பின் தொடர்வோர்

Tuesday, 4 December 2018

361.சந்தம் புனைந்து

361
பொது

                    தந்தந் தனந்த தந்தந் தனந்த
                    தந்தந் தனந்த            தனதான

சந்தம் புனைந்து சந்தஞ் சிறந்த
     தண்கொங் கைவஞ்சி             மனையாளுந்
தஞ்சம் பயின்று கொஞ்சுஞ் சதங்கை
     தங்கும் பதங்க                    ளிளைஞோரும்
எந்தன் தனங்க ளென்றென் றுநெஞ்சி
     னென்றும் புகழ்ந்து                    மிகவாழும்
இன்பம் களைந்து துன்பங் கள்மங்க
     இன்றுன் பதங்கள்                    தரவேணும்
கொந்தின் கடம்பு செந்தண் புயங்கள்
     கொண்டங் குறிஞ்சி             யுறைவோனே
கொங்கின் புனஞ்செய் மின்கண் டகந்த
     குன்றம் பிளந்த                          கதிர்வேலா
ஐந்திந் த்ரியங்கள் வென்றொன் றுமன்பர்
     அங்கம் பொருந்து                    மழகோனே
அண்டந் தலங்க ளெங்குங் கலங்க
     அன்றஞ் சலென்ற                    பெருமாளே

பதம் பிரித்து உரை

சந்தம் புனைந்து சந்தம் சிறந்த
தண் கொங்கை வஞ்சி மனையாளும்
சந்தம் - சந்தனம் புனைந்து - அணிந்து சந்தம் சிறந்த - அழகு சிறந்த தண் - குளிர்ந்த கொங்கை - கொங்கையை உடைய வஞ்சி - வஞ்சிக் கொடி போன்ற மனையாளும் - மனைவியும்

தஞ்சம் பயின்று கொஞ்சும் சதங்கை
தங்கும் பதங்கள் இளைஞோரும்
தஞ்சம் பயின்று - (என்னைப்) பற்றுக் கோடாகக் கொண்டு கொஞ்சும் சதங்கை தங்கும் - ஒலிக்கும் கிண்கிணியை அணிந்துள்ள பதங்கள் இளைஞோரும் - பாதங்களை உடைய குழந்தைகளும்

எந்தன் தனங்கள் என்று என்று நெஞ்சில்
என்றும் புகழ்ந்து மிக வாழும்
எந்தன் தனங்கள் என்று என்று - (ஆக இவர்களே) என்னுடைய செல்வங்கள் என்று அடிக்கடி நெஞ்சில் என்றும் - மனத்தில் எப்பொழுதும் புகழ்ந்து மிக வாழும் - புகழ்ந்து கூறி நன்றாக வாழ்கின்ற

இன்பம் களைந்து துன்பங்கள் மங்க
இன்று உன் பதங்கள் தரவேணும்
இன்பம் களைந்து - (இந்த நிலை இல்லாத) இன்பத்தை நீக்கி துன்பங்கள் மங்க - எனது துன்பங்கள் எல்லாம் அடங்கி நீங்க இன்று உன் பதங்கள் தரவேணும் - இன்று உன் திருவடிகளைத் தர வேண்டுகிறேன்

கொந்தின் கடம்பு செம் தண் புயங்கள்
கொண்டு அம் குறிஞ்சி உறைவோனே
கொந்தின் - பூங்கொத்துக்களை உடைய கடம்பு - கடப்ப மாலையை செம் - செவ்விய தண் - குளிர்ந்த புயங்கள் - திருப்புயங்களில் கொண்டு - அணிந்து கொண்டு அம் - அழகிய குறிஞ்சி - மலை இடங்களில் உறைவோனே - உறைபவனே

கொங்கின் புனம் செய் மின் கண்ட கந்த
குன்றம் பிளந்த கதிர்வேலா
கொந்தின் - பூங்கொத்துக்களை உடைய கடம்பு - கடப்ப மாலையை செம் - செவ்விய தண் - குளிர்ந்த புயங்கள் - திருப்புயங்களில் கொண்டு - அணிந்து கொண்டு அம் - அழகிய குறிஞ்சி - மலை இடங்களில் உறைவோனே - உறைபவனே

ஐந்து இந்த்ரியங்கள் வென்று ஒன்றும் அன்பர்
அங்கம் பொருந்தும் அழகோனே
ஐந்து இந்த்ரியங்கள் வென்று - ஐந்து பொறிகளையும் வென்று ஒன்றும் அன்பர் - இருக்கும் அடியவர்களுடைய அங்கம் பொருந்து - உடலில் பொருந்தி விளங்கும் அழகோனே - அழகனே

அண்டம் தலங்கள் எங்கும் கலங்க
அன்று அஞ்சல் என்ற பெருமாளே

அண்டம் தலங்கள் - அண்டங்களும் பூமியும் எங்கும் - (சூரனுக்குப் பயந்து) எங்கும் கலங்க - கலங்கிய அன்று - அந்தக் காலத்தில் அஞ்சல் என்ற பெருமாளே - பயப்படாதீர்கள் என்று கூறிய பெருமாளே

சுருக்க உரை ```

சந்தனம் அணிந்த குளிர்ந்த கொங்கைகளை உடைய மனைவியும், கிண்கிணி ஒலிக்கும் பதங்களை உடைய குழந்தைகளும், இவர்களே
என் செல்வங்கள் என்று அடிக்கடி கூறி நன்றாக வாழ்கின்ற இந்த நிலை இல்லாத இன்பம் ஒழிய, உனது திருவடியை எனக்குத் தந்து அருள வேண்டும்

கடப்ப மாலையைப் புயங்களில் அணிந்து கொண்டு மலை இடங்களில் வீற்றிருப்பவனே மலைக் கொல்லையில் வாழும் மின் போன்ற வள்ளியைக் கண்டு கொண்ட கந்தனே கிரௌஞ்ச மலையைப் பிளந்த ஒளி வேலனே ஐந்து பொறிகளையும் அடக்கிய அடியார்கள் உள்ளத்தில் வாழ்பவனே பூமியில் உள்ள அனைவரும் சூரனைக் கண்டு கலங்க, பயப்படாதீர்கள் என்று கூறிய பெருமாளே இன்று உன் பதங்களை எனக்குத் தரவேணும்

விளக்கக் குறிப்புகள்

1இளைஞோரும் எந்தன் தனங்கள்
 நம் பொருள் நம் மக்கள் என்று நச்சி இச்சை செய்து நீர்
அம்பரம் அடைந்து சால அல்லல் உய்ப்பதன் முனம் - சம்பந்தர் தேவாரம்
 தம்பொருள் என்பதம் மக்கட் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும் - திருக்குறள்



No comments:

Post a Comment