பின் தொடர்வோர்

Tuesday, 30 July 2019

378. திரிபுரம்மதனை


378
பொது

                தனதன தனன தனதன தனன 
               தனதன தனன                    தனதான

திரிபுர மதனை யொருநொடி யதனி
   லெரிசெய் தருளிய       சிவன்வாழ்வே
சினமுடை யசுரர் மனமது வெருவ
   மயிலது முடுகி            விடுவோனே  
பருவரை யதனை யுருவிட எறியு
   மறுமுக முடைய            வடிவேலா
பசலையொ டணையு மிளமுலை மகளை
   மதன்விடு பகழி          தொடலாமோ
கரிதிரு முகமு மிடமுடை வயிறு
   முடையவர் பிறகு         வருவோனே
கனதன முடைய குறவர்த மகளை
   கருணையொ டணையு      மணிமார்பா
அரவணை துயிலு மரிதிரு மருக
   அவனியு முழுது          முடையோனே
அடியவர் வினையு மமரர்கள் துயரு
    மறஅரு ளுதவு            பெருமாளே.

பதம் பிரித்து உரை

திரிபுரம் மதனை ஒரு நொடி அதனில்
எரி செய்து அருளிய சிவன் வாழ்வே

திரிபுரம் மதனை - திரிபுரங்களையும் மன்மதனையும் ஒரு
நொடி அதனில் - ஒரு நொடிப் பொழுதில் எரி செய்து
அருளிய - (நெற்றிக் கண்ணால்) எரித்து அருள் செய்த சிவன் வாழ்வே -சிவபெருமானுடைய செல்வமே.

சினம் உடை அசுரர் மனம் அது வெருவ
மயில் அது முடுகி விடுவோனே
சினம் உடை அசுரர் - கோபம் நிறைந்த அசுரர்களின் மனம் அது வெருவ - மனம் அச்சம் உற மயில் அது முடுகி விடுவோனே - மயிலை வேகமாகச் செலுத்துபவனே.

பரு வரை அதனை உருவிட எறியும்
அறு முகம் உடைய வடிவேலா

பரு வரை அதனை - பெரிய கிரௌஞ்ச மலையில்
உருவிட - ஊடுருவும்படி எறியும் - வேலைச் செலுத்திய.
அறு முகம் உடைய வடிவேலா - ஆறு திரு முகங்களை
உடைய கூரிய வேலாயுதனே.

பசலையொடு அணையும் இள முலை மகளை  
மதன் விடு பகழி தொடலாமோ

பசலையொடு - காம நோயால் உண்டாகும் நிற
வேற்றுமையுடன் அணையும் - (உன்னை) அணைகின்ற. இள முலை மகளை – இள கொங்கைகளைக் கொண்ட என் மகளை. மதன் விடு பகழி - மன்மதன் விடும் அம்புகள். தொடலாமோ - தொட்டு நலிவு செய்யலாமா?

கரி திரு முகமும் இடம் உடை வயிறும்
உடையவர் பிறகு வருவோனே

கரி திரு முகமும் - யானையின் அழகிய முகமும் இடம்
உடை வயிறும் - விலாசமான பெரிய வயிறும் உடையவர் - உடைய கணபதியின் பிறகு வருவோனே - பின்பு
தோன்றியவனே.

கன தனம் உடைய குறவர் தம் மகளை 
கருணையொடு அணையும் மணி மார்பா

கன தனம் உடைய - பெரிய கொங்கைகளை உடைய. குறவர்தம் மகளை - வேடர்கள் பெண்ணாகிய வள்ளியை
கருணையொடு - கருணையுடன் அணையும் மணி மார்பா - அணைந்த அழகிய மார்பனே.

அரவு அணை துயிலும் அரி திரு மருக 
அவனியும் முழுதும் உடையோனே

அரவு அணை துயிலும் - பாம்பணையில் பள்ளி கொள்ளும். அரி திரு மருக  - அரியாகிய திருமாலின் மருகனே. அவனியும்  முழுதும் - உலகம் எல்லாம். உடையோனே - உடையவனே.

அடியவர் வினையும் அமரர்கள் துயரும்
அற அருள் உதவு(ம்) பெருமாளே.

அடியவர் - அடியார்களுடைய. வினையும் - வினைகளும்.
அமரர்கள் துயரும் - தேவர்களின் துயரமும். அற - ஒழிய
அருள் உதவும் பெருமாளே - (அவர்களுக்கு) அருள் பாலித்த
பெருமாளே.

சுருக்க உரை
திரிபுரங்களையும் மன்மதனையும் ஒரே நொடியில் எரித்து அழித்த சிவபெருமானின் செல்வமே, கோபம் நிறைந்த அசுரர்கள் பயப்படும்படி மயிலை விரைவாகச் செலுத்தியவனே, பெரிய கிரௌஞ்ச மலையில் ஊடுருவும்படி செலுத்திய வேலனே, ஆறு திருமுகங்களை உடையவனே.

காம நோயால் பசலை உற்ற இள முலைகளைக் கொண்ட என் மகளை மன்மதனின் பாணங்கள் தொட்டு நலிவு செய்யலாமா? யானைமுகமுடைய கணபதிக்குத் தம்பியே, பெரிய கொங்கைகளைக் கொண்ட குறப் பெண் வள்ளியைக் கருணையுடன் அணைந்த திருமார்பனே, ஆதிசேடனாகிய பாம்பின் மேல் பள்ளி கொள்ளும் திருமாலின் மருகனே,  எல்லா உலகங்களுக்கும் தலைவனே, அடியார் களின் வினைகளையும், தேவர்களின் துயரத்தையும் நீக்கி அருள் பாலித்த பெருமாளே, மன்மதனின் மலர்ப் பாணங்கள் என் பெண்ணைத் தொடாலாமோ?

ஒப்புக:
1. திரிபுர மதனை ஒரு நொடியதனின்....
  அரிய திரிப்புர மெரிய விழித்தவன்................................... திருப்புகழ், குருவியென
2. ஒரு நொடி யதனில் எரி செய்த...
  மும்மதிலும் நொடி அளவில் பொடிசெய்த
 முதல்வன் இடம் முதுகுன்றமே…………………………………....சம்பந்தர் தேவாரம்
திரிபுர மூட்டி மறலியி  னாட்ட மறசரணீட்டி மதனுடல் திருநீறாய்…………….
                                                                      …………...திருப்புகழ், பாட்டிலுருகிலை.






No comments:

Post a Comment