பின் தொடர்வோர்

Wednesday, 8 January 2020

398.பிறவியலை


398
பொது

            தனதனன தாத்தனத்       தனதானா

பிறவியலை யாற்றினிற்           புகுதாதே
   பிரகிருதி மார்க்கமுற்          றலையாதே
உறுதிகுரு வாக்கியப்           பொருளாலே
   உனதுபத காட்சியைத்         தருவாயே
அறுசமய சாத்திரப்           பொருளோனே
   அறிவுளறி வார்க்குணக்      கடலோனே
குறுமுனிவ னேத்துமுத்          தமிழோனே
   குமரகுரு கார்த்திகைப்       பெருமாளே.

பதம் பிரித்து உரை
பிறவி அலை ஆற்றினில் புகுதாதே
பிரகிருதி மார்க்கம் உற்று அலையாதே

பிறவி அலை ஆற்றினில் - பிறவி என்னும் அலைகள் வீசும் ஆற்றினில். புகுதாதே - புகுந்து அலைச்சல் உறாமல். பிரகிருதி மார்க்கம் உற்று - உலக சம்பந்தமான மாயா வழிகளில் பொருந்தி அலைச்சல் உறாமல்.

உறுதி குரு வாக்கிய பொருளாலே
உனது பத காட்சியை தருவாயே

உறுதி - நன்மை பயக்க வல்ல. குரு வாக்கிய - குரு உபதேச மொழியின். பொருளாலே - பொருள் மூலமாக. உனது பத காட்சியை - உனது திருவடித் தரிசனத்தை. தருவாயே - தந்து அருள்வாயாக.

அறு சமய சாத்திர பொருளோனே
அறிவுள் அறிவார் குண கடலோனே
அறு சமய சாத்திர - ஆறு சமய சாத்திரங்களுக்கும். பொருளோனே - பொருளாய் விளங்குபவனே. அறிவுள் அறிவார் - அறிவின் உட்பொருளை அறியும் பெரியோர்களுக்கு. குணக் கடலோனே - குணக் கடலாக விளங்குபவனே.

குறு முனிவன் ஏத்தும் முத்தமிழோனே
குமர குரு கார்த்திகை பெருமாளே.

குறு முனிவன் - குட்டை வடிவினனாகிய அகத்திய முனிவன். ஏத்தும் - துதிக்கும். முத்தமிழோனே - முத்தமிழ்ப் பெருமாளே. குமர குரு - குமர குரு என்னும் பெயருடைய பெருமாளே. கார்த்திகைப் பெருமாளே - கார்த்திகைப் பெண்களுக்கு இனிய பெருமாளே.

சுருக்க உரை
பிறவி என்னும் அலை வீசும் ஆற்றில் புகாமலும், உலக வாழ்க்கையின் மாயைகளில் அலைச்சல் உறாமலும், நன்மை பயக்கும் குருவின் உபதேசத்தின் மூலமாக உனது திருவடித் தரிசனத்தை தந்து அருளுக.
ஆறு சமய சாத்திரங்களுக்குப் பொருளாக அமைந்தவனே, அறிவின் உட்பொருளை அறிபவர்களுக்குக் குணக் கடலாய் இருக்கும் பெரியோனே, அகத்திய முனிவர் துதிக்கும் முத்தமிழோனே. குமரகுருபரனே, கார்த்திகைப் பெண்களுக்கு இனிய பெருமாளே உனது திருவடியை நான் காண அருள் புரிக.
விளக்கக் குறிப்புகள்
அறு சமய சாத்திரப் பொருளோனே....
ஆறு சமயங்கள் - சைவம், வைணவம், காணாபத்யம், கெளமாரம், சாத்தம், செளரம் என்பன. இவை முறையே சிவன், திருமால், கணபதி, குமரன், சக்தி, சூரியன் ஆகியோரைப் பரம் பொருளாக வழிபடும் மரபைக் குறிப்பன.
ஒப்புக
அறிவுள் அறிவார்....
அறிவொன் றறநின் றறிவார் அறிவிற்
பிறிவொன் றறநின்ற பிரான் அலையோ...கந்தர் அநுபூதி

அறிய அறிய அறியாத அடிக ளறிய அடியேனும்
அறிவு ளறிவு மறிவூற  அருள்வாயே
-      திருப்புகழ், சுருதிமறை.
குறு முநிவர் ஏத்தும்....
குறுமுநி யின்பப் பொருள் பெற...திருப்புகழ் பிறர்புகழின்.
மாமுநிக்கு காதி லுணார் வுணார் விடு..
                                              -    திருப்புகழ் சீர்சிறக்கு.


No comments:

Post a Comment