொட்டும் (துணங்கைக் கூத்தாடும்). பேய்கள் பிதற்றும் = பேய்கள் உளறிக் குழறும். பாடலை மெச்சும் = பாடல்களை ஆசைப்பட்டு மெச்சுகின்ற. கதிர் வேலா = ஒளி வீசும் வேலனே
தூவிகள் நிற்கும் சாலி வளைக்கும்
சோலை சிறக்கும் புலியூரா
தூவிகள் = அன்னங்கள் நிற்கும் = உலவும். சாலி = நெல் வயல்கள் வளைக்கும் = சூழ்ந்துள்ள சோலை சிறக்கும் = சோலைகள் விளங்கும் புலியூரா = புலியூரனே
சூரர் மிக கொண்டாட நடிக்கும்
தோகை நடத்தும் பெருமாளே
சூரர் மிகக் கொண்டாட = சூரர்கள் நிரம்பக் கொண்டாடும்படி. தோகை நடத்தும் = மயிலை நடத்தும் பெருமாளே = பெருமாளே
சுருக்க உரை
காவி உடை அணிந்தும், சடையை வளர்த்தும், காட்டுக்குச் சென்றும், தடுமாறியும், காய் கனிகளை உண்டும், உடலை விரதங்களால் வருத்தியும் உலகம் முழுவதும் திரியாமல், ஜீவன், ஐம்பூதங்கள், இவைகளை ஒடுக்கி, மேலான ஞான ஒளி விளக்கத்தை நான் காணும்படி உனது தாமரைத் திருவடிகளைத் தந்து அருளுக.
பாவ உருவத்தினரான அசுரர்களை அழித்த கோபம் கொண்ட வீரனே! துணங்கைக் கூத்தாடிடும் பேய்களின் பிதற்றல்களை மெச்சும் ஒளி வேலனே! நெல் வயல்கள்சூழ்ந்த சோலைகள் நிறைந்த புலியூரனே! சூரர்கள் கொண்டாட மயிலை நடத்துபவனே! நான் ஞான தீப விளக்கம் காண உனது தருவடியைத் தருவாயே.
No comments:
Post a Comment