பின் தொடர்வோர்

Tuesday, 3 December 2019

396.பருதியாய்


396
பொது
           தனன தாத்தன தனன தாத்தன
           தானா தானா தானா தானா    தனதான

பருதி யாய்ப்பணி மதிய மாய்ப்படர்
   பாராய் வானாய் நீர்தீ காலா                 யுடுசாலம்
பலவு மாய்ப்பல கிழமை யாய்ப்பதி
   னாலா றேழா மேனா ளாவே                 ழுலகாகிச்
சுருதி யாய்ச்சுரு திகளின் மேற்சுட
   ராய்வே தாவாய் மாலாய் மேலே             சிவமான
தொலைவி லாப்பொரு ளிருள்பு காக்கழல்
   சூடா நாடா ஈடே றாதே                  சுழல்வேனோ
திருத ராட்டிர னுதவு நூற்றுவர்
   சேணா டாள்வா னாளோர் மூவா        றினில்வீழத்
திலக பார்த்தனு முலகு காத்தருள்
   சீரா மாறே தேரூர் கோமான்              மருகோனே
குருதி வேற்கர நிருத ராக்ஷத
   கோபா நீபா கூதா ளாமா                     மயில்வீரா
குலிச பார்த்திப னுலகு காத்தருள்  
   கோவே தேவே வேளே வானோர்       பெருமாளே.

பதம் பிரித்து உரை

பருதியாய் பனி மதியமாய் படர்
பாராய் வானாய் நீர் தீ காலாய் உடு சாலம்
பரிதியாய் - சூரியனாய் பனி - குளிர்ந்த மதியாய் - சந்திரனாய் படர் - பரந்துள்ள பார் ஆய் - பூமியாய் வானாய் - ஆகாயமாய் நீர் தீ காலாய் - நீர், நெருப்பு, காற்று இவைகளாய் உடு சாலம் - நட்சத்திரக் கூட்டமாய்.

பலவுமாய் பல கிழமையாய் பதி
நாலு ஆறு ஏழாம் மேல் நாளாய் ஏழு உலகமாகி

பலவுமாய் - (மற்றும்) பலவுமாய் பல கிழமையாய் - பல உரிமைப் பொருள்களாய் பதினாலு ஆறு ஏழாம் மேல் நாள் ஆய் - இருபத்து ஏழு நட்சந்திரங்களாய் ஏழு உலகாகி - ஏழு உலகங்களாய்.

சுருதியாய் சுருதிகளின் மேல் சுடராய்
வேதாவாய் மாலாய் மேலே சிவம் ஆன
சுருதியாய் - வேதமாய் சுருதிகளின் மேல் - வேதங்களுக்கு மேற்பட்ட சுடராய் - ஒளிப் பொருளாய் வேதாவாய் - பிரமனாய் மாலாய் - திருமாலாய். மேலே சிவமான - மங்கலப் பொருளான.

தொலைவு இலா பொருள் இருள் புகா கழல்
சூடா நாடா ஈடேறாதே சுழல்வேனோ
தொலைவு இலாப் பொருள் - அழிவு என்பதே இல்லாததான பரம் பொருளின் இருள் புகாக் கழல் - (அஞ்ஞான) இருள் என்பதே புக முடியாத அந்தத் திருவடியை சூடா - (தலை மேல்) கொண்டும் நாடா - தேடி விரும்பியும். ஈடேறாதே - ஈடேறாமல் சுழல்வேனோ - (வீணாகத்) திரிவேனோ?

திருதராட்டிரன் உதவு நூற்றுவர்
சேணாடு ஆள்வான் நாள் ஓர் மூவாறினில் வீழ
திருதராட்டிரன் உதவு - திருதராட்டிரன் பெற்ற துரியோதனன் முதலிய. நூற்றுவர் - நூறு பேரும் சேண் நாடு ஆள்வான் - வீர சொர்க்க நாட்டை ஆளும்படி நாளோர் மூவாறினில் - பதினெட்டு நாட்களில் வீழ - மாண்டு ஒழியவும்.

திலக பார்த்தனும் உலகு காத்து அருள்
சீரு ஆமாறே தேர் ஊர் கோமான் மருகோனே
திலக - சிறப்புற்ற பார்த்தனும் - அருச்சுனனும் உலகு காத்தருள் - உலகை ஆண்டு காத்தருளும் சீர் ஆமாறே - சீருடன் வாழும்படி தேர் ஊர் கோமான் - தேரில் சாரதியாக இருந்து தேரைச் செலுத்திய பெருமான் ஆகிய திருமாலின் மருகோனே மருகனே

குருதி வேல் கர நிருத ராக்ஷத
கோபா நீபா கூதாளா மா மயில் வீரா

குருதி - (அவுணர்களின்) இரத்தத்தில் (தோய்ந்த). வேல் கர - வேலாயுத சூரனே. ராக்ஷத - அரக்கர்களின் மீது கோபா - கோபம் கொண்டவனே நீபா - கடப்ப மாலை அணிந்தவனே கூதாளா - கூதாளப் பூ மாலை அண்ந்தவனே மா மயில் வீரா - சிறந்த மயில் வீரனே.

குலிச பார்த்திபன் உலகு காத்து அருள்
கோவே தேவே  வேளே வானோர் பெருமாளே.

குலிச பார்த்திபன் - குலிசாயுதம் ஏந்திய அரசன் இந்திரனின் உலகு - பொன்னுலகைக் காத்தருளிய கோவே - தலைவனே. தேவேதேவனே வேளே - வேளே வானோர் பெருமாளே - தேவர்கள் பெருமாளே.

சூரியன், சந்திரன், பரந்த பூமி, ஆகாயம், நீர், தீ, காற்று, நட்சத்திரங்கள் மற்றும் பலவாய், பல கிழமையாய், இருபத்தேழு சிறந்த நட்சத்திரங்களாய், வேதமாய், வேதங்களுக்கு மேற்பட்ட ஒளிப் பொருளாய், பிரமனாய், திருமாலாய், இவர்களுக்கு மேற்பட்ட சிவமாய், அழிவில்லாத பரம் பொருளாய், அஞ்ஞான இருள் புகாத அந்தத் திருவடியை என் தலையில் சூட்டி, தேடி விரும்பி, ஈடேறாமல் வீணே திரிவேனோ?

துரியோதனன் முதலியோர் பதினெட்டு நாட்களில் மாண்டு விழவும், அருச்சுனன் உலகை ஆளவும், சாரதியாக இருந்துத் தேரைச் செலுத்திய திருமாலின் மருகனே, அரக்கர்களைக் கொன்ற வேலயுதனே, கடப்பும், கூதாளப் பூவும் அணிபவனே, இந்திரன் பொன்னுலகை ஆளும்படி காத்தருளிய தலைவனே, வேளே, தேவர்கள் பெருமாளே நான் ஈடேறாமல் வீணே திரிவேனோ?

ஒப்புக:
தேர் ஊர் கோமான் ....
விசயன் ரதமுதல் நடவிய வெளிமையு
நிகில செகதல முரைசெயு மரிதிரு மருகோனே          

.......திருப்புகழ், குருவுமடியவர்

கூதாளா...
கூதாள கிராதகுலிக் கிறைவ      ...கந்தர் அனுபூதி



No comments:

Post a Comment