பின் தொடர்வோர்

Tuesday, 30 July 2019

379.திரைவஞ்ச


379
பொது

                தனதந்த தனதனன தனதந்த தனதனன
                தனதந்த தனதனன                       தனதான

திரைவஞ்ச இருவினைகள் நரையங்க மனமழிய
   சிவகங்கை தனில்முழுகி                          விளையாடிச்
சிவம்தந்து குதிகொளக வடிவுன்றன் வடிவமென
   திகழண்டர் முநிவர்கண                          மயன்மாலும்
அரன்மைந்த னெனகளிறு முகனெம்பி யெனமகிழ
   அடியென்க ணளிபரவ                                  மயிலேறி
அயில்கொண்டு திருநடன மெனதந்தை யுடன்மருவி
   அருமந்த பொருளையினி                         யருள்வாயே
பரியென்ப நரிகள்தமை நடனங்கொ டொருவழுதி   
   பரிதுஞ்ச வருமதுரை                                    நடராஜன்
பழியஞ்சி யெனதருகி லுறைபுண்ட ரிகவடிவ
   பவனஞ்சொ லுமைகொழுந                     னருள்பாலா
இருள்வஞ்ச கிரியவுண ருடனெங்க ளிருவினையு
   மெரியுண்டு பொடியஅயில்                     விடுவோனே
எனதன்பி லுறைசயில மகிழ்வஞ்சி குறமகளொ
   டெணுபஞ்ச ணையின்மருவு                          பெருமாளே

பதம் பிரித்து உரை

திரை வஞ்ச இரு வினைகள் நரை அங்கம் மலம் அழிய
சிவ கங்கை தனில் முழுகி விளையாடி

திரை - திரை கடல் அலை போல வருவதும் வஞ்ச - வஞ்சனைச் செயல்களால் வருவதுமான இரு வினைகள் - நல் வினை, தீ வினை எனப்படும் இரு வினைகளும் நரை - மயிர் நரைத்தலுக்கு இடம் கொடுக்கும் அங்கம்- உடலும். மலம் - மும்மலங்களும் அழிய - அழியவும் சிவ கங்கை தனில் மூழ்கி - சிவகங்கை (சிவாமிர்தம்) என்னும் கங்கை நீரில் மூழ்கி விளையாடி - திளைத்து விளையாடி.

சிவம் வந்து குதி கொள அகம் வடிவு உன்றன் வடிவம் என
திகழ் அண்டர் முநிவர் கணம் அயன் மாலும்

சிவம் வந்து - உள்ளத்தில் சிவமாகிய மங்கலப் பொருள் வந்து குதி கொள்ள - அழுந்தப் பதிய அக வடிவு - என்னுடைய வடிவம் உன்றன் வடிவம் என - உன்னுடைய வடிவம் என்று சொல்லும்படி. திகழ் - விளங்கும். அண்டர் - தேவர்கள் முநிவர் கணம் - முனிவர் கூட்டமும் அயன் மாலும் - பிரமனும், திருமாலும்.

அரன் மைந்தன் என களிறு முகன் நம்பி என மகிழ
அடியென் கண் அளி பரவ மயில் ஏறி

அரன் மைந்த - சிவ பெருமானது குமரனே. என - என்று மகிழ. களிறு முகன் - யனை முகத்தை உடைய கணபதி. நம்பி என - என் தம்பி என்றும் மகிழ - மகிழ்ச்சி கொள்ள அடியென் கண் - அடியேனிடத்தில். அளி பரவ - கருணையை காட்ட. மயில் ஏறி - (நீ) மயிலின் மேல் ஏறி.

அயில் கொண்டு திரு நடனம் என தந்தை உடன் மருவி
அருமந்த பொருளை இனி அருள்வாயே

அயில் கொண்டு - வேல் ஏந்தி தந்தை திரு நடனம் என - திரு நடனம் என்று சொல்லும்படி உடன் மருவி - உடன் இருந்து என்னுடன் பொருந்தி அருமந்த பொருளை - அரிய மறை பொருளை இனி அருள்வாயே - இனி எனக்கும் அருள்வாயாக.

பரி என்ப நரிகள் தமை நடனம் கொண்டு ஒரு வழுதி
பரி துஞ்ச வரும் மதுரை நடராஜன்

பரி என்ப - குதிரை என்று. நரிகள் தமை - நரிகளை. நடனம் கொ(ண்)டு - திருவளையாடலாகக் காட்டி. ஒரு வழுதி - ஒரு பாண்டிய மன்னனுக்கு இருந்த. பரி துஞ்ச - குதிரைகள் இறந்துபட வரு மதுரை நடராஜன் - எழுந்தருளி வந்த மதுரை நடராஜப் பெருமான்.

பழி அஞ்சி எனது அருகில் உறை புண்டரிக வடிவ
பவளம் சொல் உமை கொழுநன் அருள் பாலா

பழி அஞ்சி - பழிக்கு பயந்தவனாக எனது அருகில் உறை - என்னுடைய அருகில் இருப்பவன் புண்டரிக வடிவ - செந்தாமரை போன்ற திரு உருவத்தினன் பவளம் சொல் - பவள நிறத்தினன் என்று சொல்லும்படியானவன் உமை கொழுநன் - உமா தேவியின் கணவன் அருள் பாலா - (ஆகிய) சிவ பெருமான் ஈன்ற மகனே.

இருள் வஞ்ச கிரி அவுணர் உடன் எங்கள் இரு வினையும்
எரி உண்டு பொடிய அயில் விடுவோனே

இருள் - இருள் சூழ்ந்ததும் வஞ்ச - வஞ்சகச் செயல்கள் செய்வதுமான கிரி - கிரௌஞ்ச மலையும் அசுரர் உடன் - அதனிடம் இருந்த அசுரர்களும்  எங்கள் இரு வினையும் - எங்களுடைய இரண்டு வினைகளும் எரி உண்டு - எரிபட்டு பொடிய - பொடியாகும்படி அயில் விடுவோனே - வேலைச் செலுத்தியவனே.

எனது அன்பில் உறை சயில மகிழ் வஞ்சி குற மகளாடு
எ(ண்)ணு(ம்) பஞ்சு அணையில் மருவு பெருமாளே.

எனது அன்பில் உறை - என்னுடைய அன்பில் உறைபவரும். சயில(ம்) - வள்ளி மலையில் மகிழ் - மகிழ்ந்த வஞ்சி - வஞ்சிக் கொடி போன்ற குற மகள் - குறப் பெண்ணாகிய வள்ளியுடன் எண்ணும் - மதிக்கும்படியான பஞ்சணையில் மருவு - பஞ்சு மெத்தையில் பள்ளி கொள்ளும் பெருமாளே - பெருமாளே.

சுருக்க உரை

கடல் போன்று வருகின்றனவும், வஞ்சனை செயல்களால் உண்டாவதுமான இரு வினைகளும், மயிர் நரைத்தலுக்கு இடம் தரும் உடலும், மும் மலங்களும் அழிவுபட, சிவாமிர்தம் என்னும் கங்கை நீரில் மூழ்கி, சிவ நிலையை எய்தி, என் வடிவமே உன் வடிவம் என்று சொல்லும்படி, தேவர்களும், முனிவர்களும், பிரமனும், திருமாலும் சிவபெருமானுடைய குமரன் என்று மகிழ, யானை முகக் கணபதி என் தம்பி என்று மகிழ, அடியேன் இடத்தில் கருணை காட்டி, நீ மயில் மீது ஏறி வந்து, வேல் ஏந்தி, தந்தையாகிய சிவபெருமானுடன் நடனம் செய்து, என்னுடன் பொருந்த, அச்சிவனுக்கு உபதேசித்த உண்மைப் பொருளை எனக்கும் உபதேசித்து அருளுக.

குதிரை என்று நரிகளைக் காட்டித் திருவிளையாடல் புரிந்த சிவபெருமான் என் அருகில் உறைபவன்; தாமரை முகத்தினன்; பவள நிறத்தன்; உமையின் கணவன்; அத்தகையோன் பெற்ற குழந்தையே, இருள் சூழ்ந்தும், வஞ்சகச் செயல்கள் செய்வதுமான கிரௌஞ்ச மலையையும் அதில் இருந்த அசுரர்களையும், எனது இரு வினைகளையும் எரியாகும்படி வேலைச் செலுத்தியவனே, என் அன்பில் உறையும் வள்ளியுடன், பள்ளி கொள்ளும் பெருமாளே, அரிய மறை பொருளை சிவனுக்கு உபதேசம் செய்தது போல் எனக்கும் செய்தருள்க.

விளக்கக் குறிப்புகள்

1அருமந்த பொருளை இனி அருள்வாயே...
சிவனுக்கு உபதேசித்த பொருளை எனக்கும் உபதேசம் செய்ய வேண்டும் என்று பல இடங்களில் திருப்புகழில் அருணகிரி நாதர் வேண்டுகிறார்.

உருத்திரனும் விருத்திபெற அநுக்கிரகி யெனக்குறுகி
யரைக்கமறை அடுத்து பொருள் 
உணர்த்து நாள் அடிமையும் உடையேனோ...              திருப்புகழ், கருப்புவியில்

பண்டேசொற் றந்த பழமறை
கொண்டேதர்க் கங்க ளறவுமை
பங்காளர்க் கன்று பகர்பொருள்  அருள்வாயே          ...திருப்புகழ், கொண்டாடி.

 செயல்மாண்டு சித்த மவிழ நித்தத்
 த்வம்பெ றப்ப கர்ந்த   வுபதேசஞ்
சிறியேன்த னக்கு முரைசெயிற்சற்
றுங்கு ருத்து வங்கு  றையுமோதான்                                   ...திருப்புகழ், சயிலங்க

2. பரியென்ப நரிகள்தமை நடனங்கொ டொருவழுதி...
நரி பரியாக்கிய திருவிளையாடலைக் குறிக்கும்.
      நரியைக் குதிரைப் பரி ஆக்கி
      ஞாலம் எல்லாம் நிகழ்வித்துப்
      பெரிய தென்னன் மதுரை எல்லாம்                    ...திருவாசகம், ஆனந்தமாலை.
   
இந் நிகழ்ச்சி மாணிக்கவாசகரின் வரலாற்றை குறிக்கிறது,

வரலாறு
 ஒருசமயம், சோழநாட்டில் உயர்ரக குதிரைகள் கிடைப்பதாக பாண்டிய மன்னனுக்கு செய்தி கிடைத்தது. உடனடியாக தனது அமைச்சரான வாதவூரரை அனுப்பி, குதிரைகளை வாங்கி வரும்படி பணித்தான். குதிரை வாங்குவதற்கு தேவையான பொன், பொருட்களையும் கொடுத்து அனுப்பினான்.
அதே நேரத்தில்தான், ஈசன் தன்னுடைய திருவிளையாடலைத் தொடங்கினான். திருப்பெருந்துறை திருத்தலத்தில், தன்னை ஒரு குருவைப் போல மாற்றிக்கொண்டு அங்கிருந்த குருந்த மரம் ஒன்றின் அடியில் அமர்ந்து தவம் இயற்றிக்கொண்டிருந்தார் சிவபெருமான்.
முன்னமேயே சிவபக்தி கொண்ட வாதவூரர் அவர்முன் சென்று பணிந்தார். குருவின் திருக்கரத்தில் இருப்பது என்னவென்று வாதவூரர் கேட்க, அவர் சிவஞான போதம் என்றார்'. சிவம் என்பதும், ஞானம் என்பதும், போதம் என்பதும் வஎன்ன?. எனக்கு இவற்றைப் விளக்க வேண்டும் என்றார்  வாதவூரர். சிவஞானத்தை அவருக்கு கற்பித்து, திருவடி தீட்சையும் கொடுத்தார் குருமூர்த்தி வடிவத்தில் வந்த சிவபிரான்.
தன் அமைச்சர் கோலத்தை அகற்றி ஆடை களைந்து கோவணம் தரித்து, வாய்பொத்தி குருவின் முன் நின்ற வாதவூரர் தலைமீது,  சிவபெருமானின் பாதம் பட அடுத்த நொடியே இறைவனை நினைத்து பாடல்களைப் பாடத் தொடங்கினார் வாதவூரர். அவரது பாடலைக் கேட்டு அந்த பரமனே உள்ளம் உருகிப்போனார். ‘நீ பாடிய செந்தமிழின் ஒவ்வொரு வார்த்தையும், மாணிக்கம் போன்றது. நீ மாணிக்கவாசகன்’ என்று ஆசீர்வதித்து மறைந்தார் இறைவன்.
இறையருள் கிட்டிய மகிழ்ச்சியில் தன்னையே மறந்தார் மாணிக்க வாசகராகிய வாதவூர். தன்னையே மறந்துவிட்டவருக்கு, தான் வந்த பணி மட்டும் நினைவிலா இருக்கப் போகிறது?. மன்னன் கொடுத்தனுப்பிய பொன்னையெல்லாம் கொண்டு, அங்கேயே தங்கி ஒரு கோயில் கட்ட தீர்மானித்துத் திருப்பணிகளைச் செய்யத் தொடங்கிவிட்டார். பல நாட்கள் கடந்த நிலையிலும் மாணிக்கவாசகர் வராததால், அவருக்கு மன்னன் ஓலை அனுப்பினான்.
அதனைப் பார்த்த மாணிக்கவாசகர், ஈசனை நோக்கி. ‘ஐயனே! மன்னன் கொடுத்த பொன்னையெல்லாம் திருப்பணிக்காக செலவிட்டுவிட்டேன். இப்போது நான் என்ன செய்வது?’ என்று கண்ணீர் வடித்தார்.
‘ஆடி மாதம் முடிவதற்குள் குதிரைகள் வந்துசேரும் என்று மறு ஓலை அனுப்பு’ என்று அசரீரி கேட்டது. மாணிக்கவாசகரும் அவ்வாறே செய்தார். சிறிது நாள் கழித்து மாணிக்கவாசகரை, மதுரைக்கு திரும்பும்படி ஈசன் கூறினார். அதன்படி மதுரை திரும்பியவரிடம், ‘குதிரைகள் எங்கே?’ என்று கேட்டான் பாண்டிய மன்னன்.
‘நீங்கள் இதுவரை பார்த்திராத அழகிய குதிரைகள் வந்து கொண்டிருக்கின்றன’ என்றார் மாணிக்கவாசகர். ஆனால் குதிரைகள் வராததால், மன்னனுக்கு கோபம் வந்தது. மாணிக்கவாசகரை சிறையில் அடைக்க உத்தரவிட்டான். இதற்கிடையில் ஈசன், காட்டில் இருந்த நரிகளை, குதிரைகளாக்கி மதுரைக்கு அனுப்பிவைத்தார் ஆனிமாதம் மூல நட்சத்திர நாளில். அதனைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தான் மன்னன். ஆனால் அன்று இரவே குதிரைகள் மீண்டும் நரிகளாக மாறி ஓடிவிட்டன.
மன்னனின் கோபம் எல்லை கடந்தது. மாணிக்கவாசகரை வைகை ஆற்றில் சுடு மணலில் நிறுத்தினான். அவர் ஈசனை நினைத்து வேண்டினார். அப்போது ஆற்றில் வெள்ளம் மதுரையை சூழ்ந்தது. மாணிக்கவாசகரை சுற்றிலும் தண்ணீர் கால் அளவுக்கே ஓடியது.
ஆற்றின் கரையை அடைக்க வீட்டிற்கு ஒருவர் வரவேண்டும் என்று மன்னன் உத்தரவிட்டான். அவ்வூரில் வந்தி என்ற மூதாட்டி புட்டு விற்று பிழைத்து வந்தாள். தினமும் ஒரு புட்டை ஈசனுக்கு படைத்து, அடியவர்களுக்கு அளிப்பாள். வயோதிகம் காரணமாக கூலி ஆள் தேடினாள் வந்தி. அப்போது ஈசன், பணியாள் வேடம் கொண்டு தனக்கு புட்டு தந்தால், பணிக்கு செல்வதாக கூறவே, பாட்டியும் கொடுத்தாள். பணிக்கு சென்ற ஈசன், பணியை கவனிக்காமல் ஓரிடத்தில் படுத்து உறங்கினார். அப்போது அங்கு வந்த மன்னன், பிரம்பால் ஈசனை அடித்தான். அந்த அடி உலக உயிர்கள் அனைத்தின் மீதும் விழுந்தது. மன்னன் திகைத்தான். பணியாள் உருவில் வந்த ஈசன் ஒரு கூடை மண்ணை ஆற்றின் கரையில் கொட்டியதும் வெள்ளம் வடிந்தது.
இது தனது திருவிளையாடலே என்று உரைத்து ஈசன் மறைந்தார்.
மாணிக்கவாசகரை மீண்டும் அமைச்சர் பொறுப்பேற்க மன்னன் கூறியும், மறுத்து சிதம்பரம் சென்றார் மாணிக்கவாசகர். தில்லையம்பதியானை நினைத்து அவர் திருவாசகம் பாட, அதனை அங்கிருந்த வேதியர் ஒருவர் சுவடியில் எழுதினார். இறுதியில் பாடலின் அடியில் திருவாதவூரார் கூற திருச்சிற்றம்பலமுடையான் எழுதியது என்று கையெழுத்திட்டு, அந்த வேதியர் மறைந்தார். அப்போதுதான் தான் பாடிய திருவாசகத்தை எழுதியது சிவபெருமான் என்பதை அவர் அறிந்தார்.
  

  

No comments:

Post a Comment