பின் தொடர்வோர்

Sunday, 2 December 2018

356.கவடு கோத்து

356
பொது

              தனன தாத்தன தனன தாத்தன
              தானா தானா தானா தானா              தனதான

கவடு கோத்தெழு முவரி மாத்திறல்
   காய்வேல் பாடே னாடேன் வீடா         னதுகூடக்
கருணை கூர்ப்பன கழல்க ளார்ப்பன
   கால்மேல் விழேன் வீழ்வார் கால்மீ தினும்வீழேன்
தவிடி னார்ப்பத மெனினு மேற்பவர்
   தாழா தீயேன் வாழா தேசா                  வதுசாலத்
தரமு மோக்ஷமு மினியெ னாக்கைச
   தாவா மாறே நீதா னாதா                     புரிவாயே
சுவடு பார்த்தட வருக ராத்தலை
   தூளா மாறே தானா நாரா                    யணனேநற்
றுணைவ பாற்கடல் வனிதை சேர்ப்பது
   ழாய்மார் பாகோ பாலா காவா       யெனவேகைக்
குவடு கூப்பிட வுவண மேற்கன
   கோடு தாவா னேபோ தாள்வான்     மருகோனே
குலிச பார்த்திப னுலகு காத்தருள்
   கோவே தேவே வேளே வானோர்       பெருமாளே


பதம்பிரித்து உரை

கவடு கோத்து எழும் உவரி மா திறல்
காய் வேல் பாடேன் ஆடேன் வீடானது கூட
கவடு - மரக் கிளைகளை கோத்து எழ - நிரம்பிக் கொண்டு எழுந்ததும் உவரி - கடலில் தோன்றி நின்றதுமான மா - மாமரமாகிய சூரனது திறல் காய் - வலிமையைக் காய்ந்து அழித்த வேல் பாடேன் - (உனது) வேலாயுதத்தை நான் பாடுவதில்லை ஆடேன் - அதைத் துதித்து நான் ஆடுவதில்லை வீடானது கூட - வீட்டின்பத்தை அடைய விரும்பி

கருணை கூர்ப்பன கழல்கள் ஆர்ப்பன
கால் மேல் வீழேன் வீழ்வார் கால் மீதினும் வீழேன்
கருணை கூர்ப்பன - கருணை மிக்கதும் கழல்கள் ஆர்ப்பன - கழல்கள் ஒலிப்பதும் ஆன கால் மேல் வீழேன் - உனது திருவடியின் மீது வீழ்ந்து வணங்குவதில்லை வீழ்வார் கால் மீதினும் வீழேன் - அப்படி வீழ்ந்து வணங்குபவர்களின் கால்களிலும் வீழ்ந்து வணங்குவதில்லை

தவிடின் ஆர் பதம் எனினும் ஏற்பவர்
தாழாது ஈயேன் வாழாதே சாவது சால
தவிடின் ஆர் - தவிடளவு பதம் எனினும் - ஒரு பதம் சோறு கூட ஏற்பவர் - யாசிப்பவர்களுக்கு தாழாது - தடையின்றி ஈயேன் - கொடுக்க மாட்டேன் வாழாதே - இங்ஙனம் வாழ்வதைக் காட்டிலும் சாவது - இறந்து படுதலே சால - மிகவும்

தரமும் மோக்ஷமும் இனி என் யாக்கை
சதா ஆமாறே நீ தான் நாதா புரிவாயே
தர(மு)ம் - மேலானதாகும்
மோக்ஷமும் இனி என் யாக்கை - இனியாவது என் உடல் பிறப்பிலிருந்து விடுதலை அடைந்து சதா - எப்போதும் ஆமாறே - நிலை பெற்றிருக்குமாறு நீ தான் நாதா - நாதனே நீ தான் புரிவாயே - அருள் புரிவாயாக


சுவடு பார்த்து அட வரு கரா தலை
தூள் ஆமாறே தான் ஆ நாராயணனே நல்
சுவடு பார்த்து - (நீர் யானையின்) கால் நிழலைக் கண்டு அட வரு - கொல்லுதற் பொருட்டு வந்த கரா தலை - முதலையின் தலை தூள் ஆமாறுதான் - பொடியாகும்படி ஆ நாயாயணனே - ஓ நாராயண மூர்த்தியே நல் - நல்ல

துணைவ பாற் கடல் வனிதை சேர்ப்ப
துழாய் மார்பா கோபாலா காவாய் எனவே கை
துணைவ – துணைவனே பாற் கடல் வனிதை - பாற்கடலில் தோன்றிய மாதாகிய இலக்குமியின் சேர்ப்ப - தலைவனே துழாய் மார்பா - துளசி மாலை அணிந்த மார்பனே கோபாலா - கோபாலா காவாய எனவே - என்னைக் காப்பாற்று என்று

குவடு கூப்பிட உவணம் மேல் கன
கோடு ஊதா வானே போது ஆள்வான் மருகோனே
கை குவடு - துதிக்கை உள்ள மலை போன்ற யானை கூப்பிட -  யானை கூச்சலிட்டு அழைக்க உவணம் மேல் - கருடன் மேல் கன கோடு - தங்க மயமான சங்கை ஊதா - ஊதி வானே போது - ஆகாய வழியாக வந்து ஆள்வான் - (அந்த யானையைக்) காத்து அருளிய திருமாலின் மருகோனே - மருகனே

குலிச பார்த்திபன் உலகு காத்தருள்
கோவே தேவே வேளே வானோர் பெருமாளே
குலிச பார்த்திப - குலிசாயுதத்தை ஏந்திய அரசனான இந்திரனுடைய உலகு - பொன்னுலகை காத்து அருள் - காத்தருளிய கோவே - தலைவனே தேவே - தேவனே வேளே - செவ்வேளே வானோர் பெருமாளே - தேவர்கள் பெருமாளே
 
சுருக்க உரை
கடலில் தோன்றிய சூரனாகிய மாமரத்தை அழித்த வேலாயுதத்தை நான் பாடுவதில்லை அதைத் துதித்து ஆடுவது இல்லை வீட்டின்பத்தை விரும்பி உன் திருவடியில் வீழ்வது கிடையாது அப்படி வீழ்வார்கள்
காலில் வீழ்வதும் இல்லை யாசிப்பவர்களுக்கு ஒரு பதம் சோறு கூட தடையின்றி  கொடுப்பதில்லை அத்தகைய நான் வாழ்வதை விடச் சாதலே மேலானது பிறப்பினின்று என்னை விடுதலை அடையச் செய்து என் உடல் எப்போதும் உன் திருவடியில் நிலைத்து இருக்குமாறு நீ தான் அருள் புரிய வேண்டும்

லக்ஷ்மியின் தலைவனும், கஜேந்திரன் முதலையின் வாயிலிருந்து தன்னைக் காப்பாற்ற ஓ! நாராயணா! என்று கூச்சலிடக் கருடன் மேல் வந்து காத்தருளியவனுமாகிய திருமாலின் மருகனே, நல்ல துணைவனே, குலிசாயுதத்தை ஏந்திய இந்திரனின் பொன்னுலகைக் காத்தவனே, வேந்தே, வேலனே, வீட்டின்பத்தை அளித்து நான் நிலைபெறுமாறு அருள் புரிவாயாக

விளக்கக் குறிப்புகள்

1 என் யாக்கை சதா ஆமாறே
       இந்தச் சடமுட னுயிர்நிலை பெறநளி
       னம்பொற் கழலிணை களில் மலர்கொடு
       என்சித் தமுமன முருகி --- திருப்புகழ், எந்தத்திகை
2 சுவடு பார்த்து அட வரு
       வெங்கை யானை வனத்திடு துங்க மாமுத லைக்குவெ
       ருண்டு மூலமெ னக்கரு டனிலேறி
விண்ப ராவஅ டுக்கிய மண்ப ராவ -- திருப்புகழ் சங்குவார்முடி




No comments:

Post a Comment