பின் தொடர்வோர்

Saturday, 11 January 2020

404. பேர்அவாஅறா


404
பொது

          தான தான தானான தானத்   தனதானா

பேர வாவ றாவாய்மை பேசற்           கறியாமே

   பேதை மாத ராரோடு                 பிணிமேவா
ஆர வார மாறாத நூல்கற்              றடிநாயேன்
   ஆவி சாவி யாகாமல் நீசற்          றருள்வாயே
சூர சூர சூராதி சூரர்க்                   கெளிவாயா
   தோகை யாகு மாரா கிராதக்   கொடிகேள்வா
தீர தீர தீராதி தீரப்                      பெரியோனே
   தேவ தேவ தேவாதி தேவப்        பெருமாளே.

பதம் பிரித்தல்

பேர் அவா அறா வாய்மை பேசற்கு அறியாமே
பேதை மாதராரோடு கூடி பிணி மேவா
பேர் அவா - பேராசை. அறா - நீங்காத நிலையில் இருந்து. வாய்மை பேசற்கு - உண்மை பேசுதற்கு. அறியாமே - தெரியாமல். பேதை மாதராரோடு - அறிவீனர்களான (விலை) மாதர்களுடன். கூடி - (நான்) சேர்ந்து. பிணி மேவா - நோய்களை அடைந்து.

ஆர வாரம் மாறாத நூல் கற்று அடி நாயேன்
ஆவி சாவி ஆகாமல் நீ சற்று அருள்வாயே

ஆரவாரம் மாறாத - ஆடம்பரம் நீங்காத (சமயக் கூச்சலுக்கு இடம் தரும்). நூல் கற்று - நூல்களைப் படித்து. அடி நாயேன் - அடிமையாகிய நான். ஆவி - என்னுயிர். சாவியாகமல் - வீண் ஆகாமல். நீ சற்று அருள் வாயே - நீ சிறிது அருள்வாயாக.

சூர சூர சூராதி சூரர்க்கு எளிவு ஆயா
தோகையா குமாரா கிராத கொடி கேள்வா

சூர சூர சூராதி சூரர்க்கு - சூரர்களுக்கு எல்லாம் சூரனான சூர பத்மன் முதலிய சூரர்களுக்கு. எளிவு ஆயா - எளிதில் காட்சி கொடுத்தவனே. தோகையா - மயில் வாகனனே. குமாரா - குமார மூர்த்தியே. கிராதக் கொடி - வேடர்களின் பெண்ணும் கொடி போன்றவளும் ஆகிய வள்ளியின். கேள்வா - கணவனே.

தீர தீர தீராதி தீர பெரியோனே
தேவ தேவ தேவாதி தேவ பெருமாளே.

தீர தீர தீராதி தீர - மிகவும் தீரம் உடையவனே. பெரியோனே -  எல்லா வகையிலும் மேம்பட்டவனே. தேவ தேவ - தேவ தேவனே. தேவாதி தேவப் பெருமாளே - தேவர் முதலனோருக்குத் தேவனாக விளங்கும் பெருமாளே.

சுருக்க உரை

பேராசை மிகுந்தும், உண்மை பேசாமலும் இருக்கும் அறிவீனர்களாகிய விலை மாதர்களோடு உறவாடி நோய்களை அடைந்து, ஆடம்பரத்துடன் கூச்சிடும் சமய வாதிகள் வழங்கும் நூல்களைப் படித்து, அடிமையாகிய எனது உயிர் வீணாகப் போகாமல் நீ சற்று அருள் புரிவாயாக.

சூராதி சூரர்களுக்கு எளிதில் காட்சி கொடுத்தவனே, மயில் வாகனனே, வேடர்கள் பெண்ணாகிய வள்ளியின் கணவனே, தீரனே, தேவ தேவனே, எல்லாம் வல்ல பெரியோனே, என் உயிர் வீணாகப் போகமல் காத்து அருள் புரிவாயாக.

விளக்க  குறிப்புகள்

1.சூரர்க்கு எளிவு ஆயா...        சூரன், சிங்கமுகன், தாரகன் ஆகிய மூவரும் முருகனின் தரிசனத்தைப்   பெற்றவர்கள்.
2.தேவ தேவ தேவாதி தேவப் பெருமாளே என்னும் இறுதி அடி வரும்    மற்ற பாக்கள் -- காதிமோதி,  கூறுமார.

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete