பின் தொடர்வோர்

Saturday, 6 June 2020

423.அறிவிலாப் பித்தர்


423
காஞ்சீபுரம்
               தனதனாத் தத்த தந்த தனதனாத் தத்த தந்த
                தனதனாத் தத்த தந்த                  தனதான
 
    அறிவிலாப் பித்த ருன்ற னடிதொழாக் கெட்ட வஞ்சர்
         அசடர்பேய்க் கத்தர் நன்றி                              யறியாத
      அவலர்மேற் சொற்கள் கொண்டு கவிகளாக் கிப்புகழ்ந்து
         அவரைவாழ்த் தித்தி ரிந்து                    பொருள்தேடிச்
      சிறிதுகூட் டிக்கொ ணர்ந்து தெருவுலாத் தித்தி ரிந்து
         தெரிவைமார்க் குச்சொ ரிந்து                   அவமேயான்
      திரியுமார்க் கத்து நிந்தை யதனைமாற் றிப்ப ரிந்து
         தெளியமோ க்ஷத்தை யென்று                   அருள்வாயே
      இறைவர்மாற் றற்ற செம்பொன் வடிவம்வேற் றுப்பி ரிந்து
         இடபமேற் கச்சி வந்த                           உமையாள்தன்
      இருளைநீக் கத்த வஞ்செய் தருளநோக் கிக்கு ழைந்த
         இறைவர்கேட் கத்த குஞ்சொ                  லுடையோனே
      குறவர்கூட் டத்தில் வந்து கிழவனாய்ப் புக்கு நின்று
         குருவியோட் டித்தி ரிந்த                           தவமானைக்
      குணமதாக் கிச்சி றந்த வடிவுகாட் டிப்பு ணர்ந்த
         குமரகோட் டத்த மர்ந்த                             பெருமாளே.
 
பதம் பிரித்து உரை

அறிவு இலாப் பித்தர் உன்றன் அடி தொழா கெட்ட வஞ்சர்
அசடர் பேய் கத்தர் நன்றி அறியாத
அறிவு இலாப் பித்தர் = அறிவு இல்லாத பித்தர். உன்றன் அடி தொழா = உன்னுடைய திருவடியைத் தொழாத. கெட்ட வஞ்சர் = கெட்ட வஞ்சகர்கள். அசடர் = முட்டாள்கள். பேய்க்கத்தர் = பேய்க்குணம் உடையவர்.நன்றி அறியாத = நன்றி அறிதல் இல்லாத.

அவலர் மேல் சொற்கள் கொண்டு கவிகளாக்கி புகழ்ந்து
அவரை வாழ்த்தி திரிந்து பொருள் தேடி
அவலர் மேல் = வீணர்கள் மீது (பயனில்தாவர்கள்) சொற்கள் கொண்டு = சொற்கள் கொண்டு கவிகளாக்கிப் புகழ்ந்து = பாடல்கள் அமைத்துப் புகழ்ந்தும் அவரை வாழ்த்தித் திரிந்து = அவர்களை வாழ்த்தியும் திரிந்து பொருள் தேடி = செல்வத்தைதேடி
சிறிது கூட்டி கொணர்ந்து தெரு உலாத்தி திரிந்து
தெரிவைமார்க்கு சொரிந்து அவமே யான்
சிறிது கொட்டிக்கொணர்ந்து = சிறிதளவு சேகரித்துக் கொண்டு வந்து தெரு உலாத்தித் திரிந்து = தெருக்களில் உலவித் திரிந்து தெரிவை மார்க்கு = விலை மாதர்களுக்கு சொரிந்து = (அப்பெண்களுக்கு) நிரம்பக் கொடுத்து அவமே யான் = வீண் காலம் கழித்து நான்.

திரியும் மார்க்கத்து நிந்தை அதனை மாற்றி பரிந்து
தெளிய மோக்ஷத்தை என்று அருள்வாயே
திரியும் மார்க்த்து = திரிகின்ற போக்கால். நிந்தை அதனை மாற்றி = ( அதனால் வருகின்ற) நிந்தை மொழி ஒழியும்படி அருளி பரிந்து = என் மீது அன்பு கூர்ந்து  தெளிய மோக்ஷத்தை = நான் தெளிவு பெற  வீட்டின்பத்தை என்று அருள்வாயே = என்று எனக்கு அருள்வாய்?

இறைவர் மாற்று அற்ற செம்பொன் வடிவம் ஏற்று பிரிந்து
இடபம் மேல் கச்சி வந்த உமையாள் தன்
இறைவர் = இறைவனது மாற்று அற்ற செம்பொன் = மாற்றில்லாத செம்பொன் வடிவம் வேற்று = உருவம் வேறாகும்படி பிரிந்து = அவரிடமிருந்து பிரிந்து இடபம் மேல் = ரிஷப வாகனத்தின் மேல் கச்சி வந்த = காஞ்சீபுரத்துக்கு வந்த உமையாள் தன் = உமையாளுடைய

இருளை நீக்க தவம் செய்து அருள நோக்கி குழைந்த
இறைவர் கேட்க தகும் சொல் உடையோனே
இருள் நீக்க = அஞ்ஞானம் நீங்க தவம் செய்த அருள் நோக்கி = (அம்மையின்) தவத்தைப் பார்த்து. குழைந்த = உருகின இறைவர் கேட்கத் தகும் சொல் = சிவபெருமான் கேட்டு மகிழத் தக்க உபதேசச் சொல்லை உடையவனே = உடையவனே
குறவர் கூட்டத்தில் வந்து கிழவனாய் புக்கு நின்று
குருவி ஓட்டி திரிந்த தவ மானை
குறவர் கூட்டத்தில் வந்து = குறவர்களின் கூட்டத்தில் வந்து கிழவனாய்ப் புக்கு நின்று = கிழ வேடத்தில் (காட்டில்) புகுந்து நின்று. குருவி ஓட்டித் திரிந்த = குருவிகளை ஓட்டிக் காவல் புரிந்து திரிந்த தவ மானை = தவம் நிறைந்த மானாகிய வள்ளியை.

குணமதாக்கி சிறந்த வடிவு காட்டி புணர்ந்த
குமர கோட்டத்து அமர்ந்த பெருமாளே.

குணமதாக்கி = தன் வசப் படுத்தி . சிறந்த வடிவு காட்டி = தனது தெய்வ வடிவைக் காட்டி புணர்ந்த = அவளுடன் சேர்ந்த குமர கோட்டத்து அமர்ந்த பெருமாளே = குமர கோட்டம் என்னும் திருக் கோயிலில் வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை
மாற்றுக் குறையாத இறைவனுடைய திருமேனியிலிருந்து தனியாகப் பிரிந்து ரிஷப வாகனமேறிக் காஞ்சிக்குத் தவம்புரிய வந்த உமையம்மையின் தவக்கோலத்தைக் கண்டு மனம் குழைந்தவரான சிவபெருமான் கேட்டு மகிழத்தக்க உபதேச மொழிகளை உடையவனே,  குறவர்கள் கூட்டத்திலே கிழவன் வேடத்தில் தோன்றி, தினைப்புனத்தில் கிளி, குருவிகளை ஓட்டிக் கொண்டிருந்த வள்ளியை வசப்படுத்திக்கொண்டு, உன்னுடைய தெய்வக் கோலத்தை அவருக்குக் காட்டி மணந்துகொண்டவனே,  குமரகோட்டம் என்னும் காஞ்சித் திருப்பதியில் அமர்ந்திருக்கின்ற பெருமாளே,
அறிவற்ற பித்தர்களையும்,  உன் திருவடிகளைத் தொழாத வஞ்சகர்களையும்,  மூடர்களையும்,  பேயின் குணம் கொண்டவர்களையும், வீணர்களையும், புகழ்ந்து கவிபாடி பொருள் சேகரித்து, தெருக்களில் சுற்றித் திரிந்து அந்தப் பொருளைப் பெண்களுக்கு கொடுத்து வீணே காலங்கழித்து வருகிற நான், இப்படித் திரிவதனால் ஏற்படும் பழிச்சொல் நீங்கும்படியாக அருளி, என்மீது அன்புகூர்ந்து, நான் தெளிவுபெறுமாறு மோட்ச இன்பத்தை என்றைக்குத் தருவாய்?  (தவறாமல் தந்தருள வேண்டும் என்பது சொல்லாமல் சொன்னது)
. ஒப்புக:
இறைவர் மாற்றற்ற செம்பொன் வடிவம்....
மாற்றறியாத செழும் பசும் பொன்னே
மாணிக்கமே சுடர் வண்ணக் கொழுந்தே
                                   ---- இராமலிங்க சுவாமிகள், திருவருட்பா  

 குணமதாக்கிச் சிறந்த வடிவு காட்டி......

குணமதாக்கி – தெய்வகோலத்தை வள்ளிக்கு அளித்தது

முகமாறுடைய பிரான் கன்னிதனையோர் கடிகாவினிற் கலந்து
துன்னு கருணை செய்து தொல்லுருவங் காட்டினனே
                                                                      ---- கந்த புராணம்

(அறுமுகம் உடைய வள்ளல்....நங்கைதனை யருளோடு நோக்க... குறவர் மாதர்  குயற்றிய கோலம் நீங்கி, முன்னுறு தெய்வக் கோல முழுதொருங் குற்றதன்றே) --- கந்த புராணம்.



விளக்கக் குறிப்புகள்
இடபம் மேல் கச்சி வந்த உமையாள்
கயிலாயத்தில், ஒருசமயம் ஈசனின்  கண்களை விளையாட்டாகப் பார்வதி தேவியார் பொத்தியதால், உலகம் முழுவதும் இருள் சூழ்ந்தது. அந்த கணம் உலகில் வாழும் ஜீவன்கள் மிகவும் துன்பத்திற்கு ஆளானதால், கோபம் கொண்ட இறைவன், பார்வதியை பூலோகம் சென்று தவம் செய்யும்படி கட்டளையிட்டார். பூலோகம் வந்த பார்வதி, காஞ்சி மாநகருக்கு வந்து கம்பா நதிக்கரையில் அமர்ந்து மண்ணால் சிவலிங்கம் நிறுவி விரதம் மேற்கொண்டு பூஜித்துக் கொண்டிருந்தாள்.  இடபம் தர்மத்தின் வடிவம்.

குமர கோட்டத்து அமர்ந்த

பிரணவ்த்திற்கு பொருள் தெரியாததைனால் பிரமனை சிறை பிடித்தார். சிவபெருமான் முருகனைக் கண்டித்து, நான்முகனை சிறையிலிருந்து மீட்டார். பிரணவத்தின் பொருளை மண்டியிட்டு முருகப்பெருமானிடமிருந்து தானும் கேட்டுக்கொண்டார். என்னதான் திருவிளையாடல் என்றாலும், குருவின் அம்சமான ஈசனையே சீடனாகக் கொண்டது தோஷம் என்று அன்னை சக்தியின் மூலம் அறிந்தார் முருகப்பெருமான். தனக் கேற்பட்ட தோஷம் நீங்குவதற்காக முருகப்பெருமான், நகரங்களில் சிறந்ததும் புண்ணியம் மிகுந்ததுமான காஞ்சி நகருக்கு வந்தார். அங்கே ஒரு மாமரத்தடியில் சிவலிங்கத்தைப்  பிரதிஷ்டை செய்து வழிபட்டார். முருகர் வழிபட்ட ஈசன் 'சேனாபதீஸ்வரர்' என்று போற்றப்பட்டார். அந்தத் தலமும் 'சேனாபதீஸ்வரம்' என்று உருவானது. மாமரத்தடியில் வழிபட்ட குமரக்கோட்டம் முருகன் 'மாவடி கந்தன்' எனப் பெயர் பெற்றார்.



No comments:

Post a Comment