424
காஞ்சீபுரம்
தத்தத் தனதான தத்தத் தனதான
அற்றைக் கிரைதேடி அத்தத் திலுமாசை
பற்றித் தவியாதே பற்றைப் பெறுவேனோ
வெற்றிக் கதிர்வேலா வெற்பைத் தொளைசீலா
கற்றுற் றுணர்போதா கச்சிப் பெருமாளே
பதம் பிரித்து உரை
அற்றைக்கு இரை தேடி அத்தத்திலும் ஆசை
பற்றித் தவியாத பற்றை பெறுவேனோ
வெற்றி கதிர் வேலா வெற்பை தொளை சீலா
கற்று உற்று உணர் போதா கச்சி பெருமாளே
அற்றைக்கு = அன்றாடம் வேண்டிய
இரை = உணவை.
தேடி = தேடி.
அத்தத்திலும்
ஆசை பற்றி = பொருளிலும் விருப்பம் கொண்டு
தவியாத = தளராத
பற்றைப் பெறுவேனோ = பற்றுக் கோடு
ஒன்றைப் பெறுவேனோ
வெற்றிக் கதிர்
வேலா = வெற்றியே விளங்கும் ஒளி மிகுந்த வேலனே
வெற்பை = கிரௌஞ்ச மலையை
தொளை சீலா = தொளைத்த பரிசுத்தனே
கற்று = (ஞான நூல்களைக்)
கற்று.
உற்று உணர் = தியானித்து
உணரப் படும்
போதா = (அடியார்களால்
உணரப்படும்) ஞான சொரூபனே.
கச்சிப் பெருமாளே = காஞ்சீபுரத்தில்
வீற்றிருக்கும் பெருமாளே.
சுருக்க உரை
அன்றன்று வேண்டிய உணவைத் தேடியும், பொருள் மீது ஆசையும் கொண்டு தவியாத
பற்றுக் கோடு ஒன்றைப் பெறுவேனோ?
வெற்றி வடிவேலனே!
கிரௌவஞ்ச மலையைத் தொளைத்தவனே! பல ஞான நூல்களைக் கற்று உணர்ந்த
ஞான சொரூபனே! காஞ்சியில் வீற்றிருக்கும் பெருமாளே! நான் ஆசைப் பற்றைத் தவியாத
பற்றைப் பெறுவேனோ?
ஒப்புக:
அத்தத்திலும் ஆசை பற்றி
அளகேசன் நிகராக அம்பொன் மிக வைத்த
பேரும்
நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர். --- தாயுமானார்.
பற்றைப் பெறுவேனோ
பெற்றி பிறர்க்குஅரிய பெம்மான்,
பெருந்துறையான்,
கொற்றக் குதிரையின்மேல் வந்து அருளி,
தன்அடியார்
குற்றங்கள் நீக்கி, குணம் கொண்டு,
கோது ஆட்டிச்
சுற்றிய சுற்றத் தொடர்வு அறுப்பான்
தொல்புகழே
பற்றி, இப் பாசத்தைப்
பற்று அற, நாம் பற்றுவான்
பற்றிய பேரானந்தம்
பாடுதுங்காண் அம்மானாய்.
-- திருவாசகம்.
ஒளியைக் கண்டவுடன் இருள் தானே விலகுவது
போல், கடவுள் பற்றினைக் கண்டவுடன் மற்றப் பற்றுக்கள் தாமே விலகிவிடும்.
கற்று உற்று உணர் போதா ---
கற்கத்தக்க நூல்கள் ஞான நூல்களே ஆகும். ஞான நூல்களைக் கற்று, கற்றதன் பயனாய், இறைவனை நினைப்பற நினைந்து தியானித்தல் வேண்டும். அத் தியான ஞானத்தால் உணரப்படும் பொருள் இறைவன். "அறிவு நூல் கல்லா மூடர்" என்று மற்றோரு திருப்புகழில் கூறுகிறார்
No comments:
Post a Comment