பின் தொடர்வோர்

Wednesday, 10 July 2019

377.தவநெறி தவறிய


377


பொது

      தனதன தனதன தனதன தனதன தனதன        தனதான

                                    

தவநெறி தவறிய குருடுகள் தலைபறி கதறிய    பரபாதத்                       

தருமிகள் கருமிகள் வெகுவித சமயிக ளவரொடு சருவாநின்

றவனிவ னுவனுட னவளிவ ளுவளது இதுவுது வெனுமாறற்                                 

றருவுரு வொழிதரு வுருவுடை யதுபதி தமியனு முணர்வேனோ            

 குவலய முழுவது மதிர்பட வடகுவ டிடிபட      வுரகேசன்                 

கொடுமுடி பலநெரி தரநெடு முதுகுரை கடல்புனல் வறிதாகத்

துவல்கொடு முறையிடு சுரர்பதி துயரது கெடநிசி சரர்சேனை                             

துகளெழ நடநவில் மரகத துரகதம் வரவல     பெருமாளே.

 

                

பதம் பிரித்து உரை

தவ நெறி தவறிய குருடுகள் தலை பறி

கதறிய பரபாத

 தவ நெறி தவறிய குருடுகள் - தவ வழியை விட்டு விலகிய குருடர்கள்தலை பறி - தலை மயிரைப் பறித்துகதறிய - தமது கோட்பாடுகளைப் பலமாகஎடுத்துக்கூறும்பரபாத - பிற மார்க்கத்து.

 தருமிகள் கருமிகள் வெகவித சமயிகள்

அவரொடு சருவா நின்று

 தருமிகள் - அற நெறிகளை உரைப்பவர்கள்கருமிகள் தீ வினை உடையவர்கள்வெகுவத சமயிகள் - பலவிதமான சமய நெறிகளை அனுட்டிப்பவர்கள்.அவரோடு ஆகிய இவர்களோடுசருவா நின்று போராடி நின்று.

 அவன் இவன் உவன் உடன் அவள் இவள் உவள் அது

இது உது எ(ன்)னும் ஆறு அற்று

 அவன் இவள் உவன் உடன் அவள் இவள் உவள் அது

இது உது எனும் ஆறு அற்று - அவன், இவள்

முதலிய வகைகளில் குறிப்பதற்கு

இயலாத நிலையில் நின்று.

 அரு உரு ஒழிதரு உரு உடையது பதி

தமியனும் உணர்வேனோ

அரு - உருவம் இன்மைஉரு - உருவம் உடைமை

(இவை இரண்டும்). ஒழி தரு உரு உடையது - நீங்கிய

தன்மையைக் கொண்ட பொருள் தான் பதி - பதி (எனப்படும் கடவுள்) என்னும் (அந்த நிலையை). உணர்வேனோ - (நான்)

அறிந்து கொள்வேனோ?

 குவலயம் முழுவதும் அதிர் பட வட குவடு இடி பட உரகேசன்

கொடு முடி பல நெரிதர நெடு முது குரை கடல் புனல் வறிதாக

 குவலயம் - உலகம்முழுவதும் – முழுமையும் அதிர்பட அதிர்ச்சி கொள்ளவும் வட குவடு இடிபட  வடக்கே உள்ள மேரு மலை பொடி படவும் உரகேசன் – பாம்பின் தலைவனான ஆதிசேடனின் கொடு முடி  வளைந்த முடிகள் பல – பலவும் நெரிதர - நெரிபடவும் நெடு முது – நீண்டதும் பழையதுமான கடல் புனல் வறிதாக – கடலின் நீர் வற்றிப் போகவும்.

 துவல் கொடு முறை இட சுரர் பதி துயரது

கெட நிசிசரர் சேனை

 துவல் கொடு - அர்ச்சனைப் பூக்களோடு முறை இடு சுரர் பதி – பூசித்து விண்ணப்பிக்கும் தேவர்கள் தலைவனாகிய இந்திரனுடையதுயரது கெட - துன்பங்கள் நீங்க அசுரர் சேனை - அசுரர்களுடைய சேனைகள்.

 

துகள் எழ நட நவில் துரகதம்

வரவல பெருமாளே.

துகள் எழ - பொடிபட்டுத் தூள் எழவும். நட நவில் - நடனம் செய்கின்ற மரகத - பச்சை நிறம் கொண்ட துரகதம் - குதிரையாகிய மயில் மீது வரவலபெருமாளே வரும் பெருமாளே

 

சுருக்க உரை

 

தவ நெறிகளை விட்டு விலகிய குருடர்கள், தலை மயிரைப் பறித்துத் தமது கோட்பாடுகளையே பலமாக எடுத்துரைக்கும் பிற மார்க்கத்தோர் பலவிதமான நெறிகளை அனுஷ்டிப்பவர்கள்- இத்தகைவர்களோடு போராடி நின்று, உரு, அரு, உருவரு ஆகிய நிலைகளைக் குறிப்பதற்கு முடியாத தன்மையைக் கொண்ட பொருள்தான் கடவுள் என்னும் உண்மையை நான் அறிந்து கொள்வேனோ?

 

உலகம் அதிர, மேரு மலை பொடிபட, கடல் நீர் வற்ற, ஆதிசேடனின் முடிகள் நெரிபட, உன்னைப் பூசிக்கும் தேவர்கள் துன்பம் ஒழியவும்அசுரர்கள் சேனைகள் பொடி படவும், நடனம் செய்கின்ற பச்சை மயிலின் மீது வரும் பெருமாளே, பதியின் இலக்கணத்தை நான் அறிந்து கொள்வேனோ?

 

விளக்கக் குறிப்புகள்

பதி பாசம்

பதி இலக்கணத்தை தொகுத்துரைக்கும் சொல்லாக்கம் கொண்ட  பாடல் இது. 

வானோ புனல்பார் கனல்மா மருதமோ 

ஞானோ தயமோ நவில்நான் மறையோ 

யானோ மனமோ எனையாண் டஇடந் 

தானோ பொருளா வது சண்முகனே.................................................    கந்தர் அனுபூதி

 உருவன் றருவன் றுளதன் றிலதன்

றிருளன் றொளியன் றெனநின் றதுவே..........      கந்தர் அனுபூதி

 

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்................................................       கந்தர் அனுபூதி

 

அருவனாய் அத்திஈர் உரி போர்த்து உமை உருவனாய்........                                                                                       திருநாவுக்கரசர் தேவாரம் 

 அருவம் ஆகுவன் உருவமும் ஆகுவன் அருவும்

உருவும் இல்லதோர் தன்மையும் ஆகுவன்………………………………..                                                                                       கந்த புராணம்.

 துவல் கொடு முறையிடு சுரர்பதி....

இசைந்த ஆறு அடியார் இடு துவல்...                     சம்பந்தர் தேவாரம். 

 நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள்

நாம் அவர் இவர் உவர் அது இது உது எது               - திருவாய்மொழி


‘நாம்’ என்ற பெயர்ப்பொருளும், ‘அவன் இவன் உவன்’ என்னும் ஆண்பாற்பெயர்ப்பொருள்களும், ‘அவள் இவள் உவள் எவள்’ என்னும் பெண்பாற்பெயர்ப்பொருள்களும், தாம் அவர் இவர் உவர்’ என்னும் பலர்பாற்பெயர்ப்பொருள்களும், ‘அது இது உது எது’ என்னும் ஒன்றன்பாற்பெயர்ப்பொருள்களும், ...இறைவன் நிறைந்தியிருப்பான் என்பதை குறிப்பிடப்படுகிறது


No comments:

Post a Comment