பின் தொடர்வோர்

Tuesday, 3 December 2019

393.பகிர நினைவொரு


393
பொது

            தனன தனதன தனதன தனதன
               தனன தனதன தனதன தனதன       
               தனன தனதன தனதன தனதன   தனதான

பகிர நினைவொரு தினையள விலுமிலி     
   கருணை  யிலியுன தருணையொ டுதணியல்   
   பழநி மலைகுரு மலைபணி மலைபல            மலைபாடிப்               
பரவு மிடறிலி படிறுகொ டிடறுசொல்     
   பழகி யழகிலி குலமிலி நலமிலி     
   பதிமை யிலிபவு ஷதுமிலி மகிமையி           லிகுலாலன்     
திகிர வருமொரு செலவினி லெழுபது     
   செலவு வருமென பவுரிகொ டலமரு     
   திருக னுருகுத லழுகுதல் தொழுகுதல்             நினையாத     
திமிர னியல்பிலி யருளிலி பொருளிலி     
   திருடன் மதியிலி கதியிலி விதியிலி     
   செயலி லுணர்விலி சிவபத மடைவது          மொருநாளே     
மகர சலநிதி முறையிட நிசிசரன்     
   மகுட மொருபது மிருபது திரள்புய     
   வரையு மறவொரு கணைதெரி புயல்குரு        ந்ருபதூதன்     
மடுவில் மதகரி முதலென வுதவிய     
   வரத னிருதிறல் மருதொடு பொருதவன்     
   மதலை குதலையின் மறைமொழி                   ணியனாகம்     
உகிரி னுதிகொடு வகிருமொ ரடலரி     
   திகிரி தரமர கதகிரி யெரியுமிழ்     
   உரக சுடிகையில் நடநவி லரிதிரு                   மருகோனே     
உருகு முடியவ ரிருவிaன யிருள்பொரு     
   முதய தினகர இமகரன் வலம்வரும்     
   உலக முழுதொரு நொடியினில் வலம்வர        பெருமாளே

பதம் பிரித்து உரை
பகிர நினைவு ஒரு தினை அளவிலும் இலி     
கருணை இலி உனது அருணையொடு தணியல்     
பழனிமலை குருமலை பணிமலை பலமலை பாடி
பகிர - (தம்மிடம் இருப்பதைப்) பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்ற நினைவு - நினைப்பு ஒரு தினை அளவு இலி - ஒரு தினை அளவு கூட இல்லாதவன் (நான்) கருணை இலி - கருணையே இல்லாதவன் உனது - நீ வீற்றிருக்கும் தலங்களான அருணையொடு - திருவண்ணாமலை தணியல் - திருத்தணி. பழநி மலை - பழனி மலை. குருமலை - சுவாமி மலை  பணிமலை - பாம்பு மலையாகிய திருச் செங்கோடு பல மலை பாடி - (ஏனைய) பல மலைகளையும் பாடி.

பரவும் மிட(ல்) இலி படிறு கொ(ண்)டு இடறு சொல்   
பழகி அழகு இலி குலம் இலி நலம் இலி     
பதிமை இலி பவுஷதும் இலி மகிமை இலி குலாலன்

பரவும் - போற்றுகின்ற
மிடல் இலி - திறன் இல்லாதவன்
படிறு  கொண்டு -  வஞ்சனையுடன்  
இடறு சொல் - தடையான பேச்சுக்களில் பழகி - பழகுபவன்
அழகிலி - அழகு இல்லாதவன்
குலம் இலி - மேற் குடியில் பிறக்காதவன் நலம் இலி - நற்செயல் செய்யாதவன்
பதிமை இலி - பத்தி என்பது இல்லாதவன் பவுஷதும் இலி - பெருந்தன்மை இல்லாதவன் மகிமை இலி - பெருமை இல்லாதவன் (நான்) குலாலன் - குயவனுடைய.

திகிரி வரும் ஒரு செலவினில் எழுபது      
செலவு வரும் என பவுரி கொ(ண்)டு அலமரும்      
திருகன் உருகுதல் அழுகுதல் தொழுதல் நினையாத

திகிரி - சக்கரம் வரும் ஒரு செலவினில் - சுழலும் ஒரு சுழலின் வேகத்துக்குள் எழுபது செலவு வரும்  - எழுபது சுழற்சிகள் கொள்ளும் மன பவுரி கொண்டு - மனம் சுழற்சி கொண்டு அலமரும் - வேதனைப்படும் திருகன் - மனக் கோணல் உடையவன் நான்  உருகுதல் அழுகுதல் தொழுகுதல் - (உள்ளம்) உருகுதல், வாய் விட்டு அழுதல், வணங்கித்  தொழுதல் இம்மூன்றின் நினையாத - நினைப்பும் இல்லாத.

திமிரன் இயல்பு இலி அருள் இலி பொருள் இலி     
திருடன் மதி இலி கதி இலி விதி இலி     
செயலில் உணர்வு இலி சிவ பதம் அடைவதும் ஒரு நாளே

திமிரன் - (ஆணவ) இருள் கொண்டவன் இயல்பு இலி – நல்ல தன்மை இல்லாதவன் அருள் இலி - அருள் இல்லாதவன்
பொருள் இலி - பொருள் இல்லாதவன் திருடன் - கள்வன்
மதி இலி - அறிவில்லாதவன்
கதி இலி - நற் கதி இல்லாதவன்
விதி இலி - நல்ல தலை எழுத்து இல்லாதவன்
செயலில் -  நற் செய்கைகள்
உணர்வு இலி - செய்யும் உணர்வு இல்லாதவன் சிவ  பதம் அடைவதும் ஒரு நாளே - (இத்தகைய நான்) எவ்வாறு சிவ பதம் அடைவேன்?

மகர சலநிதி முறை இட நிசிசரன்     
மகுடம் ஒர பதும் இருபது திரள் புய     
வரையும் அற ஒரு கணை தெரி புயல் குருநிருப தூதன் 

மகர சலநிதி - மகர மீன்கள் உள்ள கடல் முறையிட - ஓலமிடவும் நிசிசரன் - அரக்கனாகிய இராவணனின் மகுடம் ஒரு பதும் – பத்து  கிரீடங்களும் இருபது திரள் புய – இருபது திண்ணிய தோள்களாகிய. வரையும் - மலைகளும் அற – அற்று விழுமாறு ஒரு - ஒப்பற்ற கணை தெரி - அம்பைத் தொடுத்த புயல் - மேக வண்ணனாகிய கண்ணனும் குரு நிருப தூதன் - குரு நாட்டரசர்களாகிய (பஞ்ச பாண்டவர்களுக்குத்) தூதாகச்
சென்றவனும்.

மடுவில் மத கரி முதல் என உதவிய    
வரதன் இரு திறல் மருதொடு பொருதவன்     
மதலை குதலையின் மறை மொழி இகழ் இரணியன் ஆகம்

மடுவில் - நீர் நிலையில் இருந்த மத கரி - மத யானையாகிய கஜேந்திரன் முதல் என- ஆதி மூலமே என்று அழைக்க உதவிய வரதன் - வந்து உதவி செய்த வரதராஜப் பெருமான் இரு திறல்- இரண்டு வலிமை வாய்ந்த மருதொடு -  மருதமரங்களுடன் பொருதவன் - சாடி முறித்தவரும் மதலை - குழந்தை பிரகலாதனின் குதலையின் - மழலைச் சொற்களாகிய மறை மொழி - நாராயணாய நம என்னும் வேத மொழியை  இகழ் -  இகழந்த இரணிய நாகம் - இரணியனுடைய உடலை

உகரின் நுதி கொ(ண்)டு வகிரும் அடல் அரி     
திகிரிதர மரகதகிரி எரி  உமிழ்   
உரக சுடிகையில் நட(ம்) நவில் அரி திரு மருகோனே

உகிரின் நுதி கொண்டு - நகத்தின் முனையைக் கொண்டு வகிரும் - பிளந்த ஒரு அடல் அரி - ஒப்பற்ற வலிமை வாய்ந்த நரசிங்க மூர்த்தியாகிய விஷ்ணிவின்
திகிரிதர - சக்ராயுதத்தை ஏந்திய
 மரகதகிரி - பச்சை மலை போல் உள்ளவர் எரி உமிழ் - நெருப்பைக் கக்கும்
உரகம் - காளிங்கன் என்னும் பாம்பின்
சுடிகையில் - தலை உச்சியில்
நடம் நவில் - நடனம் செய்யும்
அரி ( ஹரி)  - விஷ்ணுவின்
திருமருகோனே - அழகிய மருகனே.

உருகும் அடியவர் இரு வினை இருள் பொரும்     
உதய தினகர இமகரன் வலம் வரும்     
உலகம் முழுது ஒரு நொடியினில் வலம் வரு(ம்) பெருமாளே.

உருகும் - (உள்ளம்) உருகும் அடியவர் - அடியார்களுடைய இரு வினை இருள்  - இரண்டு வினைகளின் இருளை பொரும் உதய - போர் செய்து விலக்கத் தோன்றும் தினகரன் - சூரியனே இமகரன் - பனிக் கிரணங்களை உடைய சந்திரன் வலம் வரும் - சுற்றி வருகின்ற உலகம் முழுதும் - முழுமையும் ஒரு நொடி அதனில்  வலம் வரும் -   ஒரு நொடிப் பொழுதில் (மயிலின் மேல் ஏறி) சுற்றி வந்த  பெருமாளே - பெருமாளே.

சுருக்க உரை

நான் தினை அளவு கூட பிறருக்கு ஈகை செய்ததில்லை. கருணை இல்லாதவன். நீ வீற்றிருக்கும் ஸ்தலங் களாகிய அருணை, தணிகை, பழனி, சுவாமி மலை, செங்கோடு முதலியவற்றைப் பாடிப் போற்றும் திறம் இல்லாதவன். வஞ்சனைப் பேச்சுக்களில் பழகுபவன். நல்ல குலமோ, குணமோ இல்லாதவன். பக்தி அற்றவன். பெருமையும் எனக்கு இல்லை. குயவன் சக்கரம் ஓரு முறை சுற்றுவதற்குள் எழுபது முறை சுழலும் மனம் கொண்டவன். நான் உன்னை நினைத்து உருகாமலும், கதறாமலும், வணங்காமலும் ஆணவம் நிறைந்த மனம் உடையவன். பொருள் இல்லாதவன். திருடன். நற்செய்கைகள் எதுவும் செய்யாதவன். இத்தகைய கீழோனாகிய எனக்கு சிவபதம் சேரும் படியான ஒரு நாளும் உண்டாகுமோ?
கடல் ஓலமிடவும், இராவணனுடைய பத்து முடிகளும், இருபது தோள்களும்  அற்று விழவும், ஒரு பாணத்தைச் செலுத்திய மேக வண்ணனும், பாண்டவர்களுக்குத் தூதாகச் சென்றவனும், மத யானையாகிய கஜேந்திரனை ஒரு நொடிப் பொழுதில் வந்து காத்தவனும், மருத மரங்களைச் சாடியவனும், இரணியனை நகத்தால் கிழித்தவனும் ஆகிய திருமாலின் மருகனே,  அடியார்களின் இரு வினைகளையும் விலக்கும் ஞான சூரியனே,  மயில் மேல் உலகை சுற்றி வலம் வரும் பெருமாளே,  நான் சிவபதம் அடைவதும் நாள் உண்டா
ஒப்புக:
1 . பகிர நினைவொரு தினையளவிலும் இலி.....
     எமது பொருள் எனும் மருளை இன்றிக் குன்றிப்     
     பிளவளவு தினை அளவு பங்கிட்டு உண்கை....  திருப்புகழ், அமுதுததி.     
    நொய்யில் பிளவு அளவேனும் பகிர்மின்கள்..         .கந்தர் அலங்காரம்.

2. குலாலன் திகிரி வரும் ஒரு செலவினில் எழுபது...      
  ஒருகால் திரிகையில் ஆயிரக் கோடி சுற்றோடும் திருத்துளமே  
           ...கந்தர்    அந்தாதி.    
  ஐவர் கள்வர் வல்லிதிற் புகுந்து     
  மண்மகன் திகிரியில் எண் மடங்கு சுழற்ற     
  வாடுபு கிடந்த பீடில் நெஞ்சத்து...                                        பட்டினத்தார்.

3. மடுவில் மதகரி முதலென....     
   வெங்கை யானை வனத்திடை துங்க மாமுத லைக்குவெ     
   ருண்டு மூலமெ னக்கரு டனில்ஏறி....                    திருப்புகழ், சங்குவார்.

4. இருதிறல் மருதொடு பொருதவன்....     
   பரிவொடும கிழிந்தி றைஞ்சு மருதிடைத வழ்ந்து நின்ற     
    பரமபத நண்பர்.           ..........................         திருப்புகழ், மருமலரினன்.      

5 மதலை குதலையின் மறைமொழி....
   கூடமுறை நீடு செம்பொன் மாமதலை யூடெழுந்த     
   கோபவரி நாத சிங்கன் மருகோனே     …….. திருப்புகழ், நீலமயில்சேரு.

6 உரக சுடிகையில் தடநவி லரிதிரு மருகோனே...     
   கொம்புகுறிக் காளமடுத் திந்தமெனுற் றாடி நிரைக்      
   கொண்டுவளைத் தேமகிழ   ................    திருப்புகழ், தும்பிமுகத்தானை.

No comments:

Post a Comment